உள்ளடக்கத்துக்குச் செல்

வரலாற்றுக் காப்பியம்/ஆதிமனிதனுக்குத் தொட்டில்

விக்கிமூலம் இலிருந்து

ஆதிமனிதனுக்குத் தொட்டில்


குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதே
வரலாற்றுப் புலவர்களின் வலிய கொள்கை
அவன் ஆதியில் பிறந்தது சீனத்து பீக்கின்
அடுத்த வளர்ச்சி சாவக மனிதன்
தாவத்தெரிந்திருந்தான் வாலுண்டு
மனித குரங்கென்ற மறுமலர்ச்சி இதுவே
பிரிட்டானிய பில்டனில் மேலும் வளர்ந்தான்
நாலுகாலமைப்பில் ஒரு மாற்றம் நேர்ந்தது
காலிரண்டு கொண்டு ஊன்றினான்
முன்னங்காலிரண்டுமே கைகளாயிற்று
அடுத்து ஹெய்டனில் நிமிர்ந்து நடந்தான்
ஐந்து விரலும் ஒரு வழி அமைப்பாக
இன்றும் குரக்கினத்துக்கு இருப்பது போன்ற
நிலையில் திரிந்து பெருவிரல் தனித்து
இயங்கத் தெரிந்த மாற்றமே நின்டேர்தல்
கூட்டு வாழ்க்கை கொண்டு நடத்திய
மந்தி குலமே குரோமக்நன்
இந்த ஆறு நிலையும் கடந்த வளர்ச்சியை
உயிரியலார் ஆதி லெமூர் என்று அறுதியிட்டார்
உற்றறிவது உண்டு சுவைப்பது
மோந்து நுகர்வது கண்டு களிப்பது
கேட்டு மகிழ்வது என்றவகை ஐந்தறிவும்

கொண்டு விளங்கிற்று அந்த முன்னைக்குலம்
மேலும் மிருக வடிவிலிருந்து மேம்பட்டு
மனமென்னும் உணர்வு கொண்ட மாற்றமே
மனிதனாக்கிற்று லெமூரியன் ஆனான்
அவனே மனுக்குலத்துக்கு மூதாதை
தமிழ்க் குலத்துக்குத் தந்தை என்று தலை நிமிர்கின்றேன்.
யூதேயா நாட்டு ஏதேன் பூங்காவில்
ஆதாம் என்றவனை ஆண்டவன் படைத்தான்
அவன் எலும்பிலிருந்தே பெண்ணும் பிறந்தாள்
என்பது உயிரியல் இலக்கணத்துக்கு புறம்பானது
அறிவில் வளர்ந்து வடிவிலும் படிப்படியே
குரங்கிலிருந்து மனிதன் ஆன கொள்கையே வலியது
ஆக மனுக்குலத்தின் தலைமகன் லெமூரியன்.
லெமூரியனைக் கொண்டு பெயர் கொண்டதே லெமூரியா
அந்த ஆதிமனிதனுக்குத் தொட்டில்
மூன்றாவது ஊழியில் மூழ்கிய நம்தென் புலமே