வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/தாய் கண்ட

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
18
தாய் கண்ட கனவு மகனால் பலித்தது


மின்டா மார்டின் என்ற மாது 1886ம் வருஷம் ஜனவரி மாதம் 15ம் தேதி ஒரு கனவு கண்டார். அவர் ஆகாயத்தின் ஒரு யந்திரத்தில் பிரயாணம் செய்வது போல் கனவில் கண்டார். கனவு கண்ட பிறகு, இது நடக்குமா? என்று அவர் தன்னையே பலமுறை கேட்டுக் கொண்டார். மேலும் அக்காலத்தில் ஆகாய விமானங்களே கிடையாது. இதனால் தான் கண்டது மனப் பிரமையின் மூலம் ஏற்பட்டது தான் என்று எண்ணி சும்மா இருந்து விட்டார். ஆனால், அவர் மண்தில் கனவைப் பற்றிய சிந்தனை மாத்திரம் எப்போதும் நினைவில் இருந்து கொண்டே இருந்தது.

மார்டின் தென்மேற்கு கான்ஸாஸில் வசித்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் சாதாரண அந்தஸ்திலேயே இருந்தார். இதனால் குடும்பம் சாதாரண நிலையிலேயே இருந்தது. இச்சமயத்தில் மார்டின் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாரானார். குழந்தை வளர்ச்சி பெற்றது.

அதுபோல, மார்டின் மனதிலும் தான் கண்ட கனவும் வளர்ந்து கொண்டே இருந்தது. மார்டின் தன் மகனுடன் கொஞ்சும் போதெல்லாம் தான் கண்ட கனவைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார். இதனால் பையனுக்கு ஒருவித ஆவல், ஏற்பட்டிருந்தது.

மார்டினுடைய மகன் கிளின் மார்டின் ஏழுவயது பையனாக இருக்கும்போது ஆகாயத்தில் பட்டம் பறப்பதை வெகு ஆவலுடன் கவனித்து வருவான். பட்டம் ஆகாயத்தில் பறப்பது போல், தன்னாலும் பறக்க முடியுமா என்று எண்ணுவான். அப்பொழுது அவனுடைய தாயார் கண்ட கனவு நினைவிற்கு வரும்.

கிளின் மார்டின் ஒரு சமயம் பட்டம் ஒன்று வாங்க தாயாரிடம் காசு கேட்டான். அச்சமயம் அவனுடைய குடும்பம் வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தது. அதனால் மகன் கேட்டபடி தாயாரால் காசு கொடுக்க இயலவில்லை. தாயார் மிகவும் வருந்தினார் ஆனால், மகன் மனம் தளரவில்லை. காசு கொடுத்து வாங்க முடியாத பட்டத்தைத் தானே செய்து கொள்ளலாம் என்று எண்ணினான். உடனே மூங்கில் கம்புகளையும், காகிதத்தையும் சேகரித்தான் அதைக் கொண்டு பிறர் உதவியின்றி பட்டம் ஒன்றை தயாரித்தான். அவன் செய்த பட்டம் , சாதாரணமாக மற்றவர்களுடையதைப்போல் இல்லாமல் புது முறையாக இருந்தது. இதைக்கண்ட பையனுடைய நண்பர்கள் தங்களுக்கும் அதுபோல் தயார் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். கிளின் மார்டின் இப்படியே சில நாட்களுக்குள் பட்டம் தயாரிப்பதில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டான். ஆனால், அவன் மனமோ அத்துடன் திருப்தி அடைந்துவிடவில்லை. தாயார் கண்ட கனவைப் நினைவாக்கச் செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

கிளின் மார்டின் பெரியவனான பிறகு குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு வேலைக்கு போக வேண்டியவரானார். போர்டு மோட்டார் கம்பெனியிலும் மற்றும் சில கம்பெனிகளிலும் வேலைக்கு அமர்ந்தார். மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு கிளின் மார்டின் மனம் இயந்திர சாதனங்களில் ஈடுபட்டது. இயந்திர சாதனத்தின் மூலம் தரையில் எப்படி பிரயாணம் செய்கிறோமோ, அதே போல் ஆகாயத்திலும் பிரயாணம் செய்யலாம் என்று நம்பிக்கை கொண்டார். அதைக் கொண்டு, அவர் பகல் பூராவும் கம்பெனி வேலை செய்வார். இரவு நேரங்களில் தம்வீட்டில் ஆகாயத்தில் பறக்கும் இயந்திரத்தைப் பற்றிய ஆராய்ச்சி செய்வார். அவருக்கு உதவி செய்ய அவருடைய தாயார் தான் இருந்தார். மகன் தன் கனவை நினைவாக்கச் செய்யப் போகிறான் என்ற எண்ணத்தில் தாயார் பூரிப்படைந்திருந்தார்.

மின்டா மார்டின் கனவு கண்டு சரியாக 17 வருஷங்கள் கழித்து, அது நினைவாயிற்று. அதற்கு சில நாட்கள் முன்பு தான் அமெரிக்காவில் இருவர் விமானத்தைக் கண்டு பிடித்திருந்தனர். அதனால் கிளின் மார்டின் விமானத்தைக் கண்டு பிடித்தது மூன்றாவது மனிதராகக் கருதப்பட்டார்.

ஒரு பட்டம் வாங்கக்கூட காசு இல்லாதிருந்த மார்டின் குடும்பம் பணத்தின்மீதே புரண்டு கொண்டிருக்கிறது. சமையல் அறையை விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையாக முதலில் உபயோகித்தவர்கள் அமெரிக்காவிலேயே பெரிய விமான தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றனர்.

மின்டா மார்டின் கனவு கண்டபொழுது, அது வாழ்க்கையில் நடக்கும் என்று அவர் எண்ணியே இருக்கமாட்டார். ஆனால் அவர் கண்ட கனவை நினைவாக்கி விட்டார் அவருடைய மகன்.