வரலாற்றுக் காப்பியம்/சிந்துவெளிப் புதையல்

விக்கிமூலம் இலிருந்து

சிந்து வெளிப் புதையல்


ஊழியில் லெமூரியர் மூழ்கியப் பின்னே
வடக்கில் இமயம் எழுந்த தென்பார்
விந்தயத்துக்கு அப்பால் கடலும் திடலானது
சிந்தும் கங்கையும் செழுமை செய்தது
பெருவெள்ளத்துக்கு பிழைத்த ஒருகுழுவினர்
மேற்கில் நடந்து விந்தியம் கடந்து
சிந்து வெளியைச் சேர்ந்தார்
இழந்த லெமூரியத்தை ஈடுகட்ட
சென்ற இடத்தை செந்தமிழ் ஆக்கினர்
சீலம் சீனாப்ரவி பியாஸ் சட்லஜ்
யாற்றுப் படுகையில் ஒரு நூறு கோட்டைகள்
தென்புலத்து சிற்பத் திறனாக நிமிர்ந்தன
வடபுலத்தை வளர்த்த பண்பாடும் மேம்பாடும்
ஆவிபோல் தழைத்தது தெற்கில்
புகழ் கொண்டிருந்த தென் மதுரைக்கு நிகராக
வடக்கிலும் ஒரு மதுரை அமைத்துக் கொண்டார்
சிந்து வெளி பண்பாட்டின் இலக்கியமாக
சிந்து வெளியை செம்மைப் படுத்திய
செந்தமிழ்ப் பரம்பரை தனிவேறு குடிமுறையில்
துருவாச துருக்கிய யதுக்கள் அணுக்கள்
பத்த பலாயண பரத அவிநய
விசுவாமித்திர விஷணிய பூருக்கள் என

தாயரசனை மறந்து தனியரசு ஆனார்
வடபுலமே தமிழ்ப் புலமாய்த் தழைத்தது
மண்மாரிப் பொழிந்ததோ மாநதி தடம் புரண்டதோ
நில நடுக்கத்தில் நெடு நகரங்கள் அழிந்தனவோ
கொள்ளையிட வந்த வெள்ளையினம் கொளுத்தியதோ
அழிந்தன சிந்து வெளி கோட்டைகள்
அழியாத பண்பாட்டின் காலடிச் சுவட்டில்
எழுதாத சரித்திரத்தை இடிபாடுகளாக
வருங்கால சந்ததியின் சிந்தனைக்கு விட்டு
இறந்தார் மேடென்று இலக்கியம் சொல்லும்
மூகிஞ்சதரையே மொஹஞ்தரோ
தகர்ந்த தரையே தகஞ்சதரோ
சரிந்த தரையே சான்ஹதரோ
நொடிஞ்ச தரையே லொஹஞ்சதரோ
அழிந்தமேடே அலிமுரடு
பாண்டி வாஹி அமரி கோட்லா
அனைத்தும் அழிந்து மண் மேடாயின
புதை பொருள் போடுகின்ற புதிரை அவிழ்த்தால்
அரிக்கா மேடும் ஆதிச்ச நல்லூரும்
புதுக்கோட்டை புதைகுழியும் ஆங்கே தெரியும்
சரித்திர காரர்கள் சாற்றுகின்றவாறு
ஹங்கேரியில் தொடங்கி ஆசியாவில் திரிந்து
சிந்துக்கும் கங்கைக்கும் ஆரியம் வருமுன்னே
வேதத்தின் ஒலி இங்கே கேட்கு முன்னே

வேள்வித்தீ இந்த மண்ணில் சூழுமுன்னே
தழைத்திருந்த சிந்துவெளி சிந்தனைக்கு வந்தது
மேலோர்கள் மண்மேட்டை வெட்டிப்பிரித்தார்
அகழ்ந்த இடங்களில் அடுக்கு மாளிகைகள்
அகல் நெடுவீதிகள் ஆழ்குழல் சாளரங்கள்
செய்குன்று பொய்குளம் சித்திரக் கூட்டங்கள்
முத்திரைச் சின்னங்கள் முதுமக்கள் தாழிகள்
சுட்டகற்கள் சுன்னப் பதுமைகள்
கூடம்குளியலறை கழிப்பிடம் வெளிப்புறம்
இன்னபலவும் தென்புலத்து அமைப்பே
லெமூரியம் லெமூரியம் என்றே அறைகூவும்
எழுத்துக்கள் படிக்க இயலவில்லை ஆயினும்
தமிழனின் கண்ணெழுத்துக்கும் முன்னெழுத்தே
சுமேரியச்சாயல் உடையதென்பார்
சுமேரியமும் செந்தமிழ்த் தென்னவன் சாயலே
அகப்பட்ட அணிமணிகள் தென்மதுரைக் கைவண்ணமே
தெய்வச்சின்னங்கள் சிவலிங்கத்தோற்றமே
ஆடவல்லான் பதுமை ஆரப்பாவில் அகப்பட்டது
கன்னடத்துப் பொன்துகளும் விச்சிமலை
தமிழ் தமிழென்றே குரல் கொடுக்கும்
திமில் பெருத்த எருதும் தென்னாட்டுக்கடாவும்
நாயும் கோழியும் நம்முடைய வளர்ப்புகளே
பாவை விளக்கும் பார்மகள் வழிபாடும்
பாண்டியத்து முன்மரபைப் பறைசாற்றும்
தென்னவர் நாடே வரலாற்றின் முன்னேடு
சிந்து வெளி சுவடே சான்றுக்குச் சான்று
சிந்தென்றால் ஆறென்றே செப்பினார் முன்னோர்.