வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/கப்பலில் வேலை
கப்பலில் வேலை செய்தவர்
கதை எழுதினார்
மூன்றே மாதங்கள் பள்ளிக்குச் சென்ற ஒருவர் பிற்காலத்தில் 51 புத்தகங்கள் எழுதினார் என்றால் நம்புவீர்களா? ஆனால், இது கற்பனை இல்லை. ஜாக்லண்டன் என்பவர் தம்முடைய 19 வயதில் தான் பள்ளிக்கூடத்திற்கே படிக்கச்சென்றார். சுமார் நான்கு வருஷங்கள் படிக்கவேண்டிய பாடங்களை எல்லாம் இரவு பகலாக மூன்றே மாதங்களில் படித்து பரீட்சையிலும் தேறினார். அதன் பிறகு தான் அவர் நாவல் சிறுகதை முதலியவை எழுத ஆரம்பித்தார். 18 வருஷங்களில் அவர் 51 நாவல்களும், எண்ணற்ற சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.
ஜாக் லண்டன் சிறு வயதிலேயே பள்ளிக்குப் போகாததற்குக் காரணம் அவருடைய குடும்பம் வறுமையில் இருந்ததுதான். குடும்பம் வறுமையால் கஷ்டப்பட்டதால் ஜாக்லண்டன் படிக்காமல் சம்பாதிக்க வேண்டியதாயிற்று.
அதனால் அவர் ரயில் நிலையத்தில் கூலிவேலையிலிருந்து பல தொழில்களைச் செய்தார். கூலி கிடைக்காத நாட்களில் அவர் பட்டினியாகவும் இருந்திருக்கிறார். ஒரு நாள் இப்படித்தான் அவருக்கு கூலி ஏதும் கிடைக்காமல் போயிற்று. அன்று அவருக்கு பசியின் கொடுமையால் களைப்பாக இருந்தது. களைப்பின் மிகுதியால் அவர் ஒரு கூட்ஸ் வண்டியின் அடியில் படுத்துத் தூங்கிவிட்டார். ரயில்வே போலிஸார் அவரைக் கைதுசெய்து விசாரணைக்கு மாஜிஸ்டிரேட் முன் கொண்டு நிறுத்தினர். தம்முடைய நிலையை அவர் மாஜிஸ்டிரேடிடம் கூறியும், அவருக்கு ஒரு மாதச் சிறை தண்டனை கிடைத்தது பெரியவர்களிடம் அடியும், போலீசாரின் தொந்தரவும் அவர் மனதைப் பெரிதும் துன்புறுத்திவிட்டது. அவர் கப்பல் வேலையில் சேர்ந்தார். அவ்வேலையும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கப்பல் வேலையில் சேர்ந்ததின் மூலம் அவருக்குப் புத்தகம் படிக்கும் ஆவல் ஏற்பட்டது நண்பர்களிடம் எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்டு, புத்தகங்களைப் படிக்கலானார்.
கப்பல் வேலையைவிட்டு விலகிய ஜாக்லண்டனுக்கு படிப்பின் மீது கவனம் சென்றது. ஆனால், பள்ளிக்குச் சென்று படிப்பதற்கு அவரிடமோ பணம் இல்லை. அதனால், கல்வி அறிவை விருத்தி செய்து கொள்ள இலவச நாடகத்திற்குச் சென்று புத்தகங்களைப் படிக்கலானார். ஒரு நாள், தீரச்செயல்கள் நிரம்பிய புத்தகம் ஒன்றைப் படித்தார். மறுநாள் அராபியக் கதையைப் படித்தார். இதிலிருந்து அவருக்கு கதைப் புத்தகம் படிப்பதில் அதிக ஆவல் ஏற்பட்டுவிட்டது. தினமும் அவர் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைப் படித்து வந்ததால் அவருடைய கல்வி அறிவு தானாகவே விருத்தி அடைந்தது. மேலும், அவர் கதைப் புத்தகங்தான் படித்தார் என்பதல்ல. அரசியல், பொருளாதாரம் இன்னும் பலவகைப் புத்தகங்களையும் படித்து முடித்தார்.
ஜாக்லண்டனுக்கு 18 வயதாகியபோது கலிபோர்னியா பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார். இரவு பகல் என்று பாராமல் படித்து மூன்றே மாதங்களில் பரீட்சையும் எழுதி தேர்வு பெற்றார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் திரும்பவும் கூலி வேலை போன்றவை செய்வதில் அவருடைய மனம் நாட்டம் கொள்ளவில்லை. அதற்கு பதில் இலக்கிய வேலையை அவர் மனம் நாடியது. ஆசை ஏற்பட்டதும் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். எழுதிய கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். ஆனால், ஒன்று கூட பிரசுரமாகாமலே திரும்பி வந்து கொண்டிருந்தன. இதைக் கொண்டு அவர் மனம் தளர்ந்து விடவில்லை. கடைசியாக ஒருநாள் அவருக்கு நான்கு பவுன் செக் ஒன்று வந்தது. அத்துடன் ஒரு கடிதமும் வந்தது. அவர் எழுதிய ‘டைபூன்’ என்ற கதை ஸான் பிரான்ஸிஸ்கோ கால் என்ற பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்காகவே அப்பணம் அவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. செக்கையும் குறிப்பையும் கண்டதும், ஜாக்லண்டன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சுரந்தது. அவர் தம்முடைய முயற்சி வெற்றி பெற்றதாகக் கருதினார். அதிலிருந்து தொடர்ந்து சலிக்காமல் கதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார். சுமார் ஐந்து வருஷங்களில் அவர் வாசகர்களால் மிகவும் நேசிக்கும் கதாசிரியராகி விட்டார். அவருடைய வருமானமும் அதிகரித்துக் கொண்டே போயிற்று.
ஜாக்லண்டன் இளமையில் வறுமையால் கஷ்டப்பட்டார். சிலர் அவரை வெறுத்து அடித்துத் துரத்தினர். ஆனால், அவர் இலக்கியத் தொழிலை மேற்கொண்டு வெற்றியும் பெற்ற பிறகு, அவரை வாசகர்கள் தங்கள் இலட்சிய புருஷராகக் கொண்டார்கள்.