வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/இறந்த பின்னும் வாழ்க்கை உண்டு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

9
இறந்த பின்னும் வாழ்க்கை உண்டு

வாழ்க்கையின் சாராம்சத்தை நாம் நன்றாகக் கவனித்தால், மரணம் ஒரு மூட நம்பிக்கை என்று தெரியும். என்னிடம் மிகுந்த அன்போடு பழகிய என் சகோதரன், என்னைப் போலவே வாழ்ந்து வந்தவன், இப்போது இந்த வாழ்க்கையில் இல்லை. அவனுடைய வாழ்க்கை அவனுடைய உணர்ச்சியில் இருந்தது; அந்த உணர்ச்சி உடலோடு மறைந்து விட்டது. காலத்திலும் இடத்திலும் அவ்வுணர்ச்சி மீண்டும் மலர்ச்சியடைய முடியாது. என் சகோதரன் உயிரோடிருந்தான்; அவனோடு நான் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். இப்போது அவன் இல்லை, அவன் எங்கேயிருக்கிறான் என்பதும் எனக்குத் தெரியவில்லை: ‘இதுதானே மரணம்!’ என்று ஜனங்கள் சொல்வார்கள்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவர்களே இப்படிச் சொல்லக் கூடும். வெளியுலகில் ஒருவனின் தொடர்பு இல்லாமற் போவதை வைத்துக் கொண்டு அதுவே மரணத்திற்கு மறுக்க முடியாத சான்று என்பார்கள்.

என் சகோதரன் இறந்து போய்விட்டான். அவன் உலகத்தோடு பெற்றிருந்த தொடர்பின் வெளித் தோற்றம் என் கண்ணுக்குப் புலனாகாமல் மறைந்துவிட்டது. காலத்திலும் இடத்திலும் அதை நான் இதுவரை கண்டு வந்தேன். இப்போது காண முடியவில்லை. என் சகோதரனுடைய உடல் மறைந்ததால், அவனைப்பற்றிய எல்லாமே அழிந்து போய் விட்டனவா?

வண்ணாத்திப்பூச்சி முதலில் சிறுபுழுக்குரம்பையா[1]யிருந்து பின்னால் தான் அதிலிருந்து வெளி வருகிறது. பூச்சி வெளியேறுமுன், ஒரு குரம்பை, பக்கத்திலே காலியாய்க் கிடக்கும் மற்றொரு குரம்பையைப் பார்த்து, ‘ஐயோ! ஒன்றுமே யில்லையே! எல்லாம் காலியாகிவிட்டது!’ என்று சொல்லக்கூடும். இது பொருத்தமானது தான்; ஏனெனில், அது தன் கூட்டாளியோடு இனிமேல் தொடர்பு கொள்ள முடியாது. மனிதரைப்போல அதற்கு அறிவில்லை. வேறுவகையில் சம்பந்தம் வைத்துக்கொள்ள அதற்கு ஆற்றலில்லை.

ஆனால் மனிதனுடைய நிலை இப்படியில்லை. என் சகோதரன் இறந்து போய்விட்டான்; அவனுடைய குரம்பையாகிய உடல் உண்மையிலேயே காலியாகி விட்டது; இதுவரையில் நான் அவனை எந்த உருவத்தில் கண்டு வந்தேனா அதை இனிக் காண முடியாது. ஆனால் அவன் என் கட்புலனுக்குத் தென்படாமற் போனது அவனிடம் எனக்குள்ள தொடர்பை-உறவை-அழித்துவிடவில்லை. அவனுடைய நினைவு இருக்கிறது.

இந்த நினைவு, அவனுடைய கைகள், முகம், கண்களைப்பற்றிய நினைவன்று; அவனுடைய சூட்சும உருவத்தின் நினைவே யாகும்.

இந்த நினைவு எது? என் சகோதரன் காட்டி வந்த அன்பின் அளவுக்குத் தக்கபடி இது அதிகமா யிருக்கிறது. அவனைப் பற்றிய நினைவு என் வாழ்க்கையை இப்போதும் பாதித்து வருகிறது. அவன் மண்ணுலகில் இருக்கும் போது நடந்தது போலவே, அவன் நினைவால் இப்போதும் என் வாழ்க்கை மாறுதலடைகிறது. என் சகோதரனிட மிருந்த ஜீவ சக்தி அழியவில்லை; குறையவில்லை; உருமாறியிருக்கிறது-அவ்வளவுதான். முன்னைவிட அதிக சக்தியுடன் அது என்னைப் பாதித்து வருகிறது. உயிரோடிருக்கும் மற்ற ஜீவன்கள் என்னைப் பாதிப்பது போலவே, அவன் நினைவும் பாதித்து வருகிறது. எனக்கு அதன் தொடர்பு அற்றுப் போகவில்லை. இப்போது அவன் எங்குள்ளான் என்பது எனக்குத் தெரியாது என்பதால், அவனே இல்லை, ஒன்றும் பாக்கியில்லாமல் முற்றிலும் அழிந்து விட்டான் என்று நான் சொல்ல முடியுமா? அவனுக்கும் எனக்கும் ஏற்பட்டிருந்த தொடர்புகள் இப்போதுதான் அதிகப்பட்டிருக்கின்றன. அவை என்னை ஊடுருவி நிற்கின்றன. அவன் உலகத்தோடு பெற்றிருந்த தனித் தொடர்போடு என் தொடர்பும் ஒன்றாகவே தோன்றுகிறது. என் கண்ணுக்கு அவன் புலனாகா விட்டாலும், என்னை அவன் கவர்ச்சி செய்து இழுத்துக் கொள்கிறான். அவன் வாழ்க்கை முடிவடைந்து விடவில்லை. இதே போல, உலகத்தோடு அவன் கொண்டிருந்த சம்பந்தமும் அற்று ஒழியவில்லை. அது மனிதர்களின் செயலைப் பாதித்துக் கொண்டே தான் இருக்கிறது.

கிருஸ்துநாதர் இறந்து வெகுகாலமாகிவிட்டது; அவர் பூத உடலோடு வாழ்ந்தது சொற்ப காலமே; ஆனால், அறிவின் நியதிப்படியும் அன்பு நெறியிலும் நிகழ்ந்த அவருடைய வாழ்க்கை இன்று உலகில் கோடிக்கணக்கான மக்களின் மீது , ஆதிக்கியம் கொண்டிருக்கிறது. இவர்கள் அவர் உலகத்தோடு கொண்டிருந்த தொடர்பை ஏற்றுக் கொண்டு, அதைப் போலவே தங்கள் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கிறார்கள். கிறிஸ்துநாதருடைய வாழ்கையின் பயன் இது என்று சொல்வது பொருந்தாது. பூமிக்குள் மறைந்த வித்து, செடியாகி, மரமாகிறது என்று சொல்லாமல், வித்து அழிந்துவிட்டது, வித்து இருந்ததன் விளைவு அல்லது பயன் தான் மரம் என்று சொல்வது போல்தான் இப்படிக் காரணம் கூறுவதும். கிறிஸ்து பெருமானின் வாழ்க்கையே அவர் உலகத்தோடு வைத்துக்கொண் டிருந்த தொடர்பே-மக்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது.

காய்ந்த சருகுகளில் நெருப்பு எரிகிறது. நெருப்பின் ஒளிக்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. சருகுகள் தீர்ந்து போய்விட்டன. உடனே நெருப்பு அழிந்துவிட்டது என்று நான் சொல்ல முடியுமா? இப்போதும் அது ஒரு காட்டிலோ, அல்லது எனக்குத் தெரியாத வேறு இடத்திலோ, எரிந்து கொண்டுதான் இருக்கிறது. நெருப்பே அழிந்து விட்டது என்று முடிவு செய்ய இடமில்லை.

எனக்கு முன்னால் இருந்த சகல மனிதர்கரின் வாழ்க்கையையும் வைத்தே என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. மிருக இயல்பைப் பகுத்தறிவு உணர்ச்சிக்கு அடங்கிக் கிடக்கும்படி செய்து அன்பு காட்டி வாழ்ந்தவர்கள் அனைவரும் இப்போதும் மற்ற மக்களிலே-அவர்கள் வாழ்க்கையில் - தாங்களும் வாழ்கிறார்கள். இது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால் போதும் -மரணத்தைப் பற்றிய மூட பயம் என்னை விட்டு அகன்று விடும்.

கிறிஸ்து, தமது உயிரின் பொய்த் தோற்றம் மறைந்த பின்னும், தாம் தாழ்வதாகச் சொன்னார். ஏனெனில், உடலோடு இருக்கும்போதே அவர் உண்மையான நித்திய வாழ்க்கையுள் நுழைந்து விட்டார். அவர் பெற்றிருந்த ஒளி சுற்றியிருந்த மக்களின் மனங்களையும் ஒளி செய்தது. தனிப் பண்பைத் துறந்து, அறிவுக்குப் பொருத்தமான அன்பு வாழ்க்கை வாழும் ஒவ்வொரு மனிதனும் இத்தகைய ஒளியைக் காண்கிறான்.

ஒருவருடைய வாழ்க்கையில் சிலருடன் தொடர்பு கொண்டோ, அல்லது பல்லாயிரம் மக்களுடன் தொடர்பு கொண்டோ, செயல் புரிவதில் அளவு முக்கியமில்லை. ஆனால், பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையில் மற்றவர் நலன்களைப் பேணி, அன்பைப் பெருக்கிக்கொண்டு வந்தால், அவர் கிறிஸ்துவா யிருந்தாலும், நல்ல மனிதரா யிருந்தாலும், பிரசித்தி பெறாதவரா யிருந்தாலும், கிழவராயினும் சிறுவயதினராயினும், ஸ்திரீயாயினும், அவருக்கு, மரணமில்லை. ஏனெனில், உடலோடு இருக்கும் பொழுதே, அவர் உலகத்துடன் ஒரு தொடர்பு கொண்டு விடுகிறார்; அந்தத் தொடர்புக்கு மரணம் கிடையாது. அந்தத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே எல்லா மனிதர்களுக்கும் இவ் வாழ்க்கையில் முக்கியமான காரியம்.

நித்தியமான வாழ்க்கையைப் பற்றி ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு விடாது. இந்த நம்பிக்கை ஏற்படுவதற்கு முன்பே அழியா வாழ்வு அமைந்திருக்க வேண்டும். அதற்கு நமது வாழ்க்கையைச் சிரஞ்சீவியாக்குவது எது என்பதை நாம் உணர வேண்டும். எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை கொள்வதற்கு, ஒருவன் தன் வாழ்க்கையில் செய்ய வேண்டியதைச் செய்து முடித்திருக்க வேண்டும்; இந்த வாழ்கையிலேயே உலகத்துடன் இதற்கு முன் இல்லாத புதுத் தொடர்பை அமைத்துக் கொண்டிருந்தால் தான் அது சாத்தியமாகும்

உலகத் தொடர்புகளில் குழப்பம்

மனிதனுடைய பகுத்தறிவு உணர்ச்சி, மிருக உணர்ச்சி, உடலாகிய சடப்பொருள் ஆகிய மூன்றின் மூலமும் மனிதன் உலகத்தோடு தொடர்பு கொள்கிறான். பகுத்தறிவு உணர்ச்சியின் தொடர்பு ஒன்று தான் தனது வாழ்க்கை என்பதை அவன் அறிவதில்லை. மற்ற இரண்டு தொடர்புகளும் வாழ்க்கையைச் சேர்ந்தவை என்று அவன் கருதுகிறான். சடப் பொருளே பரிணாம வளர்ச்சியில் மிருக உணர்ச்சியாயும், பின்னர் பகுத்தறிவு உணர்ச்சியாயும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதாகச் கருதுகிறான். பகுத்தறிவு உணர்ச்சி உச்ச நிலையை அடைந்த பிறகு, கீழிறங்க ஆரம்பித்து, மிருக உணர்ச்சியாக மாறி, அதன் பின் மீண்டும் சடமாக மாறுவதாக எண்ணுகிறான். இந்தத் தவறான கருத்தினால், மிருக உணர்ச்சி அழிவில்லாததாகிறது; ஏனெனில் மிருகம் தன் இனம் அழிவில்லாதவரை நிலைத்திருப்பதாகத்தானே கொள்ள வேண்டும்! உலகத்தோடு சடப்பொருள் கொண்டுள்ள தொடர்பும் அழிவில்லாததாக ஆகின்றது. ஆனால், எல்லாவற்றிலும் முக்கியமான பகுத்தறிவு உணர்ச்சி, நித்தியமானதாயில்லாமல், சடத்திலிருந்து விளைந்த ஒன்றாகவே முடிகிறது!

ஆயினும், மனிதன் இது உண்மையா யிருக்க முடியாது என்று உணருகிறான். இதனால் சாவைப் பற்றிய அச்சம் வருகிறது. பகுத்தறிவு உணர்ச்சி உலகத்தோடு கொண்டுள்ள தொடர்பே வாழ்க்கை என்று நம்பாதவர்களுக்கு, மற்ற இரண்டு தொடர்புகளையும் பற்றி நம்ப இயலாது.

மனிதன், தான் முன்னாலேயே இருந்திராவிட்டால், ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்தே அவன் தோன்றிப் பின் மடிவதானால், விசேஷமாகத் தான் கருதும் ‘நான்’ என்ற அகம் நிலைத்திருக்காது என்பதை அறிகிறான். அவன் தான் ஒரு போதும் பிறக்கவில்லை என்றும், தான் எப்போதும் இருந்தவன் என்றும், இருப்பவன் என்றும், இருக்கப் போகிறவன் என்றும் உணரும்போது, தான் நித்தியமானவன் என்பது புலப்படும். அவனுடைய வாழ்க்கை தனித்த ஓர் அலையன்று என்றும், இந்த வாழ்வில் ஓர் இயக்கம் என்றும் தெரிந்து கொள்ளும்வரை மனிதன் தன் நித்தியத்துவத்தை நம்ப மாட்டான்.

உடலின் அழிவுக்கு மனிதன் பயப்பட முடியாது ஏனெனில் சடப்பொருள் சடத்தோடு சேர்ந்து விடுகிறது. அதன் உருவம் மாறுவதைத் தவிர சேதம் ஒன்றும் இல்லை. தன் உணர்ச்சி - தான் என்ற ‘அகம்’ மடிகிறது என்று கருதினால், இந்த உணர்ச்சி வாழ்வில் எத்தனையோ முறை மாறியதுதானே! சிறு வயதிலிருந்த உணர்ச்சி பின் வாழ்வில் இல்லை. இந்த மாற்றத்திற்கெல்லாம் வருந்தாமல், மரணத்தினால் மாறுவதற்கு மட்டும் வருந்துவானேன்? உண்பது, உடுப்பது, பருகுவது, மக்களைப் பெறுவது, வீடுகள் அமைப்பது போன்ற செயல்களும், மற்ற மனிதர்கள் விலங்குகளுடன் சில முறைகளில் தொடர்புகள் கொண்டதும் போய்விடுமே என்று அவன் கருதவும் இடமில்லை. ஏனெனில் அவன் போகும் போது மானிட இனமும் போய்விடாது. கோடிக் கணக்கான மனிதர் அவனைப் போலவே உலகத்தோடு தொடர்புகள் கொண்டிருப்பர். தன் பகுத்தறிவு உணர்ச்சி உலகத்தோடு கொண்டிருந்த சம்பந்தம் அழிந்துவிடுமே என்றும் மனிதன் கவலைப்பட இடமில்லை. அவ்வுணர்ச்சி அவனுடைய பிறப்புக்கு முன்னாலேயே ஏற்பட்டது. அவன் பிறப்புக்குப் புறம் பான ஒன்று. அவன் மரணத்தோடு அது அழியவும் முடியாது.

உயிரின் இயக்கத்தில் இந்த வாழ்க்கை ஒரு பகுதி

நானும், மற்ற எல்லா மனிதர்களும் உலகத்துடன் குறிப்பிட்ட ஒரு தொடர்பு கொண்டு இங்கே இருக்கிறோம்; ஒவ்வொருவரும் ஓரளவு அன்பு கொண்டிருக்கிறோம். இந்த அன்பு நாம் பிறக்கு முன்பே உள்ளது; பிறக்கும்போது நாம் அதைக் கொண்டு வருகிறோம். பிறப்பதற்கு முன்னாலுள்ள நிலையை நாம் அறிய முடியாதது போலவே, மரணத்திற்குப் பின்பு ஏற்படும் நிலையும் நமக்குப் புலனாவதில்லை ; ஆனால் இடையில் நம் வாழ்க்கை முழுதும் இந்த அன்பு வளர்ந்து முதிர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

உலகில் சிலர் நீண்ட காலம் வாழ்கின்றனர்; சிலர் குறுகிய காலத்திலேயே மரணமடைகின்றனர். ஏன்? வாழ்க்கை பிறப்பில் ஆரம்பமாகவுமில்லை; மரணத்தோடு தீர்ந்து போவதுமில்லை. பிறப்புக்கு முன்னாலும், மரணத்திற்குப் பின்னாலும் எட்டிப் பார்க்கக் கூடிய ஆற்றல் நமக்கு இப்போது (இந்த உடலோடு விளங்குகையில்) இல்லை. என் வீட்டுச் சாளரத்தின் வழியாக வெளியே நடந்து செல்பவர்களை நான் பார்க்கிறேன். சாளரத்தின் அருகில் வந்து காட்சி தரும் மனிதர் அதுவரை இல்லாதிருந்தனர் என்று சொல்ல முடியுமா? அவர்கள் இருந்தனர்; சாளரத்தின் பக்கம் வரும்வரை நான் அவர்களைப் பார்க்க முடியவில்லை. அதுபோலவே, சாளரத்தைத் தாண்டி அப்பாலே சென்று விட்டவர்களும் இல்லாமற் போகின்றனர் என்று சொல்ல முடியுமா? சாளரத்திற்கு அப்பால் பார்க்கிற ஆற்றல் எனக்கு இல்லாததால், அந்த மனிதர்களே இல்லாமற் போனார்கள் என்று சொல்லுதல் தவறு.

மற்றவர்கள் பிறக்கும்போது வாழ்க்கையில் என்ன தத்துவங்களைக் கொண்டு வந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது; உயிரின் இயக்கம் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன சாதிக்கவேண்டுமென்று இருந்தது என்பதும் நமக்குத் தெரியாது. காரணங்களால் வாழ்க்கையிலுள்ளவர்கள் அடுத்த, வாழ்வுக்குத் தயாராகி விட்டார்கள் என்று தோன்றுகிறது என்பதும் நமக்கு விளங்குவதில்லை. நம் கண்களின் பார்வையால் இந்த உலக வாழ்க்கையிலுள்ளவைகளையே காண முடிகிறது. இவற்றிற்கு அப்பாலும் இப்பாலும் பார்க்க ஆற்றலில்லாததால், மரணத்திற்கு அப்பாலுள்ள வாழ்க்கையையோ, பிறப்புக்கு முன்னாலுள்ளதையோ நாம் அறிய முடிவதில்லை. நம் ஆராய்ச்சி அறிவினால் இவ்வளவு தான் தெரிந்து கொள்ள முடியும். எனக்குக் கண்ணுக்கு முன்னால் சமீபத்திலுள்ள பொருள்களே தென்படுகின்றன; தொலைவிலுள்ளவை தென்படுவதில்லை. எந்த ஆற்றல் அவசியம் தேவையோ, அது மட்டுமே கண்ணுக்கு இருக்கிறது. தூரத்தைப் பார்க்கும் ஆற்றல் கண்ணுக்கு ஏற்பட்டால், சமீபத்திலுள்ளதைப் பார்க்க முடியாது போய்விடும். இது போலவே உலக வாழ்வில் அவசியம் காணவேண்டியவைகளை ஆராய்ச்சி அறிவு கண்டு கொள்கிறது. மேற்கொண்டு அறிய அதற்குச் சக்தியில்லை.

மனிதன் இறப்பது மேற்கொண்டு இந்த உலகில் அவனுடைய உண்மையான வாழ்வின் நலன் அதிகரிக்க முடியாது என்பதால்-ஏதோ நோயினாலோ, துப்பாக்கிக் குண்டு பட்டோ, மடிகிறான் என்பதன்று. இவை மிகவும் சமீபமான அண்மைக் காரணங்களாயிருக்கலாம். ஆனால், மூலமான காரணம் மேலே குறித்தது தான். மனிதன் மரிப்பதில் ஆச்சரியமில்லை; ஆனால் உலகில் அவன் உடலோடு வாழ்வது தான் ஆச்சரியம். உடலுக்கு அபாயம் விளைக்கக் கூடிய எத்தனையோ நிலைமைகளுக்கும், எத்தனையோ விஷக் கிருமிகளுக்கும் நடுவே, அவன் வாழ்வது பெரும் வியப்புத்தான். ஆகவே, நாம் வாழ்கிறோம் என்றால், நம்மைப் பற்றி முன்னெச்சரிக்கையோடு இருப்பதாலன்று. ஆனால் உயிரின் காரியம், நம்மில், நம் மூலம், நடைபெறுவதற்காகவே இருக்கிறோம். உடலைப் பேணுவதால் நாம் வாழவில்லை. வாழ்க்கையின் வேலையை நாம் நிறைவேற்றி கொண்டிருப்பதாலேயே நாம் வாழ்கிறோம். இந்த வேலை முடிவடைந்ததும், மனிதனின் மிருக வாழ்வு அழிந்து கெடுவதை எதுவும் தடை செய்ய முடியாது. இந்த அழிவு ஏற்படுகையில் சமீபத்தில் தோன்றும் நோய் நோக்காடு போன்ற சிறு காரணமே நமக்கு முழுக் காரணமாகத் தோன்றும்.

வெளியுலகில் எல்லா விஷயங்களிலும் காரணத்தையும் காரியத்தையும் நாம் பார்க்க முடிகிறது. ஆனால், நம் உண்மையான வாழ்க்கையின் காரணத்தையும் காரியத்தையும் நாம் காண முடியாதிருப்பது நம்மைக் கஷ்டப்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனும் பலதிறப்பட்ட திறமைகளுடன் ஏன் தோன்றுகிறான்? ஒருவனுடைய வாழ்க்கை நீடித்துக்கொண்டிருக்கும்போது, மற்றொருவனுடைய வாழ்க்கை ஏன் நசித்துப் போகிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காததால் நாம் வருந்துகிறோம்.

ஆனால், எங்கு, எப்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்ட நமது ஆராய்ச்சி அறிவுக்குத் திறமை இருக்கிறது. வாழ்க்கையின் நலனைப் பெற நம் தனி மிருகப் பண்பு பகுத்தறிவு உணர்ச்சிக்கு அடங்கிச் செல்லும்படி செய்யவே அவ்வறிவு நமக்குப் போதிக்கிறது; இதுவே அழியா நலன்களைப் பெறும் மார்க்கம் என்று காட்டுகிறது.


  1. குரம்பை - கூடு.