வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/அன்பின் உதயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
7
அன்பின் உதயம்

பகுத்தறிவுள்ளவன் தன் தனி இன்பத்திற்காக வாழ்க்கையைக் கழித்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் அவனுக்கு எல்லாப் பாதைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பகுத்தறிவு உணர்ச்சி அவனுக்கு வேறு இலட்சியங்களையும் நோக்கங்களையும் எடுத்துக் காட்டுகிறது. இவ்விரண்டிற்கும் நடுவே அவன் திண்டாடித் துயருறுகிறான்.

மனிதன் ‘நான்’ என்று தன் மிருக இயல்பை கருதுகிறான். மற்றோர் இயல்பான பகுத்தறிவு உணர்ச்சியும் ‘நான்’ என்று சொல்லுகிறது. முதலாவது ‘நான்’ கீழ்த்தரமானது, இரண்டாவது ‘நான்’ உயர்வானதைக் குறிக்கிறது. மிருக இயல்பை ‘நான், என்று கொண்டால், உயிர் வாழ்வதிலும் இன்பங்களிலும் ஆசை ஏற்படுகிறது. ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. நிறைவேற்ற முயன்றால் துன்பமே ஏற்படுகிறது. பகுத்தறிவு உணர்ச்சியை ‘நான்’ என்று கொண்டால், உயிர் வாழ்வதில் ஆசை யில்லாமற் போகிறது. ஏனெனில், ஒருவன் தனக்கு மட்டும் இன்பம் தேடிக்கொண்டிருத்தல் அறிவீனம் என்று தெரிகிறது. இந்தக் குழப்பமான நிலைக்குத் தான் இக்காலத்துப் போலி ஆசிரியர்கள் நம்மைக் கொண்டு விடுகிறார்கள். இதனால் மனிதன், அறிவுக்குப் பொருத்தமில்லாத மிருக இயல்பைத் தள்ளி விட்டால், வாழ்க்கையில் வேறு எதுவுமே மிஞ்சவில்லை யென்று எண்ணுகிறான். உண்மை என்னவென்றால், தனி மனிதனின் தேவைகளை ஒதுக்கிய பின்பு மிஞ்சியிருப்பதே வாழ்க்கையாகிறது. ஒளி இருளில் பிரகாசிக்கிறது. ஆனால் இருள் அதை உணர முடியவில்லை.

ஆனால் நன்மையான மார்க்கம், சத்திய மார்க்கம் என்று கருதப்படும் ஆன்றோர்களின் போதனை உண்மையான வாழ்க்கையை முன்பே விளக்கிக் காட்டியிருக்கிறது. தனி நலனை நாடுதல் ஏமாற்றத்தில் முடியும் என்றும், உண்மையான நலனை, இவ்வுலகிலேயே. இப்பொழுதே, அடைய முடியும் என்றும் அது எடுத்துக்காட்டுகிறது. நவ நாகரிகத்தின் அபரிமிதமான தேவைகளால் மயக்கமடையாத சாதாரண மக்களின் உள்ளங்கள் தாமாகவே இந்த நன்மையை நாடிச் செல்கின்றன. மிருக வாழ்வின் நன்மைகளை எவ்வளவுக் கெவ்வளவு தியாகம் செய்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு இந்த நன்மை பெருகுகிறது.

வாழ்க்கையின் முரண்பாடுகள் எல்லாவற்றையும் தீர்த்துவைக்கும் உணர்ச்சியை எல்லா மனிதர்களும் அறிவார்கள் ; அதுவே மனிதனுக்கு எல்லையற்ற நன்மையை அளிக்கின்றது ; அதுதான் அன்பு.

மிருக இயல்பு பகுத்தறிவு உணர்ச்சியின் விதிக்கு அடங்கித் தொழில் செய்வதே வாழ்க்கை. அன்பு செய்தலே அறிவுக்குப் பொருத்தமான மனிதனின் தொழில். மிருக இயல்பு தன் நலனை நாடும் பொழுது, அறிவு அதைத் தடுத்து, அன்பு நெறியைக் காட்டுகிறது. அன்பு நெறியில் மற்றவர்களோடு போராட வேண்டியதில்லை; மரணத்தைப் பற்றிய பயம் முதலியவையும் இல்லை.

நன்மையான பாதைக்கு ஏற்ற ஒரே திறவுகோல் இந்த அன்பு உணர்ச்சிதான். மனிதனுக்கு இந்த ஒரு வழிதான் உண்டு. அன்புணர்ச்சி மனிதனை மற்றவர்களுக்காக வாழும்படி செய்கிறது. இதனால் மிருக இயல்பு துன்பமடைவது இயற்கையே, இந்தத் துன்பமும் இதற்குரிய பரிகாரமும் அன்பின் விளைவுகள். மிருக இயல்பின் நன்மையையே இலட்சியமாகக் கொண்டால், ஒவ்வொரு கணத்திலும், நாம் மூச்சு விடுந்தோறும், மரணத்தை நோக்கியே செல்கிறோம். மரணம் ஏற்படுமே என்ற பயம் வாழ்வு முழுவதையுமே பாழாக்கித் தனி மனிதனின் இன்பங்களைச் சிதறச் செய்கிறது. ஆனால் அன்புணர்ச்சியோ மரணபயத்தை ஒழிக்கிறது. மனிதன் மற்றவர்களுக்காகத் தன் உடலையே தியாகம் செய்யவும் தூண்டுகிறது.

வாழ்க்கையின் முரண்பாடுகள் அனைத்தையும் தீர்த்துவைக்கக்கூடிய ஆற்றல் அன்புக்கு உண்டு என்பதையும், அதுவே வாழ்க்கையின் இலட்சியத்தை அளிக்கக் கூடியது என்பதையும் ஒவ்வொரு மனிதனும் அறிவான். ஆனால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள், அன்பு இடையிடையே ஏற்படும் உணர்ச்சி என்றும், சிறிது காலத்திற்குப் பின் நீங்கிவிடுகிறது என்றும், பின்னால் மேலும் துன்பங்கள் பெருகிவிடுகின்றன என்றும் குறை கூறுவார்கள். இவர்களுக்கு அன்பு ஒன்றே வாழ்க்கையின் நியாயமான மலர்ச்சி என்று தெரிவதில்லை. மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுகிற எத்தனையோ ஆயிரம் விஷயங்களில் இதுவும் ஒன்று என்று இவர்கள் கருதுகிறார்கள்.

வாழ்க்கையை உணர்ந்தோரே அன்பை அறிவர்

ஒவ்வொரு மனிதனும் தன் குழந்தை, தன் மனைவி, தன் நண்பர்கள், தன் தேசத்தார் ஆகியவர்களை மற்றவர்களின் குழந்தைகள், மனைவியர், நண்பர், தேசத்தார்களைப் பார்க்கிலும் அதிகமாக விரும்புகிறான். இந்த விருப்பத்தையே அன்பு என்று கருதுகிறான். அன்பு என்பதற்குப் பொதுவாக நன்மை செய்தல் என்று பொருள். நான் என் குழந்தையையும், மனைவியையும், தேசத்தையும் நேசிக்கிறேன் என்றால், மற்றக் குழந்தைகள், ஸ்திரீகள், தேசங்களைப் பார்க்கிலும் அவர்களின் நன்மையையே அதிகமாக விரும்புகிறேன். ஆயினும் அவர்களிடம் மட்டுமே எனக்கு அன்பு இருக்கிறது என்பதில்லை. பொதுவாக மற்ற மனிதர்களையும் நான் நேசிக்கிறேன். இது போல்தான் மற்ற மனிதர்களும் தங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களின் நன்மைகளையே நாடுகிறார்கள். ஆனால், ஒருவரின் நன்மையை நாடும்பொழுது, மற்றவர்களுடைய நன்மை குறைகிறது ; சில சமயங்களில் மற்றவர்களுக்குத் தின்மையாகவும் முடிகிறது.

ஆகவே, இதிலிருந்து வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அன்புக்காக ஒருவன் வேலை செய்ய வேண்டும்? எந்த முறையில் செய்ய வேண்டும்? எந்த அன்பிற்காக மற்ற அன்பைத் தியாகம் செய்ய வேண்டும்? மனைவி, குழந்தைகள், நண்பர், தேசம் - இவர்களில் யாரிடத்தில் மிக அதிகமாக அன்பு செலுத்த வேண்டும்? அருமையான தாய் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டுமானால், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் அன்பைக் கெடுத்துக் கொள்ளாமல் முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவன் தன் சொந்த நலத்தைக் குறைத்துக் கொண்டால் தான் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். அவன் சொந்த நலத்தை எவ்வளவு குறைத்துக் கொள்ள வேண்டும் ? பிறர் நலத்திற்காக எவ்வளவு உழைக்க வேண்டும்?

அன்புணர்ச்சியை விளக்கமாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்தக் கேள்விகள் மிகவும் சாதாரணமானவை என்று தோன்றும். ஆனால், இவை தீர்க்க முடியாத கடினமான கேள்விகள்.

இவைகளைப் போன்றகேள்வியைத் தான் கிறிஸ்து பெருமானிடம், ‘எனது அண்டை வீட்டுக்காரன் யார்?’ என்று ஒரு வழக்கறிஞர் கேட்டார்.

‘உங்களைப் போலவே உங்கள் அண்டை வீட்டுக்காரர்களையும் நீங்கள் நேசிக்க வேண்டும்’ என்று பெருமானார் உபதேசித்தது யாருக்கும் எளிதில் விளங்கும். ஆனால், அதன் உட்பொருளை அறியாமல் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால், முதலில் அண்டை வீட்டுக்காரன் யார் என்று தெரிய வேண்டியிருக்கிறது.

மனிதன் சிலரையே தேர்ந்தெடுத்துக் கொண்டு அவர்களிடம் மட்டும் அன்பு செலுத்துவதாக வைத்துக்கொண்டாலும், அவன் ஒருவரை மட்டுமே நேசித்துக்கொண் டிருக்கவில்லை. அவன் தன் தாய், மனைவி, குழந்தை, தேசம், மற்ற மக்கள் எல்லோரையுமே நேசிக்கிறான். அன்பு என்பது வெறும் சொல்லன்று ; அது செயல். மற்றவர்களின் நன்மைக்காக நடைபெறுவது. ஆனால், இந்தச் செயலில் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. அதிக அன்புக்குப் பாத்திரமானவர்களையே நாம் முதலில் கவனிக்கிறோம் ; மற்றவர்களை அடுத்தபடியாகத்தான் கவனிக்கிறோம். பசியால் வாடும் ஒரு கிழவன் என்னிடம் வந்து, என் குழந்தைகளுக்காக நான் வைத்திருக்கும் உணவைக் கேட்கிறான். உணவை இப்போது வந்து கேட்கும் கிழவனுக்கு அளிக்க வேண்டுமா, அல்லது வைத்திருந்து பின்னால் குழந்தைகள் வரும்பொழுது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமா ? இத்தகைய கேள்விகள், ‘என் அண்டை வீட்டுக்காரன் யார்?’ என்ற கேள்வியைப் போன்றவை.

நான் யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிப்பது? மனிதர்களுக்கா தாய் நாட்டிற்கா, என் நண்பர்களுக்கா ? என் மனைவிக்கா, அல்லது என் தந்தைக்கா, அல்லது என் குழந்தைகளுக்கா ? அல்லது எனக்கா? நான் நன்றாயிருந்தால்தான் மற்றவர்களுக்கும் சேவை செய்ய முடியும் என்பதால், எனக்காக உழைப்பதும் அன்பு மார்க்கமாகிறது!

அன்புக்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று பின்னிக்கொண் டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றைச் செய்ய முடியவில்லை. பின்னால் எனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடை வேண்டியிருக்குமே என்ற கருத்துடன், இப்போது பனியில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு நான் உடையளிக்க மறுத்தால், இது போலவே மற்ற விஷயங்களிலும் எதிர்காலத்தைக் கருதி நிகழ் காலத்தை இழக்க வேண்டியிருக்கும். இது என்னையே நான் ஏமாற்றிக் கொள்வதாகும்.

எதிர்கால அன்பு என்பது கிடையாது. இப்போது நடைபெறும் செயலே அன்பு. நிகழ் காலத்தில் அன்பு காட்டாதவனிடம் அன்பே இல்லை என்று அர்த்தம்.

வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மனிதர்கள் அன்பு என்று சொல்வது, அவர்கள் தங்கள் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள் முதலியோரிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்வது, மனைவியர், மக்கள், நண்பர்கள் மூலம் தாங்கள் நன்மையடைய வேண்டும் என்று கருதுவதையே குறிக்கும். மிருக இயல்பின் நலனைக் கருதுவதாலேயே இந்த இடர்ப்பாடு ஏற்படுகிறது. இத்தகைய உணர்ச்சியை அன்பு என்று சொல்ல முடியாது. அன்பின் முக்கியமான குணம் பிறருடைய நன்மைக்காகச் செயல்புரிதலே.

அன்பு செலுத்துவதில் வேற்றுமை காட்டி ஒரு வரைப் பார்க்கிலும் வேறு சிலரிடம் அன்பு செலுத்தல் உண்மையான அன்பாகாது. அது காய்க்காத காட்டுமரம் போன்றது. அதில் உண்மையான அன்பை ஒட்டுப் போட்டால் தான் கனிகள் உண்டாகும்.

அன்பில் பாரபட்சம் கிடையாது. அதில் வேற்றுமை பாராட்டினால், நன்மைக்குப் பதிலாகத் தீமையே விளையும். ஆகவே மனைவி, மக்கள், நண்பர்கள் முதலியோரிடமும், விஞ்ஞானம், கலை, தேசம் முதலியவைகளிடமும் அன்பு செலுத்துவதாகச் சொல்வது, மனிதர்கள் தங்கள் மிருக வாழ்க்கையில் அநுபவிக்க விரும்பும் இன்பங்களையே குறிக்கும்.

சுயநலனைத் துறத்தலின் விளைவே

அன்பு மனிதன் தன் மிருக இயல்பின் நலனைத் துறக்கும் போது தான் அன்பு ஏற்பட முடியும்.

தன் மிருக இயல்புக்குத் தனி நலன் இல்லை என்பதை மனிதன் அறிந்து கொள்ளும் போது தான், அன்பு அரும்ப ஆரம்பிக்கும். அப்போதுதான், ஒட்டுப் போட்ட செடி வளர்வதுபோல், உண்மையான அன்பு என்னும் கனியளிக்கும் செடி, மிருக இயல்பாகிய பழைய காட்டுச் செடியோடு ஒட்டிக்கொண்டு, அதன் ஜீவசக்தியை யெல்லாம் தான் பயன்படுத்திக்கொண்டு வளம் பெற்று வளரும்; வளர்ந்து கனிகளை அளிக்கும். கனி அளிக்காத கிளைகள் வெட்டித் தள்ளப்படும் என்று கிறிஸ்து நாதர் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.

‘உயிரைப் பாதுகாத்துக் கொள்பவன் அதை இழப்பான். என் பொருட்டு உயிரைத் தியாகம் செய்பவனே அதைக் காத்துக்கொள்ள முடியும்’ என்ற கிறிஸ்துவின் உபதேசத்தைப் புரிந்து கொண்டு, தன் வாழ்க்கையிலும் அதன் உண்மையைக் கண்டு கொண்டவனுக்கே உண்மையான அன்பு என்ன என்பது தெளிவாகும்.

‘இந்த உலகில் தன் உயிரை வெறுப்பவனே நித்தியமான வாழ்வுக்கு அதைக் காத்துக் கொண்டவனாவான்’ என்று கூறியுள்ளதை உணர்ந்து கொண்டவனே உண்மையான அன்பை அறிவான்.

‘என்னைப் பார்க்கிலும் அதிகமாகத் தந்தையையும் தாயையும் நேசிப்பவன் எனக்கு உரியவனல்லன். எவன் என்னைப் பார்க்கிலும் மகனையும் மகளையும் நேசிக்கிறானோ, அவன் எனக்கு உரியவனல்லன். ‘ஏனெனில், உங்களை நேசிப்பவர்களை நீங்கள் நேசித்தால், அது அன்பன்று; உங்கள் பகைவர்களை நேசியுங்கள் ; உங்களை வெறுப்பவர்களை நேசியுங்கள்.’

தந்தை , மகன், மனைவி, நண்பர்கள் ஆகியோரிடம் கொள்ளும் அன்பினால் மனிதர் தங்கள் தனி நலன்களைத் தியாகம் செய்வதாக அநேக சாதாரணமாக எண்ணுவர். உண்மை அதுவன்று. மனிதர்கள் தங்கள் தனி வாழ்வின் தற்பெருமை வீணான என்று உணர்வதாலும், அவ் வாழ்வுக்கென்று தனி நலனை அடைய முடியாது என்றும் உணர்வதாலுமே தன்னலத் தியாகம் ஏற்படுகிறது. ஆகவே, தன்னலத் தியாகத்தின் மூலமே மனிதன் உண்மையான அன்பை அடைகிறான்; அதனால் தந்தை , மகன், மனைவி, குழந்தைகள், நண்பர்களை உண்மையாக நேசிக்க முடிகிறது.

நமக்கும் மேலாக மற்ற உயிர்களை நேசிப்பதே அன்பு-அதாவது நமது மிருக இயல்பின் தனி நலனுக்கு மேலாக அவைகளின் நலனை நாடுவதிலே அன்பு உதயமாகிறது.

பின்னால் சுயநலத்தை அடைவதற்காக இப்போது அதைத் தியாகம் செய்து வைத்தல் தேர்ந்தெடுத்த சிலரிடம் மட்டும் அன்பு செலுத்துவதைப் போன்றது. தன்னலத் தியாகமாக முதிர்ச்சி பெறாததை அன்பென்று சொல்லுதல் பொருத்தமன்று.

அன்பு என்பது உணர்ச்சியின் கொந்தளிப்பு என்றும், அது பகுத்தறிவை மறைத்துவிடும் என்றும் ஜனங்கள் எண்ணுவது சரியன்று. இதற்கு மாறாக, அன்பு பகுத்தறிவிலிருந்தே விளைவது; தெளிவானது; அமைதியான இன்ப நிலையே அதன் இயல்பு. குழந்தைகளுக்கும் பகுத்தறிவுள்ள பெரியவர்களுக்கும் இது இயல்பாயுள்ளது. எல்லா மக்களுக்கும் பரோபகரமான இந்த நிலை குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது; வயது வந்தவர்களுக்குத் தங்கள் சுயநலத் தியாகத்தின் அளவுக்குத் தக்கபடி ஏற்படுகிறது.

‘எல்லாம் எனக்கு ஒன்றுதான் ; எனக்காக எதுவும் வேண்டியதில்லை’ என்று மனிதர்கள் அடிக்கடி சொல்லக் கேட்கிறோம். இப்படிச் சொல்லும் பொழுதே, அவர்கள் மற்றையோரிடம் வெறுப்புக் கொண்டிருப்பதை நாம் அறிகிறோம். ஆனால், சுயநலமான ஒவ்வோர் ஆசையையும் அடக்கி, ஒரு நிமிஷ நேரமாயினும் ஒருவன் அந்த வாக்கியத்தை உண்மையாகவே மனத்திற்கொண்டு சொல்லிப் பார்க்கட்டும். அவனுடைய சுயநலத் தியாகத்தின் அளவுக்குத் தக்கபடி வெகு வேகமாக மற்றவரிடமுள்ள வெறுப்பு மறைந்துவிடும். பிறகு, எல்லா மக்களிடமும் பரந்து நிறையும் அன்பு இதுவரை அடைபட்டிருந்த அவன் உள்ளத்திலே பெருக ஆரம்பிக்கும்.

உண்மையில், தன்னைப் பார்க்கினும் மற்றவர்களை விரும்புதலே அன்பு; இப்படித்தான் நாம் அன்புக்குப் பொருள் கொள்கிறோம்; வேறு பொருள் கொள்ளவும் முடியாது. நமது அன்பின் அளவு, நம் சொந்த நலனை எவ்வளவு தியாகம் செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. தியாக விஷயத்தைக் கவனியாமலே, உலகில் அன்பைக் கணக்கிட்டுக் கூறுவது வழக்கமாயிருக்கிறது.

தன்னலத் தியாகத்திலேயே அன்பு தளிர்விடுகிறது. பொதுவான அன்பிலிருந்தே குறிப்பிட்ட சில மனிதர்களிடத்தும், அந்நியர்களிடத்தும், நண்பர்களிடத்தும் அன்பு தோன்றுகிறது. இத்தகைய அன்புதான் வாழ்க்கையின் உண்மையான நலன் ; இதுவே மிருக உணர்ச்சிக்கும் பகுத்தறிவு உணர்ச்சிக்குமுள்ள முரண்பாட்டைத் தீர்மானிக்கிறது. ‘தான்’ என்ற எண்ணத்திலிருந்து பிறக்கும் தன்னலத் தியாகத்தைத் தியாகம் செய்வதிலிருந்து ஏற்படாத அன்பு, அதன் பயனாக எல்லா மக்களின் நலனையும் நாடாத அன்பு, மிருக வாழ்வைச் சேர்ந்ததாகும். அன்பே இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய துன்பங்கள் துயரங்களைக் காட்டிலும், இந்தப் போலி அன்பினால் அதிகத் தீமைகள் விளையும்.

பாரபட்சமான அன்பு - சிலரிடம் மட்டும் அன்பு வைத்தல் - வாழ்வின் சிக்கல் எதையும் தீர்ப்பதில்லை. ஏனெனில், மனிதர் தங்கள் சுய நலத்திற்காக நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தை அது நிறுத்துவதில்லை; மரணத்திலிருந்தும் காப்பதில்லை. அதனால் வாழ்வு அதிக இருள்மயமாகிறது; வாழ்க்கைப் போராட்டம் அதிகரிக்கிறது. தனி மனிதனின் இன்ப வேட்கை பெருகுகிறது; மரணபயன் அதிகமாகிறது.

மிருக இயல்பே வாழ்க்கை என்று கொள்பவன் தன் மிருக இயல்பின் நன்மை அதிகரிப்பதற்குத் தேவையானவைகளைத் தேடுவதில் தன் நேரம் முழுவதையும் செலவழிக்கிறான்; செல்வங்களைத் தேடிப் பாதுகாக்க விரும்புகிறான்; தன் இன்பத்திற்காக மற்றவர்களுக்கு உதவிபுரிகிறான்; தன் நலத்திற்கு அதிகமாக உதவி செய்தவர்களுக்குத் தானும் அதிக உதவிகள் செய்கிறான். அவன் வாழ்க்கையே மற்றவர்களின் உதவிகளால் நடக்கும்போது, அவன் தன் வாழ்க்கையை எப்படித் தியாகம் செய்வான்?

அவன் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்வதற்கு, முதலாவது தான் மற்றவர்கள் மூலம் தேடி வைத்திருக்கும் பொருளைத் துறக்க வேண்டும்; அது முடியாத காரியம்; பிறகு தன்னோடு வாழும் மக்களில் எவர்களுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். ஆனால், அவன் அன்பு செலுத்துவதற்கு முன்னால், அதாவது பிறருக்கு நன்மை செய்வதற்காகத் தன்னைத் தியாகம் செய்வதற்கு முன்னால், அவன் வெறுப்பைக் கைவிட வேண்டும். அதாவது தீமை செய்வதை விட வேண்டும்; சிலரை மட்டும் குறிப்பிட்டு அன்பு செலுத்துவதையும் விட்டொழிக்க வேண்டும்.

அத்தகைய மனிதனின் நலன் அன்பினாலேயே ஏற்படும். செடியின் நலன் சூரியனின் ஒளியில் இருப்பதுபோல், அவன் நலன் அன்பில் இருக்காது. திறந்த இடத்திலுள்ள செடிதான் எந்தப் பக்கங்களில் வியாபித்து வளர வேண்டும் பாபிய. என்றோ ஒளி நல்லதா, வேறு நல்ல ஒளி கிடைக்கிறவரை காத்திருக்கலாமா என்றோ கேட்டுக்கொண்டிருப்பதில்லை. உலகெங்கும் பரவிக் கலந்துள்ள ஒளியை அது பெற்றுக்கொண்டு அதையே நோக்கி வளர்கிறது. இது போலவே சுய நலத் தியாகம் செய்தவன், மற்றவர்களிடமிருந்து தான் பெற்று வந்தவைகளில் எவற்றைத் திரும்ப அளிக்க வேண்டும் என்றோ எவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றே ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. ஆனால், தன்னை முழுவதும் அர்ப்பணம் செய்து, தன் கண்முன்பு தோன்றும் அன்புக்காக வாழ்க்கையைச் செலவழிக்கிறான். இதுத்தகைய அன்புதான் மனிதனுடைய அறிவின் இயல்புக்கு பூரணத் திருப்தி யளிக்கும்.

அன்பே உண்மையான
வாழ்க்கையின் செயல்முறை

ஒரு நண்பனுக்காக ஒருவன் தன் வாழ்க்கையை அளிப்பதே அன்பு. தன்னைத் தியாகம் செய்தலே உண்மையான அன்பு. ஒருவன் மற்றொருவனுக்காகத் தன் நேரத்தையும் வலிமையையும் அளிப்பதோடு அவனுக்காகத் தன் உடலை வாட்டி வருத்தியும், தன் உயிரையே அர்ப்பணம் - செய்தும் வந்தால் தான் நாம் அன்பென்று கொண்டாட முடியும். அத்தகைய அன்பிலேதான் அன்பினால் விளையும் இன்பத்தை நாம் காண்கிறோம். அத்தகைய அன்பு மக்களிடம் இருப்பதால் தான் உலகம் வாழ்கிறது.

தாய் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதில் அவைகளின் வளர்ச்சிக்காகத் தன்னையே அளித்து வருகிறாள். இது அன்பு. இது போலவே, மற்றவர்களின் நன்மைக்காக ஒரு தொழிலாளி தன் உடலை வருத்தி அரும்பாடுபட்டு உயிர்போகும் நிலைவரை உழைத்து வருதல், மற்றவர்கள் வாழ்வதற்காகத் தன்னையே அளிப்பதாகும். அவனுக்கும், எவர்களுக்காகத் தியாகம் செய்கிறானோ அவர்களுக்கும் இடையில் தியாகம் செய்வதற்குத் தடையாக எதுவும் இல்லாதிருந்தால் தான், இந்த அன்பு ஏற்பட முடியும். தாதியிடம் தன் குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் செய்யும் தாய் அதனிடம் அன்பு செலுத்த முடியாது; செல்வங்களைத் தேடி வைத்துக்கொண்டிருக்கும் மனிதனும் அன்பு செலுத்த முடியாது.

“தான் ஒளியிலிருப்பதாய்ச் சொல்லிக்கொண்டு, தன் சகோதரனை எவன் வெறுக்கிறானோ, அவன் இப்போதும் இருளில் தான் இருக்கிறான். தன் சகோதரனை நேசிப்பவன் ஒளியிலேயே இருக்கிறான். அவன் இடறி விழுவதற்குக் சந்தர்ப்பமே யில்லை. ஆனால், தன் சகோதரனை வெறுப்பவன் இருளிலேயே இருக்கிறான், இருளிலேயே நடக்கிறான், இருள் அவன் கண்களை மூடிவிட்டதால் அவன் எங்குச் செல்கிறான் என்பது அவனுக்குத் தெரியாது........ சொல்லால்; நாவால் மட்டும் நாம் அன்பு செலுத்தக் கூடாது, செயலில், உண்மையாகவே அன்பு செலுத்த வேண்டும். இதனால் நாம் உண்மையின் பக்கம் இருக்கிறோம் என்று நம் இதயத்தைத் திருப்தி செய்துகொள்ள முடியும்....... இதனால் நம்மிடம் அன்பு பரிபூரணமான நிலையை அடைகிறது; இதன் மூலம் தீர்ப்பு நாளன்று நாம் தைரியமாயிருக்க முடியும்; ஏனெனில், அவரைப் போல நாமும் இவ்வுலகில் இருப்போம். அன்பில் பயம் எதுவுமில்லை; உண்மையான அன்பு அச்சத்தை அகற்றுகிறது. ஏனெனில், அச்சம் துன்பந் தருவது : பயமுள்ளவன் அன்பில் பூரணனா யிருக்க முடியாது.”[1]

இத்தகைய அன்புதான் மனிதனுக்கு உண்மையான வாழ்வை அளிக்கிறது.

‘உங்கள் கர்த்தனான இறைவனை உங்கள் முழு இதயத்துடனும், ஆன்மாவுடனும், உள்ளத்துடனும் நேசிக்க வேண்டும். இதுவே முதலாவதும் முதன்மையானதுமான கட்டளை.’

இரண்டாவது உபதேசமும் இதைப் போன்றது. ‘உங்கள் அண்டை வீட்டுக்காரரையும் உங்களைப் போல் நேசியுங்கள்’ என்று கிறிஸ்துவிடம் வழக்கறிஞர் கூறினார். இதற்குக் கிறிஸ்து நாதர், ‘சரியாகப் பதில் சொன்னீர்கள் : இந்தப்படி செய்யுங்கள்-கர்த்தனையும், உங்கள் அண்டை வீட்டுக்காரரையும் நேசியுங்கள். நீங்கள் வாழ்வடைவீர்கள்!’ என்று மறு மொழி கூறினார்.

உண்மையான அன்பே வாழ்க்கை ; அன்புடையோனே வாழ்பவன்.

கிறிஸ்து நாதரின் கொள்கைப்படி, அன்பே வாழ்க்கை. அவ் வாழ்க்கை அறிவுக்குப் பொருத்தமில்லாத, துயரம் நிறைந்த அழியும் வாழ்க்கையன்று ; ஆனால், நித்தியமான இன்ப வாழ்க்கையாகும். அன்பு அறிவினால் கற்பனை செய்யப் பெற்றதன்று ; அது ஒரு செயலின் விளைவன்று ; அதுவே செயலாகும், நம்மைச் சூழ்ந்துள்ள வாழ்வின் மிகவும் இன்பகரமான செயல் அன்பே. குழந்தைப் பருவத்திலிருந்து நாம் இதை உணர்ந்திருக்கிறோம். ஆனால், பின்னால் உலகின் போலிப் போதனைகளால் இதை நாம் உணர முடியவில்லை. குழந்தைப் பருவத்தில் இன்பகரமான இந்த உணர்ச்சி நம்மைச் சுற்றியிருக்கும் சகலரையும் தந்தை, தாய், உடன்பிறந்தோர், நல்லவர்கள், கெட்டவர்கள், பகைவர்களோடு, நாய், குதிரை, புல்லின் பசுமையான இதழ் ஆகியவைகளைக்கூட நேசிக்கும் படி செய்திருக்கிறது. எல்லோரும் நன்றாயிருக்க வேண்டும், எல்லோரும் இன்பமாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்து கொள்ளும்படி நம்மைச் செய்வித்திருப்பதும் இதுதான். எல்லோரும் இன்பமாயும் திருப்தியாகவும் இருப்பதற்காக நம்மையே தியாகம் செய்வதுதான் அன்பு. இதில் தான் மனித வாழ்க்கை இருக்கிறது.

இந்த அன்பு மனித ஆன்மாவில் தளிர்விட்டு வளரும் பொழுது, இதைச் சுற்றி வேறு காட்டுச் செடிகளும் வளர்கின்றன. அவைகளையே அன்பென்று கொண்டு நாம் உண்மையான அன்புச் செடியை வாடி மடியவிட்டு விடுகிறோம். அன்பு குருத்துவிட்டு வளரும்போது, மிகவும் மென்மையான செடியா யிருக்கும். அதைப் பலமாகப் பிடித்து அழுத்தி, ‘இதோ அன்பைக் கண்டுபிடித்து விட்டோம்! அன்பு! அன்பு!’ என்று கூவி அதைக் கசக்கிவிடக் கூடாது. அது மலர்ச்சி பெற்று முதிர்ந்தால் தான் வலிமை பெறும். மனிதர்கள் அதைக் கெடுத்து விடுகின்றனர். அதற்குத் தேவையானது அறிவுச் சூரியனின் ஒளிதான் அதனாலேயே அது வளர்ச்சி பெறுகிறது.

முடியாத முயற்சிகள்

மிருக வாழ்க்கை வெறும் தோற்றம். மாயை என்பதையும், உண்மையான அன்பு நிறைந்த வாழ்க்கையையும் மனிதன் கண்டு கொள்ளும் பொழுது, அவனுக்கு நன்மை உண்டாகிறது. இந்த நன்மையை அடைய மனிதன் என்ன செய்ய வேண்டும் ? சுயநல வாழ்வில் மனிதன் ‘நான்’ என்று கருதும் தனித் தன்மை நாளுக்கு நாள் அழிந்து மரணத்தையே அடைகிறது. இவ்வாறு அழியக்கூடிய மிருக வாழ்வுக்காகவும், ஆசைகளைத் திருப்தி செய்வதற்காகவுமே வாழ்ந்து வரும் மனிதர் வாழ்க்கையின் ஒரே நன்மையான அன்பைப் பெறமுடியாமல் இழக்கின்றனர்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத இந்த மனிதர், தங்கள் வாழ்க்கை முழுதும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடுவதிலும், இன்பத்தை நாடுவதிலும், துன்பத்தை நீக்குவதிலும், தங்களால் தவிர்க்க முடியாத மரணத்தை விலக்குவதிலும் கழிக்கிறார்கள்.

ஆனால், இன்பத் தேட்டம் வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்துகிறது ; துன்ப உணர்ச்சியைப் பெருக்குகிறது; மரணம் நெருங்கி வருவதை அதிகப் பயங்கரமாக்குகிறது. மரணம் நெருங்கி வருவதை மறைத்து வைத்துக்கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது இன்பத்தை இடைவிடாது அதிகப்படுத்திக் கொண்டே வரவேண்டும். ஆனால், இன்பத்தின் பெருக்கம் தன் எல்லையை அடைந்ததும், தேங்கி நின்றுவிடுகிறது; மேலும் மேலும் பெருக்க முடியாத இன்பம் வேதனையாக மாறுகிறது. இந்த வேதனை உணர்ச்சியும் மரண பயமுமே அதிகரித்து வருகின்றன. நாம் ஒரு விஷமச் சக்கரத்துள் அகப்பட்டுக் கொள்கிறோம்; ஒன்று மற்றொன்றுக்குக் காரணமாகிறது. ஒன்று மற்றொன்றை வளர்க்கிறது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத மனிதர் செல்வங்களை அநுபவித்து இன்பமடைய வேண்டும் என்று கருதுகின்றனர். இந்தச் செல்வங்களை எல்லா மக்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க முடியாது. எனவே, ஒருவர் மற்றவர்களிடத்திலிருந்து இவைகளைப் பறித்துக் கொள்ளவேண்டி யிருக்கிறது. பலாத்காரத்தாலும் கேடு செய்வதாலுமே இவைகளைப் பறிக்க முடியும். இந்த வழியில் பிறர் நலம் பேணுதல் அறவே ஒழிகிறது. அதிலிருந்து வளரக்கூடிய அன்பும் தோன்ற முடிவதில்லை. ஆகவே, இன்பங்கள் அன்புக்கு நேர் எதிரானவை. அவை பெருகப் பெருக, அன்பு குறையும்; அவை வலிமை பெற்று வளர்வதற்குத் தக்கபடி, அன்பு நலிந்து கொண்டே வரும். இதனால் மனிதன் தான் அடைய வேண்டிய ஒரே நன்மையான அன்பை அடைய முடியாமற் போகிறது. மிருக வாழ்க்கையின் நலன் என்பது ஒரு பூஜ்யம். அதை எத்தனை எண்களால் பெருக்கினாலும் முடிவு பூஜ்யமாகவே இருக்கும். இக்காலத்து மக்கள் தாங்கள் பெற்றுள்ள போதனைகளால் இந்த உண்மையை உணர முடியாமல் இருக்கிறார்கள்.

மனிதனுக்குப் புறம்பாகவுள்ள நிலைமைகளால் இன்பம் ஏற்படாது. ஒவ்வொரு மனிதனுடைய மிருக இயல்பும் ஒரே மாதிரியான துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. ஸ்தூல வாழ்க்கையில் உடல் வாழ்க்கையில் - ஒருவரைவிட ஒருவர் அதிக இன்பம் பெறுதல் இயலாத காரியம். ஓர் ஏரியில் தண்ணீர் எந்த இடத்திலும் ஒரே மட்டத்தில் நிலையாக நிற்கும்; ஓரிடத்தில் உயர்ந்தும் மற்றோரிடத்தில் தாழ்ந்தும் இருப்பதில்லை. இதைப் போன்ற ஒரு சட்டமே மக்கள் வாழ்க்கையை ஆட்சி செய்கிறது. தண்ணீர் மட்டத்தை உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும்படி செய்ய முடியாதது போல், மனிதர் ஒருவரைப் பார்க்கிலும் ஒருவர் அதிகமாக இன்பமடையவும் முடியாது.

உலகத்தில் ஓர் ஏழைத் தொழிலாளி, அல்லது ஒரு நோயாளி துன்பத்தால் அழிவுறுவதைப் பார்த்து, மனிதர் தாங்கள் செல்வத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருந்தால் இன்பமாக வாழலாம் என்று எண்ணுகின்றனர். வமிச பரம்பரையாக இத்தகைய எண்ணம் ஏற்பட்டு வருகிறது. ஆயினும், மக்களுடைய இதயங்களில் பகுத்தறிவின் குரலையும், அன்பின் ஒளியையும், அறவே ஒழித்துவிட முடிவதில்லை. அறிவோடும் அன்போடும் பொருந்திய வாழ்க்கை சாத்தியமாயிருப்பினும், அதை மறந்து விட்டுப் பெரும்பாலான மக்கள் அல்லற்படுகிறார்கள். ஒரு கட்டடத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளும்பொழுது, அதிலுள்ள ஆடுகளை வெளியேற்ற முயற்சி செய்கையில், அவைகள் தங்களை நெருப்பிலே தள்ளிவிடக்கூடும் என்று எண்ணித் தங்கள் முழு பலத்துடன் வெளியேற மறுப்பது போலவே இவர்களுடைய நிலை இருக்கின்றது.

மரண பயத்தினாலேயே மனிதர் மரணத்தை விட்டுத் தப்ப விரும்பவில்லை ; துன்பத்தைக் கண்டு பயந்து, அவர்கள் துன்பத்திலேயே ஆழ்ந்துவிடுகிறார்கள். இதனால் உண்மையான வாழ்க்கை நலனையும் அவர்கள் இழக்கிறார்கள்.


  1. பரி. யோவானின் சுவிசேஷம்.