வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/வேடிக்கையான கதை
வேடிக்கையான கதாசிரியர்
பிரபல கதாசிரியரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். இந்த ஒரு சம்பவந்தான் அவர் வாழ்க்கையில் ஆச்சரியமானது என்பதல்ல அவருடைய வாழ்க்கை முழுதும் ஆச்சரியமானது தான்.
மார்க்ட்வைன் ஏழைக் குடும்பத்தில் 1865ம் வருஷம் பிறந்தார். அவருடைய உண்மை பெயர் ஸாமுவேல்ஸாங்கர்ன் கிரிமன்ஸ். அவர் அமெரிக்காவில் மிஸேரி என்ற ஊரைச் சேர்ந்தவர். அவருடைய தகப்பனார் ஒரு விவசாயி. மேலும் மார்க்ட்வைனுடன் பிறந்தவர்கள் மூவர். இதனால் அவருடைய தகப்பனார் குடும்பத்தை நடத்தவே மிகவும் கஷ்டப்பட்டார்.
மார்க்ட்வைன் பெரியவனானதும் விளையாடத் தலைப்பட்டார். அவருக்குத் தெரிந்த நகைச்சுவைகளை, எல்லாம் நடைமுறையிலேயே செய்ய முற்பட்டார். இதைக் கண்டு பெற்றோர் மனம் வருந்தினர். பையனைப் பள்ளிக்கு அனுப்பினாலாவது திருந்துவான் என்று எண்ணினர். ஆனால், பள்ளியில் சேர்க்கப்பட்டபின்னும் மார்க்ட்வைனுடைய தொல்லை குறையவில்லை. அதற்கு மாறாக விளையாட்டுகள் அதிகமாயிற்று. மார்க்ட்வைனுடைய தாயார் அவரை நல்ல வழிக்குக் கொண்டு வர தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்தாள். அவளுடைய எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு மார்க்ட்வைன் படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இரண்டு வருடங்கள் வரை அவர் அங்கே சம்பளம் இல்லாமலே வேலை செய்தார். பிறகு தான் அவருக்குச் சொற்ப சம்பளம் கொடுத்தனர்.
இச்சமயத்தில்தான் அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. தெருவில் போகும்போது அவர் சிறுபிள்ளைத் தனமாக வழியில் கிடக்கும் காகிதங்களைப் பொறுக்குவார். பிறகு அதைச் சுற்றி எறிவார். இப்படித்தான், ஒருநாள் ஒரு காகிதத்துண்டைப் பொறுக்கினார்; அது ஜோன் ஆப் ஆர்க் என்பவருடைய சரித்திரப் புத்தகத்தின் பகுதியைச் சேர்ந்தது. அதைப்படித்ததும் அவருக்கு அப்புத்தகத்தையே படிக்க வேண்டும் என்று தோன்றிற்றாம். இதிலிருந்து தான் அவருக்குப் புத்தகப்படிப்பில் அதிகக் கவனம் செல்லலாயிற்று. அப்படியே கதைகள், கட்டுரைகள் எழுதும் நிலைக்குக் கொண்டுவிட்டது.
மார்க்ட் வைன் நகைச்சுவையாகப் பேசுவார் நகைச்சுவையாக எழுதக் கூடியவர். அவருடைய சொற்பொழிவு என்றால் மக்கள் திரள் திரளாகக் கூடிவிடுவர்.
ஒரு சமயம் மார்க்ட்வைன் பெரிய கடனாளியாகி விட்டார். கடன்காரர்கள் அவரை நிர்ப்பந்தித்த சமயம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடுவதாகவும், மோசம் செய்துவிடமாட்டேன் என்றும் கூறினார். அச்சமயம் அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்தது. அப்படியிருந்தும கடனை தீர்ப்பதற்காக புத்தகங்கள் எழுதியும், பிரசங்கங்கள் செய்தும் பணம் சேகரித்தார். அவர் வாக்கு அளித்தபடியே கடன் பூராவையும் கொடுத்தார்.
மார்க்ட்வைன் எதிர்பாராத விதத்தில் எப்படி கதாசிரியரானாரோ அப்படியே அவருடைய கலியாணமும் நடந்தது. ஒரு கப்பலில் அவர் ஒரு பெண்ணின் போட்டோவைக் கண்டார். உடனே அவர் மனதில் அந்தப்பெண்ணின்மீது அன்பு ஏற்பட்டு விட்டது. வெகுநாட்களுக்குப் பிறகு, அதே பெண்ணைக் கண்டு அவர் கலியாணமும் செய்து கொண்டார்.
அவர் வாழ்க்கையில் அனுபவிக்கவேண்டிய சுகங்களை எல்லம் குறைவின்றி அனுபவித்தார், ஆனால் அவருக்கு ஒரு குறைமாத்திரம் இருந்து வந்தது. தான் பிறந்த சமயத்தில் தோன்றிய நட்சத்திரம் திரும்பவும் உதிக்கும்போது பார்த்துவிட்டு இறக்க வேண்டும் என்று அவருடைய 76வது வயதில் அவர் மரணப் படுக்கையில் படுத்திருந்தார். அவருடைய சிந்தனையில் தன் ஆவலைப் பற்றியே இருந்து வந்தது. 1910ம் வருடம் ஒரு இரவில் திடீரென்று வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றியது. வான வெளியையே பார்த்திருந்த மார்க்ட்வைன் அதைக்கண்டு புளகாங்கிதம் கொண்டார். உடனே தம் மகளை அழைத்து தனக்குப் பிரியமான நாடோடிப் பாடல் ஒன்றைப் பாடும்படி கூறினார். பாட்டைக் கேட்டுக்கொண்டே அவர் உயிர் துறந்தார்.