வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/வாழ்வும் மரணமும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
8
வாழ்வும் மரணமும்

சத்தியத்தின் குரல், ‘மரணம் கிடையாது!’ என்று மனிதர்களுக்குச் சொல்லுகிறது. இயேசுவும் இதையே சொன்னார் : ‘நானே வாழ்வும், மறு பிறப்பும்; என்னிடம் நம்பிக்கையுள்ளவன் இறந்தவனாயினும் அவன் வாழ்பவனாவான். எவர்கள் வாழ்க்கையிலிருந்து கொண்டே என்னிடம் நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் ஒருபோதும் மரிப்பதில்லை.’.......

‘மரணம் கிடையாது’ என்றே உலகின் மாபெரும் ஞானிகள் கூறியுள்ளார்கள். இப்போதும் கூறுகிறார்கள். வாழ்க்கையின் பொருளை அறிந்த லட்சக்கணக்கான மனிதர்களும் அதையே சொல்லுகிறார்கள். அதைத் தங்கள் வாழ்க்கையின் மூலம் மெய்ப்பிக்கிறார்கள். உயிர் வாழும் ஒவ்வொரு மனிதனும், உணர்ச்சி தெளிவாயுள்ள நேரத்தில், அதையே தன் அந்தராத்மாவில் உணர்கிறான். ஆனால், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள் மரணத்தை எண்ணிப் பயப்படாமல் இருக்க முடியாது. மரணத்தை அவர்கள் பார்க்கிறார்கள் ; அதை நம்புகிறார்கள்.

இந்த மனிதர்கள், ‘மரணம் இல்லையா! இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்! மரணம் நம் கண் முன்பு இருக்கிறது; கோடிக் கணக்கான மக்களை அது அரிந்து தள்ளிவிட்டது. நம்மையும் அப்படியே அரிந்து தள்ளிவிடும்! நீங்கள் என்ன சொன்ன போதிலும், அது இங்கே இருக்கிறது!’ என்று ஆத்திரத்தோடும் கோபத்தோடும் கூவுவார்கள். பைத்தியம் பிடித்தவன் கற்பனை உருவங் ளைக் கண்டு அஞ்சுவது போல், அவர்கள் மரணத்தைக் கண்டு நடுங்குகிறார்கள். பைத்தியக்காரன் தான் பயப்படும் உருவத்தைத் தொட்டுப் பார்த்ததில்லை. அதுவும் அவனைத் தீண்டியதில்லை. ஆயினும், அவன் மனக் கற்பனையால் திகில் ஏற்பட்டு அவனுக்கு வாழ்க்கையே இல்லாமற் செய்து விடுகிறது. மரணத்தைப் பற்றிய விஷயமும் இப்படித்தான். மனிதன் தன் மரணத்தைப் பற்றி அறியான்; அறியவும் முடியாது. அது அவனைத் தீண்டியதில்லை; அதன் நோக்கங்கள் என்ன என்பதும் அவனுக்குத் தெரியாது. பின் அவன் எதற்காகப் பயப்படுகிறான் ? தன்னை அது பிடித்துக் கொள்ளவில்லை. எனினும், நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும் என்று கருதியே அவன் பயப்படுகிறான்.

பூத உடல் அழிவதைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்த பின்னும், நம் உடல்களிலும் அந்த மாற்றம் ஏற்படுவதில் பயங்கரமான விஷயமோ, வெறுக்க வேண்டிய விஷயமோ என்ன இருக்கிறது ?

நான் மரிக்கத்தான் செய்வேன். இதில் பயங்கரம் என்ன இருக்கிறது? உடலின் வாழ்வில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளை யெல்லாம் கண்டு நான் அஞ்சவில்லை. இன்னும் ஏற்படாத இந்த ஒரு மாறுதலை மட்டும் எண்ணி, நான் ஏன் அஞ்ச வேண்டும்? இந்த மாறுதல் சரியானது என்றே என் அறிவும் அனுபவமும் ஒப்புக் கொள்கின்றன. இதில் எனக்குப் புரியாத விஷயம் ஒன்றுமில்லை ; பல தடவை நான் இதைக் கண்டு இது இயற்கை என்று என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். மிருகங்களும், மனிதர்களும் மரித்தல் அவசியம் என்றும், பல சமயங்களில் வாழ்க்கையில் அதுவும் ஒரு நன்மை என்றும் கருதி வந்திருக்கிறேன். பிறகு அதில் என்னதான் பயங்கரம் இருக்கிறது ?

வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சிக்குப் பொருத்தமான இரண்டு அபிப்பிராயங்களே இருக்க முடியும். ஒன்று தவறானது; இதன்படி பிறப்பிலிருந்து மரணம் வரை என் உடலில் ஏற்படும் அவஸ்தைகளே வாழ்க்கை. மற்றது உண்மையானது ; அதன்படி வாழ்க்கை என்பது நான் என்னுள்ளே அதைப் பற்றிக் கொண்டுள்ள உணர்ச்சியே. இவ்விரண்டில் ஒன்று தவறானது; மற்றது உண்மையானது. ஆனால் இரண்டும் ஆராய்ச்சிக்குப் பொருத்தமானவை. மனிதர் தமக்குப் பிடித்ததை வைத்துக்கொள்ளலாம். ஆனால், இரண்டிலும் மரண பயத்திற்கு இடமில்லை.

முதலாவது கருத்து, உலகம் தோன்றிய நாள் முதலே இருந்து வருவது. அதைச் சுருக்கமாக இவ்வாறு குறிப்பிடலாம்: ‘காலத்திலும் இடத்திலும் தோன்றும் சடப்பொருளில் அடங்கியுள்ள சக்திகள் செயற்படும்போது உயிர் தானாகத் தோன்றுகிறது. நமது பிரக்ஞை அல்லது உணர்ச்சி என்று நாம் கூறுவது வாழக்கையன்று. அந்த உணர்ச்சியில் வாழ்க்கை இருப்பதாகத் தோன்றுவதற்குக் காரணம் ஐம்புலன்களால் ஏற்படும் மயக்கமே. சில நிலைமைகள் ஏற்படும்போது அந்த உணர்ச்சி என்ற அனற்பொறி சடப்பொருளில் தென்படுகிறது. அந்தப் பொறி சுடர்விட்டு எரிந்து, பிறகு குறைந்து, முடிவில் முற்றிலும் அணைந்து விடுகிறது. உயிரும் பிரக்ஞையாகிய உணர்ச்சியும் சடத்திலிருந்து தோன்றியவையே. பின்னால் சடப்பொருள் மாறும்போது, இவைகளும் ஒன்றுமில்லாமல் அழிந்து விடுகின்றன. சடமே மறுபடி வேறு உருவத்தில் மிஞ்சுகிறது. குறிப்பிட்ட ஒரு நிலையில் சடப்பொருள் தானாக உயிர் பெற்று இயங்குவதால் உயிர் என்பது சடத்தின் ஒரு நிலையே யாகும்.’ இந்தக் கருத்து ஆராய்ச்சிக்கு முற்றிலும் பொருந்தியதுதான்.

வாழ்க்கையைப் பற்றிய மற்றக்கருத்து வருமாறு: உயிர் என்பது நான் என்னிடத்திலேயே கண்டு உணர்வதுதான். நான் எப்படியிருந்தேன் என்றோ, எப்படியிருப்பேன் என்றோ எண்ணாமல், இப்போது நான் உள்ள நிலையில் எனது உயிரைப்பற்றி எனக்கு உணர்ச்சி யிருக்கிறது. இந்த உயிருக்கு ஆரம்பமுமில்லை; அந்தமுமில்லை. நான் உயிரைப் பற்றிக் கொண்டுள்ள உணர்ச்சியுடன் காலமும் இடமும் சம்பந்தப்படவில்லை. ஆனால், காலத்திலும் இடத்திலும் என் உயிர் தோற்றமளிக்கிறது. ஆனால், நான் அறிந்துள்ள உயிர் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டது. உயிரைப் பற்றிய உணர்ச்சி மயக்கமானதன்று, காலத்திலும் இடத்திலும் தோற்றமளிக்கும் பொருளே மாயை. ஆகவே, காலத்திலும் இடத்திலும் உடல் வாழ்தல் தீர்ந்துபோவது, அதாவது மரணம் - உண்மையானதன்று. அது என் உண்மையான வாழ்க்கையைத் தடுத்து நிறுத்தவோ அதில் சலனங்களுண்டாக்கவோ முடியாது. இந்தக் கருத்துப்படி மரணம் இல்லை என்று ஏற்படுகிறது.’

மேலே கூறிய இரண்டு கருத்துக்களின் படியும் மரணத்தைப் பற்றிய பயமில்லை என்று ஏற்படுகிறது. முதல் கருத்துப்படி மரணம் சடப்பொருளில் ஒரு மாறுதல் தான். இரண்டாவது கருத்துப்படி உயிருக்குத் தோற்றமோ, அழிவோ இல்லை; அது நித்தியமானது. தோற்றமும் அழிவும் - சடப்பொருளான உடலுக்கே. எனவே, மனிதன் மிருக இயல்பைக் கருதினாலும், பகுத்தறிவு உணர்ச்சியைக் கருதினாலும், அவன் மரணத்திற்கு அஞ்சுவதற்கு இடமேயில்லை. மிருகத்திற்கு உயிர் இருப்பதான உணர்ச்சி கிடையாததால், அது மரணத்தைப் பார்ப்பதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் உயிரைப்பற்றிய உணர்ச்சி பெற்றிருப்பதால், மிருக உடல் மரிப்பது இயற்கையான, இடைவிடாத சடத்தின் உருமாறுதலைத் தவிர வேறில்லை என்று அறிவான். மனிதன் தான் அறியாத மரணத்திற்காக அஞ்சவில்லை; ஆனால், அவனுடைய மிருக வாழ்வும் பகுத்தறிவு வாழ்வுமே தெரிந்துள்ள வாழ்க்கையைக் கண்டு தான் அவன் அஞ்சுகிறான். கோளாறுள்ள மனத்திற்குப் பயங்கர உருவங்கள் தோன்றுவதுபோலவே, மரணத்தைப் பற்றிய பயமும் வாழ்க்கையின் முரண்பாட்டினால் ஏற்படுவதுதான்.

‘நான் தீர்ந்துபோவேன். எனக்கு மரணம் நிச்சயம். எனது வாழ்க்கை என்று சொல்லக்கூடிய எல்லாம் மாண்டுவிடும்’ என்று ஒரு குரல் மனிதனுக்கு அறிவுறுத்துகிறது. ‘நான் இருக்கிறேன்; நான் மரிக்க முடியாது; மரிக்கவும் கூடாது’ என்று மற்றொரு குரல் அறிவுறுத்துகிறது.

பயம் மரணத்திலன்று; வாழ்க்கையிலுள்ள முரண்பாட்டிலேயே இருக்கிறது. பின்னால் வரக்கூடிய மரணத்திற்கு மனிதன் அஞ்சுகிறான் என்றால், இப்போதுள்ள மரண நிலையை அவன் பின்னால் ஒத்திப்போட்டுப் பார்த்து அஞ்சுகிறான் என்றே பொருள்படும். மரணத்தைப் பற்றிய எண்ணத்தால் அவன் பயப்படவில்லை. எத்தகைய வாழ்க்கையை அவன் பெறவேண்டும் என்று விரும்புகிறானோ அதைப் பெறுவதற்காகவே பயப்படுகிறான். கல்லறைக்குள் இருப்பவன் மீண்டும் உயிர் பெற்றால், ‘உயிர் இருக்கிறது. ஆனால், நான் மரணத்திலிருக்கிறேன்; இங்கே மரணம் இருக்கிறது!’ என்று கூறுவது போலவே அவன் உணர்ச்சியும் இருக்கிறது. எது இருக்கிறதோ, எது இருக்க வேண்டுமோ, அது அழிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. மானிட உள்ளம் வழி தவறிவிடுகிறது; பயத்தால் நடுங்குகிறது. மரண பயம் உண்மையிலேயே மரணத்தைக் கண்டு ஏற்படும் பயமில்லை என்பதற்கு முதன்மையான உதாரணம், மனிதர் பயத்தினால் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்வதைக் கூறலாம். இதனால், அவர்கள் உண்மையான மரணத்திற்கு அஞ்சவில்லை என்பதும், போலி வாழ்க்கையையே அஞ்சுகின்றனர் என்பதும் தெளிவாம்.

தங்கள் வாழ்வு முடிந்தது என்று மக்கள் அஞ்சவில்லை. ஆனால், உடலின் அழிவு அவர்கள் பெற்றிராத உண்மையான வாழ்க்கையின் அவசியத்தையே எடுத்துக் காட்டுகிறது. மக்கள் மரணம் என்பது இருள், ஒன்றுமில்லாத சூனியம் என்று கருதுவதாலே அதற்கு அஞ்சுகிறார்கள்; இருளையும் சூனியத்தையும் மட்டுமே அவர்கள் காண்பதற்குக் காரணம், அவர்கள் உண்மை வாழ்க்கையைக் காணாமையே.

மரணத்தைப் பற்றிய பயங்கரங்கள் வெறும் கற்பனையைத் தவிர வேறில்லை. தைரியமாக இவைகளைப் பற்றிச் சிந்திக்கும் மனிதர்களுக்கு உண்மை விளங்கி விடும்.

‘நான்’ என்று கருதி வந்த உடல் மண்ணில் மறைந்து மண்ணாய்ப் போய்விடுமே என்பது தான் மரண பயம். உண்மையில் ‘நான்’ என்பது எது ? என் உடலையே ‘நான்’ என்று பல ஆண்டுகளாக நான் எண்ணி வந்திருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் எப்பொழுதாவது ஒரு நேரத்தில் ‘நான் யார்?’ என்று என்னையே கேட்டுக் கொண்டால், என்ன பதில் கூறுவேன்? ‘சிந்தனை செய்து உணரக்கூடிய தன்மையுள்ளவனே நான்' என்று பதிலுரைப்பேன். இதன் பொருள் என்ன? எனக்கு மட்டும் சிறப்பாகவுள்ள ஒரு முறையில் உலகத்தோடு சம்பந்தப்பட்டவன் நான். நான் எங்கு, எப்பொழுது தோன்றினேன் என்பதையும், எங்கு, எப்பொழுது சிந்திக்கத் தொடங்கினேன் என்பதையும் பற்றி எனக்கு நிச்சயமாக எதுவும் தெரியாது. நான் உயிரோடு இருக்கிறேன் என்பதையும், நான் இருக்கும் உலகத்தோடு எனக்குச் சம்பந்தமுண்டு என்பதையும் என் பிரக்ஞை எனக்குக் கூறுகிறது. என் பிறப்பு, வளர்ப்பு, இளமை, முதலியவைபற்றி எனக்கு அநேகமாக எதுவும் நினைவிலில்லை. வாழ்க்கையைப் பற்றி ஏதாவது நினைவுக்கு வந்தாலும், அது மற்றொருவருடைய வாழ்க்கையைப் பற்றி எண்ணுவது போலவே இருக்ககிறது. எனவே, எனது வாழ்க்கை முழுதிலும் ‘நான்’ என்பது ஒரே நானாக இருக்கவில்லை. என் உடல் எந்நேரத்திலும் மாறிக்கொண்டேயிருக்கிறது. உடல் முழுதும் ஒவ்வொரு பத்து வருட காலத்தில் பூரண மாற்றமடைகிறது. பழைய உறுப்புக்களில் எதுவும் இப்போதில்லை; தசை நார்கள், எலும்புகள், மூளை முதலிய யாவும் மாறிவிட்டன. இப்படிப் பூரணமாக மாறிவிட்ட உடலா ‘நான்?’ இந்த மாற்றங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே, தான் மட்டும் மாறாமலிருக்கும் ஒன்றுதான் ‘நான்.’ இதனால் தான் உடல் மாறி வரினும், சிறு வயது முதல் பல உடல்கள் ஏற்பட்டுவரினும், நான் ஒரே உடலைப் பெற்றிருப்பதாகக் காண முடிகிறது.

இப்படிக் காண்பது உள்ளேயுள்ள உணர்ச்சியால் சாத்தியமாகிறது. இந்த உணர்ச்சியாவது தொடர்ச்சி அறாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து வருகிறதா? உறக்கத்தில் சில சமயங்களில் உணர்ச்சியே அற்றுப்போகிறது. தினந்தோறும் உறங்கும்போது உணர்ச்சியற்றும், விழிக்கும்போது அது புதுப்பிக்கப்பட்டும் வருகிறது. இந்த உணர்ச்சி நின்று போனதும், உடல் மடிந்து அழிவுறும் என்று தோன்றுகிறது. ஆனால், இயற்கையான உறக்கத்திலோ, செயற்கையாக மருந்துகளால் ஏற்படும் உறக்கத்திலோ, அப்படி நடப்பதில்லையே!

உணர்ச்சியும் ஒரேயடியா யில்லாமல் உடலைப் போல் மாறிக்கொண்டே வருகிறது. மூன்று வயதுக் குழந்தையா யிருந்தபோது நான் பெற்றிருந்த உணர்ச்சி அறவே மாறி, இப்போது வேறு புதிய உணர்ச்சியைப் பெற்றிருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னால் முற்றிலும் வேறான உணர்ச்சியை பெற்றிருந்தேன். எனவே, வாழ்க்கை முழுவதும் உணர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை; ஒன்றுக்கு மேலான பல உணர்ச்சிகள் வெவ்வேறு சமயங்களில் தோன்றியிருக்கின்றன.

ஆயினும், ‘நான்’ என்ற கருத்து என்றும் படித்தாக இருந்து வருகிறது. அடிக்கடி பாரி அழிந்து கொண்டும், வளர்ந்து கொண்டும் வரும் உடல் ‘நான்’ என்று கருத முடியாது. அடிக்கடி மாறிவரும் உணர்ச்சியும் அப்படிக் கருத முடியாது. பிறகு, ‘நான்’ என்று எப்போதுமுள்ள என் கருத்துக்குக் காரணமானது யாது? இது பெரிய தத்துவம் நிறைந்த கேள்விபோல் தோன்றுகிறது. ஆனால், சிறு குழந்தைகூட இதற்குப் பதில் கூறிவிட முடியும். ஒவ்வொரு நாளும் குழந்தை, ‘இதை நான் விரும்புகிறேன். ஆனால், அதை நான் விரும்பவில்லை’ என்று பல தடவை சொல்லக் கேட்கிறோம். இந்த வாக்கியத்திலேயே உண்மை அடங்கியிருக்கிறது.

இந்த வார்த்தைகள் மிகச் சாதாரணமானவை. இவையே பல்வேறு சமயங்களில் ஏற்படும் உணர்ச்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து, ‘நான்’ என்ற உணர்வைக் கொடுப்பவை. நான் இதை விரும்புகிறேன். ஆனால், அதை விரும்பவில்லை. ஏன் இதை விரும்புகிறேன், ஏன் அதை விரும்பவில்லை என்பதற்கு யாருக்குமே காரணம் தொரியாது. ஆயினும், ஒன்றை விரும்பி, மற்றதை விரும்பாத இந்த நிலையே மனிதன் உணர்ச்சிகளை ஒன்றாகத் தொகுத்து ‘நான்’ என்ற அகத்தை நிலைக்கச் செய்கிறது. உலகையும் அதிலுள்ள பொருள்களையும் கண்டு மக்களின் உள்ளங்களில் சில கருத்துக்கள் ஏற்படுகின்றன. ஆனால், ஒருவர் கருத்து மற்றவர்கள் கருத்துக்களைப் போலில்லை. ஒவ்வொருவரும் வெவ் வேறு கருத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் அவரவருடைய விருப்பமே. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான விருப்பமுடையவர். ஒன்றில் அதிக ஆசையும், மற்றொன்றில் குறைந்த ஆசையும் கொள்வதே மனிதனின் தனிப் பண்புக்கு, அதாவது ‘நான்’ என்ற உணர்வுக்குக் காரணமாகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான பண்பைப் பெற்றிருப்பதாலே ஒருவருக்கும் மற்றவர்களுக்கும். வேற்றுமை தெரிகிறது.

இந்த விருப்பம், அல்லது ஆசை, அல்லது அன்பு காலத்தையும் இடத்தையும் பொறுத்ததன்று; உடலைப் பொறுத்ததன்று; உடல் தோன்றுமுன்பே இது இருப்பது. என் விருப்பத்திற்கு இயைந்த முறையில் நான் இந்த உலகத்தோடு சில சம்பந்தங்களைப் பெற்றிருக்கிறேன்; இது போலவே மற்ற மனிதர்களும் வேறுவித சம்பந்தங்களைப் பெற்றிருக்கின்றனர். மக்களோடு நெருங்கிப் பழகுவதில் நாம் வெளித் தோற்றங்களையே பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அவர்களின் சிந்தனைகள், விருப்பங்களையே அறிய முயற்சிக்கிறோம். அவைகளைக் கொண்டு அவர்கள் உலகத்தோடு எத்தகைய சம்பந்தம் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிகிறோம். அவர்கள் எவைகளை விரும்புகிறார்கள், எவைகளை விரும்பவில்லை என்பதிலிருந்து அவர்களின் தன்மையை அறிய முடிகிறது.

இது போலவே குதிரை, நாய், பசு முதலிய விலங்கினங்களின் இயல்பையும் அறியலாம். விலங்குகளில் ஒவ்வோர் இனமும் வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டிருப்பதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, சிங்கங்கள், மீன்கள், குதிரைகள் என்று இனங்களை நாம் பிரித்துப் பார்க்கிறோம். எனவே, ஒவ்வோர் இனமும் உலகத்தோடு என்ன சம்பந்தம் பெற்றிருக்கிறது- எதை விரும்புகிறது, எதை விரும்பவில்லை - என்ற ஆதாரத்திலேயே பகுத்துப் பார்க்க முடிகிறது. இது ஸ்தூலமான உடலையோ, பொருள்களையோ பற்றிய விஷயமன்று, உள்ளே நிகழும் குணம். எனக்குச் சில உயிர்ப் பிராணிகள் உலகத்தோடு பெற்றுள்ள சம்பந்தங்கள் தெரியவில்லை என்றால், அவைகளின் விருப்பு வெறுப்புகளை நான் அறிய முடியவில்லை என்றே கொள்ளவேண்டும்.

என்னைப் பற்றியும் உலகைப் பற்றியும் நான் பெற்றுள்ள சகல அறிவுக்கும் அடிப்படை, நான் இந்த உலகத்தோடு கொண்டுள்ள விசேஷ சம்பந்தமே. இதன் மூலம் மற்ற உயிர்களும் என்னைப் போலவே உலகத்தோடு கொண்டுள்ள சம்பந்தங்களை நான் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால், உலகத்தோடு எனக்குள்ள விசேஷ சம்பந்தம் இந்த வாழ்க் கையில் ஏற்பட்டதன்று; எனது உடலிலிருந்தோ , அல்லது வெவ்வேறு காலங்களில் தோன்றிய என் உணர்ச்சிகளிலிருந்தோ இது ஆரம்பிக்கவில்லை.

என் உடல் எத்தனை மாறுதல்கள், அடையினும், அவைகளை ஒன்று சேர்த்து ஏகமாகச் செய்வது வெவ்வேறு காலங்களில் தோன்றும் என் உணர்ச்சி. இத்தகைய உடல் அழிக்கப்படலாம்; என் உணர்ச்சியுமே அழிக்கப்படலாம். ஆனால், உலகத்தோடு எனக்குள்ள சம்பந்தத்தை மட்டும் அழிக்க முடியாது. அந்தச் சம்பந்தத்தின் மூலமே ‘நான்’ என்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. அதுவே உலகில் நிலைத்துள்ள சகல பொருள்களையும் நான் அறியும்படி செய்துள்ளது. அதை ஏன் அழிக்க முடியாதென்றால், அது ஒன்றுதான் நிலைத்து நிற்கிறது. அது இல்லாவிட்டால், பல சமயங்களில் தோன்றும் என் உணர்ச்சிகளையோ, என் உடலையோ, என் வாழ்க்கை வாழ்க்கையையோ, அல்லது பிறர் வாழ்க்கையையோ நான் அறிந்து கொள்ளவே முடியாது. ஆகவே, உடல் அழியினும், உணர்ச்சி அழியினும் உலகத்தோடு எனக்குள்ள விசேஷ சம்பந்தமும் அழியும் என்பதற்கு, இவை சான்றாக மாட்டா-அந்தச் சம்பந்தம் இந்த வாழ்க்கையில் ஆரம்பிக்கவில்லை; இதிலிருந்து தோன்றவுமில்லை.

மரண பயம்

உடல் அழியும்போது ‘நான்’ என்று கருதுவோனும் அழிகிறானா? உடல் மாறினும், உன மாறினும், இந்த ‘நான்’ என்பது ஒரே மனிதன் என்ற தன்மையை உணர்த்துகிறது. ஒரு தற்காலிக உணர்ச்சி நின்றுவிட்டால், எல்லா உணர்ச்சிகளையும் ஒன்று சேர்த்துத் தொகுத்துக் காட்டும் ‘நான்’ அழிந்து விட முடியாது.

உறக்கத்தில் உணர்ச்சி அறவே போய்விடுகிறது. விழிக்கும்பொழுது உணர்ச்சி வருகிறது. முந்தியிருந்த உணர்ச்சியையும்; விழித்தெழுந்த பின் ஏற்படும் உணர்ச்சியையும் ஒன்றுசேர்ப்பது ‘நான்’ ஆகவே, தூக்கத்தில் உடல் அசைவற்றுக் கிடக்கலாம், உணர்ச்சியும் ஒடுங்கலாம். இப்படியிருந்தும் மனிதர்கள் தூங்குவதற்கு அஞ்சுவதில்லை. ஏன்?

முன்னால் பல சமயங்களில் தூங்கியபின் எழுந்திருந்தது போல விழிப்பு நிச்சயம் வந்துவிடும் என்று மனிதன் நம்புவதாக விடை கூறலாம். இது சரியான ஆராய்ச்சியன்று. ஏனெனில், ஆயிரம் தடவை தூங்கி விழித்தவன், ஆயிரத்தோராம் தடவை விழித்து எழாமலே இருந்து விடக்கூடும். அதை அறிந்திருந்தும் மனிதன் உறங்கச் செல்வதற்கு அஞ்சுவதில்லை. ஏனெனில், உறக்கத்தில் உடலும் உணர்ச்சியும் ஒடுங்கினாலும், ‘நான்’ ஒடுங்குவதுமில்லை; அழிவதுமில்லை.

இத்நிலையில் மனிதன் மரணத்திற்கு மட்டும் ஏன் பயப்படவேண்டும்? மரணத்தில் ‘நான்’ என்று கருதுவதும் அழிந்து விடுவதாக எண்ணுவதால்தான். உடலின் இயக்கமே வாழ்க்கை என்று கருதி வந்ததன் விளைவாக இந்த எண்ணம் ஏற்படுகிறது. உடலின் இயக்கம் காலத்தையும் இடத்தையும் நிலைக்களனாகக் கொண்டது. ‘நான்’ என்பது காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டது. அதற்கு அழிவு ஏது?

விசேஷமாக ‘நான்’ என்று சொல்வது எனக்கும் உலகுக்கும் உள்ள சம்பந்தமே - நான் விரும்புவதிலும் வெறுப்பதிலும் இந்தச் சம்பந்தம் அடங்கியிருக்கிறது. எனது விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணமான இயல்பு எனக்கு எங்கிருந்து வந்தது? உலகில் பிறப்பதற்கு முன்பே இது ஏற்பட்டிருக்க வேண்டும். இது என் பெற்றோரிடமிருந்தே எனக்கு வந்திருக்க வேண்டும் என்று முதலில் எனக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்து வந்திருக்கவேண்டும். இவ்வாறே ஆராய்ந்துகொண்டு போனால், இவ்வியல்பு காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று புலப் படும். இதைத்தான் ‘நான்’ என்று கருதுகிறேன்; உணர்ச்சியால் அறிகிறேன். இந்த ‘நான்’ அழிவதில்லை மரணத்தின் பின்னும் இது நிலைத்திருக்கிறது.

மனிதன் தன் உடலிலும் உணர்ச்சியிலும் ஏற்படும் மாறுதல்களைக் கண்டு அஞ்சுவதில்லை. அவைகளை வரவேற்கிறான். இளமைப் பருவத்திலிருந்து அவன் பெரியவனாக விரும்புகிறான். தனக்கு ஏற்பட்ட புண்கள் ஆறவேண்டுமென்றும் விரும்புகிறான். ஒரு சமயம் ஒன்றுமே தெரியாமல் வயிறு பசிக்கும் பொழுது மட்டும் அழுதுகொண்டிருந்த குழந்தையாகத் தோன்றிய மனிதன், இப்போது தாடியும் மீசையும் பெற்று, ஆராய்ச்சி அறிவுடன் விளங்குகிறான்; ஸ்திரீயா யிருந்தால் வயதுவந்த தன் மக்களைக் கண்டு பரவசப்படுகிறான். மாற்றங்கள் மனிதனைப் பயமுறுத்துவதில்லை எனினும், மரணத்தினால் ஏற்படும் மாறுதலுக்கு மட்டும் மனிதன் அஞ்சுகிறான்.

வாழ்க்கை முழுவதையும் அவன் சேர்த்துப் பாராமல், உடலை மட்டுமே பார்ப்பதால், இந்த அச்சம் தோன்றுகிறது. பைத்தியம் பிடித்த ஒருவன் தன் உடல் கண்ணாடியால் செய்யப்பெற்றது என்று எண்ணிக் கொண்டான். ஒரு சமயம் அவன் கீழே விழுந்து விட்டான். விழுந்ததும், ‘எல்லாம் நொறுங்கி விட்டது!’ என்று கூவினான். அப்படியே மரித்து விட்டான்! உடல் இயக்கத்தை மட்டும் முழு வாழ்க்கையாகக் கொள்வது இதைப் போன்ற செயலேயாகும். வாழ்க்கை முழுமையையும் எடுத்துக் கொள்பவனுக்கு மேலும் கிடைக்கும்; அதில் பகுதியை மட்டும் பற்றிக்கொண் டிருப்பவனுக்கு உள்ளதும் போய்விடும்.

மரணத்தால் ஏற்படும் புதிய சம்பந்தம்

வாழ்க்கை உலகத்தோடு கொள்ளும் ஒருவிதத் தொடர்பு அல்லது சம்பந்தம் என்பதைத் தவிர வேறு முறையில் அதைப்பற்றி நாம் கருத முடியாது. நம் வாழ்க்கையும் அப்படித்தான். மற்ற ஜீவன்களின் வாழ்க்கையையும் அப்படியே கருதுகிறோம்.

ஆனால், நம் வாழ்க்கையில் இந்தச் சம்பந்தம் ஒரு முறை ஏற்பட்ட நிலையிலேயே இல்லை என்றும், அவ்வப்போது புதிய சம்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்றும் நாம் தெரிந்து கொள்கிறோம். மனிதனின் மிருக இயல்பு பகுத்தறிவு உணர்ச்சிக்கு அதிகமாய்க் கட்டுப்பட்டு வரும்போது- அன்பு மலர்ந்து பெருகும்போது- இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் வாழ்வு அழிவது நிச்சயம் என்பதால், உலகத்தோடு நம் தொடர்பு ஒரே நிலையில் இல்லாமல் மாறிவருவது தெளிவாகும். புதுத் தொடர்புகளை நாம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்தப் புதுத் தொடர்புகளை அமைத்தல் - அதாவது வாழ்க்கையின் இயக்கம் மரணத்தைப் பற்றிய கருத்தை அழித்து விடுகிறது.

உலகத்துடன் பகுத்தறிவுக்குப் பொருத்தமான புதுத் தொடர்புகளை அன்பினால் ஏற்படுத்திக் கொள்ளாதவனுக்கே மரணத்தைப் பற்றிய எண்ணம் தோன்றும். அவன் ஆதியில் உலகத்தோடு என்ன சம்பந்தம் பெற்றிருந்தானோ அதே நிலைமையில் இருப்பவன். அவனுக்கு மரணம் பின்னால் மட்டும் வரும் என்பதில்லை ; இப்போதே அதை அநுபவிக்கிறான். குழந்தைப் பருவம் மாறி, வயது முதிரும் போது உடலில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. மனிதன் வளர்ச்சி யடையாமல், சிறு வயதில் அவனுக்கிருந்த வளைந்து கொடுக்கும் தன்மையும் ஜீவசக்தியும் குறைந்து கொண்டே வருகின்றன. உடல் முதிர்ச்சிபெற்று, வயோதிகத்தால் தள்ளாட்டமும், முடிவில் மரணமும் ஏற்படாம லிருக்கவேண்டும் என்பதற்காக அவன் செய்யும் - முயற்சிகளே வாழ்க்கை முழுதும் நிறைந்திருக்கும். இவை யாவும் பயனற்றவை.

வாழ்க்கையை உணர்ந்தவன் நிலை இதுவன்று அவன் ஒன்றை விரும்பி மற்றொன்றை வெறுத்தல் என்ற நிலையை மாற்றி, விருப்பத்தை- அன்பை பெருக்கிக் கொண்டே யிருக்கிறான். அவன் வாழ்க்கை தேங்கிக் கிடக்காமல், இயங்கிவருகிறது. வாழ்க்கையின் இயக்கத்திலே - அன்பின் பெருக்கத்திலேதான் - வாழ்வு இருக்கிறது என்பதை அவன் காண்கிறான். அன்பின் பெருக்கால் அவனுக்கும் நன்மை பெருகுகிறது. தனக்குப் புலப்படாத பெருமையிலிருந்தே கிடைத்திருக்கும் வாழ்க்கை இடை விடாமல் வளர்ந்து வருவதை இவன் உணருகிறான். அமைதியோடும் ஆனந்தத்தோடும் அவன் அதைத் தனக்குப் புலப்படாத எதிர் காலத்திற்கும் கொண்டு செல்கிறான்.

பிணி, பசி, மூப்பு, துன்பம் ஆகியவை மனிதனின் உணர்ச்சியையும் வாழ்க்கையையும் அழித்து விடுவதாக ஜனங்கள் சொல்லுகிறார்கள். எந்த மனிதனின் வாழ்க்கையை அழிக்கின்றன? பரி. யோவான் முதுமைப் பருவமடைந்திருந்த நிலையை நான் கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அவர் முடிவில் ‘சகோதரர்களே, ஒருவரை யொருவர் நேசியுங்கள்!’ என்ற சொற்களையே கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருந்த இடத்திலிருந்து அசைய முடியாத நிலையில் கண்களில் நீர் மல்கி நிறைந்து, இந்த வயோதிகர் மூன்றே வார்த்தைகளை முணுமுணுத்துச் சொன்னார் ‘ஒருவரை யொருவர் நேசியுங்கள்!’ இத்தகைய மகான்களுடைய வாழ்க்கையில் உடலின் மிருக வாழ்வு. உலகத்தோடு கொண்ட புதுத் தொடர்புடன் ஐக்கியமாகி விடுகிறது. இத்தகையவர்களின் வாழ்க்கையை எது அழிக்க முடியும்?

உண்மையான வாழ்க்கையை உணர்ந்த மனிதன், தான் ஒளியை நெருங்கிச் செல்லும் போது, தன் நிழல் குறைந்து கொண்டே வருவதில் சந்தோஷமே அடைவான். பூரணமான வெளிச்சத்தில் நிற்கும் போது நிழலே இல்லாமற்போகும். ஆனால் உடலின் இயக்கமே வாழ்வென்று கழுதுவோன், ஒளியை நெருங்க நெருங்க நிழல் குறைவதையும், முடிவில் அது இல்லாமலே போவதையும் கண்டு துயரப்படுவான். இவனுக்கு நிழலே வாழ்க்கை, ஒளியன்று! மரணமும் இது போன்றதே. நிழலின் மறைவைக் கொண்டு, அதற்குக் காரணமான பொருளே அழிந்து விட்டதாக எண்ணுவது தவறு.

காலத்திலும் இடத்திலும் நிகழும் தன் உடல் வாழ்வையும், உலகத்தோடு அன்பின் மூலம் தன் தொடர்பு வளர்ந்து வருவதையும் கொண்டு தன்னை நன்கு அறிந்து கொண்டவனுக்கு நிழல் மறைவது அதிக ஒளி வருவதையே குறிக்கும். அவன் அதை அழிவு அல்லது மரணம் என்று கருத மாட்டான். வாழ்க்கை உலகத்தோடு தான் கொண்ட தனித் தொடர்பு என்பது அவனுக்குத் தெரியும். அது அவன் பிறக்கும்போது கூட வந்தது. வாழ்க்கையில் அன்பின் வளர்ச்சியால் அவன் அதை மேலும் வளர்த்து வந்திருக்கிறான். இத்தகைய மனிதன் தான் அழிந்து போகக் கூடியவன் என்பதை நம்பவே மாட்டான். ஸ்தூல உலகத்தின் விதிகளை யெல்லாம் தெரிந்த ஒருவன், தன்னைத் தாய் பெற்றெடுக்கவில்லை என்றும், திடீரென்று கீரைப் பாத்தியிலிருந்து கண்டெடுத்தாள் என்றும் நம்புவானா? தன் உடல் திடீரென்று எங்கோ தெரியாத இடத்திற்குப் பறந்து ஓடிவிடும் என்றால் நம்புவானா? இதைப் போலவே வாழ்க்கையின் விதிகளை அறிந்தவன், மரணத்தால் தான் அழிந்து விடுவதாகச் சொல்வதை நம்பவே மாட்டான்.