வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/சிறையிலே சிந்தித்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
20
சிறையிலே சிந்தித்து ஆசிரியர் ஆனார்


பிரபலமான ஆங்கில எழுத்தாளர் காலஞ்சென்ற ஒ. ஹென்றி. அந்தக் காலத்தில் அவருடைய பேச்சும் எழுத்தும் ஆங்கில மொழிக்கே ஒரு அணியாகத் திகழ்ந்ததாம்.

ஒரு நாள் அவருடைய நண்பர் பிண்ட்சே டெனிசன் என்பவர் அவரைப்பார்க்க வந்திருந்தார் “அந்த சோபாவில் அப்படியே படுத்துக்கொள். இன்றைக்குச் சாயந்திரத்துக்குள் எப்படியாவது ஒரு கதை எழுதியாக வேண்டும். ஒரு விஷயத்தை மனதிலே நினைத்தேன். ஆனால் பிரத்தியட்ச ‘மாடல்’ ஒன்று இருந்தால் செளகரியமாக இருக்கும் உன்னையும் உன் மனைவியைப் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கிறேன். அவளை நான் பார்த்தது கூட இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் இருவரும் வெகு அன்யோன்யத் தம்பதிகளாயிருக்கிறீர்களே! அந்தச் சோபாவில் அப்படியே படுத்துக்கொள். நடுவில் எதற்கும்

குறுக்கிடாதே” என்று கட்டளையிட்டார், ஓ.ஹென்றி. நண்பரும் அப்படியே செய்தார். மூன்று மணி நேரத்திற்குள் ஒரு கதையை எழுதி முடித்தார்.

ஹென்றியின் உண்மையான பெயர் வில்லியம் சிட்னி போர்டர். 1862ல் கிரீன் ஸ்பரோவில் பிறந்து ஆரோக்கியத்திற்காக 1882ல் டெக்சாஸ் நகரத்திற்குச் சென்றார். ஆரம்ப காலத்தில் டெக்சாசில் ஒரு குமாஸ்தா வேலை பார்த்தார் பின்னர், ஆஸ்டின் நகரத்தில் ஆதல் ஈஸ்டல் என்ற குமரியின் காதலுக்குத் தன்னைப் பலிகொடுத்தார். அவளையே மணந்து கொண்டார். மார்க்கரெட் என்ற பெண் குழந்தை ஒன்றும் அவருக்குப் பிறந்தது.

ஆஸ்டினியில் உள்ள முதல் நேஷனல் பாங்கில் கொடுக்கல் வாங்கல் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். அதே சமயத்தில் “ரோலிங் ஸ்டோன்” என்ற வாரப் பத்திரிகையையும் நடத்தி வந்தார்.

கண்டிப்பில்லாத நிலைமையில் பாங்க் நடந்த அந்தக் காலத்தில், போர்டர் கணக்குத் தணிக்கை செய்யும்போது, நூறு டாலர் துண்டு விழுந்ததைக் கண்டார். சம்பந்தப்பட்ட அந்த ரசீதும் காணப்படவில்லை. கணக்குப் புத்தகத்தில் காணப்பட்ட இந்தத் தகிடுதத்தங்களை அந்த அதிகாரிகளே சரிசெய்து விட்டார்கள்.

போர்டர் பாங்கி வேலையை விட்டு விட்டு, ‘போநிட்’ பத்திரிகையில் வேலை பார்த்தார். 1896 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் சிறந்த பத்திரிகை ஆசிரியர் என்ற பெயர்வளர்ந்து வரும் பொழுது இவருக்கு ஒரு களங்கம் வந்தது ஆஸ்டினில் இவர் வேலை பார்த்தபொழுது, சுமார் 1580 டாலர்களுக்கு மேல் கையாடியிருப்பதாக வழக்குத் தொடுத்து, விசாரணைக்கு நோட்டிஸ் வந்தது. குற்றச்சாட்டுப் பிரகாரம் சுமார் முந்நூறு டாலர் போர்டர் பாங்கியிலிருந்து வெளியே போயிருந்த சமயத்தில் காணாமல் போயிருந்தது.

நேராக ஆஸ்டினுக்குப் போவதற்குப் பதிலாக, மத்திய அமெரிக்காவிற்கு ஓடினார் போர்டர். தம் மனைவியை அங்கு வந்து சேரும்படி சொல்லியிருந்தும், அவள் வந்து சேரவில்லை. சயரோகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவள் இதற்கு பிறகு கொஞ்ச காலத்தில் இறந்துவிட்டாள்.

பிறகு, போர்டர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குத் திரும்பினார். 1898ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி விசாரணை நடந்து தண்டனை தரப்பட்டது.

வழக்கு சம்பந்தமான விசாரணை நோட்டீஸ்வந்ததுமே, நேராக ஆஸ்டினுக்கு வராமல், மத்திய அமெரிக்காவிற்கு ஓடியதுதான் அவர் மீது பெருத்த சந்தேகத்திற்குக் காரணமாகும். தன்னுடைய வக்கீலுக்கு எந்த விதமான உதவியும் இவர் செய்யவில்லை. விசாரணை முழுவதிலும் மெளனமே சாதித்தார். சில காலம் கழித்து உண்மை தெரிந்த பிறகு, அந்த ஜூரிகளில் ஒருவர் “ஓ. ஹென்றி நிரபராதி என்பது இப்போது எனக்குத் தெரிந்ததைப் போல், அப்போதே தெரிந்திருந்தால் நான் அவருக்கு எதிராக ஓட் செய்திருக்கவே மாட்டேன்” என்று சொன்னதாக ஹென்றியின் வாழ்க்கைக் குறிப்பில் காணப்படுகிறது.

1898ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமக்கு அளிக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்தார். “என்னுடைய வாழ்நாளிலேயே நான் ஒன்றையும் திருடியதே கிடையாது. பாங்கியின் பணத்தை நான் கையாடி விட்டதாக என்னை இங்கே வைத்திருக்கிறார்கள். நான் கொஞ்சம் கூட எடுக்கவே இல்லை அதை எல்லாம் வேறு யாரோ எடுத்துக்கொண்டார்கள்” என்று ஓ.ஹென்றி சொன்னதாகச் சிறை டாக்டர் ஜான் தாமஸ் சொல்லியிருக்கிறார்.

முப்பத்தாறு வயதானவராகச் சிறைக்கோட்ம் நுழைந்த இவர், நாற்பது வயதளவில் வெளியே வந்தபோது கைதேர்ந் எழுத்தாளராக மாறி விட்டார். சிறைச்சாலை அவரை ஒன்றும் செய்யவில்லை. அந்த நாற்புறச் சுவருக்குள்ளும் அடங்கியிருந்த அமைதி இவரது சிந்தனைக்கு நீர் வார்த்து வளர்த்துவிட்டது. இவருடைய சிறு கதைகளுக்கு ஏகக் கிராக்கி ஏற்பட்டது. இவருடைய பெயர் மாறியது சிறைக்காவலனான ஒரின் ஹென்றியின் பெயரைத் தழுவியே ஓ.ஹென்றி என்று இவர் வைத்துக்கொண்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் அற்புதமான கதைகளை எழுதிக் குவித்தார். அவருடைய புகழ் வளர வளர அவருடைய உடல் நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. 1908ம் ஆண்டு இவர் புகழ் ஏணியின் உச்சியில் இருந்தார். அதே சமயம் துன்பக் கேணியில் அதல பாதாளத்தில் சிக்கி அழுந்தினார். இந்தச்சமயத்தில் இவருக்கு மிக அதிகமாக வருமானம் வந்தும், அதை வைத்துக் காப்பாற்றத் தெரியவில்லை. போதாதற்கு பள்ளிப் பருவ சினேகிதி சாரா கோல்மன் என்பவளையும் கலியாணம் செய்து கொண்டார். அவர் நியூயார்க்கிற்குப் போனவுடன், நிமோனியா அவரைப் பிடித்துக் கொண்டது. 1910ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி காலிடோனியா என்ற தம்முடைய வீட்டில் தம் 47வது வயதில் இறந்து போனார்.

ஆளைப் பொருத்த மட்டில் ஓ. ஹென்றி ஆஜானுபாகுவானவர். கட்டுமஸ்தான உடலன்றி நல்ல திரண்ட தோள்கள். எப்போதும் கம்பீரமான ஒரு கவர்ச்சி. ஒரு தடவை தன்னைப் பேட்டி காணவந்தவரிடம் தன்னைப் பற்றி, “அப்படியானால் என்னை ஒரு திடமான கசாப்புக்கடைக்காரன் என்று சொல்லுங்கள்” என்றாராம். அந்தக் கசாப்புக் கடைக்காரன் தான் எழுத்தாளர்களிலேயே மிகக் கற்பனாசக்தி வாய்ந்தவராக விளங்கினார். இந்தக் கசாப்புக் கடைக்காரன் சமைத்துத் தந்த விருந்திலே மனித உணர்ச்சிகள் தாண்டவமாடும் நகைச்சுவை ஊற்றெடுக்கும். 1902லிருந்து 1910 வரை நியூயார்க்கிலிருந்த அந்த எட்டு ஆண்டுகளில் அவர் எழுதியவை 250 சிறு கதைகள் எல்லாவற்றிலுமே இந்த உணர்ச்சிகள் முட்டி மோதி வெளிப்படும். அவ்வளவும் அருமையான உயிருள்ள சிருஷ்டிகள். அவருடைய கதாபாத்திரங்களெல்லாம், திருடர்கள், போலீஸ்காரர்கள், கடைப்பெண்கள், காசாளர்கள், நடிகர்கள், சுருக்கெழுத்தாளர்கள் முதலியவர்கள் தான். “மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சியையும் ஒவ்வொரு கற்பனைக் கதைக்கும் அஸ்திவாரமாகக் கொள்ளலாம்” என்று அவர் ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

“சிறு கதை எழுதுவது எப்படி?” என்று ஒருவர் ஹென்றியிடம் கேட்டாராம். “அதென்ன பிரமாதம்? வெகு சுலபமான விஷயமாயிற்றே. கதையை எப்படி முடிப்பது என்பதை முதலில் தீர்மானித்துக்கொண்டு பிறகு, அந்த முடிவு வருவதற்கு எப்படி அமைக்க வேண்டுமோ அப்படிச் செய்தால் போதும். அவ்வளவுதான்!” என்றாராம்.


 

சுய முயற்சியால் முன்னேறி
வெற்றிகண்ட பத்தொன்பது
பிரபலமானவர்களின்
கதைகள்.