வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/தியாகமே வாழ்வின் வழி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6
தியாகமே வாழ்வின் வழி

வாழ்க்கை நன்மையில் நாட்டங் கொண்டது. நன்மையில் நாட்டங் கொள்வதே வாழ்க்கை. வாழ்க்கையின் பொருள் இதுதான் என்று மனித சமூகம் முழுதும் முற்காலத்தில் உணர்ந்திருந்தது: இப்போதும் உணர்ந்திருக்கிறது ; இனியும் உணரும். சிந்தனையற்ற சாதாரண ஜனங்கள் மனிதனின் நன்மை அவன் உடல் சம்பந்தமான மிருக வாழ்வின் நலன்தான் என்று கருதுவார்கள்.

வாழ்க்கையில் முக்கியமான நன்மையடைதல் என்ற பகுதியை விட்டுவிட்டுப் போலி விஞ்ஞானம் உடலின் மிருக வாழ்வே வாழ்க்கை யென்று கருதுகிறது. அறிவில்லாத ஜனங்கள் என்ன தவறு செய்கிறார்களோ அதே தவறுதலை விஞ்ஞானமும் செய்கிறது.

இந்த இரண்டு கருத்துக்களின் தவற்றுக்கும் காரணம் மிருக வாழ்வையே பகுத்தறிவு உணர்ச்சியென்று கருதி மயங்குதல். பகுத்தறிவு உணர்ச்சியில் உடல் வாழ்வும் அடங்கியதுதான். ஆனால், உடல் வாழ்வில் பகுத்தறிவு உணர்ச்சி அடங்கியிருக்கவில்லை. உடல் பற்றிய தனித் தன்மை விலங்குக்கும் மனிதனுக்கும் பொதுவானது. ஏனெனில், மனிதனும் ஓரளவு மிருக இயல்புடன் இருக்கிறான். ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி மனிதனுக்கு மட்டுமே உரிய குணம்.

மிருகம் தன் உடலுக்காகவே வாழலாம். அப்படி வாழ்வதை எதுவும் தடை செய்யவில்லை. அது தனி நிலையில் ஏற்படும் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது ; ஆனால், அப்படிச் செய்வதாக அது உணர்வதில்லை; தனக்கு ஒரு தனித் தன்மையிருப்பது கூட அதற்குத் தெரியாது. பகுத்தறிவுள்ள மனிதன் தன் உடலுக்காக மட்டும் வாழ முடியாது. ஏன் முடியாதென்றால், தான் ஆணவமுள்ள தனி மனிதன் என்பதையும், தன்னைப்போல் தனித்தன்மை பெற்ற மனிதர்களும் ஜீவராசிகளும் இருப்பதையும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சம்பந்தங்களின் விளைவுகளையும் அவன் அறிவான்.

மனிதன் தன் மிருக இயல்பின் நன்மையை மட்டும் நாடுவதானால், அவன் தன்னை மட்டும் நேசிப்பதானால், மற்ற ஜீவன்களும் தங்களை மட்டும் நேசிக்கின்றன என்பதை அறிய முடியாது. (மிருகங்கள் இவ்வாறு உணர்வதில்லை; அந்த நிலையில்தான் அவனும் இருப்பான்.) மற்ற ஜீவன்களும் அவனும் ஒரே லட்சியத்தை நோக்கிப் போவதை அறிந்திருந்தும், சுயநல ஆசை தென்று பகுத்தறிவு உணர்ச்சி எடுத்துக் காட்டிய பின்பும், அவனுடைய வாழ்க்கை தனிப்பட்ட சுயநன்மையை மட்டும் நாடுவதாயிருக்க முடியாது. சில சமயங்களில் மனிதன் உடலின் நலனே தன் நலன் என்று கருதக் கூடும். அதற்குக் காரணம் அவனுடைய மிருக இயல்பின் செயல்களைத் தன் பகுத்தறிவு உணர்ச்சியின் இலட்சியமாகக் கருதி மயங்குதலேயாகும். கனவில் கண்டவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு விழிப்புள்ள நிலையில் ஒருவன் அவைகளைப் பின்பற்றி நடப்பது போன்றது இது.

இத்துடன் போலிப் போதனையும் இதையே வற்புறுத்தும்போது, அவன் மனம் குழப்பமடைகிறது.

ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி உடல் வாழ்வின் நன்மை அவனுடைய நலனன்று என்றும், அது அவன் வாழ்க்கையாக இருக்க முடியாது என்றும், இடைவிடாமல் எடுத்துக் காட்டிக்கொண்டே யிருக்கிறது. காலக் கிரமத்தில் அவன் உண்மையான நன்மையையும், வாழ்க்கையையும் அறிந்துகொண்டு, அவை தன் மிருக இயல்புக்கு வெளியேயுள்ளவை என்றும் புரிந்து கொள்கிறான்.

ஒரு மனிதன் தன் தனி நன்மையைத் தியாகம் செய்தல் வீரமான செயலென்றும், மதிப்புக்குரிய காரியமென்றும் ஜனங்கள் சாதாரணமாக எண்ணுகிறார்கள் சொல்லுகிறார்கள். இது மதிப்புமன்று ; வீரமுமன்று; மனித வாழ்வுக்கு ஏற்பட்ட தவிர்க்க முடியாத விதியே இதுதான். மனிதன் தான் உலகம் முழுவதிலுமிருந்து வேறுபட்டுத் தனித்திருப்பவன் என்று கருதினால், அதே சமயம் தன்னைப் போலவே மற்ற மனிதர்கள் அனைவரும் உலகம் முழுவதிலு மிருந்து வேறுபட்டுத் தனித்தன்மை பெற்றிருப்பதை அவன் காண நேருகிறது ; அதனால் ஒரே மாதிரியாயுள்ள அவனுக்கும் மற்றவர்களுக்கும் இணைப்பு அல்லது சம்பந்தம் ஏற்படுகிறது. இந்த இணைப்பிலிருந்து தனி நன்மை என்பது வெறும் மயக்கம் என்பதையும், உண்மையான நன்மை ஒன்றே பகுத்தறிவு உணர்ச்சியைத் திருப்தி செய்யும் என்றும் அவன் கண்டு கொள்கிறான்.

மிருகத்திற்குத் தன் நலத்திற்குரிய செயலே லட்சியம் , அப்படி யில்லாவிடின் அதற்கு வாழ்க்கை இல்லாமற் போகும். மனிதனுக்கு இதற்கு நேர்மாறானது; தன் சுய நலத்திற்கான செயல் அவனுக்கு வாழ்க்கையே இல்லாமற் செய்துவிடும். மிருகத்திற்குச் சுயநலம் அவசியம்; மனிதனுக்கு அதுவே தீமை.

மிருகம் தன் சுய நலத்தையும், இன விருத்தியையுமே வாழ்வின் முதன்மையான லட்சியமாகக் கொள்கிறது. ஏனெனில், அந்த வாழ்வு தீர்ந்து போகக்கூடியது என்றும், துயரம் நிறைந்தது என்றும் எடுத்துக்காட்டுவதற்கு அதற்குப் பகுத்தறிவு உணர்ச்சியில்லை. ஆனால், மனிதன் விஷயத்திலோ, அவனுடைய உடலின் பண்பு உயிரோடிருப்பது மட்டுமே; அதிலிருந்து வாழ்க்கையின் உண்மையான நன்மை எது என்பதை அவன் அறிந்து கொள்கிறான்; அந்த நன்மையும் உடலின் நன்மையும் ஒத்திராமல் மாறுபட்டிருக்கின்றன.

இக் காலத்தில், மனித வாழ்க்கை பிறப்பிற்கும் மரணத்திற்கும் நடுவிலுள்ள இடைக்காலம் என்று கருதப்படுகிறது. ஆனால், இது மனித வாழ்க்கையாகாது; மனிதனின் மிருக இயல்பான ஆணவத்தின் வாழ்க்கை இது. உண்மை என்னவென்றால், சடப் பொருளில் மிருகத்தின் வாழ்க்கை வெளிப்பட்டுத் தெரிவதுபோல், மிருகத்தில் மனித வாழ்க்கை வெளிப்பட்டுத் தெரிகிறது. (சடம் உயிர் பெறும் போது மிருகமாயும், மிருகம் பகுத்தறிவு உணர்ச்சி பெறும்போது மனிதனாயும் விளங்கும்.)

மிருக இயல்பின் தேவைகள் தெளிவானவை சாதாரணமானவை. பகுத்தறிவு உணர்ச்சியின் தேவைகளை மனிதனாகக் கண்டுபிடிக்க வேண்டும்! அவை பல சேர்க்கைகளோடு பின்னியிருப்பதால் அவனுக்கு விளக்கமாய்த் தெரிவதில்லை.

கண் முன்பு தெரியும் உடல் வாழ்வை உதறி விட்டுக் கண்ணுக்குத் தெரியாத பகுத்தறிவு உணர்ச்சிக்குப் பணிவது மனிதனுக்குப் பயங்கரமாயும், பெருந் துன்பமாயும் இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது தன் பிறப்பைப் பற்றி அது உணர முடிந்தால் எவ்வளவு திகிலும் துன்பமும் அடையுமோ, அதுபோலவே இந்த மனிதனுக்கும் ஏற்படுகிறது. ஆனால், இதைத் தவிர்க்கவும் முடியாது. ஏனெனில், நன்றாக வெளியே தென்படும் ஸ்தூல வாழ்க்கை மரணத்தில் தானே முடிகிறது! ஆனால் வெளியே தென்படாத அறிவு உணர்ச்சி ஒன்றே உயிரளிப்பதா யிருக்கிறது.

மிருக இயல்பு வாழ்க்கையின் கல்வி

மனிதனின் உடல் வாழ்க்கை கணந்தோறும் இடைவிடாமல் நசித்துக்கொண்டே வருவதையும் அது மரணத்தை நோக்கி வேகமாய்ச் சென்றுகொண்டிருப்பதையும், இவற்றால் அது அவன் வாழ்க்கையாயிருக்க முடியாது என்பதையும் அவன் கண்டு கொள்கிறான். எத்தனை எதிர்வாதங்கள் கூறினும், இந்த உண்மையை அவனிடமிருந்து மறைக்க முடியாது.

மனிதனுடைய உடல் வாழ்வில், குழந்தைப் பருவத்திலிருந்து கிழப் பருவம், மரணம் வரையும், அவ் வாழ்வின் சக்தி செலவழிந்து குறைந்து கொண்டே வருகிறது. இறுதியில் மரணம். ஆகையால், இந்த வாழ்வு அவன் வாழ்வா யிருக்கமுடியாது. படம் வாழ்வின் நோக்கம் தான் அழிவில்லாமல் பெருகிக்கொண்டிருக்க வேண்டும் என்பது. ஆனால் மேய்தும் அழிவும் அந்த நோக்கத்திற்கு நேர் மாறாக எற்படுகின்றன, இத்தகைய வாழ்வு தீமையானது. ஏனென்றால், மனித வாழ்வின் அர்த்தம் அது நன்மையில் நாட்டங் கொள்வதே.

மனிதனுக்கு உண்மையில் எது நன்மையாக இருந்த போதிலும், அவன் தன் உடல் வாழ்வின் நலனைத் தியாகம் செய்து தீரவேண்டியிருக்கிறது.

உடல் வாழ்வின் நலத் துறப்பதே மனித வாழ்க்கையின் நியதி, சட்டம். சுயேச்சையாகப் பகுத்தறிவு உணர்ச்சிக்குப் பணிந்து இந்தத் தியாகத்தைச் செய்யாவிட்டால், ஒவ்வொரு மனிதனும் மரணத் தறுவாயில் இவ்வாறு செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். அப்போது மனிதன் தன் துன்பச் சுமைகளைத் தாங்க முடியாமல் ஒரே விஷயத்தை வேண்டித் தவிக்கிறான்; தன் உடல் வாழ்வு நசித்துப் போகும் வேதனையான உணர்ச்சியிலிருந்து தான் விடுதலையடைய வேண்டும் என்றும், இந்த நிலைமையிலிருந்து வேறு நிலைக்கு மாறி வாழ வேண்டும் என்றும் விரும்புகிறான்.

குதிரை ஒன்றை அதன் சொந்தக்காரன் லாயத்தை விட்டு வெளியே கொண்டு வரும்போது, அது தான் அடைபட்டிருந்த நிலையிலிருந்து நல்ல வெளிச்சத்தைப் பார்த்ததும், தனக்கு ஒருவாறு விடுதலை வந்துவிட்டது என்று களிப்படைகிறது. அந்த நேரத்தில் சொந்தக்காரன் அதை வண்டியோடு பிணைக்கிறான்: அதன் வாயிலுள்ள கடிவாளம் இழுக்கப்படுகிறது. அது நடந்து முன்னேற வேண்டும், தான் போவதோடு, பின்னாலுள்ள வண்டியையும் இழுத்துச் செல்ல வேண்டும். லாயத்திற்கு வெளியே வருகையில், தன் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் திரியக் கூடிய சுதந்திரம் வந்துவிட்டதாக அது எண்ணி யிருந்தால், இப்போது தன் கட்டுக்களை அறுத்துக் கொண்டு ஓடுவதற்காக அது துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்யும்; சில சமயங்களில் இதனால் உயிர் துறப்பதுமுண்டு. அப்படிச் சாகாமலிருந்தால், பிறகு அதற்கு இரண்டு வழிகள் தாம் உண்டு : முரண்டு செய்யாமல் வண்டியை இழுக்கவேண்டும். பாரம் அதிகமா யில்லாம லிருப்பதைக் கவனித்து, இழுப்பது துயர மென்ற எண்ணத்தைக் கைவிட்டு, அதை ஓர் இன்பமாகக் கொள்ள வேண்டும்; அல்லது இடக்குச் செய்து அடங்காமல் துள்ள வேண்டும். உடனே சொந்தக்காரன் அதை அவிழ்த்து ஒரு சுவர்ப் பக்கம் கொண்டு போய்க் கட்டி, (மாடு கமலை யிழுப்பது போல்) அது மிதி - ரோதையை [1] மிதித்து உருட்டும் படி செய்வான். வண்டியை இழுத்தால் பல இடங்களுக்குச் செல்லலாம்; ரோதை மிதிப்பதில் இருந்த இடத்திலேயேயிருந்து வேலை செய்ய வேண்டும். எப்படியும் சொந்தக்காரனின் உத்தரவு-சட்டம் - நிறை வேறிவிடும். முதலாவது வழியில் குதிரை சந்தோஷமாக வேலை செய்யும். இரண்டாவது வழியில் அது இஷ்டமில்லாமல் வேதனையுடன் வேலை செய்யும். மனிதன் வாழ்க்கையில் பிரவேசிப்பதையும், அந்த வாழ்க்கையையும் இந்தக் குதிரை லாயத்திற்கு வெளியே கொண்டுவரப்படுவதற்கு ஒப்பிடலாம்.

மிருக இயல்பே வாழ்க்கை என்று கருதும் ஒவ்வொருவரும், ‘இந்த உடல் வாழ்வு எனக்கு எதற்கு ? என் வாழ்க்கைக்காக இதைத் தியாகம் செய்யவேண்டியிருக்கிறதே?’ என்று கேட்கக்கூடும். மனிதனின் உண்மையான வாழ்க்கைக்குத் தடையாக விளங்கும் உடலைப் பற்றிய பிரக்ஞை - உணர்ச்சி-எதற்காக இருக்கிறது ?

இதுபோன்ற கேள்வியை ஒரு மிருகமும் கேட்பதாக வைத்துக் கொள்வோம்: ‘என் வாழ்க்கையை நான் கவனித்துக்கொண்டு போவதற்கு இடையூறாக என் உடலில் சடப்பொருள் ஏன் இருக்கிறது ? பூத பௌதிக, ரசாயனம் போன்ற அதனுடைய பல விதிகளோடு நான் பொருதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே!’ என்று அது சொல்லும்.

மிருகம் சடத்தின் விதிகளோடு பொருதுவதும், சடத்தைத் தனக்கு அடங்கியிருக்கும்படி செய்வதும் எதற்காக என்பது நமக்குத் தெளிவாய்த் தெரியும். சட்டமும் சட்டத்தின் விதிகளும் அதற்கு இடையூறாக அமையவில்லை; அதன் நோக்கங்கள் நிறைவேற ஏற்ற கருவியாகவே இருக்கின்றன. உதாரணமாகச் சடமாகிய உணவுப் பொருளை அதன் விதிகளுக்கு ஏற்றபடி ஜீரணித்துக் கொண்டால் தான் மிருகம் வாழமுடியும். மனிதன் விஷயத்திலும் இப்படித்தான். அவன் அடக்கியாள வேண்டிய மிருக இயல்பு இடையூறன்று, உதவியாக வந்துள்ன கருவி; அதன் மூலம், அதை உபயோகித்து, அவன் நன்மையடைய வேண்டும். அதை வைத்துக் கொண்டே அவன் வேலை செய்யவேண்டும். மிருக இயல்பு ஒரு மண்வெட்டி; அதை வைத்துக்கொண்டு மனிதன் தோண்ட வேண்டும். வேலை செய்வதால் அது மழுங்கியும், கூர்மையாகியும் வரவேண்டும் என்பதே விதி. மண்வெட்டி உபயோகத்திற்கே யன்றி, மூலையில் சேர்த்து வைப்பதற்காக அன்று.

‘தன் வாழ்க்கையைக் காக்க விரும்புவோன், அதை இழக்கிறான். எவன் வாழ்க்கையை இழக்கிறானோ அவன் அதைக் காண்கிறான். அழிய வேண்டியதை, அழிந்துகொண்டே யிருப்பதை, யாரும் பாதுகாக்க முடியாது; அழியக்கூடியதைத் தியாகம் செய்தே அழியாத உண்மை வாழ்க்கையை அடைய வேண்டும் என்பதை இந்த வாக்கியம் வற்புறுத்துகின்றது. உணவை உற்பத்தி செய்து வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மண்வெட்டி நமக்குக் கிடைத்திருக்கிறது ; அதை உபயோகப் படுத்தாமலிருந்தால், நமக்கு உணவு மில்லாமல் வாழ்வு மில்லாமல் போகும் என்பதை இந்த வாக்கியம் விளக்குகின்றது.

புதிய பிறப்பு

‘நீங்கள் மறுபடி பிறவியெடுக்க வேண்டும்’ என்று கூறினார் கிறிஸ்து நாதர். மனிதன் புதிதாய்ப் பிறக்க வேண்டும் என்று யாரோ கட்டளையிடுவதாக இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. அவனுக்கு வாழ்க்கை அவசியமானால், அவன் பகுத்தறிவு உணர்ச்சியுடன் கூடிய வாழ்க்கையில் பிறந்துதான் ஆகவேண்டும்.

அவனுடைய வாழ்க்கை பகுத்தறிவு உணர்ச்சி அவனுக்கு அறிவுறுத்தும் நலனைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வுணர்ச்சி மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தன் வாழ்க்கை இந்த நலனின் அமைந்திருப்பதை ஒருவன் உணர்ந்தால், அவனே உண்மையான வாழ்க்கையைப் பெற்றவன். இந்த நலனில் தன் வாழ்க்கை இல்லை யென்றும், மிருக இயல்பின் நலத்திலேயே தன் வாழ்க்கை இருக்கிறதென்றும் உணர்பவன் வாழ்க்கையை இழந்தவனாவான். இதுதான் வாழ்க்கையைப் பற்றிக் கிறிஸ்து பெருமான் அருளிய விளக்கம்.

தங்கள் நலத்திற்காக உழைத்தலே வாழ்க்கை என்று எண்ணும் மனிதர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்கிறார்கள் ; ஆனால் புரித்து கொள்வதில்லை ! அவர்கள் புரிந்து கொள்ளவும் இயலாது. இந்தச் சொற்களுக்குப் பொருளில்லை என்றும், அல்லது இவை முக்கியமில்லை என்றும், இவை உள்ளம் பரவசமான நிலையில் கூறப்பட்ட வெறும் அருள் மொழிகள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இந்த வார்த்தைகள் ஒரு நிலையை விளக்குகின்றன; அவர்கள் அந்த நிலையில் இல்லாததால், சொற்களின் பொருளை உணர முடியவில்லை. நிலத்துள் நனைந்து ஊறிய தானியம் முளை விடுவதைக் காய்ந்து கிடக்கும் தானியம் அறிந்து கொள்ள முடியாது. ஊறியிருக்கும் தானியத்தின் மேல் கதிரவன் ஒளி காய்ந்தால், ஏதோ கொஞ்சம் ஒளியும் உஷ்ணமும் அதிகமாயிருப்பதாகக் காய்ந்த தானியம் எண்ணிக்கொள்ளும். ஆனால், ஊறிப் பக்குவமா யிருக்கும் தானியத்திற்குத் தான் உயிர்பெற்று வாழ்வதற்கு அந்த ஒளியே காரணமானது என்பது தெரியும். மிருக இயல்புக்கும் பகுத்தறிவு உணர்ச்சி குறிப்பிடும் இயல்புக்கும் முரண்பாடு ஏற்படாத நிலையிலுள்ள மனிதர்களுக்குப் பகுத்தறிவுச் சூரியனுடைய ஒளி முக்கியமானதாய்த் தெரியாது. முளைகட்டிய விதையின் நிலையில் உள்ளவர்களுக்கே அவ்வொளி உயிரளிக்கும் அமுதமாகும்.

மனிதர்களிடையிலும், விலங்குகள் தாவரங்களிடையிலும், இந்த முளை விடுதல் எங்கு, எப்பொழுது, எதற்காக, எந்த முறையில் ஏற்படும் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனிதனிடத்தில் இந்தப் புது வாழ்வு முளைவிடுவதைப் பற்றிக் கிறிஸ்து நாதர் குறிப்பிடுகையில், அது யாருக்கும் தெரியாது, தெரிந்து கொள்ளவும் முடியாது என்று கூறியிருக்கிறார்.

இந் நிலையில் மனிதன் தன்னிடத்தில் உயிர் முளை விடுதலை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும் ? உயிர் மனிதர்களின் ஒளி,- உயிர் என்பது உயிரே-அதாவது சகல பொருள்களின் தோற்றத்திற்கும் காரணமானது. இது முளைவிடுவதை மனிதன் எப்படி அறிய முடியும்? உண்மையான வாழ்க்கையைப் பெறாமல், காலத்திலும் இடத்திலும் தோன்றும் உடலே முளைவிடுவதாயும், அழிவதாயும் மனிதன் எண்ணுகிறான். ஆனால் உண்மையான வாழ்க்கை இருக்கிறது; மனிதனுடைய பார்வையில் அது முளைவிடுவதுமில்லை, அழிவதுமில்லை.

பகுத்தறிவு உணர்ச்சி வேண்டுவது

உலக அமைப்பில் மனிதனுக்குத் தனியான நலன் இருக்க முடியாதென்று அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சி கூறுகிறது. வாழ்க்கை என்பது தன் நன்மையைப் பெறுவதிலுள்ள ஆசை. ஆனால் இந்த நன்மையைப் பெற முடியாது என்பதை அவன் காண்கிறான்; தனக்கு மட்டுமே நன்மை வேண்டும் என்ற ஆசையே அவன் உயிர் வாழ்வதற்கும் காரணமா யிருக்கிறது.

தன் மிருக இயல்பை அடக்கிப் பூரணமான பகுத்தறிவு உணர்ச்சியைப் பெறாத மனிதன், அடைய முடியாத இந்த நன்மையை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறான். அவனுடைய ஒரே இலட்சியம் எல்லா மனிதர்களும், எல்லாப் பிராணிகளும், தான் ஒருவனுடைய இன்பத்திற்காகவும் நன்மைக்காகவும் வாழவேண்டும் என்பது: அவன் துன்பத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் எப்படியாவது தப்பித்துக்கொள்ள வேண்டும். அவன் தன் தனி நன்மையை அடைய முடியாது என்பதையும், சுற்றியுள்ள மனிதர்கள் அவன் நலத்தை நாடாமல், தங்கள் தங்கள் நலத்தையே நாடிச் செல்வார்கள் என்பதையும் அவன் அநுபவத்தில் தெரிந்துகொண்ட பின்பும், அவன் தன் நம்பிக்கையைக் கைவிடுவதில்லை. ‘எல்லாரும் என்னை மட்டும் நேசித்தால்தான் எனக்கு இன்பம் கிடைக்கும். ஆனால், ஒவ்வொருவனும் தன்னை மட்டுமே நேசித்துக் கொள்கிறான். நான் என்ன செய்தும் பயனில்லை. நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை’ என்று மனிதன் தனக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறான்.

எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்து செல்கின்றன. வெகு தொலைவிலுள்ள நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் பற்றி ஆராய்ச்சி செய்து எத்தனையோ விஷயங்களை மனிதர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் தங்கள் வாழ்க்கையில் ஏன் இன்பமடைய முடியவில்லை என்பதை அவர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை! பெரும்பாலான மனிதர்களுக்கு விஷயம் 5000-வருடங்களுக்கு முன்னால் இருந்த நிலையிலேயே இன்றும் இருந்து வருகிறது.

மனித வாழ்வில் எப்படி இன்பமடைய முடியும் என்பது வெகு காலத்திற்கு முன்பே விளக்கப்பட்டிருக்கிறது. நாமே அதை உணராமல் உழன்று கொண்டிருக்கிறோம். அதை அறிந்ததும், அது நமக்குப் புதிதாய்த் தோன்றாமல், ஏதோ மறந்த விஷயம் நினைவிற்கு வந்ததுபோல் இருக்கும்.

கீழே கண்ட நிபந்தனையின் பேரில் தான் மனிதன் வாழ்வையும் இன்பத்தையும் பெறமுடியும் ; அவன் வாழ்க்கையை விஷமாக்கும் தீமைகளை அகற்ற முடியும் ; முரண்பாடுகள் துயரங்கள் முதலியவற்றையும், மரண பயத்தையும் ஒழிக்க முடியும் :

‘எல்லோரும் தங்களைவிட உன்னையே நேசித்து, உனக்காகவே வாழவேண்டும் என்று நீ விரும்புகிறாய். உன் விருப்பம் ஒரே நிபந்தனையின் பேரில் நிறைவேற முடியும் : எல்லா மனிதர்களும் மற்றவர்களின் நன்மைக்காக வாழ்ந்து, தங்களைப் பார்க்கிலும் மற்றவர்களை அதிகமாக நேசிக்க வேண்டும். அப்படியானால் தான் உன்னையும் மற்றவர்களையும் எல்லோரும் நேசிக்க முடியும். அவர்களில் நீயும் ஒருவனாக இருப்பதால் நீ விரும்பும் நன்மையை அடைய முடியும். எல்லா மனிதர்களும் தங்களைப் பார்க்கிலும் மற்றவர்களை நேசித்தால்தான் உனக்கு நன்மை ஏற்படும் என்றால், நீயும் உன்னைப் பார்க்கிலும் மற்றவர்களை மேலாக நேசிக்க வேண்டும்.’

தனி மனிதனின் இன்பம் ஏன் சாத்தியமில்லாமல் இருக்கிறது? முதலாவது காரணம்: ஒவ்வொருவரும் தத்தம் தனி நன்மையை நாடிச் செல்வதால் மனிதர்களிடையே தோன்றும் பூசல். இரண்டாவது காரணம்: இன்பமில்லாதவைகளை இன்பம் எனக்கொண்டு மயங்குதல், இவைகள் வாழ்க்கையை வீணாக்கித் தெவிட்டுதலையும் துயரத்தையும் உண்டாக்குகின்றன. மூன்றாவது காரணம்: மரணம்.

சுய நலத்திற்காக மனிதர்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டு மோதிக்கொள்வது அர்த்தமற்ற செயல். ஒவ்வொருவரும் தம் நன்மைக்காகப் போராடுவதை மற்றவர்கள் நன்மைக்காகப் போராடுவதாக மாற்றிவிட்டால், பூசலே இராது. எத்தனையோ விஷயங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதால்தான் நாம் உலகில் வாழ முடிகிறது. தனி மனிதன் தன்னைப் பார்க்கிலும் மற்றவர்கள் நன்மையில் அதிக நாட்டம் கொண்டால் முதலாவது காரணம் தீர்ந்துவிடும்.

இரண்டாவது காரணம் இன்பங்களைப் பற்றிய மயக்கம். தனி இன்பத்தை மறந்து பிறர் இன்பத்தில் நாட்டங் கொள்ளும்பொழுது, மனிதனுடைய இன்பத் தேட்டம் மறைகிறது. மனிதனுடைய மிருக இயல்பைத் திருப்தி செய்து கொண்டிராமல், பகுத்தறிவு உணர்ச்சியின் விதிகளின்படி நடக்கும் பொழுது, மற்றவர்களுடைய வாழ்க்கைக்காகச் செயலாற்றும்படி நேருகிறது. அதுவே தனி மனிதனுக்கு இன்பமாம். ஆதலால், அவனுடைய துன்பம் குறைந்து மற்றவர்களிடத்தில் அநுதாபம் பெருகுகிறது. இதுவே அவன் இன்பத்திற்கு ஊற்றாகிறது.

மனிதனுடைய தனி வாழ்க்கையில் துன்பத்திற்கு மூன்றாவது காரணமா யிருப்பது மரணத்தைப் பற்றிய அச்சம். மனிதன் தன் மிருக இயல்பின் நன்மைக்காகப் பாடுபடுதலில் இன்பமில்லை என்பதையும், மற்றவர்களுடைய இன்பத்திலேயே தனக்கும் இன்பம் இருக்கிறது என்பதையும் காணும் பொழுது மரண பயம் தானாகவே ஒழிகிறது.

உடல் மரிக்கும் பொழுது வாழ்க்கையின் இன்பத்தை இழக்க வேண்டுமே என்ற பயத்திலிருந்து தான் மரண பயம் ஏற்படுகிறது. ஆனால், மனிதன் மற்றவர்களுடைய நன்மையிலேயே தன் இன்பம் இருக்கிறது என்று கருதினால்- தன்னை விட மற்றவர்களை நேசித்தால்-மரணம் என்பது இன்பத்தின் முடிவன்று என்பதையும் உணர்ந்து கொள்வான். தனக்காக மட்டும் வாழ்பவனுக்கே மரணத்தில் பயம் இருக்கும். ஒரு மனிதனின் மரணத்தால் மற்றவர்களின் நன்மையும் அழிந்துவிட மாட்டாது. பல சமயங்களில், அவன் தன் உயிரைத் தியாகம் தெய்வதால், மற்றவர்களுக்கு நன்மையே உண்டாகிறது.

உண்மையான இன்பம்

‘இதுவா வாழ்க்கை! இது துறவு, தற்கொலை!’ என்று சாதாரண மனித அறிவு கூறும்.

ஒவ்வொரு மனிதனுடைய இன்பமும் அளவில்லாமல் பெருக வேண்டுமானால், ஒவ்வொருவரும் எல்லோருடைய நன்மைக்காகவும் உழைக்க வேண்டும். எல்லோரும் ஒவ்வொருவருடைய நன்மைக்காகவும் உழைக்க வேண்டும். இந்த விதியின்படியே இன்பமடைய முடியும்’ என்று பகுத்தறிவு உணர்ச்சி கூறும்.

கொள்கை அளவில் இதை ஏற்றுக் கொண்டாலும், செயலில் இதைக் கடைப்பிடிக்க முடியாது என்று மனிதன் கருதுவான். ஆனால், அவன் பகுத்தறிவு உணர்ச்சி பின்கண்டவாறு அவனை இடித்துக் கூறும் : ‘நீ ஏதோ இன்பங்கள் என்று கருதுபவைகளை நீயாகத் தேடக்கூடாது. அவைகளை மற்றவர்கள் உனக்கு அளிக்க வேண்டும். இதற்கு மாறாக, நீயாக அவைகளைத் தேடிக்கொண்டால், இப்பொழுது ஏற்பட்டிருப்பதுபோல் தெவிட்டுதலும் துயரமும் ஏற்படும். மற்றவர்கள் உன்னை விடுவிக்கும் பொழுது தான் உனது கஷ்டம் நீங்கும்.

‘தனி மனிதனுடைய சுய நல ஆசையால் மற்றவர்களுடைய துவேஷம் ஏற்படுகிறது. எவ்வளவு அதிகமாய்ச் சுய நலத்தை நாடுகிறானோ, அவ்வளவு அதிகமாய்த் துன்பம் பெருகுகிறது. மரணத்திலிருந்து தப்பவேண்டு மென்று அவன் எவ்வளவு முயற்சிக்கிறானோ, அவ்வளவுக்கு அது அதிகப் பயங்கரமாகிறது.

‘மனிதன் வாழ்க்கையின் விதிப்படி நடக்காவிட்டால், அவன் எத்தனை முயற்சிகள் செய்தாலும் நன்மையடைய முடியாது. வாழ்க்கையின் விதி போட்டியும் பூசலும் அல்ல, எல்லா மக்களும் பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டும் என்பதே அவ்விதி.’

சுய நலத்தை விட்டுப் பிறர் நலத்திற்காக உழைக்கும்போது, அறிவுக்குப் பொருத்தமில்லாமலும் துன்பமாயும் விளங்கிய தன் முந்திய வாழ்க்கை, அறிவுக்குப் பொருத்தமாயும் இன்பமாயும் மாறுவதை மனிதன் காண்பான். மற்ற மனிதர்களும் ஜீவன்களும் தன்னைப் போலவே பிறர் நலத்திற்காக வாழ ஆரம்பித்தால், உலகம் முழுவதும் இன்ப மயமாக மாறும் என்பதை அவன் அறிந்து கொள்ள முடியும். அர்த்தமற்ற கொடுமை நிறைந்ததாக முன்னால் காணப்பட்ட உலகமே இப்படி மாறிக் காட்சி தரும். உலக வாழ்க்கை பற்றி ஆராய்ச்சிக்குப் பொருத்தன உண்மைப் பொருள் விளங்கும். உலக வாழ்க்கையின் இலட்சியம் ஒளியை நோக்கி முன்னேறுதல் என்பதும், சகல மக்களும், சகல உயிர்களும் ஐக்கியப்படுதல் என்பதும் தெளிவாகும்.

ஒவ்வொருவனும் தன்னை இழந்து மற்றவர்களுக்காக வாழும்போது, சமுதாயம் பகைமையும், சண்டையும் நீங்கி, சாந்தியும் இன்பமும் பெறுகின்றது. கொலையே தொழிலாய்க் கொண்டிருந்த போர் வீரர்கள் அதில் பெருமையில்லை என்று உணர்வார்கள். மக்களை அடிமைகளாக விலக்கு வாங்கித் துன்புறுத்தியவர்கள் அடிமைத்தனத்தை அகற்றுவார்கள். மிருகங்களைக் கொன்று வந்தவர்கள் அவைகளைக் கொல்லாமல் வளர்த்துவந்து அவைகளின் மாமிசத்திற்குப் பதிலாக அவைகளின் பாலைக் கறந்து பருகுவார்கள்.

சரித்திரமும் இந்த நிலைமைக்குச் சான்று கூறும் முற்காலத்தில் புகழ் பெற்ற பெரியோர்கள், நாம் இன்புறுவதை விட்டு, உலகம் இன்புறுவதிலே நாட்டங் கொண்டவர்கள். இன்றைக்கு ஒரு மனிதன் தன் பகுத்தறிவு உணர்ச்சிப்படி நடக்க ஆரம்பித்தால்' மனித சமூகத்தின் முந்திய வாழ்க்கையே அப்படித் தான் நடந்து வந்திருப்பதைத் தெரிந்து கொள்வான். எல்லாவற்றிற்கும் மேலாக அவனுடைய இதயமும் இதை ஏற்றுக் கொள்ளும். அன்பே இதயத்தின் பாஷை.

தன்னலமும் பிறர் நலமும்

வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதை ஆராய்ச்சி அறிவு, சிந்தனை, சரித்திரம், உள்ளுணர்ச்சி ஆகிய எல்லாம் வற்புறுத்துகினறன. ஆயினும் உலகத்தின் கோட்பாடுகளைக் கற்றறிந்த மனிதன் இதை நம்ப மறுக்கிறான்.

‘இது வாழ்க்கையையே துறப்பதாகும். நான் என் தனித் தன்மையை எப்படி இழக்க முடியும்? எனது நன்மையை நான் நாடுவது நியாயந்தானே?’ என்று நம் காலத்து நாகரிக மனிதன் கேட்கிறான்.

சாதாரண மனிதர்களான தொழிலாளர்கள், அறிவை அதிகமாக விருத்தி செய்துகொள்ளாதவர்கள், தங்களுடைய சுய நலங்களையே முக்கியமாகக் கொண்டு பாதுகாப்பதில்லை. இதற்கு நேர்மாறாக சுய நலத் தியாகம் செய்து, பெரும்பாலும் பிறருக்கு உதவுகிறார்கள். ஆனால் பணக்காரர்கள், படித்தவர்கள், நாகரிமானவர்கள் மட்டும் பகுத்தறிவு உணர்ச்சியின் தேவைகளை மறுத்துத் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வாதம் செய்கிறார்கள்.

படித்து, மெலிந்து சோம்பேறியாயுள்ள மனிதனே தன் தனி உரிமைகளைப் பிடிவாதமாய்ப் பிடித்துக் கொண்டிருப்பான். பசியுள்ள மனிதன், உண்பது அவசியம் என்று நிரூபித்துக்கொண்டிராமல், அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றும், அதை நிரூபிக்கவோ மறுக்கவோ முடியாது என்றும் கருதி, நேராக உண்ணச் செல்வான்.

ஏனெனில், படியாதவன் என்று கருதப்படும் சாதாரண மனிதன் தன் வாழ்க்கை முழுவதிலும் மெய்வருந்திப் பாடுபடுகிறான் ; தன் அறிவைப் புகைத்துக்கொள்ளாமல், பரிசுத்தமாகவும் உறுதியாகவும் வைத்துக் கொள்கிறான்.

இதற்கு மாறாகப் படித்த மனிதன், தன் வாழ் நாள் முழுதும் அற்பமான பயனற்ற விஷயங்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண் டிருப்பதோடு, மனிதன் இயற்கையாக அறிந்துகொள்ள வேண்டிய விஷயங் களுக்கு அப்பாலும் சிந்தித்துத் தன் அறிவைத் துர்விநியோகப்படுத்திவிடுகிறான். அவன் அறிவு சுதந்திரமா யிருக்கவில்லை. இதனால் தான் அது இயற்கையாகத் தேவையில்லாத விஷயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது ; தனி உரிமைகளைப் பற்றியும், அவைகளின் வளர்ச்சியைப் பற்றியும், அவைகளைத் திருப்தி செய்யவேண்டிய முறைகளைப் பற்றியுமே எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறது.

நாகரிக மனிதன் தன் தனி நன்மைகளை எண்ணாமல் இருக்க முடியாது. அவன் அந்த நிலைக்கு வந்திருக்கிறான். அவன் அறிவைக்கொண்டு தன் தேவைகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்கப் பார்க்கத் தேவைகள் அளவு கடந்து பெருகியிருக்கின்றன. உண்மையான வாழ்க்கையின் தேவைகள் எவை என்பதை அறிய முடியாமல் முந்தியவை அவன் கண்களை மறைக்கின்றன.

உண்பதற்கு உணவு, பருகுவதற்குப் பானங்கள், சுவாசிப்பதற்குக் காற்று, தசை நார்களுக்கும் நரம்புகளுக்கும் வேண்டிய தேகப் பயிற்சி, வேலை, ஓய்வு, விளையாட்டு, விஞ்ஞானம், கலை, மதம் என்று அவன் தேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குழந்தைப் பருவத்திலும், வாலிபத்திலும், நடுவயதிலும், வயோதிகத்திலும் எத்தனை எத்தனையோ தேவைகள் ஏற்படுகின்றன. இவைகளை யெல்லாம் விவரித்துக் கூற ஒரு வாழ்க்கையே போதாது. தேவைகளைப் பற்றி எண்ணமிடாம லிருந்தால்தான் அவைகளால் துயரம் ஏற்படாது. ஒரு தேவையைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தால், அது மிகப் பெரிதாகி, மற்றத் தேவை களை நசுக்கிவிட்டுத் தானும் நசுங்கிவிடும். இதனால் வேதனையே அதிகமாகும்.

மிருக இயல்பை அடக்கிவைத்தல்

சுயநலமான தன் தேவைகளையே ஒருவன் வற்புறுத்திக் கொண்டிருந்தால், மிருக வாழ்க்கையின் இயல்பே அவனை ஆட்கொண்டுவிடும். உண்மையான மனித வாழ்க்கை அவன் கண்ணுக்குப் புலப்படாது. நம் காலத்தில் நாம் வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? நாகரிகமான தேவைகளைப் பெற்றிருப்பவனே கண்யமான மனிதன் என்றும், மனித சமூகம் தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இன்பம் என்றும் நம் ஆசிரியர்களே போதிக்கிறார்கள். இந்தப் பாடத்தைக் கற்றவர்கள் பகுத்தறிவு உணர்ச்சியின் போதனைகளை எப்படிக் கவனிக்க முடியும்? அவர்களுடைய அறிவு முழுதும் தங்கள் தேவைகளைப் பெருக்கிக் கொள்வதிலேயே பயன்படுகிறது.

தனி மனிதனின் தேவைகள் அவனுடைய மிருக வாழ்க்கைக்கு உரியவை. மிருக இயல்பின் அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எளிது. ஆனால் மனிதன் தன் அறிவைக் கொண்டு இவைகளை ஆராய்ந்து பெருக்கிக் கொள்வதால், இவை எல்லை யில்லாமல் விரிவடைகின்றன. முறையான வாழ்க்கைக்குத் தேவையானவை எல்லாம் கிடைக்கக் கூடியவை. பறவைகளும் தாவரங்களும் கூட இவைகளைப் பெறுகின்றன. இந்த மிருக இயல்பையே வாழ்க்கை என்றும், இன்பம் என்றும் கொள்வதால் தான் மனிதனின் துயரம் அதிகரிக்கிறது. தேவைகளையே வாழ்க்கையின் இலட்சியம் என்று கருதுவதில் தான் தவறு ஏற்பட்டிருக்கிறது.

மனிதன் தன் தனிப் பண்பாட்டைத் துறக்க வேண்டியதில்லை. ஆனால் அதன் இன்பத்தை மட்டும் துறக்கவேண்டும். அதுவே வாழ்க்கை யென்று கருதவும் கூடாது. அவன் எதிர்பார்க்கும் இன்பம் கிடைக்க வேண்டுமானால், அவன் இதைத்தான் செய்யவேண்டும்.

தன் தனித் தன்மையே வாழ்க்கை என்று எண்ணுவது வாழ்க்கையின் அழிவு என்றும், உண்மையான வாழ்க்கையை அடைவதற்குத் தனி நலனைத் துறக்க வேண்டும் என்றும் மானிட சமூகத்தின் மகா ஞானிகள் ஆதிகாலத்திலிருந்தே போதித்து வந்திருக்கிறார்கள்.

‘இது பௌத்த தர்மமல்லவா! இது நிர்வாணம்’ [2] என்று இக்காலத்து மனிதர்கள் பதில் சொல்லுவார்கள். இப்படிச் சொல்லிவிட்டால், நாம் உண்மையை மறைத்துவிட முடியாது. தனி மனிதனின் வாழ்க்கை துயரமானது, பொருளற்றது என்பது உண்மையல்லவா ? தனி நலன்களுக்காக வாழ்க்கையைத் தத்தம் செய்தல் பயனற்று விபரீதமாக முடிகிறது. இதிலிருந்து தப்புவதற்குத் தனி நலன்களைத் தியாகம் செய்தலே சிறந்த வழி. பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை இவ்வாறு தான் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய மேதாவிகளும் இவ்வாறே அறிந்திருக்கிறார்கள்.

ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் ஓர் இந்து இக்காலத்து நாகரிக ஐரோப்பியர்களைவிட உயர்ந்தவன். தன் தனி நலனைத் துறந்து முக்தி பெறவேண்டும் என்று அவன் தவம் செய்கிறான். நாம் மிருகங்களின் வாழ்க்கைக்குத் திரும்பி யிருக்கிறோம்; இரும்புத் தண்டவாளங்களின்மீது உலகெங்கும் சுற்றுகிறோம். நம் மிருகத் தன்மையை மின்சார வெளிச்சத்தால் உலகிற்கு அறிவிக்கிறோம். அந்த இந்து வாழ்க்கையில் தனித் தன்மைக்கும் பகுத்தறிவு உணர்ச்சிக்கும் முரண்பாடு இருப்பதை அறிந்திருக்கிறான். அதை நீக்குவதற்கே அவன் தனக்குத் தெரிந்த முறையைக் கையாளுகிறான். நம் காலத்து நாகரிக மக்கள் இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ளவில்லை; முரண்பாடு இருப்பதாகக்கூட நம்பவில்லை.

தனி மனிதன் உயிரோடு இருப்பதுமட்டும் வாழ்க்கையாகாது என்ற உண்மையை மனித சமூகம் ஆயிரக் கணக்கான வருடங்களாக ஆராய்ந்து கண்டிருக்கிறது. மனிதன் மிருகம் அல்லன் என்று கருதுவோர்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். உலகம் உருள்வதும், பூமி ஆகர்ஷண சக்தியைப் பெற்றிருப்பதும் எவ்வளவு உண்மையோ, அவற்றைவிட அசைக்க முடியாத உண்மையாக இதைக் கருதுகிறார்கள். பாமரர்களும், பண்டிதர்களும், கிழவர்களும், குமரர்களும், குழந்தைகளும்- எல்லோரும் இதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார்கள். ஆபிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலுமுள்ள சில காட்டு மிராண்டிகளுக்கு மட்டுமே இது விளங்காமலிருக்கும். ஆனால் ஐரோப்பியத் தலை நகரங்களிலும், பட்டணங்களிலும் நல்ல செல்வத்தோடு வாழும் மனிதர்களுக்கும் இது விளங்கவில்லை. இவர்களும் காட்டு மிராண்டிகளாக ஆகிவிட்டார்கள்.

தனி மனிதன் உயிரோடு இருப்பதுதான் வாழ்க்கை என்ற கருத்தை மனித சமூகம் கைவிட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. இனி அதை மறுபடி மேற்கொள்ள முடியாது. மேலும் தனி மனிதனின் வாழ்க்கைக்கு அர்த்தமே யில்லை என்பதையும் மறக்க முடியாது. நாம் என்ன எழுதினாலும், பேசினாலும் எவைகளை யெல்லாம் கண்டு பிடித்தாலும், தனி வாழ்வை எவ்வளவு தான் செம்மைப்படுத்தினாலும், மனிதனுக்குத் தனி இன்பம் இல்லை என்ற அசைக்க முடியாத உண்மையை மறுக்க இயலாது.

பழைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உண்மையை நாம் மறுக்க வேண்டியதில்லை. அவைகளை மறுபடியும் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. ஆனால் நமக்கு வேண்டிய பாடங்களை அவைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது போலவே தனி மனிதன் இன்பமடைய முடியாது என்று வேதரிஷிகளும், புத்தரும், லாவோத்ஸேயும், ஸாலமனும், மற்ற ஞானிகளும் கண்டுபிடித்துக் கூறிய உண்மையிலிருந்து நமக்கு வேண்டிய பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.


  1. மிதி - ரோதையில் கால்கள் வைப்பதற்குப் படிகள் அமைந்திருக்கும். அந்தப் படிகளை மிதிப்பதால் ரோதை உருளும்.
  2. பௌத்தர்கள் கூறும் முக்தி நிலை.