உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா

விக்கிமூலம் இலிருந்து



 3 


அவன் பித்தனா?

“நண்பா! பரதா! 5 காட்சிகளிலே அமைந்துள்ள இந்த நாடகத்தை வெளியிடு” என்று வீரன் கூறி, ஒரு கட்டுக் காகிதத்தைக் கொடுத்தான்.

“கற்பனையா, நிஜமா?” என்று நான் கேட்டேன்.

“நிஜமும், என் நினைப்பும், இணைந்தது இந்த நாடகம்” என்றான் வீரன்.

“காரசாரமானதோ?” என்றேன்.

“கண்ணீருங் கம்பலையுங் கலந்தது” என்றான் அவன்.

இதோ பார், பரதா! மூன்று செய்திகள்: காளி விக்ரகத்தை உடைத்தவன் கதை, பட்டினியால் மாண்டவர் பரிதாபம், தங்கக் குடை சமர்ப்பிக்கும் தனவணிகர் வரலாறு. இம்மூன்றையும், படித்துப் படித்து, ஏதேதோ எண்ணினேன், கனவிலே, கண்டேன், இக்காட்சிகளை. காலையிலே தீட்டி, உன்னிடம் இதோ நீட்டினேன் — என்று வீரன் விளக்கங் கூறினான்.

அவன் தந்த மூன்று செய்திகள், நிஜமாக நடந்தவைகள் தினசரிகளில் வெளிவந்தந்தவை. நேயர்கள் படித்திருப்பர்.

சில்ஹெட், என்ற இடத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளி கோயிலின் விக்ரஹத்தைப் பைத்தியம் பிடித்த இந்து ஒருவன், தூள்தூளாக நொறுக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. காளியைப் பார்த்து அவன் ஏதோ சில கேள்விகள் கேட்டான்; பதில் கிடைக்காது போகவே அவன் கோபங்கொண்டு விக்ரஹத்தை உடைத்துவிட்டானாம். மேற்படி கோயில் இந்த ஜில்லாவில் ரொம்பப் புராதனமானதாகும்.

5-7-’43 சுதேசமித்திரன்

ஸ்ரீ எம். சி. டி. சிதம்பரம் செட்டியார் திருமலை கோயிலுக்குச் சுமார் ரூ.15,000 மதிப்பில், தங்கக்குடை சமர்ப்பிக்க நிச்சயித்திருக்கிறார். நேற்று நடந்த தேவஸ்தானக் கூட்டத்தில் அதை வந்தனத்துடன் ஸ்வீகரிக்க ஒப்புக்கொண்டார்கள்.

இக்கொடையை முக்கிய தினங்களிலும், வெள்ளித் தேர்மேலும், உபயோகிப்பார்கள்.

4-7-’43 சுதேசமித்திரன்.

இன்று காலை கூடிய ஒரிசா சட்டசபையில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்பொழுது, மாகாணத்தில் பட்டினியால் பலர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நல்உணவின்றி எழுபதுபேர் மாண்டதாக, பாலசோர் மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து அறிக்கை கிடைத்ததாகவும், அவ்விதம் இறந்தவர்கள், இப்பொழுதைய வாழ்க்கை சம்பந்தமான கெடுதலான நிலைமையையும் உணவுக் குறைவையும் தாங்கமுடியாமல் மரணமடைந்ததாகவும், பட்டினியினால் மரணமடைந்தவர் தொகை சரியாகத் தெரியவில்லையென்றும் குறிப்பிடப்பட்டது.

4-7-’43 சுதேச மித்திரன்.

இனி, வீரனின் கனவுக் காட்சிகளைக் காணுங்கள்.

காட்சி 1

மாரி, தொடுக்கும் மான நஷ்ட வழக்கு!

இடம்: கற்பனைபுரி கோர்ட்.

காளி, மகமாயி என்று அழைக்கப்படும், மாரியாகிய நான் உங்கள் கோர்ட் முன்பு கொடுத்துக்கொள்ளும் மான நஷ்ட வழக்கு மனு என்னவென்றால்,

சில்ஹாட் வாசி, என்னும், எதிரி என்னை அகாரணமாக ஏதேதோ கேள்விகள் கேட்டபோது, நான் பதில் சொல்லாதிருந்தது கண்டு, என்னைக் கண்டபடி ஏசியதுடன், என் உடையைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்தான். இதனால் நான் வெகு காலமாக மதிப்போடு வாழ்ந்து வந்த இடத்திலே, எனக்கு மானபங்கம் ஏற்பட்டதுடன், பலபேர் பலவிதமாக என்னைக் கேலியாகப் பேசினதால், எனக்கு வழக்கமாக ஊரார் செலுத்திவந்த காணிக்கையும், சேவையும், மரியாதையும், இனிக் கிடைக்காது என்று அஞ்சவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. என் பெயருக்குப் பங்கமும், என் நிலைமைக்கு மோசமும், என் வருவாய்க்குக் குறையும் நேரிட்டுவிட்டதால், காருண்ய மிகுந்த கோர்ட்டாரவர்கள், எதிரியை விசாரித்து தக்க தண்டனை அளிப்பதோடு, என் உடையைப் புதுப்பித்துக் கொள்ளப் பொருளும், என் மானநஷ்டஈடாகப் பொருளும் எதிரி தரவேண்டும் என்று உத்தரவிடக் கோருகிறேன்.

இங்ஙனம் நியாய சபையை நாடி வரும் மாரி.

மாரி வக்கீல் மன்னார்சாமி, எதிரிக்கு வக்கீல் இல்லை.

நீதிபதி: சில்ஹாட்வாசி, நீதானா?

சி: நானேதான்!

நீ: மாரியின் வழக்கு மனுவைப் படித்தோம், கேட்டாயா?

சி: ஆஹா! எனக்கென்ன கேளாக் காதா? நன்றாகக் கேட்டது.

நீ: கோர்ட்டிலே, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டும், அதிகப் பிரசங்கித்தனம் கூடாது.

சி: உண்மைதான்! இருதரப்பிலும் இருக்கக்கூடாது.

நீ: மாரியின் வழக்கு மனுவிலே சொல்லியிருப்பது...................

சி: உண்மை. ஆனால் பூர்த்தியல்ல. மாரியை, நான் ஏசி உடையைக் கிழித்தேன் என்பதோடு, சரியான உதை கொடுத்தேன் என்பதையும், சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

மாரி வக்கீல்

மன்னார்: இது அவசியமற்றது. கோர்ட்டார் இதை நிராகரிக்க வேண்டுகிறேன்.

நீதி: மாரி! உதைபட்டது உண்மையா?

மாரி: ஆமாம்.

நீ: சரி! உன் வாக்குமூலம் கூறு. ஏன் இத்தகைய செயல் செய்தாய்?

சி: மாரியைக் கேட்கலாமே?

நீ: நீ, ஏதேதோ கேள்விகள் கேட்டதாகவும், அவைகளுக்கு, மாரி பதில் கூறவில்லை என்றும், பிறகு நீ இவ்விதம் செய்தாய் என்றும், மாரியின் வழக்கு மனுவில் இருக்கிறது.

சி: சரி, பிறகு என்னைக் கேட்பானேன்? நடந்தது அதுதான்.

மன்னார்: நீ யார், மாரியை ஏச, அடிக்க, உனக்கென்ன உரிமை?

சி: மாரிக்கு நான் அடிமையாக இருந்திருக்கிறேன், வாழ்த்தி இருக்கிறேன், வணங்கி இருக்கிறேன், அந்த உரிமை இருந்தது போலவே கோபிக்க, கண்டிக்க, அடிக்க உரிமை உண்டு.

மன்னார்: யார் அளித்த உரிமை?

சி: சீமான் இந்து அளித்த உரிமை.

மன்னார்: அதற்கு ஆதாரம்?

சி: கோயில், குளம், குங்குமப் பொட்டு.

நீ: என்னடா உளறுகிறாய்?

சி: உளறவில்லையே! இந்து மதத்தைச் சார்ந்தவருக்கு, இவ்வுரிமை உண்டு என்றேன். இதனை ருஜுப்படுத்தும் ஆதாரங்களாகவே குளம், கோயில், மதக்குறி உள்ளனவென்று உரைத்தேன். என்னை மாரிமுன் மண்டியிடச்சொன்ன மனமே, அவள் மண்டையைப் பிள என்று கட்டளையிட்டது. எந்தக் கரங்கள் காளியைத் தொழுதனவோ அதே கரங்களே, சம்மட்டியால் அவளைத் தாக்கத் துணிந்தன. எந்தக் கால்கள், அவள் மாளிகையைச் சுற்றிச் சுற்றி வந்தனவோ, அவைகளே, அவளை உதைத்தன, எந்தவாய் அவளை, மாதாவே மாகாளி, மகேஸ்வரி, லோகநாயகி, என்று பஜித்ததோ, அதே வாய்தான், பாதகி! படுமோசக்காரி! பாசாங்குக்காரி! கல்லே! கட்டையே! என்று மாரியைத் தூஷித்தது. அவளுடைய பரம பக்தன் நான், நானே அவளுக்குப் பரம விரோதியானேன். அவளுடைய குண விசேஷங்களைக் கேட்டுக் கும்பிட்டுக் கூத்தாடினேன், அவள் செயலைக்கண்டு, சீறித் தாக்கினேன். நான் செய்தது தவறு என்று, உங்கள் மேஜைமீது அடுக்கடுக்காகக் கிடக்கும் புத்தகங்களிலே எழுதப்பட்டிருக்கும். எனக்கு என் மனமே சட்டப்புத்தகம்.

நீதி: உன்னைக் கும்பிட்டுக் கூத்தாடச் சொன்னது யார்? பிறகு கோபித்துத் தாக்கச் சொன்னது யார்?

சி: விளக்கமாகக் கூறட்டுமா? என்னைக் கும்பிடச் சொன்னது, என் மூடத்தனம்; அடிக்கச் சொன்னது என் ஆத்திரம்.

நீதி: ஆத்திரமா? அது குற்றம், சட்டப்படி!

சி: ஆத்திரத்துக்குச் சாத்திரமேது?

மன்னார்: கோர்ட்டாரவர்களே! இந்தப் போக்கிரி என் கட்சிக்காரியிடம் கெஞ்சிக் கூத்தாடிக்கொண்டிருந்தது உண்மை. ஆனால், என் கட்சிக்காரர் அவ்விதம் செய்யும்படி, இவனைக் கேட்டுக்கொள்ளவில்லை. இவனாக ஆடினான், பிறகு ஏதேதோ கேள்விகள் கேட்டான்..................

நீதி: மாரி! இவன் கேட்ட கேள்வி என்ன?

சி: சொல்லம்மா, மாரி, சொல்லு!

மன்னார்: நான் இதை ஆட்சேபிக்கிறேன்.

நீதி: இது நீதிசபை என்பதைக் கவனப்படுத்துகிறேன்.

மாரி: உனக்குக் கண்ணில்லையா? உன் காது செவிடா? நீ அயோக்கியர்களுக்கும் அக்ரமக்காரர்களுக்கும் துணை செய்யலாமா? அவர்களை அழிக்காத காரணம் என்ன?என்று பலபல கேள்விகள் கேட்டான்.

சி: இவ்வளவுதானா கேட்டேன்? ஏன், மறைக்கிறாய்? எங்கும் நிறைந்திருப்பாள் என் தாய்! எதையும் செய்யவல்லாள் என் மாதா! என்று ஊராரை மயக்கும் உடுக்கைச் சத்தக்காரன் கூறுகிறானே, மாரி! இதோ, வந்திருக்கிறேன், இருதய சுத்தியோடு, ஏழை, உழைத்து உழைத்து ஓடாய்ப் போனவன், ஒருவருக்கும் ஒரு கெடுதியும் செய்யாதவன்! நீயேகதி என்று நம்பி வந்திருப்பவன். உன் அருளைப் பெறத்தவம் கிடப்பவன்! அம்மே! அஷ்ட ஐஸ்வரியம் கேட்கவில்லை! அடுத்த வீட்டிலே உள்ளவனை அடுத்துக் கெடுக்கும் அக்ரமத்துக்குத் துணை செய்யச் சொல்லி அழைக்கவில்லை. வாழ வழி கேட்கிறேன், விளக்கேற்றுகிறேன் உன் கோயிலில், வீட்டிலே உள்ள இருளை ஓட்டச் சொல்கிறேன்! ஆனால், என்னை என்ன கதியில் வைத்திருக்கிறாய்! எலும்பு முறிய வேலை வாங்கும் எத்தன் என் முதலாளி, அவனுக்கல்லவா, வைரத்திலே மோதிரங்கள். அக்ரமம் செய்கிறான் ஆறுமுகம், அகப்பட்டதைச் சுருட்டுகிறான் அயிராவதம், அவர்கள் வாழ்கிறார்கள், நிம்மதியாக. ஏனம்மா உன் மந்திரவாளை வீசி அந்த மாபாவிகளைச் சம்ஹரிக்கக்கூடாது! ஏழை, நான் அழுகிறேன், ஏனென்று கேட்கவில்லை! அருளைப் பொழிகிறாய், அநீதி புரிவோருக்கு. நான் நாடி வருகிறேன் உன் கோயிலுக்கு, உன் நாட்டமோ நயவஞ்சகர்களைக் கொழுக்க வைப்பதிலே இருக்கிறது! பசுவைப் பட்டினி போடுகிறாய், புலிக்கு இரத்த பானம் தருகிறாய்! குழந்தையைக் குற்றுயிராக விட்டுவிட்டு, கொல்லும் பாம்புக்குப் பாலூட்டுகிறாயே! இதுவா நீதி! இதுவா நேர்மை! இதுவா, உன் அருள்? இதைச் செய்யவா உனக்கு மனம் இடம் தருகிறது! ஏன் இப்படி ஏழைகளை ஏக்கத்திலே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறாய், எத்தர்களை வாழச்செய்து அக்ரமம் செய்கிறாய்! பக்தர்களை ரட்சிக்கத்தானே கோயிலில் குடி இருக்கிறாய் கொட்டுமுழக்கு கேட்கிறாய்! கோலாகலத் திருவிழா கேட்கிறாய்! எதிலேயாவது இந்த ஏழை, என்போன்ற ஏழைகள், உன் மனம் கோணும்படி நடந்துகொண்டதுண்டா? பூஜை செய்யத் தவறினோமா? பக்தி செலுத்தத் தவறினோமா? வயிற்றைக்கட்டி வாயைக்கட்டிக்கூட, உனக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையைச் செலுத்திக்கொண்டுதானே வந்தோம்! சொல், சொல்லம்மா, மாரீ! சொல்! ஏன், எங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை! காதகர்களிடம் கருணை காட்டினாயே, நியாயமா? அனாதரட்சகி என்ற பட்டமா உனக்கு! இதோ அனாதை வந்திருக்கிறேன்—அக்ரமக்காரர்களை வாழவைக்கும் உன்னைத்தான் காண வந்திருக்கிறேன்—உன் கலியாண குணங்களை நாக்கிலே வறட்சி உண்டாகும் அளவுக்குக் கத்திக்கத்திப் பூசித்து வந்தேனே, அந்த பக்தன், இதோ வந்திருக்கிறேன். அம்பாள் கண்திறந்தால் மலைபோல் வந்த துன்பம் பனிபோலப் போய்விடும் என்று மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்த மந்தமதி படைத்தவன் வந்திருக்கிறேன், அவள் அறிவாள் அனைத்தையும், பழிபாவம் இருக்கும் இடமறிந்து பஸ்மீகரம் செய்வாள், பஞ்சை பராரியைப் பரிவுடன் ரட்சிப்பாள், என்று மற்றவர்களிடம் பேசித் திரிந்து வந்த பக்தன் வந்திருக்கிறேன். இதற்கு முன்பு எத்தனையோ தடவைகள் கற்பூரமும் தேங்காயும், பழமும் படையலும் ஏந்திக்கொண்டு வந்தவன். பாரம்மா, மாரி! பார், தெரிகிறதா, நான்—நம்பி மோசம் போனவன் வந்திருக்கிறேன், கணக்குக் கேட்க வந்திருக்கிறேன், கண்திறந்தபடி வந்திருக்கிறேன், கருத்திலே புது அறிவு தோன்றியது அதனால் வந்திருக்கிறேன், கேட்கிறேன் பதில்கூறு, ஆமாம்! நெஞ்சிலே கொஞ்சமும் வஞ்சகமில்லாதவன் கேட்கிறேன், உண்மையைக் கூறு. பணக்காரனுக்குப் பக்கமேளம் அடிப்பதா உன் வேலை, அக்ரமக்காரனுக்குத் துணை செய்வதா உன் குணம், இதுவா தெய்வீக இலட்சணம், இதற்கா என்போன்ற ஏழைகளிடம் பூஜை பெறுகிறாய், பெற்ற பூஜைக்கு, என்ன பலன் தந்தாய், இதோ பஞ்சடைந்த கண்கள், பார்! பக்தன் நான், படையலிடுகிறேன் உனக்கு, எனக்குப் பஞ்சடைந்த கண்கள், எலும்புக்கூடு என் தேகம், என் எதிரே, நீ, அலங்காரம், அபிஷேகம், ஆராதனை, நீதிதானா—தாய்! ஜென்மாதா! யாருக்கு? எனக்கா! ஏழைக்கா! சொல், சொல்லம்மா சொர்ணாலங்காரியே! சொல்! சோற்றுத் துருத்திகளைச் சொகுசாக வாழவைத்துக்கொண்டிருக்கிறாயே, சரியா முறையா—சொல்—சொல்—வெட்கத்தால் வாயடைத்து விட்டதா—பயத்தாலே மெளனமாகிவிட்டாயா—பயமாகவா இருக்கிறது, பராத்பரீ, பயமா, என்னிடமா? பக்தன் நான், ஏன் பயம்? எப்படி இல்லாமல் போகும், பக்தன் விழித்துக் கொண்டுவிட்டானே, இனி விபரீதம் நேரிடுமே என்று பயப்படத்தான் செய்வாய்—நடுங்கு, நல்லவர்களை நலியச் செய்த உன்னை நேருக்குநேர் நின்று கேட்கிறேன், பதில் கூறு, வக்கு இருந்தால், என்மீது தவறு இருந்தால் எடுத்துக்காட்டு—உன்மீதுள்ள குற்றங்களை நான் எடுத்துக்காட்டினேன், தைரியமிருந்தால், மறுத்துப் பேசு! ஊமையாக மட்டும் இராதே! உன்னைச் சும்மாவிடமாட்டேன்! உலகறியச் செய்வேன் உன் சூது சூழ்ச்சிகளை! வாய்திறந்து பேசு! கடுகளவு தவறு என்னிடம் இருந்தாலும், எடுத்துக்காட்டு—கல்லாக மட்டும் இருந்துவிடாதே—பக்தன்! பதைக்கிறேன், பதில்கூறு—உம்! பதில்! எங்கே, நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்—பதில் கூறத்தான் வேண்டும்—இல்லையானால் நான் தருவதைப் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பூஜை செய்தபோது, வேண்டாமென்றா சொன்னாய், இதோ பூஜை கொடுக்கிறேன், தடுக்காதே, தடுக்க உனக்கு உரிமை கிடையாது! சூடம் கொளுத்தினேன், வேண்டாமடா மகனே! உன் வினையைத் தீர்க்க என்னாலே முடியாது, வீணாக என்னை நம்பி இதைச் செய்யாதே, உன்னை வாழவைக்கும் சக்தி என்னிடம் இல்லை! நயவஞ்சகன் உன்னைக் கெடுத்தால், நான் அவனைத் தடுத்திட முடியாது, சகல உலகையும் ரட்சிக்கும் நாயகியே! என்று என்முன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து பயன் இல்லை, என்றா சொன்னாய்? இல்லையே! சூடம் கொளுத்தினேன், சோடசோபசாரம் செய்தேன்—பெற்றுக்கொண்டாய் அப்போது—இப்போது கணக்கு கேட்கிறேன், காட்டு, இல்லையானால், விழித்துக் கொண்டவன் தருவதையும் வாங்கிக்கொள்—அடித்தால், ஐயோ! பாவி! என்று அலறாதே! என் இஷ்டம் போலச் செய்வேன்! என் இஷ்டம்! முன்பு, என் மனதுக்குச் சரி என்று தோன்றியதைச் செய்தேன்—இப்போதும் அப்படித்தான்—இப்போது இது அக்ரமம்—என்று பேச உனக்கு உரிமை கிடையாது—நிச்சயமாகக் கிடையாது—இருந்தால் பேசு—உம்! வாய்திறந்து பேசு!—வந்திருக்கிறேன், வாழ்த்தி வரங்கேட்டவன்! வணங்கி வரம் கேட்டவன்! பூஜையை ஏற்றுக்கொள்ள மட்டும்தானா, புவனேஸ்வரீ, நீ! பூஜிப்பவனை ரட்சிப்பது உன்வேலை அல்ல அல்லவா! கன்னத்தில் போட்டுக்கொள்ள நான், கனதனவானுக்குக் கரும்பு ருசி போல வாழ்வு, இது, உன் நீதி! அப்படித்தானே! அம்பிகே! சொர்ணாம்பிகா! சுந்தர சொர்ணாம்பிகா! பேசமாட்டாய்—இன்னமும் பேச மறுக்கிறாய்—இந்தக் கரங்களும் இனிச்சும்மா இருக்காது! ஆமாம்—சுக்கு நூறாக்கப் போகிறேன் உன்னை—உடைத்து எறியப்போகிறேன் இப்போது—இதோ இப்போது......என்றெல்லாம் பேசினேன்—கேள்விகளைப் பூட்டினேன்—மாரி பதில் பேசவில்லை—இன்றாவது பதில் உண்டா கேளுங்கள்—கிடையாது! மாரிக்காக வந்திருக்கும் இந்த மன்னார்சாமியாவது பதில் கூறட்டும் பார்ப்போம்.

நீதி: மாரி! இவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறாதது உண்மைதானா?

மாரி: ஆமாம்! என்ன கூறுவதென்பதே தெரியவில்லையே.

நீதி: சில்ஹாட்! உனக்கு வக்கீல் இல்லையே?

சி: இல்லை. தேவையுமில்லை. என் வழக்கு எப்படி முடியுமோ என்ற கவலை எனக்கில்லை. எனக்குச் சட்டங்களிலே சந்து பொந்துகள் தேடித் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமில்லை. என் வழக்கை நானே நடத்திக்கொள்வேன். என் கேள்விகள் நியாயமானவை என்பதை நிரூபிக்கிறேன், உத்தரவு தந்தால்.

நீதி: சரி!

சி: மாரி! உன்னை என்போன்ற பலர் பூஜித்து வருவது உண்மைதானே?

மாரி: ஆமாம்.

சி: ஏன் பூஜிக்கிறார்கள்?

மாரி: எனக்குத் தெரியாது.

சி: பூஜிக்கும்போது, என்னென்ன கூறி பூஜிக்கிறார்கள்?

மாரி: ஏதேதோ வரங்கேட்கிறார்கள். சொத்து, சுகம், பிள்ளை, பதவி, மற்றும் எதை எதையோ கேட்கின்றனர்.

சி: ஒருவருக்காவது நீ, முடியாது என்று சொன்னது உண்டா?

மாரி: ஆகட்டுமென்று சொன்னதுமில்லை, முடியாதென்று சொன்னதுமில்லை.

சி: பூஜையை வேண்டாமென்று தள்ளினது உண்டா?

மன்னார்: அது அவசியமற்ற கேள்வி, பூஜை செய்யச் சொல்லி மாரி கேட்கவில்லை.

சி: ஐயா, வக்கீலே! உமது மகள் தோட்டத்திலே உலவுகிறாள், என்று வைத்துக்கொள்ளுங்கள்.........

மன்னார்: எனக்கு மகள் இல்லை.

சி: மிக வருந்துகிறேன், இருப்பதாக எண்ணிக்கொள்வோம். வழிப்போக்கன் அவளைக் கண்டு, கண்ணே! மணியே என்று கொஞ்சினால்,............

மன்னார்: அந்தப் போக்கிரியின் பற்களை உதிர அடிப்பார்கள்.

சி: ஆம்! ரோஷக்காரப் பெண் அப்படிச் செய்யும். சோர குணமிருந்தால், நேரமில்லையே, நாளையாகட்டும், என்று குழையும்.

மன்னார்: எனக்கு அந்த விஷயம் தெரியாது.

சி: எனக்கும் அது சொந்த அனுபவமல்ல. பிறர் கூறக்கேட்டதே. மாரியும் ரோஷக்காரப் பெண்போல, பூஜை செய்பவர்களைத் தடுத்து இருக்கலாம். ஆனால், பூஜையை ஏற்றுக்கொண்டது தவறுதானே?

நீதி: சிக்கலான கேள்வி.

சி: பூஜைக்குப் பலன் உண்டு என்று நம்பும்படி செய்தது குற்றம். பூஜை பல செய்தும், பலன் தராதிருந்தது குற்றம். இதைத் தெரிந்ததும், எனக்கு ஆத்திரம் பிறந்தது, அடித்தேன், அலங்கோலப்படுத்தினேன்.

[இடைவேளைக்குக் கோர்ட் கலைகிறது]

காட்சி 2

இடம்: மாரி மாளிகை.

பாத்திரங்கள்: மாரி, பூஜாரி, மன்னார்சாமி.
[மாரி, கவலையோடு இருக்க, மன்னார்சாமி தைரியமூட்டுகிறான்]

மன்னார்: இப்படித் தைரியத்தை இழக்கக்கூடாது. தீர்ப்பு, நம் பக்கமிருக்கும். இது நிச்சயம்.

மாரி: தீர்ப்புக் கிடக்கட்டும். கோர்ட்டிலே மானம் போகிறதே. அவன் கேட்கும் கேள்விகள், ஈட்டிபோல் குத்துகிறதே.

மன்னார்: போக்கிரிப் பயல்.

மாரி: கொஞ்சம் புத்திசாலியுங்கூட. உண்மைதானே, அவன் கேட்பது. ஊரைக் கெடுப்பவர்கள் கோரிக்கொள்கிறார்கள், உழைப்பவர்களும் பூஜிக்கிறார்கள், ஏமாற்றிப் பிழைப்பவனும் என் தாயே என்றுதான் சொல்லுகிறான், ஏமாறுபவனும் என் அம்மே என்றுதான் சொல்லுகிறான். என்னால் யாருக்கு, என்ன செய்ய முடிகிறது. கெட்டவர்களை தண்டிக்க முடியவில்லை, நல்லவர்களை ரட்சிக்கவும் முடிவதில்லை. என்னால் ஆவது ஒன்றுமில்லையப்பா, என்று உண்மையைக்கூறவோ தைரியம் பிறப்பதில்லை. [பூஜாரி வருகிறான்] இந்தப் பாவிகளோ, ஓயாது, உடுக்கை அடித்து, நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன், என்று கூறி என்னை முன்னால் நிறுத்தி, இவர்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ளுகிறார்கள்.

பூசாரி: தாயே! உன் சக்தி உனக்குத் தெரியவில்லை. அந்த மகாபாவியால் தோஷமாக்கப்பட்ட கோயிலையும், சிலையையும், புதுப்பித்து வைக்க, “புண்யவான்கள்” கிளம்பி விட்டார்கள். விசேஷ பூஜை நடக்கப்போகிறது.

மாரி: கேட்டாயா, மன்னார்சாமி! எவனையோ, ஏய்த்து விட்டு இங்கே வந்திருக்கிறான், பூஜாரி. அவன் எவனோ, எத்தனை குடியைக் கெடுத்தானோ? யாரார் மனதைப் புண்ணாக்கிப் பணம் சேர்த்தானோ, அவனிடம் இவன் பங்கு வாங்கி, என்னைப் பங்கப்படுத்துகிறான்.

பூஜாரி: தங்கத்திலே குடம், வெள்ளியிலே மணி, முத்துமாலை.

மாரி: இன்னமுமா, இந்தச் சுமைதாங்கி வேலை எனக்கு? வேண்டவே வேண்டாம். எனக்கு எவனும் பூஜையும் செய்ய வேண்டாம். பிறகு, அந்தப் போக்கிரி செய்ததுபோல, அக்ரமமும் செய்யவேண்டாம்.

பூஜாரி: தாயே! அவனைச் சும்மாவா விடுவார்கள்? அவன் போக்கிரி என்றா எண்ணுகிறீர்? போக்கிரியல்ல! எவ்வளவோ பெரிய போக்கிரிகளெல்லாம், உன் பெயரைக் கேட்டாலே, நடுங்கிவிடுவார்களே. அவன் ஓர் நாஸ்திகன். சாமியில்லை, என்று பேசுபவன். அதை ருஜுப்படுத்தவே, கோயிலிலே புகுந்து காலித்தனம் செய்தான்.

மன்னார்: ஓஹோ! அப்படியா? சரியான பாயின்ட் கிடைத்தது, சரி புறப்படுவோம் கோர்ட்டிற்கு, பயலைத் தீர்த்துக்கட்டிவிடுகிறேன்.

காட்சி 3

இடம்: திருப்பதி.

பாத்திரங்கள்: வெங்கடேஸ்வார், மாரி, மன்னார்சாமி.
[திருப்பதி வெங்கடேஸ்வரர், அழகிய வெள்ளித்தேரில் உட்கார்ந்துகொண்டு பவனி வருகிறார்]

மாரி: மன்னார்சாமி! சூரியனுடைய கிரணங்கள், அந்த வெள்ளித் தேரின்மீது படுவதால், எவ்வளவு பளபளப்பான காட்சியாக இருக்கிறது பார்த்தாயா?

மன்னார்: தீராத வல்வினைகள் தீர்த்து வைப்பான் கோவிந்தா, என்று பக்தர்கள் கோஷித்தபடி இருக்கின்றனரே!

மாரி: ஆமாம்; அதனால்தான் அவர் ஏறாத தேர் ஏதுமில்லை, கோபாலா என்று ஜோராகப் போகிறார்.

மன்னார்: உனக்கு மட்டும் என்ன? வேண்டுமென்றால் வெள்ளித்தேர் கிடைக்காதா?

மாரி: கிடைத்ததே, உடம்பெங்கும்காயம். போதாதா? அண்ணா! வெங்கடண்ணா! வெங்குடு! (தேர் நிறுத்தப்பட்டு, வெங்கடேஸ்வார், இறங்கி வருகிறார். மாரியின், உடலெங்கும் இரத்தக்காயமாக இருப்பது கண்டு)

வெங்கட: மாரீ! இதென்ன கோலம்!

மாரி: மாயாஜாலக்காரனாச்சே! உனக்குத் தெரியாதா நான் பட்ட அவஸ்தை?

வெங்கட: என்ன நேரிட்டது?

மன்னார்: எவனோ ஒரு நாஸ்திகன், நெடுநாட்களாகக் கும்பிட்டானாம், பலன் கிடைக்கவில்லையாம், ஒருநாள் வம்புந்தும்பும் பேசி, சிலையை நொருக்கினான், உள்ளே இருந்த மாரிக்கு உடலெங்கும் உதிரங் கட்டிக்கொண்டது.

வெங்கட: ஊர் இவ்வளவு கெட்டுவிட்டதா? இப்படிப்பட்ட தொல்லைகள் நேரிடாதபடி இருக்கத்தான், நான் ஏழுமலைக்கு மேலே இருக்கிறேன். ஏறி வருவதற்குள், எந்தப் போக்கிரிக்கும் இடுப்பே முறிந்துவிடுமே!

மாரி: உன் யுக்தி யாருக்கு வரும்? இல்லாமலா, வெள்ளியிலே தேர்! வேளைக்கு ஒரு சீர்!

வெங்கட: எல்லாம், நமது பட்டாச்சாரிகளின் சாமர்த்தியந்தான், காரணம். ஒரு நல்ல சேதி தெரியுமோ? இந்த வெள்ளித் தேருக்கு, இன்னம் கொஞ்ச நாளிலே, தங்கக் குடை இருக்கும்!

மாரி: தங்கத்திலே குடையா? செலவு அதிகமாகுமே!

வெங்கட: நம்ம கையை விட்டா செலவாகப் போகிறது? நாஸ்தீகாள் நடமாடுகிற இந்தக் காலத்திலேயும், நமக்குச் சேவை செய்யும் பக்திமான்கள் இல்லாமலா போய்விட்டார்கள்.

மாரி: யாருடைய கைங்கர்யம்? யாரோ, அழகப்ப செட்டியாரென்று ஒரு பிரபு இருக்கிறாராமே, அவரா?

வெங்: சே, சே, அந்த ஆசாமி, அல்ல. இப்பத்தான் அந்த ஆள் ஐஞ்சு இலட்ச ரூபாயைக், கொட்டி அழுதான்.

மாரி: எதுக்கு?

வெங்: படிப்புக்காம்!!

மாரி: தங்கக் குடை தரப்போவது?

வெங்: M.C.T. சிதம்பரம் செட்டியார் இருக்காரேன்னோ, அவர் 15,000 ரூபாய் செலவிலே, நமக்குத் தங்கக் குடை தர்மம் செய்ய முன் வந்திருக்கிறார்.

மாரி: என்னமோ அப்பா, நீ கொடுத்து வைத்தவன். என் கதியைப்பாரு, நாத்திகப் பயலிடம் நான் அடிபட்டு, கோர்ட்டுங்கையுமாக நிற்கிறேன்.

வெங்: அதோ, யாரோ, கோவிந்தா கோவிந்தான்னு கூவிண்டு வர்ரா, நான் போய் வரட்டுமா? மன்னார்! தங்கைக்குத் துணையா இரு. தைரியத்தை விடாதேம்மா.

[வெங்கடேசர் போனதும்]

மாரி: ஏதோ, சில்காட்டான் போலச் சிலபேர், நம்மைச் சீரழிச்சாலும், சிதம்பரம் செட்டியார்களைப்போலே ஆதரிக்கிறவாளும் இருக்கா.

மன்னார்: சந்தேகமென்ன, சந்தேகமென்ன.

காட்சி 4

இடம்: ஒரிசா பிரதேசம், பாலசோர்பட்டினம்.

பாத்திரங்கள்: 70 பிணங்கள், மாரி, மன்னார்சாமி, சட்டசபை மெம்பர், மாஜிஸ்ட்ரேட்.
[வெங்கடேஸ்வரரைக் கண்டபிறகு மாரியும், மன்னார்சாமியும் ஒரிசா பிரதேசத்தில், பாலசோர் பட்டினத்திலே பிரவேசிக்க அங்கு 70 பிணங்கள் கிடக்கக்கண்டு]

மாரி: மன்னார் இதென்னப்பா கோரம்? எழுபது பிணங்கள் கிடக்கின்றன. யாரோ இரண்டு பேர் கணக்கெடுக்கிறார்கள்.

மன்னார்: நீங்கள், இப்படியே இருங்கள். நான் போய் விசாரித்துக்கொண்டு வருகிறேன்.
[மன்னார் போகிறான். மாஜிஸ்ட்ரேட்டும், சட்டசபை மெம்பர் ஒருவரும் பேசுவதைக் கேட்கிறான்]

ச. மெம்பர்: என்ன அநியாயம்? இவ்வளவு பேர் பிணமானதன் காரணம் என்ன?

மாஜிஸ்: பட்டினியால் செத்தனர்! காலம் சரியில்லை விலைவாசி உயர்வு. உணவுப் பஞ்சம். இவர்கள் பல நாளாக, வயிறார உண்ணாது குன்றிக் குன்றிப் பிறகு பட்டினியால் அவதிப்பட்டு மாண்டு போயினர்.

ச. மெம்பர்கள்: ஐயோ! இவர்களுக்கு ஒருவேளைச் சோறுதர, உத்தமர்கள் இல்லையா? தர்மவான்கள் இல்லையா? ஏழைகள் சாகிறார்களே, சோறின்றி. இவர்களைக் காப்பாற்ற ஒருவராவது, பண உதவி செய்யக்கூடாதா? எவ்வளவு கோரம். பட்டினியால் செத்தார்களே, நாமெல்லாம் உயிரோடு இருக்கிறோமே.

மாஜிஸ்: நமது பிரதேசத்திலே மட்டுமல்ல, நாடெங்கும் கஷ்டந்தான். அரிசி கிடையாது, பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பட்டினியுடன் எத்தனை நாள் போராடமுடியும். பரிதாபமாகத்தான் இருக்கிறது. நாட்டிலே உள்ள சீமான்கள் இந்தச் சமயம் தர்மம் செய்தால் நல்லது. இந்தக் காலத்திலே, தர்மப் பிரபுக்கள் ஏது?

மன்னார்: தர்மப்பிரபுக்கள் இல்லாமற் போகவில்லை சார்! பேப்பரிலே, பார்த்தா தெரியுமே. திருப்பதிக் கோயிலுக்குத் தங்கக்குடை சமர்ப்பிக்க, ஒரு, புண்யவான் முன் வந்திருக்கிறார்...................

ச. மெம்பர்: இந்த 70 பிணங்களும் சிரிக்கின்றன, சார், இந்தச் செய்தியைக் கேட்டு.
[மன்னார், முகத்தைச் சுளித்துக்கொண்டு, போகிறார். மாரியிடம்போய்]

மன்னார்: யாரோ, ஏழைப் பயல்கள், இல்லாத கொடுமையால், பட்டினி கிடந்து செத்துவிட்டார்கள்.

மாரி: பட்டினி கிடந்தா? உபவாசமா?

மன்னார்: உபவாசமென்றால், உயர்தரமான பலகாரம் இருக்குமே! அசல் பட்டினிதான்.

மாரி: இந்த 70 பேருக்கு உணவளிக்க ஒருவரும் முன் வரவில்லையா?

மன்னார்: நல்ல கேள்வி கேட்டாயம்மா! யாரார் பட்டினியாக இருக்கிறார்கள், என்று பார்த்துப், படியளப்பதா, ஒவ்வொருவருக்கும் வேலை.

மாரி: நம்மைப் போன்ற மனிதர்கள், சோறு கிடைக்காது சாகிறார்களே, நமக்கிருக்கும் செல்வத்தில் கொஞ்சம், இவர்களைக் காப்பாற்ற அளிப்போம், என்று எந்தத் தர்மவானுக்கும் தோன்றவில்லையா?

மன்னார்: இது ஒரு பேச்சாகுமா? இதைப்போலப் பஞ்சம் வந்தபடிதான் இருக்கும், இதைப்போலப் பயல்கள் செத்தபடிதான் இருப்பாங்க. இவங்களைக் காப்பாற்ற ஆரம்பிச்சா, யார் மீள முடியும். ஏதோ தர்மசிந்தனை தோன்றினா, கோயில் கட்டுவாங்க, தேர் திருவிழாவுக்குப் பணம் தருவாங்க, நம்ம செட்டியார் செய்ததுபோல, தங்கக்குடையோ, வெள்ளி தீவர்த்தியோ செய்து சமர்ப்பிக்கலாம், பட்டினி கிடக்கிறவங்களுக்குச் சோறு போட ஆரம்பிச்சா, பட்டத்து ராஜாவாலேகூட முடியாதேம்மா. கோர்ட்டுக்குப் போகணும் நடம்மா.

மாரி: மன்னார்சாமி! நான் கோர்ட்டுக்கு வரப்போவதில்லை.

மன்னார்: என்ன, என்ன? கோர்ட்டுக்கு.............

மாரி: வரமாட்டேன். அவன் செய்ததிலே தப்பே கிடையாது.

மன்னார்: என்னம்மா இது? ஒருமாதிரியா பேசறீங்க? உடம்புக்கு என்ன?

மாரி: அப்பா! அந்த 70 பிணங்களைக் கண்டோமே, அவர்களும் என்னையும், என் போன்ற தேவதைகளையும் கும்பிட்டவர்கள்தான். அவர்கள் குறைகளை நாங்கள் தீர்ப்போமென்று நம்பி நம்பித்தான் பக்தி செலுத்தினார்கள்; பூஜித்தார்கள்; கோயிலைச் சுற்றினார்கள்; அவர்களைக் காப்பாற்றினோமா; இல்லையே, அதோ அவர்களின் பிணம்! சில்காட்டான், இதைப்போலப் பிணமாகவில்லை. ஆனால், அந்த 70 பிணங்களிலே, எதை எழுப்பினாலும், அவன் என்னை அடித்தது போதாது என்று சொல்லும். அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சமா? அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சமா? என்ன சாதித்துவிட்டோம், அந்த அனாதைகளுக்கு. எங்களுக்குக் கோயிலும் கொட்டு முழக்கும் எதற்கு? செல்வம் படைத்தவர்கள், உழைப்பால் பணம் சேர்த்தவர்கள், ஏதோ தங்கள் முயற்சியினால் பணம் கிடைத்தது என்று எண்ணாமல் எங்கள் அருளால் கிடைத்தது என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை காரணமாக, கோயிலுக்கும் கும்பாபிஷேகத்திற்கும், குடைக்கும் தேருக்கும், பணத்தைச் செலவிட்டு, பஞ்சத்தையும் பட்டினியையும், பட்டினியால் பிணமாகும் சோகத்தையுங் கண்டாலும், கடவுளே என்று, கூறிச் சும்மா இருந்துவிடுகிறார்கள். எங்களுக்காக அவர்கள் செலவு செய்வதை ஏழ்மையைப் போக்கச் செலவிட்டால் எழுபது பேர் இப்படிச் செத்திருக்கமுடியுமா? தங்கக்குடையில்லாததால் வெங்கடேசன், வெய்யிலிலே வாடியாபோனான்? தரித்திரம் நெருப்பைவிடக் கொடியதாயிற்றே, அதனின்றும் இந்த ஏழைகளைக் காப்பாற்ற, அந்தக் கொடையாளி முன் வந்திருக்கலாமே வெங்கடேஸ்வரர் இல்லாதிருந்தால்! மற்றச் சீமைகளிலே ஒரே தெய்வம். அதற்காகச் செலவும் மட்டு, இங்கோ நாங்கள் எவ்வளவு பேர், என்ற கணக்கு எங்களுக்கே தெரியாது. எங்களைத் திருப்திப்படுத்தி தயவுபெற, பணம் செலவிட்ட பிறகு சீமான்கள் அலுத்துப்போவதுகூடச் சகஜம். இந்தச் செலவு இல்லாவிட்டால். அவர்கள் பணத்தை, ஏழைகளுக்கு இதம்தேடச் செலவிடுவார்கள். என்னை அலங்கோலமாக்கியவன்மீது, நான் உன் பேச்சைக் கேட்டுக்கொண்டு, மானநஷ்ட வழக்கு தொடுத்தது தவறு. அவன் என்னை இது போன்ற அக்ரமங்கள் ஆகுமா? நீ இதற்கு உடைந்தையாய் இருக்கலாமா? என்று கேட்டான். நான் பதில் கூறமுடியாது, திகைத்தேன். உடனே அவன் என் சிலையை நொறுக்கினான். அவன் செய்தது தவறல்ல, அவன் என்னை என்னென்ன கேள்விகள் கேட்டான் என்பது உலகுக்குத் தெரிந்துவிட்டால், ஊரூருக்கும் அதே கேள்வி கேட்பார்கள். ஆகவே, வழக்கு வேண்டாம், நான் மறைகிறேன்.

[மாரி மறைந்துவிடவே, மன்னார் மருண்டு, கோர்ட்டுக்குப் போகிறார். அங்கு நீதிபதி பேசுகிறார்]

நீதி: மிஸ்டர், மன்னார்! குற்றவாளியைப் பைத்தியக்காரன் என்று டாக்டர் கூறிவிட்டார். எனக்கு முதலிலேயே சந்தேகந்தான். பைத்தியக்காரக் கேள்விகளைக் கேட்டான். பதிலில்லாமற் போகவே சிலையை உடைத்தான். நான் இது ஒரு சமயம், நாத்திகத்தின் விளைவோ என்று சந்தேகித்தேன். பிறகு விளங்கிவிட்டது. இந்த நிலைமையில், உமது கட்சிக்காரரிடம் சொல்லி வழக்கை வாபீஸ் வாங்கிக்கொண்டால் நல்லது.

மன்னார்: வழக்கை வாபீஸ் வாங்கிக் கொள்கிறேன். எனக்கும் உண்மை தெரிந்துவிட்டது.

நீதி: என்ன உண்மை?

மன்னார்: அவன் பித்தனல்ல, வழக்குதொடுத்த நான் ஓர் பித்தன் என்ற உண்மைதான்.

[மன்னார் விகடம் பேசுகிறார் என்று எண்ணிக்கொண்டு நீதிபதி சிரிக்கிறார்]

காட்சி 5

இடம்: பைத்தியக்கார ஆஸ்பத்திரி.

பாத்திரம்: சில்காட்டான்.

சில்காட்டான்: (தனிமையில்) பைத்தியக்காரர் விடுதியாம் இது! உலகம் என்ன, அது பைத்தியக்காரர்களின் பெரிய விடுதி! தனியாக இதற்கொரு கட்டிடமாம், ஏன் இந்த ஏற்பாடு? இல்லாததை உண்டு என்றும், நடவாததை நடந்ததென்றும், கூறிக்கொண்டு கோடிக்கணக்கிலே, பித்தர்கள் வெளியே உலவுகிறார்கள். இங்கே சில நூறு பேரைப் பிடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் பைத்தியம் எனக்குத் தெளிந்த பிறகு, இங்கே தள்ளினார்கள். பாடுபட்டால் பலனுண்டு அது கிடைக்காவிட்டால் யாரோ அதைத் தடுக்கிறார்கள் என்ற அறிவு தோன்றாமல் ஆயாசமடைந்தால் ஆகாயத்தைப் பார்ப்பதும், பசித்தால் பரமனை வேண்டுவதும், கஷ்டம் விளைந்தால் காளியைக் கும்பிடுவதுமாக இருந்த பைத்தியம்போய், மாரியாவது மண்ணாங்கட்டியாவது, எல்லாம் வெறும் மனப்பிராந்தி என்று தெளிவுபெற்று, உலகுக்கு அதை உணர்த்த, உக்கிரமாகாளியை உருக்குலைய வைத்தேன். இவர்கள், எனக்குப் பைத்தியம் என்று இங்கே தள்ளிவிட்டார்கள். அலங்கோலமான உருவங்கள். கோணங்கிச் சேட்டைகள், கோசமான சத்தங்கள் இங்கே காண்கிறேன். பித்தர் விடுதியின் அவலக்ஷ்ணம் இதுவாம்! அங்கே வெளியே என்ன வாழுகிறது! ஏ, அப்பா, அங்கே சக்தியின்பேரால் பூமியிலே புரளுவோரும், வேல்குத்திக் கூவுவோரும், பட்டைப் பூச்சுப் போடுவோரும், கொட்டு முழக்குடன் கூத்தாடுவோரும் வாழுகிறார்கள்! அந்தப் பைத்தியக்காரச் செயலைப் பக்தி என்று கூறி மூடிவைக்கிறார்கள். அங்கு இருப்பதைவிட, இங்கு இருப்பதிலே, கஷ்டமோ, இழிவோ இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அங்கே பைத்தியக்காரச் செய்கைக்குப் பக்கபலம் இருக்கிறது. இங்கு அது அதிகரிக்காதபடி பாதுகாப்பு இருக்கிறது. அதைவிட, இதுமேல். வெளியே வேடதாரிகள் கூட்டத்திலே உலவுவதைவிட, இந்தப் பித்தர் விடுதியே மேல்! இங்கே பித்தம் தெளிய மருந்திருக்குது. அங்கே பித்தம் வளர மருள் இருக்குது. இதைவிட அது மோசம்.

[பித்தர் விடுதி வார்டன் வருகிறான்]

டே! மாரி பைத்தியம்! கூவாதே தூங்கு. மணி பனிரண்டாகுது தூங்கு.

சில்காட்டன்: அட பைத்யக்காரா! எனக்காடா பைத்யம்?

இந்த நாடகத்தைப் படித்தானதும் நான் வீரா, “விக்ரகத்தை உடைத்த பைத்தியக்காரன் விஷயமாக விசித்திரமான நாடகம் தீட்டினாயே,” என்று சிரித்துக்கொண்டு கேட்டேன். “இதிலே விசித்தரம்‌ இல்லையே, உண்மையிலேயே, மாரி இருப்பதானால்‌ அவன்‌ செய்த காரியத்துக்கு மான நஷ்ட வழக்காடத்தான்‌ செய்வாள்‌. கோர்ட்டுக்‌ காட்சி நான்‌ தீட்டியபடிதான் இருக்கும்‌. இடையிலே தங்கக்குடை தர்மத்‌தைப்பற்றி மாரி கேள்விப்பட்டு, தரித்திரத்தால்‌ செத்தவர்‌களையும்‌ கண்டால்‌, நான்‌ நாடகத்திலே தீட்டியபடி, வழக்கை வாபீஸ்‌ பெற்றாகவேண்டும்‌, சிலையை உடைத்த சில்ஹாட்‌ வாசியைப்‌ பித்தர்‌ விடுதியில்‌ சேர்த்தால்‌, அவன்‌ இந்த உலகை பைத்தியக்காரச்சாலை என்றுதான்‌ கூறுவான்‌!” என்று வீரன் விரிவுரை நிகழ்த்தலானான்‌.

“வேண்டாமப்பா, உன்‌ பிரசங்கம்‌, இதோ வாசகர்கள்‌ உண்டு, நீ உண்டு, அவர்கள்‌ கூறட்டும்‌, உன்‌ நாடகத்தைப்‌ பற்றி!” என்று கூறிவிட்டு, இதனை உங்களிடம்‌ அனுப்புகிறேன்‌. தோழர்களே! உங்கள்‌ கருத்து என்ன? அவன்‌ பித்தனா!!