உள்ளடக்கத்துக்குச் செல்

வனதேவியின் மைந்தர்கள்/3

விக்கிமூலம் இலிருந்து



3

பட்டு வணிகர் குட்டையாக, கறுத்த நிறமுடையவராக இருக்கிறார். கூர்த்த நாசியில்லை. முகத்தை நன்கு மசித்துக் கொண்டு, நெற்றியில் செஞ்சந்தனம் தரித்திருக்கிறார். மேனியில் பாலாடை வண்ணத்தில் மெல்லிய அங்கி அணிந்து தார்பாய்ச்சிய ஆடையும் அணிந்துள்ளார். கழுத்தில், உருத்திராட்சமும், தங்கமும் முத்தும் இசைந்த மாலைகளை அணிந்திருக்கிறார். தலைப்பாகையை ஓர் அடிமை வைத்திருக்கிறான்.

“மகாராணிக்கு மங்களம்!” என்று அவளை வணங்குகிறார், அந்த முதிய வணிகர்.

நாலைந்து அடிமைகள், பொதிகளை இறக்குவதற்கு விமலையும் சாமளியும் பாய்களை விரிக்கின்றனர். உயர்ந்த வேலைப்பாடு செய்த பூம்பட்டு மெத்தை இருக்கையை மகாராணிக்கு இடுகின்றனர்.

அவள் அமரும்போது, வணிகருக்கும் ஓர் இருக்கையை இடுகின்றனர். மூட்டைகளைப் பிரித்து, அவர்கள் கடை பரப்புகிறார்கள்.

ஆகா! என்ன நேர்த்தியான நெசவு! மென்மை ... பளபளப்பு ... கடல் நீலம், கிளிப்பச்சை, அந்தி வானம், மாந்தளிர்... என்று பல பல வண்ணங்கள் கண்களைக் கொள்ளை கொள்கின்றன. ஆடைகளின் சருகுகளில், முந்திகளில், எத்துணை வண்ணக் கோலங்கள்! பூங்கொத்துகள், அன்னபட்சிகள், சங்குகள், கொடியோடும் மலர்ச்செண்டுகள், இவை பட்டு நெசவா, சரிகை இழைகளா? இவற்றை உருவாக்கிய கலைஞர் மானுடர்தாமா?

கண்ணிமைக்கவும் மறந்து அந்தக் கண்காட்சியில் சொக்கி நிற்கின்றனர்.

“இவ்வளவு நேர்த்தியாக நெய்யும் சாலியர், வேதபுரிக்காரர்களா? காசியா?..”

அவந்திகாதான் அந்த பிரமிப்பைச் சலனப்படுத்துகிறாள். “இல்லை தாயே, காமரூபம். நாங்கள் காடுகளில் இருந்து பட்டுக் கூடுகள் கொண்டுவருவதில்லை. பட்டுப் பண்ணையே வைத்திருக்கிறோம். நேர்த்தியான பட்டு உற்பத்தி செய்யும் பண்ணை எங்களுடையது. அற்புதமான கலைஞர்கள் எங்கள் பண்ணையில் இருக்கிறார்கள். பொற்சரிகை காசியில் இருந்து தருவிப்போம். வேதபுரிச் சாலியர் தொழிலில் பிரசித்தம். நேர்த்தியான தறிகளை, இப்போது மிதுனபுரித் தொழிலாளர் உருவாக்கியுள்ளனர். இழைகளில் புகுந்து, செல்லும் குருவி கண்களுக்குப் பிரமிப்பூட்டும். மூலிகைகளில் இருந்து சாயம் தயாரிப்போம். தேவி, இந்த விலை மதிப்பற்ற ஆடைகள், மகாராணிக்கே காணிக்கையாகக் கொண்டு வந்துள்ளோம்...” பூமகள் அசையாமல் ஏதோ கனவுக் காட்சியில் மிதக்கும் உணர்வுடன் அமர்ந்திருக்கிறாள்.

‘இந்த இளம் பச்சை ஆடை, பெரியம்மைக்கு என் பரிசாக இருக்கும். அவள் உயரம், நரைக் கூந்தல், அந்த கம்பீரம். இதை அவள்மீது நான் சென்று போர்த்தும்போது... என்ன செய்வார்? அன்று பிஞ்சுப் பருவத்தில் அவளை அணைத்து முத்தமிட்டு மகிழ்வது போல் மகிழ்வாரோ?’ அந்த மென்மையான தொட்டுணர்வை இப்போதே அநுபவித்து விட்டாற் போன்று குதுகுதுக்கிறது இதயம்...

“கண்ணே, நீ ஓர் அரசகுமாரனை மணந்து செல்லும்போது, இந்தப் பெரியம்மையை நினைப்பாயோ? தேரில் உன் பதியுடன் நீ தலைகுனிந்து நாணம் காக்கும்போது, இந்த அம்மையை நினைவு கொள்வாயோ?” என்று அந்த அம்மையின் மார்பில் முகம் பதிக்காத குறுகுறுப்பு அவளை வதை செய்கிறது. இதற்குப் பரிகாரம் தேடவேண்டும். இந்த நேரத்தில், அவளைத் தவிர யாரே தாய் போல் இருக்க முடியும்?

எப்படியும் நந்த முனி சுவாமி, அந்த அம்மையை அழைத்து வருவார். அப்போது, இத்தனை வரிசைகளுடன் அவளை வரவேற்பேன். இந்த அரண்மனை அவருக்கு உரித்தாகும் பேரப்பிள்ளையைக் கண்டு மகிழ்வார்; என் சிறு உள்ளம் மகிழப் பாடிய பாடல்களை அவர்களுக்குப் பாடுவார்! அந்த ஆடையைத் தடவிப் பார்த்துக் கொண்டே கற்பனையில் ஆழ்ந்துவிட்ட மகாராணியின் சிந்தையை, அவந்திகாதான் நினைவுலகுக்கு இழுத்து வருகிறாள்.

“தேவி, இந்த மாந்துளிர் வண்ணமும் கடல் பச்சை நிறமும் உங்களுக்கு மிகவும் இசைவாக இருக்கும்...”

நிமிர்ந்து பார்க்கும் பூமகளின் பார்வையில் ஜலஜை படுகிறாள். எடுப்பான சிவப்பு, பூனைக் கண்விழிகள்; செம் பட்டைச் சுருள் முடி. இவள், மூத்த மகாராணியின் மாளிகைப் பணிப் பெண். மகாராணி இவளை மன்னருக்குக் குற்றேவல் செய்ய அனுப்பி வைப்பதாக சாமளியும், விமலையும் பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது.

“ஜலஜை? மன்னர் எங்கு இருக்கிறார்?”

இப்படி ஒரு பணிப்பெண்ணிடம் கேட்க நாணமாக இருக்கிறது. அப்போது எங்கிருந்தோ தத்தம்மா பறந்து வந்து அவள் தோள்களில் அமருகிறது.

“மகாராணி. மகாராணி மங்களம்..”

அவள் அதைக் கையில் பற்றி முத்தமிடுகிறாள்...

“இங்கே பட்டாடை கடை விரித்திருக்கிறது, தத்தம்மா. உனக்குப் பட்டும் வேண்டாம், ஆடையும் வேண்டாம். நீ இங்கே எந்தக் குறும்பும் செய்யாமல் பறந்து போய்விட்டு அப்புறமாக வா! இல்லாவிட்டால் அவந்திகா உன்னைக் கூண்டில் பிடித்துப் போட்டு விடுவாள்?”

“அவந்திகா, அவந்திகா!” என்று அவள் தோள்களில் குதித்து ஒரு கொத்தலைச் செல்லமாகப் பரிசளித்து விட்டுப் பறந்து போகிறது, தத்தம்மா

“அபூர்வமாக இருக்கிறது. இந்தக் கிளி. பார்த்தீர்களா? மகாராணியின் வளர்ப்புக்கிளியா? இதன் உடல் வண்ணம் பஞ்சவர்ணக்கிளியை விட நேர்த்தியானது. ஒரு மாதிரி இள நீலம் தெரியும் பசுமை. இந்த ஆடையின் வண்ணம் பாருங்கள்!” “வணிகரே, இதே போல் எனக்கு இன்னொரு ஆடை நெய்து வாருங்கள்.”

“நிச்சயமாகத் தருவோம். ஆனால் ஓராண்டாகும். ஏனெனில் இந்தப் பட்டுக்கூடு, இயற்கையிலேயே இத்தகைய நிறம் கொண்டிருக்கும். எப்போதும் கிடைக்காது. அபூர்வமாகவே கிடைக்கும். அதனாலேயே விலை மதிப்பற்றது. மகாராணி கேட்பதால் நிச்சயமாக அடுத்த பருவத்தில் கொண்டு வருவோம்....”

வேறு யாரும் எதுவும் கூறுமுன், ஜலஜை, “வணிகரே, மகாராணி, இந்த நிலையில் கேட்கும் போது, அடுத்த பருவம் என்று சொல்கிறீரே? ராணி மாதா என்ன சொல்லி அனுப்பி வைத்தார்? இவை அனைத்தும் எம் பரிசாகக் கொடுத்துவிட்டு இன்னும் என்ன விரும்பினாலும் கேட்டு வாரும் என்றுதானே சொன்னார்? சக்கரவர்த்தியின் தேவியாருடன் பேசுவதான நினைவில் ஆம் - சொல்ல வேண்டாமா?” வணிகரின் முகம் இறுகிப் போகிறது.

பூமகள் துணுக்குறுகிறாள். இந்தப் பணிப் பெண் எதனால் இவ்வாறு பேசுகிறாள்? அவர் கூறுவதில் என்ன தவறு?

“சரி, வணிகரே, உங்களுக்கு மிகவும் நன்றி. அற்புதமான கலைஞரின் படைப்புகள் இவை. தெய்வாம்சம் பொருந்திய விரல்களால் மட்டுமே இப்படிப் படைக்க முடியும். நான் மிகவும் நேசிக்கும் ஓர் அன்னைக்கு இது போல் ஓர் ஆடை வேண்டு மென்று விரும்புகிறேன், உரிய பருவத்தில் நெய்து கொண்டு வந்தாலே போதும். அந்தக் கலைஞர்களை நான் பாராட்டுகிறேன்...”

“அவந்திகா, வணிகரிடம் தனியாக ஓர் ஆயிரம் பொன் பரிசு கொடுக்கச் சொன்னதாகப் பெற்றுக் கொடுப்பாய்!” என்று முடிக்கிறாள். அவந்திகா ஜலஜையை உறுத்துப் பார்த்துவிட்டுச் செல்கிறாள்.

பணிப் பெண்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டு செல்ல, வணிகர் விடை பெறுகிறார். அடிமைகள் ஆடைகளை மீண்டும் அடுக்க, விமலை அவற்றை உள்ளறையில் உள்ள மரப் பெட்டிகளில், பூந்தாதுப் பொடிகளின் நறுமணம் கமழும் அறைகளில் வைக்கிறார்கள்.

“ஜலஜை, மன்னர் ராணி மாதாவின் மாளிகையில் இருக்கிறாரா?”

“மாளிகையின் கீழ்ப்புறத்துத் தாழ்வரையில் அமர்ந்து அமைச்சருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் அங்குதான் நான் உணவு கொண்டு போனேன்.”

“சரி, நீ போகலாம்.”

“மகாராணிக்கு மங்களம்...”

பட்டாடைகளைப் பத்திரமாக வைத்து விட்டுப் பணியாள அடிமைகள் சென்று விட்டனர். விமலையும் சாமளியும் மட்டுமே இருக்கின்றனர். விமலை ஏதோ ஒரு விளக்கைப் பளபளப்பாக்கிக் கொண்டிருக்கிறாள். அது நாய்த்தோல் என்று கூறினார்கள். நாய் வேட்டைக்கு மனிதருக்குத் துணையாகும் நாய். நன்றி மறவாத பிராணி. காட்டு நாய் கூட வீட்டு நாயாக மாறி இருப்பதை அவள் அநுபவித்திருக்கிறாள். வாலை ஆட்டிக் கொண்டு அவள் அருகே நிற்கும். அரக்கப் பெண்கள் கொண்டு வரும் உணவு வகைகளைப் போடுவாள். காகம், நாய், இரண்டுமே பங்கு போட்டுக் கொள்ளும். அத்தகைய நாயின் தோல், பளிங்கையும், பொன்னையும் மினுமினுப்பாக்குகிறது!... வேடுவப் பெண்கள் இவ்வாறு தோல்களை உரித்துப் பதமாக்கிக் கொண்டு வருவார்கள். அடிமைப் பெண்கள் இது போன்ற பணிகளைச் செய்து, முனிவருக்கும் வசதியாக உடுக்க, இருக்க, படுக்க தோல்கள் தயாரிப்பார்கள்...

எதை எதையோ மனம் நினைக்கிறது. நந்தமுனி வந்து உள்ளே முகிழ்ந்திருந்த ஆசைக்கனலுக்கு உயிரூட்டி விட்டார்...

“தேவி?.”

அவந்திகா இவள் முகத்தைப் பார்த்துத் துணுக்குற்றாற்போல் அழைக்கிறாள். கண்ணிதழ்கள் ஈரம் கோத்திருக்கின்றன. “தேவி, என்ன இது? .. மன்னர் வருவார்.” ஆதரவாக அவள் பூம்பட்டாடை நுனி கொண்டே கண்ணிதழ்களை ஒத்தி எடுக்கிறாள்.

“அவந்திகா, அந்த ஜலஜை, யவன மகளோ?”

“எந்த அடிமை மகளோ? சிறுக்கி. பூனைக் கண்காரிகளே கபடர்கள். மனசுக்குள் பெரிய அழகி என்ற கர்வம், மூத்த மகாராணிக்கும் சிறிதும் இங்கிதம் தெரியவில்லை. இவளைத் துணி வெளுக்க, பாண்டம் சுத்தம் செய்ய அனுப்ப வேண்டியதுதானே? இல்லையேல் சமையற்கட்டில் அறுக்கவோ, தேய்க்கவோ, இடிக்கவோ, புடைக்கவோ வைத்துக் கொள்ளட்டும். இளைய மகாராணிக்கு அவளைக் கட்டோடு பிடிக்காது. மன்னருக்கும் அமைச்சருக்கும் இவளிடம் உணவு கொடுத்து அனுப்புகிறார். அத்துடனா? எச்சிற்கலம், தாம்பூலத்தட்டு எல்லாம் இவள் கொண்டு போகிறாள். கவரி வீசவும், எச்சிற்கலம் ஏந்தவும் இவள் அருகில் நிற்க வேண்டுமா? மன்னரைப் பார்த்தால் ஒரு சிரிப்பு; நெளிப்பு; ஒய்யாரம். படியேறி வருகையில் இவள் பாதம் கழுவ முன்வருவது சரியாகவா இருக்கிறது. இந்த மன்னர் சத்திய வாக்கைக் கடைப்பிடிப்பவரல்லவா? அவரிடம் சென்று சீண்டினால், அவளல்லவோ துரும்பாகப் பற்றி எரிவாள்? இவரென்ன அந்தப்புரத்தில் சிறைக்கூடம் கட்டிப் பட்சிகளை சிறகொடித்து அடைத்திருக்கிறாரா?.. சக்கரவர்த்தி மகாராஜாவின் சிறைக்கூடத்தையே இளைய மகாராணி திறந்து, அந்தச் சுவர்களை இடித்து, விடுதலை செய்து விட்டாரே? இந்த ஜலஜைக்கு முதலில் ஒரு சம்பந்தக்காரன் குதிரைக்காரன் வந்தான். அவன் குதிரை தள்ளியதில் இடுப்பொடிந்து மாண்டான். இப்போது இவளுக்கு ஒரு வயகக்குழந்தை இருக்கிறது. சலவைக்கார சந்திரிதான் புருசன். இவள் அவனோடு துறைக்குப் போக வேண்டியவள்தானே? தாய்வீட்டில் என்ன வேலை?. மகாராணி இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா?..”

அவந்திகா பேசிக் கொண்டே போகிறாள். அந்த வார்த்தைகளுள் பொதிந்த காரம் நெருப்புப் பொறிகள் போல் மென்மையான உணர்வில் பதிகின்றன."இல்லை, தேவி. நான்தான் கேட்கிறேன். மன்னருக்குப் பணி செய்ய, எதற்காக இத்தகைய இளசுகளை அனுப்ப வேண்டும்? என் போன்ற மூத்த பெண்கள் இல்லையா? பல் விழுந்தவள், சதை சுருங்கியவள், முடி நரைத்தவள் என்றால், ஒரு மகனைப் போல் வாஞ்சையுடன் பழகுவாள், பணி செய்வாள். தோல் சுருங்கிய காலத்தில் ஒரு பிடிப்பு என்று பக்தியுடன் எல்லாம் செய்வாள்....”

சாதாரணமாக இப்படி அவந்திகா ஏதேனும் பேசினால் பூமகளுக்குச் சிரிப்பு வந்து விடும். நேராக விஷயத்துக்கு வராமல், தொடாமல், பொருளை உணர்த்திவிடும் தனித்தன்மை உண்டு அவளிடம்,

“இந்த ஜலஜையின் தாயார் கணிகை மகளா?”

“யார் கண்டார்கள்? எல்லாம் ஒரு பொழுது மோகம். அது தீர்ந்ததும் சிறகுகள் முறியும். இந்த மோகம் அரசனுக்கில்லாமல் ஆண்டிக்கு வந்து ஒரு பிள்ளையைப் பெற்றிருந்தால் காட்டில் பிள்ளையுடன் அலைந்து கொண்டிருப்பாள். ஆண்டியே மன்னன் நிழலை அண்டுபவன் ஆயிற்றே! பிள்ளையானால் உபநயனம் இல்லாமல் குற்றேவல் செய்யும். பெண்ணானால் ஓர் அடிமை வருக்கத்தைப் பெருக்கும். காட்டுக்கு வேட்டைக்கு வரும் அரசன் எவனேனும் முகர்ந்து பார்த்து, கருப்பையை நிரப்புவான். தேவி, இந்தச் சனியன் பிடித்தவர்கள் பேச்சு இப்போது எதற்கு? நானே மன்னரைப் பார்த்தேன்.... உங்களைப் பற்றி விசாரித்தார். “பட்டாடைகள் நன்றாக இருக்கின்றனவா? உன் தேவியை நீ இரு கண்களைப்போல் இந்த நேரத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும்! என்ன விரும்பினாலும் இச்சமயம் கொடுக்கக் கடமைப்பட்டவன். நீ வந்து என்னிடம் தெரிவிக்க வேண்டும். தேவி எக்காரணம் கொண்டும் இந்தச் சமயத்தில் வாட்டமுறலாகாது. கோசல நாட்டின் இந்த சூரியகுலத்தின் கொழுந்தைத் தாங்கி இருக்கிறாள் அவளை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்!” என்று சொன்னார்.

பூமகள் அவந்திகாவை உறுத்துப் பார்க்கிறாள். ‘இவளுக்குத்தான் எத்தனை அன்பு? உண்மையாகவே மன்னர் இதெல்லாம் சொன்னாரா? நிசமா? நம்பலாமா?’

“அவந்திகா! நீ பார்க்கும்போதும் ராஜாங்க ஆலோசனை மண்டபத்தில்தான் இருந்தாரா? இன்னும் யாரெல்லாம் இருந்தார்கள்? இளையவர்கள் இருந்தார்களா?”

“ஆமாம். இளையவர்கள் இல்லை. இளைய மகாராணியிடம் மன்னரை வரச் சொல்லி கேட்டு விட்டு வந்தேன். தேவி. நீங்கள் என் மடியில் வளர்ந்த குழந்தை. நீங்கள் மனம் சஞ்சலப்பட என்னால் பார்க்க முடியுமா?...” அவந்திகாவுக்குக் குரல் கரகரக்கிறது.

பூமையின் நெஞ்சம் விம்மித் தணிகிறது.

அவந்திகாவின் மார்பில் தலைசாய்த்துக் கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறாள்.

“தேவி, எனக்கு என்ன பயம் தெரியுமா? காட்டிலே அரக்கர் தங்கை வந்து சீண்டிய போது அவள் மூக்கையும் காதையும் இளையவர் அரிந்தார். அதனாலேயே தேவியை அரக்கன் பழிவாங்கச் சிறையில் இருத்தக் கொண்டு போனான். அதுபோல் இவள் ஏதேனும் தெரியாமல் விட்டில் பூச்சிபோல் நெருங்க, அதனால் இந்த சமயத்தில் ஏதேனும் அவம் நேர்ந்துவிடக் கூடாதல்லவா?... தேவி, இது குறித்து மகாராணியிடம் நான் எச்சரிக்கை செய்ய முடியாது. இளைய மகாராணி, அன்பானவர். எங்களை மனிதர்களாய் மதிக்கிறவர். மற்ற இருவரும் அப்படி இல்லை. அவர்களுக்கு நான் வெறும் அடிமைப் பெண். பூமகளுடன் வந்த அடிமை. என்னால் எதையும் சொல்ல முடியாது; செய்ய முடியாது. தாங்கள் இது குறித்து, அன்பாகப் பழகும் இளைய மகாராணியிடம் எடுத்துச் சொல்லலாம்.”

அவள் முடியை அன்புடன் கோதிக் கொண்டு அவந்திகா பேசுவது, பூமகளின் இதயத்துள்ளே ஒளிந்திருக்கும் அபகரத்தை மெல்ல மீட்டிவிட்டாற் போலிருக்கிறது. யாழின் நாண் தளர்ந்து விட்டால் இப்படித்தான் ஒலிக்கும். நாண் தளர்ந்து கிடக்கிறது. அவள் பதி, ... சத்திய வாக்கை மீறாதவர் தாமே?

பத்துமாதங்கள் அவள் சருகும் நீரும் காற்றும் உணவாகக் கொண்டு உயிர் தரித்திருந்தாள். அந்தப் பத்து மாதங்களும் அக்கினி வளையம் கடந்து வந்திராத அரக்கர் கோனின் புகழும் குறைந்தது அல்ல! என்றாலும் அவள் அக்கினி குண்டத்தில் இறங்கி வெளிவந்தாள். ஆனால். அவள் பதி. அவர் அவளைப் போல் சிறையிருந்தாரா? வேடப் பெண்கள், அசுரகுலப்பெண்கள், கிஷ்கிந்தையின் வானரகுலப் பெண்கள். யாருமே அவர்மீது மையல் கொண்டிருக்கவில்லையா? அரக்கர் கோன் நெஞ்சில் இவள் புகுந்தது, இவள் குற்றம் என்றால்...? ஒரு விம்மல் உடைந்து கண்ணிர் கொப்புளிக்கிறது.

அவந்திகா குலுங்குகிறாள்.

“தேவி. தேவி. என்ன இது?...”

கண்ணிரைத் துடைக்கிறாள். ஆறுதல் செய்கிறாள்.

“சாமளி, கொஞ்சம் கனிச்சாறு கொண்டு வாம்மா பலவீனம், சரியாக உணவருந்தவில்லை...”

விமலை உறுத்துப் பார்க்கையில் சாமளி ஒடுகிறாள்.

“தேவி, வந்து கட்டிலில் ஆறுதலாக இளைப்பாறுங்கள்...”

அவந்திகா அவளை மெல்ல அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்துகிறாள். கனிச்சாறு வருகிறது. பொற்கிண்ணத்தில் ஊற்றிக் கொடுக்கிறாள்.

“இது மதுவா?...”

“இல்லை மகளே, இந்த மாளிகையில் மது இல்லை. இது புளிப்புக்கனியின் சாறு. கரும்பு வெல்லம் கலந்தது. இஞ்சி சேர்த்தது. பருகுங்கள் ஆரோக்கியமாக இருக்கும்...”

ஒரு வாய் வாங்கி அருந்துகிறாள்.

“அவந்திகா, ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். என்னை மாசு பற்றியிருக்குமோ என்று சந்தேகப்பட்டாரே, அதுபோல்... நானும்

படலாம் அல்லவா? ஏன் எனில், அரசர்கள், கூடித்திரியர்கள் பல பெண்களைத் தொட்டுக் கன்னிமை குலைக்கலாம். இது மன்னர் குலத்துக்குப் பெருமையும்கூட அவர் தந்தையைப் போல் இருக்கமாட்டார், இல்லை என்று நம்புகிறோம். ஆனாலும் விருப்பம் தெரிவிக்காத பெண்களை குலைத்து, ஒதுக்குவதும், விருப்பம் தெரிவித்த பெண்களை மானபங்கம் செய்வதும் ஏறக்குறைய ஒரே மாதிரிதானே?...”

அவந்திகா உறுத்துப் பார்க்கிறாள்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் தேவி?. எப்படி இருந்தாலும், அரக்கர் குலத்தில் பிறந்தாலும், அந்தண குலத்தில் பிறந்தாலும், மன்னர் குலத்தில் பிறந்தாலும் பெண் ஒரு போகத்துக்குரிய பண்டம் தானே? ஆண்கள் முகர்ந்து பார்ப்பதில்தான் பெண் நிறைவடைகிறாள். ஒரு தாயாகும் பேறு கிடைக்கிறது. கணிகையரும், விலை மகளிரும் ஆடவர்களின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காகவே, பல வித்தைகளைக் கற்றிருந்தாலும், ஒரு மகவு தன் மார்பில் பாலருந்தித் தன்னைப் பிறந்த நேரத்தின் பயனை அதுபவிக்கச் செய்யும் பேறில் அல்லவோ வாழ்கிறார்கள்?. அந்தப்புரங்களில் ஒழுங்கற்ற நாற்றுகள் என்றால், கணிகையர், விலைமகளிர், கரும்பைப் பிழிந்து உறிஞ்சிச் சக்கையாக எறிவதுபோல் அல்லவோ துப்பப்படுகின்றனர்? மகளே, வேதபுரியின் கணிகையர் வீதிகளின் முகப்பில், சத்திரங்களில் அப்படித் துப்பப் பெற்ற மூதாட்டிகளை நான் இளம் பருவத்தில் பார்த்ததுண்டு. கணிகை வீட்டு அடிமையாக என்னை விலை கொடுத்து வாங்க எவரும் வரவில்லை. என் தாய், என்னை அரண்மனைப் பணிக்கு விற்றாள்...”

அவந்திகாவின் கண்ணிரை பூமகள் துடைக்கிறாள்.

“தாயே, இந்தத் துன்பமான கதைகள் வேண்டாம்... விமலையைக் கூப்பிடு. அவள் ஏதேனும் பாட்டுப் பாடட்டும்...”

பூமகள் திரும்பிக் கண்களை மூடிக் கொள்கிறாள். மாலைப் பொழுது இறங்கும் நேரம். யார் யாழ் மீட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

கூவிடுவாய் - பூங்குயிலே...
கூவிடுவாய் - கூவிடுவாய்
தேன்சுனையில் திளைத்தனையோ,
தீயின் வெம்மை சகித்தனையோ!
வானுலகின் இனிமையெல்லாம்
வாரி வாரிப் பருகினையோ?

கூவிடுவாய்... பூங்குயிலே!
கூவிடுவாய்!
அன்புக்கடல் கடைந்து வந்த
அமுதம் நிரப்பி வந்தனையோ?
என்புருகும் சோகமெல்லாம்
இழைத்து ஒலி நீட்டுவையோ?

எங்கோ ஒர் உலகுக்கு அந்தச் சோகம் அவளைக் கொண்டு செல்கிறது. கண்களை மெள்ள விரித்துப் பார்க்கிறாள். யார் யாழிசைத்துப் பாடுகிறார்கள்?

யாருமில்லை. திரைச்சீலைகள் வெளி உலகை மறைக்கும் வண்ணம் இழுத்து விடப்பட்டிருக்கின்றன...

அவள் கண்களை உள்ளங்கைகளால் ஒத்திக் கொண்டு மீண்டு பார்க்கிறாள். கட்டிலைச் சுற்றிய திரைச்சீலைகளை ஒதுக்குகிறாள்.

மாடத்தில் ஒர் அகல் விளக்கு எரிகிறது.

அவள் அருந்திய கனிச்சாறு கீழே சிந்திய இடத்தில் எறும்புகள் தெரிகின்றன.

சிறை மீட்டு மகாராணியாகக் கொண்டு வந்து இங்கே சிறைப்படுத்திவிட்டார் போன்று மனம் ஏன் பேதலிக்கிறது?

இவளுக்கு இப்போது என்ன குறை? மன்னரின் மீது இவளுக்கு அவநம்பிக்கையா? ஏதோ ஒர் உண்மை சிக்கென்று பிடிபட எட்டாமல் வழுவிப் போவதுபோல் தோன்றுகிறது.

'அப்படி என்ன ராஜாங்க காரியம்? தலை போகும் காரியம்: இளையவர்கள் இப்படி இருக்கிறார்களா? காட்டில் இருந்த போது மட்டும் என்ன நிம்மதி? எப்போதும் வில்லும் அம்புமாகத் திரிந்தார்கள். அதனால்தானே பகையும் விரோதங்களும் கொலைகளும் நிகழ்ந்தன! ஜனஸ்தானக் காட்டில் அரக்கர்கள் இருந்தால் இவர்களுக்கென்ன? அவர்களும் காட்டிலே எதையேனும் கொன்று தின்று வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள்?... மகரிஷிகள் சாபம் இட்டுவிடுவார்கள் என்று இந்த மன்னர்கள் நடுநடுங்குவதாம் இவர்கள் எதற்காக ஆயிரக்கணக்கில் உயிர்வதை செய்யும் யாகங்கள் நடத்த வேண்டும்?’

கேள்விகள் மேலும் மேலும் எழ, கிணறு ஆழம் கான முடியாமல் போகிறது. உள்ளே நிச்சயம் தரை இருக்கும். அதைத் தொட்டுக் காட்டும்போது இதயமே குத்துண்டாற்போல் நோகும்.

சக்கரவர்த்தி, இளைய குமாரர்களைத் தாய்மாமன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மூத்தவள் பெற்ற பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்தது நியாயமா?

நியாயமில்லைதான். அதுவும் அந்த மந்தரைப் பாட்டிக்கு என்ன விரோதம்?... அவந்திகாவைப் போல் ராணி மாதாவை எடுத்து வளர்த்தவள். அக்காலத்தில் அவர் தந்தை கேகய மன்னர், ஏதோ ஒர் அற்ப காரணத்துக்காக, குழந்தைகளின் தாயைக் காட்டில் விட்டு விட்டு வந்தாராம் என்ன கொடுமை?

அரசகுமாரியைத் தாய்போல் அன்பைப்பொழிந்து வளர்த்த அம்மை வயதான காலத்தில் இடுப்பு வளையக் கூன் விழுந்து கூனியானாள். அவளைப் பூமகள் பார்த்திருக்கிறாள். தலை தரையைத் தொட்டுவிடுமோ என்ற அளவில் ஒரு குச்சியை ஊன்றிக் கொண்டு எழும்பி நடப்பாள்.

அவளுக்கு இந்த மூத்த இளவரசர் மீது என்ன விரோதம்?

சின்னஞ்சிறு இளவரசர், அந்தக் கூனை முதுகில் வில் மண் உருண்டை வைத்து அடிப்பாராம், கூனல் நிமிரவில்லை. ஆனால்... வலி... அது நல்ல எண்ணத்துடன் எய்யப்பட்ட உருண்டை அல்லவே? கேலியில் விளைந்த விளையாட்டல்லவோ? வயசு இரண்டு தலை முறை மூத்திருந்தாலும், அடிமை பணிக்கிழவி. அவளுக்கு முதுகுமட்டும் வலிக்கவில்லை. நெஞ்சும் வலித்திருக்கும். மன்னரிடம் வரம் கேட்கச் சொல்லி பழி தீர்த்துக் கொண்டாள்...

அவந்திகாவை, இப்போது அவளுக்குப் பிறக்கப் போகும் பிள்ளை இப்படி உதாசீனம் செய்தால்.

அவள் கை தன்னையறியாமல் வயிற்றைத் தொட்டுப் பார்க்கிறது.

... ஒ. க்ஷத்திரிய வித்து. வில் அம்புடன் பிறக்குமோ?. குப்பென்று வேர்க்கிறது.

“தேவி. என்ன இது? நீங்கள் உறங்கவில்லையா? ஏணிப்படி முகமெல்லாம் வேர்த்திருக்கிறது? யாரடி, விமலை? தீபத்தில் எண்ணெய் இல்லை. பார்க்க வேண்டாமா?”

அவந்திகாவின் தொட்டுணர்வில் கசிந்து போகிறாள்.

அவள் கையை மெலிந்த விரல்களால் முகத்தில் தடவிக் கொள்கிறாள்.

“அவந்திகா, உன்னை நான் எப்போதும் விடமாட்டேன்! நீ என் தாய்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/3&oldid=1304394" இலிருந்து மீள்விக்கப்பட்டது