வரலாற்றுக் காப்பியம்/செந்தமிழ்ச் சுவடு

விக்கிமூலம் இலிருந்து

செந்தமிழ்ச் சுவடு


முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்ட தமிழர் நாகரீகம் பெரிதென்பேன்
பொய்யும் வழுவும் புரையோடாத வாழ்வு
இல்லை என்னாதவர் என்பும் பிறர்க்கு உரியர்
அறமும் மறமும் அகமும் புறமுமாக
வாழ்ந்த லெமூரிய வழிவழி வந்தவன்
மாவலி என்றொரு மன்னவன் இருந்தான்
அவன் பெயரால் மாவலிக் கரை என்று
சொல்லுகின்ற ஊர் கேரளத்திலுண்டு
மாவலி கங்கை இலங்கையில் ஓடுகின்றது
மாவலிபுரமென்ற கடல்துறை பட்டினம்
மாமல்லபுரம் என்று பெயர் மாறிற்று ஆயினும்
அங்க மாவலி சிற்பமாக நிற்கின்றான்
பாண்டியத்து படைத்தலைவரில் ஒரு பரம்பரை
மாவலி வாணராயர் என்று பட்டம் கொண்டிருந்தது.
கேரளத்தில் ஓணத் திருவிழா இன்றும்
மாவலிக்கே நடக்கின்றது மறக்கவில்லை
வாமனனுக்கு வாக்களித்த மன்னவன் அவனே
மண்ணே இழந்தான் மாதவன் ஆனான்
அந்த மாவலிக்கு மக்கள் ஐவர்
அவர்களில் வலியவர் மூவர் அரசரானார்
சேர சோழன் செழியன் என்று
சொல்லுகின்ற குலங்கள் மூன்றானது

வடபெண்ணைக்குச் சென்ற மகன் வடுகன் ஆனான்
கபினி கடந்து காவிரிக்கு அப்பால்
கருநிலத்துச் சென்றவனை கரு நடன் என்றார்
சொத்துரிமை தந்தைவழிப் பட்டது ஆயினும்
வழக்காற்றில் பங்காளியை தாயாதி என்றே வழங்கினார்
பிரளயத்துக்குத் தப்பிய மேலைக் கரையாளர்
யோர்தான் நதிக்கரையில் யூதரானார்
அமெரிக்க அமேசான் ஆற்றுப் படுகையிலே
மெக்ஸிகோ நாட்டு மலை முகட்டினிலே
கலிபோர்னிய மண்ணில் தென்புலத்துச் சாயலை
பெரூவியம் மாயா என்றே வளர்த்தார்
அழிந்த சுவடும் அழியாத நிழலும்
இன்றும் லெமூரியத்தை நினைவுறுத்துகின்றது
தெறல் பஃறி சுவரோவிய எழுத்துக்கள்
சொல்லுகின்றபடிக்கு தென்னவன் நாட்டு
பாண்டியக்கரையிருந்து சென்ற பழயவரே
நீலாற்றுப் படுகையில் எகிப்திய ரானார்
மக்கள் உரைவிடத்தை ஊர் என்றே உரைத்தார்
நம் முது மக்கள் தாழி முறைப்படியே
பிரமிட் கோபுர புதைகுழி வழக்காயிற்று
மனுவென்னும் பெயரையே மேன்சு என்று
எகிப்தின் முதல் மன்னவன் தரித்தான்
சிதறிப் போன செந்தமிழ்ச் சோழரே
சாலடிய ரென்று சாத்திரம் சொல்லும்
சேர இனத்திலிருந்து சென்றவரே கிரீத்துகளானார்

சுமேரியர் அக்கேடியர் என்று சொன்ன
பாபிலோனியப் பரம்பரை பகலவ வழிபாடுடையது
அண்ணாமலை முகட்டில் அகண்டம் ஏற்றும்
செந்தமிழ் ஒளிவிளக்கு சென்றவர்க்கும் உண்டு
ட்யூடானியர் வழிபட்ட ஓடன்கடவுள்
பெண்ணை தன்பால் வைத்த சிவனே
பழய ரோமரின் ஜுபிடர் வழிபாடும்
தென்னகத்து சிவபூசை என்றே சொல்வார்
அவர்கள் ஊரும் பேரும் உரிச்சொல்லும்
தமிழின் வேரடிப் பிறந்ததென்றே விளங்கும்
வாழ்வியல் வழிபாட்டு முறைகளில்
தமிழ் தழுவிய சாயலே தெரிகின்றது
சியாஸ் என்றதொரு கடவுளுக்கு
சடைமுடியும் முத்தலை வேலுமுண்டு
படைப்புக்கு வேலென்றார் முருகையும் வழிப்பட்டார்
ஏசுபிரான் காலத்தில் எல்லாம் வல்லவனை
ஏலோகி என்றார் எல்சடை என்றார்.
சூரியனென்ற பொருளே சொல்லும் தமிழே
இஸ்ரவேல் மரபினர் ஆன்கன்றை தொழுதது
தென்புலத்து நந்திக்குச்சான்று
சூரிய சந்திர வழிபாட்டை
கோயிலுடன் மெக்ஸிகோ கொண்டிருந்தது
ஆளுயர லிங்கம் ஒன்று இன்றும்
விடியா கல்லறையின் மேல் நிற்கின்றது

நடுகல் நிறுத்துகின்ற நம்வழக்கே அதுவாகும்
சென்றவர் நம்மவர் என்பதற்குச் சான்றுகள்
ஒன்றிரண்டென்று ஒன்பது வரை
எண்ணுகின்ற கணக்கு முறையும்
ஞாயிறு முதலாக சனி ஈறாக
சொல்லுகின்ற கிழமை வரிசையும்
கோள்களைப்பற்றிய கொள்கையும்
சென்றவர்க்கும் நம்மவர்க்கும் இன்றுவரை ஒன்றே
அவர்களும் ஞாயிற்றை பகலவன் என்றே பகர்கின்ற
ஆய்வாளர் காணுகின்ற அடையாளங்கள்
தென்புலத்துப் பழம் பதிப்பென்பதே தெளிவு
மற்றபடி வடதுருவத்துக்கு ஓடித்திரிந்தவர்
மந்தை மேய்த்தார் மந்தையாகத் திரிந்தார்
மத்திய தரைப்பகுதியை வந்து வளைத்தார்
சரித்திரம் அவரையே ஆரியம் என்றது