உள்ளடக்கத்துக்குச் செல்

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்

விக்கிமூலம் இலிருந்து


2. இரண்டையும் இணைத்த
எழுத்துக்கள்டக்கு, தெற்கு என்ற சொற்கள் எல்லையை ஒத்து நோக்கும் வகையில் பொருள் உணர்த்துவனவேயாம். இங்கே நாம் இச்சொற்களை வடவிந்தியா தென்னிந்தியா என்னும் பொருள்களிலேதான் வழங்குகின்றோம். இன்று பரந்த பாரதம் ஒன்றான போதிலும், இன்னும் பல வகையில் வடக்கும் தெற்கும் வேறுபட்டே இருக்கின்றன. இந்த எல்லை அடிப்படையிலே எத்தனையோ மாறுபாடுகளும் போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. மாறுபாடுகளுக்கு இடையில் ஒற்றுமை காண வேண்டும் எனச் சிலர் முயல்கின்றனர். இந்த நிலையில் இந்த இருநிலப் பகுதிகளும் வரலாற்றுக் காலத்திலிருந்து எவ்வெவ்வாறு இணைந்துள்ளன என்பதை வரலாற்று ஆசிரியர் பலர் காட்டுகின்றனர். ஆயினும், வரலாற்று எல்லைக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே இரண்டும் பலவகையில் இணைந்திருந்தன என்பதை நாட்டு இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், பிற நாட்டார் குறிப்புக்களும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.

தமிழ்நாட்டு வரலாற்றின் எல்லை கடைச்சங்க காலத்தை ஒட்டியது என்பர். வடநாட்டு வரலாற்று எல்லை மௌரியர் ஆட்சி அல்லது அலெக்ஸாந்தர் படையெடுப்பு என்பர். எனவே, இக்கால எல்லையில் நின்று காணின், இதற்கு முன்பே வடக்கும் தெற்கும் பல வகைகளில் பின்னிப் பிணைந்து வாழ்ந்திருந்தன எனக் காட்ட இயலும். ஆட்சியினாலும், பண்பாடு, நாகரிகம், கலை, இன்ன பிறவற்றாலும் பெரிதும் இன்றுபோலவே அன்றும் இரண்டும் ஒன்றாய் இணைந்து வாழவில்லை என்றாலும், இரு நாட்டினரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தனர் எனப் பல இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மேலும், ஆரியர் வடநாட்டுக்கு வருமுன் அனைத்திந்தியாவிலும் ஒரே இனம் இருந்தது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவ்வுண்மையை வேறு ஒரிடத்தில் ஆராய்ந்து காணலாம். இங்கே தமிழ் இலக்கிய வடநாட்டு இலக்கிய வரலாற்றுக் காலந்தொடங்கி அவை ஒன்றை ஒன்று எவ்வாறு தழுவிக் காட்டுகின்றன என்பதையும் அக்காலத்தில் இந்தியாவுக்கு வந்த பிற நாட்டவர் எவ்வெவ்வாறு இணைத்துக் கண்டார்கள் என்பதையும் காண்பது போதும் என நினைக்கின்றேன். சிறப்பாகத் தமிழ் இலக்கியத்தில் வடநாட்டுக் கதைகளும் பிறவும் எவ்வெவ்வாறு எடுத்தாளப் பெறுகின்றன என்பதை முதலில் ஆராய்ந்து காணலாம், தொல்காப்பியர் காலந் தொடங்கிக் கடைச்சங்க காலம் வரையில் தோன்றி மறைந்தன போக, எஞ்சி வாழும் இன்றைய தமிழ் இலக்கியங்களைத் துருவி நோக்கின், பல உண்மைகள் விளங்கும் என்பது உறுதி.

பாரதம் இராமாயணம் என்னும் இரண்டும் வடநாட்டுக் கதைகளே. வேதத்தில் இராமனும் கண்ணனும் கூறப்படாவிடினும், பின்னர் அவர்கள் வடநாட்டு இலக்கியத் தலைவர்களாய் நிலைத்த இடம் பெற்றுவிட்டார்கள். P.T. சீனிவாச ஐயங்கார் காட்டுவது போன்று, கண்ணன் திராவிட இளைஞனாகக்[1] காணப்பெறினும், இருக்கு வேதத்தில் அவன் ஆரியர்களை எதிர்த்த திராவிடத் தலைவனாகப் பேசப்பெறினும், பிற்காலத்தில் கண்ணன், கிருட்டிணனாகிப் பல வகையில் போற்றப்பட்டுள்ளமை அறிகின்றோம். இராம னைப்பற்றியும் வேத காலத்துக்கு நெடுநாட்களுக்குப் பின்பே அறிய இயல்கின்றது. ஆரியர்கள் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்குச் சற்று முன் பின்னாகச் சிந்துவெளி யிலும் அடுத்துச் சில ஆண்டுகளில் கங்கைச் சமவெளியிலும் குடியேறினார்கள் என்பது வரலாற்று அறிஞர் வரையறுத்த உண்மையாகிவிட்டது. எனவே, அதற்குப் பிறகே இராமாயண பாரதக் கதைகள் உண்டாகியிருக்கவேண்டும். தமிழில் அவை இரண்டும் நெடுங்காலத்திற்குப் பின்பே மொழி பெயர்க்கப்பட்டன. பாரதம் முதன்முதல் பல்லவர் காலத்தில் பெருந்தேவனாரால் வெண்பா யாப்பில் மொழி பெயர்க்கப்பட்டது என்பர். அதனாலேயே அவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார் என வழங்கப் பெற்றாராம். பின்பு பாரதம் வில்லிபுத்துாரர் என்னும் புலவரால் விருத்தப்பாவில் விரிந்த அளவில் மொழி பெயர்க்கப் பெற்றது. முன்னது முழுதும் கிடைத்திலது. இராமாயணம் கம்பராலேயே முதன்முதல் மொழி பெயர்க்கப்பட்டது என்பர். எனினும், இந்த மொழி பெயர்ப்பு நூல்கள் உண்டாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே-கடைச் சங்க காலத்திலேயே-இந்த இரண்டு கதைகளும் தமிழ்நாட்டுக்கு அறிமுகமானவைகளாகவே சிறந்து விளங்கின. சங்க இலக்கியங்களில் இக்கதைகளைப் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மக்கள் வாழ்வொடு பின்னிய காப்பியங்களைச் செய்த அக்காலப் புலவர்கள், அவ்வாழ்வை விளக்கும் எடுத்துக்காட்டுக்களாகவும், விளக்கங்களாகவும் பல இராமாயண பாரதக் கதைக் குறிப்புக்களைக் கையாண்டுள்ளார்கள்; அன்றியும், சில கதைகளை உள்ளபடியே போற்றும் முகத்தான் தங்கள் சொற்களின் இடையிடை பெய்து விளக்கந் தந்துள்ளார்கள். அவற்றுள் ஒரு சில காணலாம்.

தலைவன் களவு மணத்தில் தலைவியைக் கூடி மகிழ்ந்த காலத்து அது அம்பலாய்—அலராய் ஊரிலே பரவ, ஊரில் உள்ள பெண்கள் அதைப் பழிக்கும் முகத்தான் பலப்பல கூறியிருப்பார்கள். அவற்றையெல்லாம் எண்ணி எண்ணித் தலைவி மயங்கியிருப்பாள். பக்கத்தில் உள்ள தோழி அவளுக்குத் தேறுதல் சொல்லி ஆறியிருக்கச் செய்திருப்பாள். அதே வேளையில் தலைமகனும் அவளை வெளிப்படையாக மணந்துகொள்ள வரைவு மலிந்தான். இதை அறிந்தாள் தோழி; ஒடித் தலைவியிடம் தலைவன் வரைவு மலிந்தான் என்றும், வம்பு பேசிய ஊர்ப் பெண்டிர் வாயடங்கினர் என்றும் கூறினாள். அப்போது அவள் எடுத்துக்காட்டிய உவமையே நம்மை இராமாயணத்துக்கு அழைத்துச் செல்கின்றது. இராமன் இலங்கையின்மேல் படையெடுத்த காலத்தில் கடற்கரையில் வானர சேனைகளோடு இருந்து போர் பற்றி ஆலமரத்தின் கீழ் ஆராய்ந்தானாம். அப்போது அம்மரத்தில் இருந்த பறவைகள் கூச்சலிட்டனவாம். அதனால், கீழே இராமனது ஆய்வு தடைப்பட்டதாம். எனவே, அவன் அப்பறவைக் கூட்டத்தைக் கையமர்த்தி ஒலி அடங்கச் செய்தானாம். அவையும் ஒலி அடங்கின. அந்த அடக்கத்தைப் போன்று தலைவியைப் பழித்த ஊரில், ஒலி அடங்கிற்று என்பதே உவமை. இதைக் கம்பர்கூடக் காட்டவில்லை போலும்! சங்க காலத்தில் வாழ்ந்த மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் அழகுபட எடுத்துக் காட்டுகிறார். இதோ அவர் வாக்கு:

‘வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் வழுங்கல் ஊரே.’ (அகம். 70)

இனி, புறநானூற்றில் இவ்விராமாயணம் பற்றிய மற்றொரு குறிப்பினைக் காணலாம். அதுவும் இராமாயணத்தில் பின்னர் காணப்படாத ஒன்றாகவே உள்ளது. “ஊன் பொதி பசுங்குடையார் உயர்ந்த புலவர்; மற்ற புலவர்களைப் போன்றே வறுமையால் வாடியவர். அவர் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியைக் காணச் சென்றார்; கண்டார். அவன் பல பரிசுப் பொருள்களை வழங்கினான். அவற்றுள் பல அணிகளும் இருக்கக் கண்டார்கள் புலவரின் மனைவி மக்கள். அவர்கள் அதுவரை அணிகளைக் காணாதவர்கள் போலும்! எனினும், அவை அணியத்தக்கன என்பதை முன்னே பிறர் அணியக் கண்டு உணர்ந்திருப்பார்கள். எனவே, அவர்கள் அவற்றை எடுத்து அணிந்தார்கள். எனினும், அணியும் முறை தெரியவில்லை. கழுத்துக்கணிவதை இடுப்புக்கும், காதுக்கு அணிவதை மூக்குக்கும். கைக்கணிவதைக் காலுக்குமாக இவ்வாறு மாற்றி அணிந்துகொண்டார்கள். அதை எண்ணிப்பார்த்தார் புலவர் பசுங்குடையார். அவருடைய எண்ணத்தில் இராம காதை உருவாயிற்று. இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டபோது, சீதை தன் அணிகளை ஆடையின் நுனியில் முடிந்து கீழே விட, அவை கிட்கிந்தையில் விழ, அவற்றின் சிறப்பறியாக் குரங்குகள் மாறி மாறி அணிந்த காட்சி அவர் கண்முன் நிழலிட்டிருக்கும். இதையே உவமையாகக் கொண்டு தம் சுற்றத்தைக் காட்ட விரும்பினார் புலவர். பாட்டும் எழுந்தது :

"மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அதுகண்டு
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விறற்செறிக் குநரும்
அரைக்கு அமை மரபின மிடற்றுயாக் குநரும்
மிடற்றுஅமை மரபின அரைக்குயாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
கிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிங் தாஅங்கு
அறாஅ அருங்கை இனிதுபெற்றிகுமே.”
(புறம்.378)

என்பது அவர் வாக்கு. இக்கருத்தும் கம்பரது இராமாயணத்தில் காணப்படாத ஒன்று என்பது அறிந்தோர் கூற்று.

இன்னும், இவ்விராமாவதாரத்தைப் பற்றியும் வேறு பல அவதாரங்களைப் பற்றியும் கூறும் சங்க இலக்கியங்கள் பலவாகும்.

..........-'வடா அது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம்செல மிதித்த மாஅல் போல’
(அகம். 59)

என்றும்,

வண்டுஅடைந்த கண்ணி வளர்ஆய்ச்சி வாள் நெடுங்கண்
சென்றடைந்த நோக்கம் இனிப்பெறுவ தென்றுகொல்
கன்றுஎடுத்து ஒச்சிக் கனிவிளவின் காய்உகுத்துக்
குன்றெடுத்து கின்ற நிலை!

                                  (முல்லைப்பாட்டு, இறுதி)

என்றும்,

'கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரிசினம் கொன்றாய்'
(பரிபாடல், 3:31,32)

என்றும் கண்ணனுடைய திருவவதாரத்தை விளக்கிக் காட்டுகின்றன. சங்கப் பாடல்கள். மற்றும்,

"ஞாலம்மூன்று அடித்தாய முதல்வற்கு முதுமுறைப்
பால்அன்ன மேனியான் அணிபெறத் தைஇய
நீலநீர் உடைபோல'
(கலி. 124: 1.3)

என்றும் ,

"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல'
(முல்லைப் .1.3)

என்றும்,

'திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி
நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்டார்
அன்னவர்பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன்நீ'

                                      (பரி. 3:54.56)

என்றும் திருமால் கொண்ட பேருருவாம் திரிவிக்கிரம அவதாரத்தைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இன்னும், இரணியனைத் தடிந்த நரசிங்க அவதாரம் பற்றியும்[2] பரசுராம அவதாரம் பற்றியும்[3], பலராம அவதாரம் பற்றியும்[4]: வராகவதாரம் பற்றியும்[5] வேறுபல புராணக் கதைகள் பற்றியும் சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று மட்டும் கண்டு மேலே செல்லலாம்.

'இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமைஅமர்ந்து உயர்மலை இருந்தன னாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல,
                                 
(கலி. 3.8:1-5)

என்று இராவணன் கைலை மலையை எடுக்க நினைத்து முயன்று வெற்றி பெறாது வாடிய நிலையினை நன்றாகப் புலவர் சித்தரித்துக் காட்டுகின்றார். இவ்வாறே பலப்பல இடங்களில் சங்க இலக்கியங்கள் வடநாட்டுக் காப்பியக் கதைகளையும் அவை ஒட்டிய பிற வரலாறுகளையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இப்பாடல்கள் அனைத்தும் ஒரே காலத்தைச் சேர்ந்தன என்று கொள்ள முடியாதன. கி.மு. ஐந்நூறு தொடங்கியும்—ஏன்?—அதற்கு முன்பும் கி.பி. 300 அல்லது 400 வரையும் பாடப்பட்ட பாடல்களல்லவா? எனவே, வடநாட்டுக் கதைகளாகிய இராமாயண பாரதங்கள் தமிழில் முழுக்க முழுக்கக் காப்பியங்களாக மொழி பெயர்க்கப்படு முன்பே, அக்கதைகள் பற்றிய குறிப்புக்கள் தமிழ்நாட்டில் நன்கு வழங்கப்பெற்றிருந்தன என்பது தெரிகின்றது.

இவையன்றி ஆரிய அரசன் ஒருவன் பாடியதாகவே குறுந்தொகையில் ஒரு பாட்டு உண்டு. அவன் பெயர் ‘ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்' என்பதாகும். அக்காலத்துச் சிறந்த புலவராகிய கபிலர் குறிஞ்சிப் பாட்டைப் பாடித் தமிழின் இனிமையை ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அறிவித்தார் என்று குறிஞ்சிப் பாட்டின் கடைசிக் குறிப்புக் காட்டுகின்றது. இருவரும் ஒருவராய் இருக்கலாம் என்று கொள்வதில் தவறு இல்லை. சான்றாண்மை மிக்க கபிலர் வழியே தமிழின் இனிமையையும் சிறப்பையும் அத்தமிழர்தம் காதல் வாழ்வையும் கண்டு களித்த அந்த ஆரிய மன்னன், தன்னை மறந்த நிலையிலே அக்குறுந்தொகைப் பாடலைப் பாடியிருப்பான் என்பதில் ஐயமில்லையன்றோ! அப்பாடலும் நல்ல கருத்தை உட்கொண்டு சிறந்ததாய் விளங்குகின்றது. இதோ அந்தப் பாட்டையே உங்கள் முன் வைக்கின்றேன்:

‘அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே,
இதற்குஇது மாண்டது என்னாஅ, அதற்பட்டு
ஆண்டொழிக் தன்றே மாண்டகை நெஞ்சம்;
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படுஉம் காண லானே.’
(குறுந். 184)

‘கழறிய பாங்கற்குத் தலைவன் சொல்லியது' என்ற தலைப்பில் அந்த ஆரிய அரசன் பாடிய பாடல் எண்ணி எண்ணிப் போற்ற வேண்டிய ஒன்றன்றோ! எனவே, இப்படியே அக்காலத்தில் வடநாட்டவர் பலர் தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் துய்த்துத் தம்மை மறந்து உள்ளத்தால் தமிழராய் வாழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். இப்பிரமதத்தன் அவருள் சிறந்தவனாகிப் பாட்டு இயற்றவும் ஆற்றல் பெற்றான். சென்ற சில நூற்றாண்டுகளில் மேலைநாட்டிலிருந்து வந்த வீரமாமுனிவர். போப்பு போன்றார் செயல் கண்டு போற்றும் நமக்கு இது வியப்பாமோ! இது நிற்க.

தமிழ்நாட்டுப் பண்பாட்டில் காணாத-தமிழர் அற வாழ்வுக்குப் புறம்பான சில பழக்கவழக்கங்கள் அக் காலத்திலேயே தமிழ் நாட்டில் இடம் பெற்றிருந்தன என்ற உண்மையினையும் பல சங்கப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று, யாகம் செய்தல். அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று, என்று வள்ளுவர் காட்டிய நாட்டில் பல யாகங்கள் செய்த மன்னர்கள் வாழ்ந்தார்கள் எனக் காண்கின்றோம். ஆரியப் பழக்க வழக்கங்களுக்கும், மொழிக்கும், வழிபாட்டு முறைக்கும், பிறவற்றிற்கும் முதல் இடம் கொடுத்துப் போற்றிய பிற்காலச் சோழர்களே யாகத்தை விரும்பவில்லை; யாகத்தினும் தானமே மேல் என்ற எண்ண அடிப்படையிலேதான் பலப்பல அறங்களைப் பலப்பல வகைகளில் செய்தார்கள். ஆயினும், சங்க காலத்தில் இரண்டொரு மன்னர் யாகம் செய்வதையே சிறப்பாகக் கொண்டனர் என்பது தெரிகின்றது. யாகம் வளர்த்தல் நாட்டு மக்களாலும் மன்னராலும் விரும்பப்பட்ட ஒரு வழக்கமாகக் கொள்ளப்படவில்லை என்பது தெளிவு. மாறாக, அதை விரும்பாது வெறுத்தார்கள் என்பதும் துணிபு. எனினும், இராச சூயம்வேட்ட பெருநற்கிள்ளியாகிய சோழ மன்னனும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாகிய பாண்டியனும், பல்யானைச் செல்கெழு குட்டுவனாகிய சேர மன்னனும் தமக்காக அன்றேனும் பிறர் பொருட்டாகவேனும் யாகங்களைச் செய்தார்கள் என்பதைக் காண்கின்றோம். எனவே, கடைச்சங்க காலத்தில் நாட்டினர் அனைவரும் விரும்பவில்லை என்றாலும், ஒரு சிலர் இப்படிப் புதியராய் வடநாட்டவர்தம் வழக்கச் சூழலில் சிக்கி யாகம் செய்ததோடு, அவர்தம் பழக்க வழக்கங்களுள் சிலவற்றையும் மேற்கொண்டார்கள் என அறிகின்றோம். இப்படியே தமிழ் நாட்டு இலக்கியக் கடலுள் மூழ்கிக் காணின், அக்காலத்தில் வடக்கும் தெற்கும் இணைந்த பல காட்சிகளைக் காண முடியும். தொல்காப்பியத்தில் தொட்டதாகக் காணப்பெறும் இந்த இணைப்பு, கடைச்சங்க காலத்தில் நன்கு வளர்ந்து விட்டது என்று கொள்வதில் தவறு இல்லையன்றோ!

இவ்வாறு கதைகளும் பழக்கவழக்கங்களும் மட்டுமன்றி, மலையும், ஆறும், அரசும், பிறவும் சங்க இலக்கியங்களில் எடுத்தாளப் பெறுகின்றன என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. இமயமும் கங்கையும் பேசப் பெறுகின்றன. மோரியரும் நந்தரும் இலக்கியத்தில் எடுத்துக்காட்டப் பெறுகின்றனர். இன்னும் சில வடநாட்டுப் பகுதிகளும் வரலாறுகளும் அன்றே தமிழ் நாட்டில் அறியப்பெற்றனவாய் விளங்கின.

இனி, வடநாட்டுப் பழம்பேரிலக்கியங்களில் தென்னாடு பேசப்படுவதையும் ஒரளவு காணல் பொருத்தமானதாகும். வேதங்களிலும் தென்னாடு விளக்கமாகப் பேசப் பெறவில்லை. ஒரு வேளை இருக்குவேதம் தோன்றிய அந்தக் காலத்தில் தென்னாட்டைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லை என்றாலும், தென்னாட்டு மக்களினத்தவர் வடக்கே இமயம் வரையில் ஆரியர் வரும்போது வாழ்ந்திருந்தார்கள் என்று வரலாற்றாளர் கொள்வதை அறிய வேண்டும். ஆரியர் அத் தென்னாட்டு இனத்தவராகிய கறுப்பரோடு மாறுபட்டுக் கலகம் விளைத்திருக்கின்றனர். பழங்குடிகளைக் கறுப்பர் எனவும் அவர்தம் தலைவனைக் கறுப்பன் (கிருஷ்ணன்) எனவும் பழித்துரைத்தமைக்கு வேதத்தில் பலசான்றுகள் உள்ளன. அவர்கள் இந்திரனை வழிபாடு கடவுளாகக் கொண்டார்கள். கிருஷ்ணன் அல்லது கறுப்பன் அவர்தம் பகைவர் தலைவன். இந்தக் கதையைத்தான் பாகவதம் கண்ணன் இந்திரனுக்கு எதிராகப் போர் தொடுத்துக் குன்றைக் குடையாக்கி, தன் மக்களை இந்திரன் தொல்லையிலிருந்து காத்தான் எனக் கூறுகின்றது போலும்! ஆயினும், அந்த இந்திரனைப் போற்றும் வழக்கம் மெள்ள மெள்ள வடநாடு முழுவதும் பரவியதோடன்றித் தென்னாட்டிலும் புகுந்து, சிலப்பதிகார காலத்தில் சிறந்த விழாவாய்த் தமிழர் கொண்டாடத் தக்க வகையில் வளர்ந்து விட்டதெனக் காண்கின்றோம். எனவே, இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்குமுன் புகுந்த ஆரிய மக்கள், தம் கொள்கை, பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் முதலியவற்றை மெள்ள மெள்ள வடவிந்தியாவிலும் தென்னாட்டிலும் மாறுபாட்டுக்கும் வேறுபாட்டுக்கும் இடையிலும் நெடுநாட்களுக்கு முன்பே பரப்பிவிட்டார்கள் என்பது தெளிவு.

இனி அவர்தம் இராமாயண பாரத காவியங்களிலும் தென்னாடு பேசப்படுகின்றது. வான்மீகியார் தம் இராமாயணத்தே தமிழ்நாட்டைப் பற்றிக் குறிக்கின்றார் என்பதை அறிகின்றோம். சீதையைத் தேட அனுமனைத் தெற்கு நோக்கி அனுப்பிய சுக்கிரீவன், ‘சேர சோழ பாண்டி நாடுகளைக் காணக் கடவீர்கள்,’ என ஆணையிட்டதாக வான்மீகியார் காட்டியுள்ளாராம். மற்றும், பாண்டியர் தலைநகராகிய கபாடபுரத்திலும் காண வேண்டுமென ஆணையிட்டதாகவும் கூறுவர் எனவே, வான்மீகியார் காலத்தில் தமிழ் நாட்டு முடியுடை மூவேந்தர்கள் இருந்தது மட்டுமன்றி, பாண்டியர் தலைநகர் கபாடபுரமாய் இருந்ததெனவும் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, மிகு பழங்காலத்திலேயே வடக்கும் தெற்கும் இலக்கியவழி அறிமுகமானவையாகவே இருந்தன.

வியாச பாரதத்திலும் தமிழ் நாட்டைப் பற்றிக் குறிப்பு வருகிறதாம். அருச்சுனன் தீர்த்த யாத்திரையின் போது பாண்டிய மன்னன் மகளை மணந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. போலும்!அந்தக் கருத்தைத்தான் பெரிதாக்கிப்பின்னாளிலே பிறர் ‘அல்லி அர்ச்சுனன்’ என்ற நாடகமாக்கி மேடையில் நடித்தனர்! மற்றும் தமிழ் வேந்தன் சேரலாதன் பாரதப் போரில் சோறளித்த சிறப்பை நம் இலக்கியங்கள் காட்டிய படி பாரதம் எடுத்துக் காட்டவில்லை என்றாலும், அது பாரதப் போரில் தமிழ் நாட்டு மன்னரின் பங்கு இருந்தது என்பதைக் காட்டுகின்றது என அறிகின்றோம். இவ்வாறே வேறு சில வடமொழிக் காவியங்களிலும் தென்னாடு குறிப் பிடப்படுவதை எடுத்துக் காட்டுவர் அறிஞர்.

இனி, இவ்வாறான இலக்கியங்களேயன்றிச் சில கல்வெட்டுக்களும் வடக்கையும் தெற்கையும் இணைத்துக் காட்டுகின்றன. சிறப்பாக அசோகர் காலத்துக் கல்வெட்டுக்கள் தென்னாட்டை மட்டுமன்றி, ஈழநாட்டையும் வட நாட்டுடன் பின்னிப் பிணைக்கின்றது. அசோகரே இந்திய வரலாற்று எல்லையில் முதன்முதல் விரிந்த நிலப்பரப்பைத் தம் ஆணையின்கீழ் வைத்து ஆண்டவர். ஆயினும், தமிழ்நாடு அவர் ஆணைக்கு உட்படாததாய்த் தனியாகவே உரிமை பெற்று வாழ்ந்தது. அவர் ஆட்சி வடக்கு மைசூர் வரையில் இருந்ததாக மைசூர் நாட்டைச் சேர்ந்த சித்தல் துர்க்கக் கல்வெட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன[6]. அவர் காலத்தில் கிரேக்க உரோம நாட்டு மக்கள் இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் வந்து தங்கினார்கள் என்றும், அவர்களை இந்நாட்டு மக்கள் யவனர்களென வழங்கினார்களென்றும் அவர் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். அவர்கள் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் யவனர்’ என்றே வழங்கப் பெறுவதைக் காண்கின்றோமல்லவா! அலெக்சாந்தர் போர் மேல் விருப்புற்று நாட்டெல்லையைப் பெருக்க வடமேற்குக் கணவாய் வழியே இந்திய மண்ணில் கால் வைக்குமுன்பே, அவர் முன்னோர்கள் கடல் வழியாகத் தமிழ் நாட்டு மேலைக் கடற்கரையில் வந்து தங்கி இரு நாட்டு வாணிப வளனையும் வளர்த்தார்கள் என்பதற்கு 'அரிசி' போன்ற சொல் ஆய்வுகளும், 'யவனர்’ என்னும் பெயர் பல இலக்கியங்களில் எடுத்தாளப் பெறுவதும் சிறந்த சான்றுகளாகும்.

அசோகர் தம் கல்வெட்டுக்கள் வழி ஆராய்ச்சி செய்த ஸ்மித்து (W. A. Smith) அவர்கள். அக்காலத்தில் ஆந்திர நாடு கிருஷ்ணை ஆற்றங்கரைக்கு வடக்கும் மேற்கும் பரந்து விரிந்து இருந்ததென்றும், அதுவரை சோழ நாட்டு எல்லை விரிந்து சிறந்து நின்றதென்றும் காட்டுகின்றார்[7]. மற்றும் ஆய்வாளர்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகள் சேர்ந்த தமிழ் நாடு அசோகர் காலத்தில் தனி உரிமை பெற்று அசோகருடன் சம நிலையில் வாழந்தது எனக் காட்டுகின்றனர். அசோகர் நாட்டுக்குத் தென்னெல்லைக் கோடு வரைகின்ற வரலாற்றறிஞர் சென்னைக்கு வடக்கே இப்போதைய தமிழ்நாட்டு எல்லைக் கோட்டில் நிற்கும் புலிக்கட்டு (பழவேற்காடு) தொடங்கி மைசூர் நாட்டுச் சித்தலதுர்க்கம் வரை சென்று தென்கன்னட நாட்டு எல்லையில் மேற்குக் கடற்கரையில் முடிகிறது எனக் கணக்கிட்டுள்ளனர்.[8]

அசோகர் காலத்துக் கல்வெட்டு எழுத்தின் வழி, தமிழ் நாட்டைப் பற்றிப் பல நல்ல குறிப்புக்கள் நமக்குக் கிடைக்கின்றன. அசோகர் எல்லைக்கு உட்படாத நாடுகளைத் தென்னாடுகள், வடநாடுகள் என இரு பிரிவாக்குகின்றனர். தென்னாடுகளைக் குறிக்கும்போது சோழ, பாண்டிய, கேரள சத்திய புத்திரரைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் முன் வருகின்றன. அசோகர் காலத்தில் தனி உரிமையோடு வாழ்ந்த தென்னாட்டு மக்களுள் இவ்வாறு மன்னர் சிலர் ஆட்சியில் சிறந்தனர் என அவர் கல்வெட்டுக்களே காட்டுகின்றன. இவர்கள் நமக்கு நன்கு பழக்கமானவர்களே எனினும், அசோகர் கல்வெட்டுக்கள் மூலம் இவர்களைப் பற்றிப் பல புதிய உண்மைகளை உணர்ந்துகொள்ள முடிகின்றது. அசோகர் கல்வெட்டுக்கள் சோழ பாண்டியரைப் பன்மையிலேயே குறிக்கின்றன. எனவே, இரு வேறு சோழர்களும் அப்படியே இருவேறு பாண்டியர்களும் அவர் காலத்தில் வாழ்ந்தார்கள் எனக் கொள்ளலாம். அவர் கல்வெட்டுக்களுக்கு ஏற்ற நிலையில் அக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்த, வரலாற்றுக் குறிப்புக்கள் எழுதிய யவன யாத்திரிகர் தாலமி[9] பெரிபுளுஸ்[10] போன்றார் எழுத்துக்களும் அமைந்துள்ளன. சோழர் ஆட்சி தெற்கும் வடக்கும் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது, தெற்குச் சோழர்கள் திருச்சிக்கு அடுத்த உறையூரைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பது அறிய முடிகின்றது. சோழர் தலை நகராக ஒர்துரா (Orthura) என யவன ஆசிரியர் குறிப்பது உறையூரையேயாகும் எனக் கன்னிங்காம் அவர்கள் கருதுவது பொருத்தமானதாகும். இக்கருத்தை வலியுறுத்தி இந்தியப் பழமை பற்றி வெளி வந்த இதழ்த் தொகுதி[11] திட்டமாகவும் எழுதியுள்ளது. எனவே, தெற்கில் ஆண்ட சோழர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர் என்பது நன்கு தெளிவாகின்றது. இதனால், நாம் மற்றொன்றும் எண்ண வேண்டியுள்ளது. காவிரிப் பூம்பட்டினம் என்னும் புகார் அழிந்த பிறகுதான் உறையூர் தலைநகராய் வளர்ந்ததென்று கூறும் ஒரு சிலர்தம் கூற்றுக்கள் பொருந்தா என்பதும், புகார் அழியு முன்பே உறையூரும் சோழர் தலைநகராகவே இருந்தது என்பதும் உறையூர் உள் நாட்டுத் தலைநகராகவும் இருந்தது என்பதும் அறிதல் வேண்டும். இனி, வடக்குச் சோழர் தலைநகரை ஆர்க்காடு எனக் குறிக்கின்றனர்[12]. தமிழ் நாட்டு எல்லையில் செங்கற்பட்டு. வடவார்க்காட்டு மாவட்டங்களில் ‘ஆர்’ தொடர்புடைய ஊர்கள் சில உள்ளன. இன்றும் தமிழ்நாட்டு மாவட்டங்கள் இரண்டு தென்னார்க்காடு, வடவார்க்காடு எனவே வழங்கப் பெறுகின்றன அல்லவோ! ‘ஆர்’ சோழருக்கு உரிய மாலை. அந்த மலர் நிறை மரங்கள் செறிந்த காடு ‘ஆர்க்காடு என வழங்கியிருக்கலாம். இன்றும் ஆர்க்கோணம், ஆர்ப்பாக்கம் போன்ற ஊர்கள் இப் பகுதியில் இப்பெயர்களோடேயே நிலவி வருவதை யாரும் அறியலாம். இவை அனைத்தும் சோழர் தொடர்புடையனவே; அவரது மாலையை மணம் பெறச் செய்தனவேயாம். இந்த உண்மை அறியாது இவற்றை ஆற்காடு", “ஆற்பாக்கம்’ எனத் தவறாக எழுதுகின்றார்கள் இக்காலத்து மக்கள். இனி, ‘ஆர்க்காடு அக்காலத்து வடபகுதிச் சோழர் தலைநகராயின், காஞ்சிபுரம் இல்லையா? என்ற கேள்வி எழும். காஞ்சிபுரம் அக்காலத்தில் ஒரு சிற்றுாராய் இருந்திருக்கலாம். பின்பு கடைச்சங்க காலத்தில் கரிகாலனே அக்காஞ்சியையும் அதைச் சுற்றிய பகுதியினையும் வளமாக்கினான் எனக் காண்கின்றோம். பின்பு தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் அது தலைநகராகவே திகழ்ந்தது. பின்பு பல்லவர்கள் காலத்துச் சிறந்தோங்கி இன்றளவும் நலமுற்று நிற்கின்றது. இவற்றின்வழி அசோகர் கல்வெட்டுக்களிலும், அக்காலத்தில் வெளிநாட்டார் வரலாற்றுக் குறிப்புக்களிலும் அசோகர் காலத்தில் சோழநாட்டு எல்லை விரிவாய் இருந்த தெனவும், இரு வேறு தலைநகர்களில் இருவேறு சோழ மன்னர்கள் ஆண்டார்கள் எனவும் கொள்ள வேண்டியுள்ளது.

இனிப் பாண்டியரைப் பற்றிக் காண்போம். அசோகர் பாண்டியரையும் பன்மையாலேயே குறிக்கின்றார். எனினும், சோழரைக் குறித்ததுபோல, தாலமி பாண்டியர் இருவரெனக் குறிக்கவில்லை. ஆயினும், பாண்டி நாட்டு எல்லை கன்னியாகுமரி தொடங்கி, கொங்கு நாட்டையும், மைசூர் நாட்டு ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டிருந்ததென அசோகர் கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றமையின், அப்பரந்த நிலப்பரப்பை இரு வேறு பாண்டியர்கள் ஆண்டார்கள் என்று கொள்வதே பொருத்தமாகும். மதுரையைத் தலைநகர் என யவன ஆசிரியர்கள் குறிக்கின்றார்கள். எனவே, மதுரையைத் தலைநகராகக் கொண்டு, பாண்டி நாட்டுத் தென்பகுதியை ஒரு பாண்டியரும், கொங்குநாட்டையும் அதைச் சார்ந்த பிற பகுதிகளையும் மற்றொரு பாண்டியரும் ஆண்டார்கள் என்று கொள்வது பொருத்தமானதாகும். பின்பு கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வந்த வராகமித்திரர், இருவேறு பாண்டியர் இருந்தனர் எனவும், அவருள் ஒரு சாரார் உருத்திர பாண்டியர்’ எனவும் குறிக்கின்றார்.[13]

கேரள புத்திரரைப் பற்றியும் சத்திய புத்திரரைப் பற்றியும் திட்டமான முடிபுகள் அசோகர் கல்வெட்டு எல்லையில் நின்று காண முடியாவிட்டாலும், தாலமி, பெரிபுளூஸ் போன்ற யவன ஆசிரியர்கள் குறிப்புக்களைக் கொண்டும், பிற சூழல்களாலும் திருவனந்தையைத் தலைநகராகக் கொண்டு திருவாங்கூர்ப் பகுதியை ஆண்டவர்களைச் சத்தியபுத்திரர் என்றும், இக்காலக் கண்ணனூர் (Kranganur) நகரைத் தலைநகராகக் கொண்டு மலபார், கூர்க்கு, தென்கன்னடம் ஆகிய பகுதிகளை ஆண்டவர்களைக் கேரளபுத்திரர் என்றும் கொள்ள வழியுண்டு. இவர்களை வடநாட்டில் ஆண்ட இப்பெயர் கொண்ட சில பரம்பரையோடு சேர்த்தோ, அவர்தம் வழி வந்தவர்கள் என்றோ கூறுவது பொருந்தாது என டாக்டர் பண்டர் கார் நன்கு விளக்குகிறார்[14]. இவ்வாறு அசோகர் கல்வெட்டுக்களாகிய எழுத்துக்கள் தென்னாட்டையும் அதன் பகுதிகளையும் நன்கு விளக்கிக் காட்டுகின்றன.

அசோகர் காலத்தில் தென்னாட்டு மக்களுக்கும் வடநாட்டு மக்களுக்கும் உணவு, உடை, வாழ்க்கை முறை முதலியவற்றுள் பலப்பல வேறுபாடுகள் இருந்தன எனக் காண்கின்றோம். அசோகர் காலத்தில் வடக்கிலும், மத்திய இந்தியாவிலும், தெற்கிலும் தனித்தனி வகைப்பட்ட மொழிக் குடும்பங்கள் வாழ்ந்திருந்தன என்பதும், வடவிந்திய மொழிகளுக்கும் தென்னிந்திய மொழிகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதும் நன்கு தெரிகின்றன[15]. அசோகரின் கலை நலம் மேலை நாட்டுக் கிரேக்க 'ஹெலன்'[16] கலை நலனை ஒத்ததென்பர் சிலர். எனினும், அம்மேலை நாட்டுக் கலை நலமும் அசிரியரிடமிருந்து[17] பெற்றதே என்றும், அந்த அசிரியர் மௌரியர்களுக்கு முன் இந்தியாவின் பல பாகங்களோடு தொடர்பு கொண்டும் இந்தியாவிலேயே வாழ்ந்தும் இருந்தார்கள் என்றும் காட்டுவர். அவர்களையே வேதம் அசுரர் எனக் குறிக்கின்றது என்பர். அவர்கள் ஆரியர் வருமுன் இந்தியா முழுதும் பெருநகரங்கள் அமைத்துச் சிறந்த நாகரிகம் பெற்று வாழ்ந்தவர்கள் என்பர் ஆய்வாளர்[18]. இந்தியநாட்டுக் கட்டடக் கலை பெரும்பாலும் அசுரரென்னும் அந்த அசிரியர்களாலேயே வளர்ச்சியுற்றதென்றும், அசோகர் காலத்தில் அது சிறந்து நின்றதென்றும், அசோகர் காலக் கலை நலமும் கலந்து அது அன்று தொட்டு இந்தியக் கலையாகவே அமைந்துவிட்ட தென்றும் பண்டர்கார் விளக்கியுள்ளார்கள்[19]. பாபிலோனியாவிலிருந்த மக்களொடு இந்தியமக்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதை நாகபுரிப் பொருட்காட்சிச் சாலையில் உள்ள கி.மு. 2000-த்தைச் சேர்ந்த முத்திரை (Seal) நன்கு விளக்குகின்றது என்பர். அது மத்திய இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டதாம். இவற்றால் மிகு பழங்காலத்திலிருந்தே மத்தியதரைக் கடல் நாடுகள். மேற்காசிய நாடுகள் ஆகியவற்றுடன் இந்தியாவின் வடக்கும் தெற்கும் பல்வேறு வகைளில் இணைந்து நின்றன என்பதும், அந்த இணைப்பின் வழிப் பல நாகரிகங்களும் பண்பாடுகளும் கலந்து புதுப்புது மாற்றங்களை வரலாற்றில் உண்டாக்கின என்பதும் தெரிகின்றன. இந்த நிலையிலே தான் அந்தப் பகுதிகளில் வாழ்ந்த அசிரியரும் பின் வந்த ஆரியரும் கடல் வழி தென்கோடியிலுள்ள இலங்கை, தமிழ்நாடு முதலியவற்றிற்குச் சென்றிருக்கக்கூடும் எனக் கொள்வதும் பொருந்துவதன்றோ!

இனி, அசோகர் தம் புத்த மதத்தைத் தம் ஆணையின் கீழ் இல்லாத் தென்னாட்டிலும், இலங்கையிலும் பரப்பினார் என்பது வரலாறு கண்ட உண்மை. அவர் தம் மக்களுள் சிலரையே இங்கு அனுப்பினார் எனக் காண்கின்றோம். தமிழ்நாடு வழியாக அசோகர் அனுப்பிய பெளத்தம் இன்னும் இலங்கையில் வாழ்கின்றது தமிழ்நாட்டில் பல சூழல்களுக்கு இடையில் வரலாற்றில் நின்றுவிட்ட ஒன்றாய் அது அமைந்துவிட்டது. எனினும், ஆட்சியால் அசோகர் காலத்தில் தென்னாட்டுக்கு அவருடைய நேரடித்தொடர்பு இன்றேனும், சமயத்தால் அவர் தென்னாட்டை மட்டுமன்றி, ஈழம், சீனநாடு முதலியவற்றையும் பிணைத்தார் எனக் கொள்ள வேண்டியுள்ளது. மேலை நாட்டில் கிரேக்கரல்லாத பிறரிடம் அக்கிரேக்க நாட்டு ஹெலன் கால நாகரிகம் பரவி நின்றது போன்றே, அசோகர் காலத்துக்கு முன்பே ஆரிய நாகரிகம் ஓரளவு இந்தியா முழுவதும் பரவத் தொடங்கி விட்டது என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.[20]

அசோகர் கல்வெட்டுக்களைக் காணும்போது அக்காலத்தில் வந்த யவன மக்களுடைய குறிப்புக்கள் இரண்டொன்றைக் கண்டோமல்லவா? ஆம்! அவை போன்றே அக்காலத்தில் இந்திய நாட்டுக்கு வந்த பலர் வடக்கையும் தெற்கையும் கண்டு பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவற்றுள் ஒரு சில கண்டு மேலே செல்லலாம்.

மெகஸ்தனிஸ் போன்ற மேலை நாட்டவரும் பாஹியான் போன்ற கீழை நாட்டவரும் அந்த வரையறுத்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இங்கே வந்து பல குறிப்புக்களை எழுதி வைத்துச் சென்றுள்ளனர். அவருட் சிலர் கடல் வழியாகவும், சிலர் தரை வழியாகவும் இந்தியாவுக்கு வந்துள்ளனர். கடல் வழி வந்துள்ள பலர் தென்னாட்டுக் கரைகளிலே இறங்கி, நாட்டில் உலவினர். தரை வழியாக வந்தவர்களோ, அகன்ற வடவிந்திய நிலப்பரப்பு வழியாக மெள்ள மெள்ளத் தென்னாட்டிலும் கால் வைத்தார்கள். மற்றும் மேலை நாட்டுக் கீழை நாட்டுக் கடல்வழி வாணிபத்திற்கு இடைநிலைக்களனாய்-நடு நாயகமாய்-இந்தியா, சிறப்பாகத் தென்னிந்தியா விளங்கிற்று. மற்றும் இந்தியா, சீன நாட்டுச் சமயமாகிய புத்த சமயத்தின் தாயகமாய் இருந்த காரணத்தாலே மிகு பழங்காலந்தொட்டே சமய நெறி போற்றிய சீனப் பேரறிஞர் பலர் இந்திய நாட்டுக்கு வந்து தென்கோடி வரையில் இதன் வளங்கண்டு எழுதி வைத்துள்ளனர். இவையெல்லாம் ஒரளவு வடக்கையும் தெற்கையும் பிணைத்தே பேசுகின்றன.

வரலாற்றுத் தந்தையாரென்று பேசப்பெறும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டவரான ஹெரடோட்டஸ்[21] என்பவர் இந்தியாவைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் முதன்முதல் விளக்கிக் காட்டுகின்றார். வெறுங்கற்பனைகளாக அன்றி, உள்ளன கூறும் வரலாற்று நிலைக்கு ஏற்ப அவர்தம் எழுத்துக்கள் அமைகின்றன. அவருக்கு முன் இந்தியாவைப் பற்றி எழுதியவர் உள்ளனரா என்பது அறியக் கூடவில்லை என நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் குறிக்கின்றார்கள்[22] . எனினும், மெகஸ்தனிஸ்[23] என்ற யவன ஆசிரியர் குறிப்பே நமக்குத் தென்னிந்தியாவைப் பிற நாட்டார் வழி முதல் முதல் காட்டுகின்றது. மேலே கண்ட அசோகர் காலத்தை ஒட்டி வந்த மெகஸ்தனிஸ் தெற்குக் கோடியில் வளம் நிறைந்த தாம்பிரபேன்’ (Tamprobane) என்ற பகுதி இருந்ததாகக் குறிக்கின்றார். அவர் செலுக்கஸ் என்ற யவன மன்னரால் கி.மு. 302ல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர்[24]. அவர் பாண்டிய நாட்டைக் குறிக்கும்போது, அது மகளிரால் ஆளப் பெற்றதென்றும், முதல் மகள் ஹெர்குலிஸ் (Hercules) மகள் என்றும் குறிக்கின்றார். யவனர்தம் பழங்காலக் கதைகளில் வரும் கடவுளர் பற்றிய குறிப்புக்களோடு பாண்டிய நாடு அந்தக் காலத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டித்தான் போலும் பின் வந்தவர்கள் பாண்டிநாடு தடாதகைப் பிராட்டியாராலும், இறைவனாலும் ஆளப்பட்டது எனத் தமிழ் நாட்டு முறைக்கேற்பப் புராணங்களை எழுதிச் சென்றார்கள்! தென்னிந்தியாவைச் சிறப்பாகக் கூறிய இவ்வாசிரியர், இந்நாட்டு ஆமை, யானை முதலியவற்றையும், மணி, பொன் முதலிய விலை உயர்ந்த பொருள்களைப் பற்றியும் குறிக்கின்றார். எனவே, அந்தப் பழைய காலத்தில்கடைச்சங்க காலத்துக்கு முன்பே - தமிழகம் கிழக்கும் மேற்கும் நெடுந்தொலைவுக்கு அறிமுகமாகி இருந்ததோடு, சிறந்த செல்வவளமும் மக்கள் நலமும் பெற்று விளங்கியிருந்தது என்பதை அறிய மகிழ்ச்சி உண்டாகிறது!

பான்கெள[25] என்ற சீனயாத்திரிகர் எழுத்தின் வழித் தென்னாட்டுக் காஞ்சிபுரத்துக்கும் சீன நாட்டுக்கும் தொடர்பு இருந்தமையை அறிய முடிகிறது[26]. கி.மு. 140.86ல் ஆண்ட சீன மன்னர் காலத்தில் (Emperor Wou) காஞ்சிபுரத்துக்குப் பல பொருள்கள் அனுப்பப்பட்டனவாம். இரு நாடுகளுக்கும் வாணிபத் தொடர்பும் இருந்ததாக அறிகின்றோம். அவர்கள் கடல் வழியே காற்றாலும் அலையாலும் அலைப்புண்டு நெடுங்காலம் பயணம் செய்தார்கள் என்று கொள்ளவேண்டியுள்ளது. (காஞ்சி என்பது அவர்கள் மொழியில் Houang--tche என வழங்கப்பெற்றுள்ளது.) அவர்கள் வழியில் பலநாடுகளைக் கடந்து காஞ்சித் துறைமுகத்துக்கு வந்தவர்கள் போலும்! அசோகர் காலத்தில் ஆர்க்காடு தலைநகராய் இருக்க, சிறிய நகராய் இருந்த காஞ்சிபுரம், சிறிது காலத்துக்குள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகவும் வளர்ச்சியடைந்து, வெளி நாட்டு மக்களும் விரும்பி வந்து வாணிபம் செய்யும் நகரமாகிவிட்டது என எண்ண வேண்டியுள்ளது.

எகிப்திய ரோம நாடுகளிலிருந்து தரைவழி அலெக்சாந்தர் வடவிந்தியாவுக்கு வந்தது போன்றே கடல் வழியாகப் பலர் தெற்கே பாண்டி நாட்டுக்கு வந்துள்ளனர். பாண்டிய மன்னருடைய தூதுவர் கி.மு. 22ல் அகஸ்தஸ் (Caesar Agustus) அவையில் இருந்தனர் என்பது ஸ்டிராபோ[27] என்பார் குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது. அகஸ்தஸின் நண்பனாகிய ஏரோது என்னும் பெருமன்னனுக்கு நண்பரான நிக்கோலஸ் டமாஸ்கோனஸ்[28] அவ்வாறு அகஸ்தஸிடம் அனுப்பப்பட்ட இந்தியத் தூதுவரைத் தாம் கண்டதாகக் கூறுகின்றார். இந்தக் குறிப்பாளர்க்கு நண்பனாகிய ஏரோது இயேசுவை இன்னலுக்குள்ளாக்கிய ஏரோது மன்னனோ பிறனோ என்பது எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. அகஸ்தஸ் கால எல்லையில் இதற்கு உண்மை காண முடியுமல்லவா? அகஸ்தஸ் அவையில் கி.மு. 22ல் பாண்டி நாட்டுத் தூதன் இருந்தான் என்று அறிதலால் இக்கூற்று உண்மையாகும் அல்லவா?

மற்றொரு யவன வரலாற்றுக் குறிப்பாளரான பிளினி[29] என்பார் யவன நாட்டிலிருந்து இந்தியக் கரைக்கு வரும் கடற்பயணத்தையும் 'தாம்பிரபேன்’ என்று ஈழச் செல்வ வளத்தையும் பிறவற்றையும் குறிக்கின்றார். அலெக்ஸாந்தர் படையெடுப்பை ஒட்டி அவருடன் இந்தியாவுக்கு வந்த அவர் சேனைத் தலைவர் ஒனெசிகிரிட்டோஸ் [30] வடநாட்டு எல்லையில் இருந்தாலும், இந்திய நாட்டு யானைகளினும் இத் தாம்பிரபேன் நாட்டு யானைகள் சிறந்தவை எனக் குறிக்கின்றார். மெகஸ்தனிஸ் குறிப்பும் ஈழம் ஒர் ஆற்றால் (தாம்பபேன்) பிரிக்கப்பட்டது எனவே குறிக்கின்றது. எனவே, இவர்கள் தரை வழித் தாமிர வருணி நதி வரை சென்று, அதன் வெள்ள வேகத்தைக் கடக்க இயலாது அத்துடன் கடல் வந்துவிட்டது எனவும், அதற்கப்பால் உள்ள நிலப்பரப்பே இலங்கை எனக் கொண்டார்கள் எனவும் கருதுவர் சிலர். என்றாலும், இரண்டுக்கும் இட்ையில் ஆழமற்ற நீர்த் தேக்கங்கள் இருந்ததாக அவர்கள் குறிக்கின்றமையின், அக்கூற்று ஆராய்தற்குரியதாகும். எப்படியாயினும், இந்திய வரலாற்றை வடமேற்கு மூலையில் தொடங்கிவைத்த அலெக்சாந்தர் வந்த அந்தநாட்களிலேயே அவன் மக்கள் தென்கோடி நாடுகளிலும் வந்து சென்றார்கள் என்றும், இத்தென்னாட்டின் ஏற்றத்தைப் பாராட்டிச் சென்றார்கள் என்றும் அறியலாமன்றோ?

மற்றொரு குறிப்பாளரான பெரிப்புளுஸ்[31] இந்தியாவின் பல பாகங்களையும் கண்டு, காட்டி, அவற்றின் அமைப்புக்களையும் பிணைப்புக்களையும் விளக்குகின்றார். அவர் அலெக்ஸாந்தர் படையெடுப்புத் தொடங்கி, கங்கை சிந்து சமவெளி வந்ததைக் குறித்து, மெள்ள மெள்ளத் தெற்கே வந்து சேர, சோழ, பாண்டி நாடுகளையும் அவற்றின் கடற்கரைகளையும் துறைமுகப் பட்டினங்களையும் குறிக்கின்றார். மறைந்த கொற்கை, முசிறி, தொண்டி போன்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்களும் அவற்றுள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் அந்த யவன ஆசிரியர்தம் குறிப்பால் நன்கு விளங்குகின்றன[32]. மற்றொரு குறிப்பாளர் தமிழ்நாட்டுக் கடற்கரையில் முத்துக் குளித்த சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றார்[33]. இவர்களெல்லாம் தமிழ்நாட்டு வரலாற்றுக் கடைச்சங்க காலத்தும் அதற்குச் சற்று முன்னும் இந்திய நாட்டுக்கு வந்து கண்டவற்றைத் தொகுத்துக் காட்டிச் சென்றவர்களாவார்கள். எனவே, அந்தப் பழைய காலத்தில் வடக்கும் தெற்கும் பல வகையில் இணைந்து நின்றே வாழ்ந்தன என்ற உண்மையை நம் நாட்டு இலக்கியங்கள் மட்டுமன்றி, இந் நாட்டுக்கு வந்த பிற நாட்டார் எழுதிவைத்த குறிப்புக்களும் நன்கு விளக்குகின்றன என்பதறிந்து, இத்துறையில் இன்னும் ஆழ்ந்த கருத்திருத்தின், மேலும் மேலும் புது உண்மைகள் பல புலப்படும் என்பது உறுதி.

இவையன்றி, ஈழநாட்டு வரலாற்றைக் கூறும் ‘மகா வமிசம்’ என்ற வரலாற்றுக் குறிப்பின்வழி, கி.மு. 145ல் ஏலேரா என்ற தமிழ் நாட்டுச் சோழமன்னன் ஈழநாட்டு மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டு அரியணை ஏறினான் என்ற குறிப்பும் கிடைக்கின்றது[34]. கி. மு. 43க்கும் 29க்கும் இடையில் பாண்டியர் ஈழநாட்டை ஆண்டனர் என்ற குறிப்பும் உண்டு.

இவ்வாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே கிறிஸ்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கியே-வடக்கும் தெற்கும் இணைந்து வாழ்ந்தன என்பது தெரிகின்றது. சங்க காலத்திற்குப் பிறகு இரு பகுதிகளும் இணைந்தமைக்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. மற்றும், அவை அனைத்தும் ஒரளவு வரலாற்று எல்லைக்குள் வந்து அமைந்துவிடுகின்றன. ஆகவே, இந்த அளவில் வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும் இணைந்தமைக்குள்ள சான்றுகள் சாலும் என அமைகின்றேன். இச்சான்றுகளுள் ஒவ்வொன்றையும் தனித் தளியாக விரித்துக் காணின், மிகப் பெருகும். வாய்ப்புள்ளவர்கள் ஆய்ந்து கண்டு, இத்துறையில் ஆராய்ச்சியை வளர்த்து, நாட்டுக்கு நலம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அறிஞர் ஆவன செய்வாராக!

 1. The Vedic Age, p. 162
 2. பரிபாடல், 4:10.21.
 3. அகம், 220:3.9.
 4. பரிபாடல், 2:20.23.
 5. பரிபாடல், 2:16,17.
 6. Asoka, by D. R. Bhandarkar, M.A. (Bomb), p 27
 7. Asoka, p. p. 34, 35
 8. ibid. p. 45.
 9. Ptolemy
 10. Periplus
 11. Indian Antiquity
 12. Asoka, p. 39; Ptolemy (A. D. 130, Indian Anti - quity); Asoka, p. 40.
 13. Brlhat . Samhita, XVI : 10.
 14. Asoka, pp. 41, 42.
 15. ibid, pp. 198, 199.
 16. Hellenlc Art.
 17. Assyrians.
 18. Asoka, p. 215
 19. Asoka. p. 216
 20. Asoka, p. 243.
 21. Herodotus
 22. Foreign Notices of South India, p.4.
 23. Megasthenes (B.C. 302)
 24. Historical Inscriptions of South India, p. 5.
 25. Pan kou
 26. Foreign Notices of South India p. 44.
 27. Strabo (A.D.20)
 28. Nikolaos Damaskonos
 29. Piliny (A.D. 77)
 30. Onesikritos
 31. Peri Plus (A.D. 75)
 32. Foreign Notices of South India p. 87.
 33. Aelian.
 34. Historical Inscriptions of South India, р. 13