வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/வாழ்வின் துயரங்கள்
வாழ்வின் துயரங்கள்
மனிதன் மரண பயத்தை உதறிவிட்டு, மரணத்தைப்பற்றிய நினைவில்லாமல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பின்னும் அவன் அநுபவிக்கும் கொடுந் துன்பங்களைப் பார்த்தால், அவைகளுக்கு நியாயமான காரணமும் இல்லை; அவைகளைத் தவிர்க்கவும் முடியாது. அவன் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று கருதுவதைக்கூட இத் துன்பங்களே ஒழித்துவிடக் கூடும்.
நான் பிறருக்குப் பயனுள்ள ஒரு நல்ல காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். திடீரென்று ஒரு நோய் ஏற்பட்டு, என் வேலையைத் தடைசெய்து, என்னைப் பலவீனப் படுத்தித் துயரத்தில் ஆழ்த்துகிறது. இதற்குக் காரணமே யில்லை. புகை வண்டித் தண்டவாளத்தில் ஓர் ஆணி துருப்பிடித்துக் கழன்று விழுந்து விடுகிறது. தண்டவாளத்தின் மீது ஓடிய வண்டி கவிழ்ந்து விடுகிறது. வண்டியில் ஓர் அறையில் ஒரு தாய்-யாதொரு பாவமும் அறியாதவள்- அவள் கண்முன்பு அவளுடைய குழந்தைகள் நசுக்கபட்டுக் கிடக்கின்றன. பூகம்பத்தால் நகரங்கள் அழிந்து, பல்லாயிரம் மக்கள் சொல்லொணாக, துன்பங்களை அடைகின்றனர். இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்? இவைகளும், மற்றும் மக்களை திணறச் செய்யும் பல்லாயிரம் பயங்கரமான துன்பங்களும் என்ன நன்மைக்காக ஏற்படுகின்றன?
என் நோய்க்குக் காரணமாக, விஷக்கிருமிகள் என் உடலுக்குள் சில பகுதிகளில் புகுந்து விட்டதைக் கூறலாம்; குழந்தைகள் தாயின் முன்பு நசுங்கியதற்கு, இரும்பு ஆணியில் ஈரம் பட்டுத் துருவேறியதைக் கூறலாம்; பூகம்பங்களுக்குப் பூமியின் இயற்கை பற்றிய விதிகளைக் காரணமாகக் காட்டலாம், அவசியம் தெரியவேண்டிய விஷயம் வேறு வேறு ஆட்களுக்கு ஏற்படாமல், இந்த மனிதர்களுக்கு மட்டும் இந்தக் கோரமான துயரங்கள் ஏன் ஏற்பட்டன; இவை ஏற்படாமல் ஒருவன் எப்படித் தப்பித்துக் கொள்ளலாம்?
இதற்குப் பதிலில்லை. ஒருவன் மற்றொருவனைப் பார்க்கினும் அதிகமாய்த் துன்புறுவதற்கு எத்தகைய விதி இருக்க முடியும்? அத்தகைய நியதி கிடையாது என்று என் அறிவு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
தங்கள் தனித்தன்மையையே வாழ்க்கையாகக் கருதுபவர்கள், இத்தகைய துயரங்களைக் கண்டும். அநுபவித்தும், ஒரு நிமிஷங்கூட வாழ விரும்ப மாட்டார்கள். கொடுமையான வேதனைகள் ஏற்படுவதை விளக்கவும் முடியவில்லை. இவைகளைக் கண்டு பயந்து நடுங்கி எந்த மனிதனுமே உயிர் வாழ முடியாத அளவுக்கு இவைகள் பெருகியிருக்கின்றன.
இருந்தபோதிலும், மக்கள் வாழத்தான் செய்கின்றனர். உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனையோ வழிகள் தெரிந்திருந்தும், இன்னலும் இடுக்கணும் நிறைந்த வாழ்க்கையை அவர்கள் துறப்பதில்லை. தங்களாகக் குறை சொல்லிக் கொள்கிறார்கள்; துயரங்களுக்காக வருந்துகிறார்கள் - ஆயினும் தொடர்ந்து வாழ்கிறார்கள்!
வாழ்வில் துன்பங்களைவிட இன்பங்கள் அதிகமாயிருப்பதால், மக்கள் வாழ விரும்புவதாகச் சொல்வது தவறு. ஏனென்றால், வாழ்க்கையைப் பற்றிய சாதாரண ஆராய்ச்சியிலும், தத்துவ ஆராய்ச்சியிலும், மண்ணுலக வாழ்க்கை ஒரே துக்க பரம்பரை என்று தெளிவாகத் தெரிகின்றது. துன்பங்களின் அளவுக்கு இங்கே இன்பங்கள் இல்லை.
இந்த விசித்திர முரண்பாட்டிற்கு ஒரே விடை தான் உண்டு. எல்லாத் துன்பங்களும் எப்போதும் அவசியமானவை. தங்கள் வாழ்வின் நன்மைக்கு இன்றியமையாதவை என்று மக்கள் தங்கள் அந்த-ராத்மாவில் உணர்வதாலேயே மீண்டும் வாழ விரும்புகின்றனர். பல சமயங்களில் இந்தத் துயரங்களைக் கண்டு ஆற்றாமல் அவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய தனி வாழ்வே முழு வாழ்க்கையென்று கருதுவதுதான்.
பிறப்பதிலிருந்தே துயரமா யிருக்கிறது. வாழ் நாள் முழுவதும் துயரந்தான். மனிதன் தானாகத் துன்பமடைகிறான்; மற்றவர்களையும் துன்பப்படுத்துகிறான். துன்பமும் துயரமும் அவனுக்கு வழக்கமாகி விட்டன. ஆயினும், அவன் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறான்; அது ஏன் ஏற்படுகிறது என்று கேட்கிறான். நம் இன்பங்கள் எல்லாம் பிறர் துன்பங்களால் விளைந்தவை. மனிதனின் இன்பங்களுக்கு அவன் துன்பங்கள் எல்லாம் அவசியமானவை. துன்பமில்லாமல் இன்பமில்லை. துன்பமும் இன்பமும் ஒரே பொருளின் இரண்டு எல்லைகள். இவை ஒன்றுக் கொன்று அவசியமானவை. எனினும், மனி தன், ‘எதற்காக? ஏன்?’ என்று கேட்கிறான். துன்பமும் இன்பமும் ஒன்றாகச் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருப்பது தெரிந்திருந்தும், இக் கேள்விகள் கேட்கப்படுகின்றன; ஆனால், ‘ஏன் இந்த இன்பம், என்ன காரணத்திற்காக?’ என்ற கேள்விகள் மட்டும் எழுவதில்லை.
மிருகத்தின் வாழ்வு முழுவதும், சங்கிலித்தொடர் போல், பல துன்பங்களின் சேர்க்கையாகவே யிருக்கிறது; மனிதனுடைய மிருக இயல்பு முழுதும் அப்படியே யிருக்கிறது. மிருகமும் மனிதனும் பூரணமாகச் செயற்படுவதற்கு-தொழில் செய்வதற்கு- இந்தத் துன்பமே தூண்டுகோலாயுள்ளது. துன்பம் ஒரு வேதனை உணர்ச்சி; அது செயல் புரியத் தூண்டுகிறது; செயல், வேதனை உணர்ச்சியை விரட்டிவிட்டு, இன்ப நிலையை உண்டாக்குகிறது. மிருகத்தின் வாழ்வும், மனிதனின் வாழ்வும், துன்பத்தால் சலனமடைந்து சிதைவதில்லை. வாழ்வின் இலட்சியமே அதன் மூலம் நிறைவேறுகிறது. எனவே, வாழ்வுக்குத் தூண்டுகோலாக அமையும் துன்பங்கள் இருந்தே தீரவேண்டும் என்று ஏற்படுகிறது. இப்படியிருந்தும் மனிதன் ‘ஏன் எதற்காக, இந்தத் துன்பம்?’ என்று கேட்பதன் பொருள் என்ன?
மிருகம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை.
பெரிய மீன் சின்ன மீனை வதைக்கும் போதும், சிலந்திப்பூச்சி ஈயை வதைக்கும் போதும், ஓநாய் ஆட்டை வதைக்கும் போதும் அவை தாம் செய்ய வேண்டியதையே (கடமைப்பட்டதையே) செய்வதாக எண்ணுகின்றன; என்ன நடக்கிறதோ அது நடந்தே தீரவேண்டிய காரியமென்று எண்ணுகின்றன. இதே போல், பெரிய மீன், சிலந்தி, ஓநாய் ஆகியவற்றை அவைகளைவிட வலிமையுள்ள பிராணிகள் வதைக்க வரும்போது, அவைகள் தாங்கள் எப்படியும் தப்பித்து ஓடவேண்டு மென்று எண்ணுகின்றன. இதைச் செய்வதே தங்கள் இயற்கை என்று எண்ணுகின்றன. எனவே, அவைகள் தங்களுக்கு ஏற்படும் நிகழ்ச்சிகள் ஏற்பட்டுத் தீரவேண்டியவை என்று கருதுகின்றன. ஆனால், மனிதன் மட்டும் அப்படி எண்ணுவதில்லை. மனிதன் போர்க்களத்தில் பல மனிதர்களுடைய அங்கங்களை முறித்தெறிகிறான்; ஆனால், தன் அங்கங்கள் காயமடைந்ததும், அதே களத்திலிருந்து கொண்டு அவைகளுக்குச் சிகிச்சை செய்கிறான். அவன் உணவுக்காக ஆயிரக்கணக்கான விலங்குகளை வதைக்கிறான் ஆனால், தன்னைக் கொல்ல வரும் ஓநாய்களை எதிர்த்து விரட்டித் தான் தப்பித்துக்கொள்ளவே விரும்புகிறான். இத்தகைய மனிதன் தனக்கு நேரும் சகல விஷயங்களும் ஏற்பட்டுத் தீரவேண்டியவை என்று கருதுவது கஷ்டம். அவன் இதை ஒப்புக் கொள்ள முடியாது. நேர்ந்தவை நேர்ந்திருக்கக் கூடாதென்றே அவன் கருதுகிறான். அவன் வேறு என்ன தான் செய்யவேண்டும்? பகுத்தறிவுள்ள அவன் தன் இயற்கைக்கு ஏற்ற முறையில் தன்னைக் காத்துக்கொள்ள என்ன தான் செய்யவேண்டும்? துன்பத்திற்குக் காரணமான தன் பாவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதற்கு வருந்திக் கழுவாய் தேடவேண்டும்; உண்மையை உணர வேண்டும்.
மிருகம் நிகழ்காலத்தில் மட்டும் துன்பப்படுகிறது; அதற்காக அது இப்போது உடனடியாகச் செய்யும் வேலையே அதற்குத் திருப்தியளிக்கும். ஆனால் மனிதன் முந்திய காலத்திலும், நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் துயரப்படுகிறான்; எனவே, நிகழ்காலத்திற்குத் தேவையான செயல் மட்டும் அவனுக்குத் திருப்தி யளிக்காது. இப்போது ஏற்படும் துயரத்திற்குரிய முந்திய காலத்துள்ள காரணத்தையும் துயரத்தின் எதிர்கால விளைவையும் எண்ணியே அவன் செயல் புரிய வேண்டும். அதுவே அவனுக்குத் திருப்தி யளிக்கும்.
நான் காயப்படுகிறேன், சிறைப்படுகிறேன், அல்லது விலங்குகளால் தாக்கப்படுகிறேன் என்றால், இவற்றால் ஏற்படும் துயரம் நான் அநுபவிக்கும் துயரத்தின் ஒரு சிறு பகுதிதான். இப்போதைய துயரத்திற்கு என் வாழ்க்கையின் முந்திய பகுதியில் நான் காரணத்தைத் தேடுகிறேன்; மற்ற மனிதர்களுடைய செயல்களின் காரணங்களை ஆராய்கிறேன்; துயரத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க - நான் முன் செய்த தவறுகள் அல்லது பாவங்களைக் கண்டுபிடிக்க - நான் முயற்சி செய்கிறேன்; அப்படியானால் தான் துயரத்திலிருந்து விடுபட முடியும். ஆகவே, துயரம் எனக்கு இயற்கையாக ஏற்பட்டுத் தீரவேண்டிய விஷயமென்று தோன்றுவதில்லை. நான் கற்பனை செய்து கொள்வதில் சிறு அளவாயுள்ள துயரமும் பெரிய அளவில் பயங்கரமாகிவிடுகிறது.
மிருகத்தின் துன்பம் மிருக வாழ்வின் சட்டத்தை மீறி நடப்பதால் வருகிறதென்று அது உணரும்; இந்த மீறுதலால் வேதனை ஏற்படுகிறது. வேதனையை நீக்க அது உடனே செயலை மேற்கொள்கின்றது. துன்பத்தின் காரணம் வாழ்க்கையின் சட்டத்தை மீறியதன் விளைவு என்று பகுத்தறிவு உணர்ச்சிக்குத் தெரிகிறது. இதற்குக் காரணமான பாவத்தை உணருவதில், அப்பாவத்தை நீக்குவதே பரிகாரமென்றும் விளங்குகிறது. அதற்குரிய செயலைச் செய்வதே மனிதன் கடமை. மிருகம் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைக் குறைத்துக் கொள்ள உடனே ஏதாவது செய்துகொள்கிறது. மனிதன் தன் துன்பத்தின் காரணத்தை அறிந்து அதையே நீக்க முற்படுகிறான். இந்த முயற்சி அல்லது செயலே துன்பத்தின் வேதனையைத் தீர்க்கின்றது.
துன்பத்தால் மனிதன் செயல் புரியத் தூண்டப் படுவதையும், அச் செயலால் துன்பத்தின் வேதனை நீங்குவதையும் புரிந்து கொள்ளாததால் தான் துன்பம் ஏன் வருகிறதென்று அவன் மனம் கேட்கிறது.
மிருக இயல்பே வாழ்க்கை யென்று கருதுவோருக்குத் துன்பங்கள் அர்த்தமற்றவை, காரணமில்லாமல் ஏற்படுபவை என்று தோன்றும். பகுத்தறிவு உணர்ச்சியின் விதிப்படி மிருக இயல்பை அடக்கி வாழ்பவர்களுக்குத் துன்பமும், அவர்கள் முன் செய்த தவறும் தொடர்புடையவை என்பது விளங்கும். அதனால் தவறு அல்லது பாவத்தை ஒப்புக் கொண்டு, அதிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வார்கள். மிருகம் தன் துன்பத்தையும் அதற்குரிய தவறுதலையும் இடத்திலும் காலத்திலும் நிகழ்ந்ததைக் கொண்டு உணரும்; ஆனால், மனிதர்கள் துன்பத்தையும் அத்துன்பத்தின் காரணத்தையும் உள்ளுணர்ச்சியிலேயே தேடிக் காண்பார்கள். பாவத்தினால் துன்பம் ஏற்படுகிறது. பாவத்திற்காகக் கழிவிரக்கம் கொள்வதே துன்பத்திலிருந்து விடுவித்து நன்மையளிக்கும் என்று நம்புவார்கள்.
உலக வாழ்க்கையோடு தொடர்பு கொள்ளாமல், தான் செய்த பாவங்களால் உலகில் துன்பங்களைக் கொண்டு வந்ததை அறியாமல், தான் நிரபராதியென்று கருதிக் கொண்டு துன்பங்களை எதிர்த்து நிற்கும் மனிதன் துன்பங்களின் வேதனைகளை முழுதும் அநுபவிக்கிறான்.
துன்பத்தின் காரணம் பாவம் என்று பகுத்தறிவு எடுத்துக் காட்டுகிறது. வாழ்க்கையின் ஒரே கடமையாக விளங்கும் அன்பு இதை உறுதிப்படுத்துகிறது. மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் தவறுகளின் விளைவுகள் என்பதை அறிந்து, அவன் தன் அன்புக்குப் பாத்திரமானவர்களின் துன்பங்களைக் களைவதிலும் குறைப்பதிலும் ஈடுபடும் பொழுது அவனுடைய துன்பங்களில் பாதி ஒழிந்துவிடுகின்றன. குறைந்த அன்புள்ளவன் அதிகத் துன்பத்தை அனுபவிக்கிறான். ஆனால் முற்றிலும் காரண காரியப் பொருத்தத்துடன் அன்பின் காரணமாகவே சகல செயல்களையும் புரிபவனுக்கு எவ்விதத் துன்பமும் இருப்பதில்லை. மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கும், சந்ததியார்களுக்கும், தங்களோடு வாழும் மற்றவர்களுக்கும் காட்டிவரும் அன்பென்னும் சங்கிலித் தொடரை அறுக்க முயலும்போதுதான் துன்பத்தின் வேதனை ஏற்படுகிறது. அன்பே மானிட வாழ்க்கையை உலக வாழ்க்கையோடு பிணைத்து நிற்கிறது.
‘என்ன இருந்தாலும் துன்பம், சரீரத் துன்பம் இருக்கிறதே! இந்தத் துன்பம் எதற்காக? ஏன்?’ என்று மனிதர் கேட்கின்றனர். இந்தத் துன்பம் மனித வாழ்வுக்கும் நலனுக்கும் அவசியம். துன்பமில்லாவிட்டால் வாழ முடியாது. இந்தத் துன்பத்திலிருந்து முதன்மையான நலன்கள் பெருகுகின்றன.
வேதனை நமது தனி மிருக இயல்பைப் பாதுகாக்கிறது. மிருகங்களும் குழந்தைகளும் அடையும் வேதனையை உடனேயே மறந்துவிடுகின்றன. ஆனால், அறிவு பெற்ற மனிதன் மறக்கவும் முடிவதில்லை; அதைக் கற்பனை செய்தும் பெருக்கிக் கிறான். பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படையாத நிலையிலுள்ள மனிதனுக்கு வேதனை மிக அதிகமா யிராது. ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி தோன்றிய பிறகு மிருக இயல்பை அறிவுக்குப் பொருத்தமாக நடக்கும் படி கட்டுப்படுத்த இந்த வேதனையே உதவுகிறது. இந்த உணர்ச்சி வளர வளர, வேதனை குறைந்து கொண்டே வருகிறது.
பகுத்தறிவு உணர்ச்சியைப் பூரணமாய்ப் பெற்றிருக்கும் போதுதான் நாம் துன்பங்களைப் பற்றிப் பேச முடிகிறது. ஏனெனில், இந்த நிலையிலிருந்துதான் வாழ்க்கையே ஆரம்பமாகிறது. இதன் பின்புதான் துன்பங்கள் என்ற நிலைகள் ஆரம்பமாகின்றன. இந்த நிலையில் வேதனையைப் பற்றிய உணர்ச்சி மிக உச்ச நிலையை அடைய முடியும். அதே மிகக் குறைந்த நிலையையும் அடைய முடியும். இரண்டும் நம் உணர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. வேதனை ஓர் அளவில் தான் ஏற்படுகிறது. என்றாலும், அதைப்பற்றிய நம் உணர்ச்சியினால் வளர்ந்தோ குறைந்தோ தோன்றுகிறது. வேதனையை உடல் உணருவதற்கு ஓர் எல்லையுண்டு; அதற்குமேல் எல்லையைத் தாண்ட முடியாது. இது எல்லோருக்கும் தெரியும். அளவுக்கு மேல் வேதனை ஏற்பட்டால் நம் பிரக்ஞை நின்றுபோகிறது; மயக்கம் ஏற்பட்டுவிடுகிறது; அல்லது கடுமையான ஜுரம் ஏற்படுகிறது; அல்லது மரணம் சம்பவிக்கிறது. வேதனையின் எல்லை இவ்வளவுதான். ஆனால் இதைப்பற்றி நாம் எண்ணுவதில், வேதனை உணர்ச்சியை அளவில்லாது பெருக்கிக் கொள்ளவும் முடியும். மிக மிகக் குறைவாக்கிக் கொள்ளவும் முடியும். வேதனை வாழ்க்கையில் அவசியந்தானென்று கருதி, அதை வரவேற்றுக் கொண்டு, அதைத் தான் உணராமலே தாங்கிக் கொள்ள முடியுமென்றும், அதிலேயே இன்பமடைய முடியுமென்றும் ஒவ்வொரு மனிதனும் அறிவான். உயிரையே தியாகஞ் செய்பவர்களும், இன்பமாகப் பாடிக்கொண்டே தூக்குமேடை ஏறுபவர்களும் ஒரு புறமிருக்க, சாதாரண மனிதர்களும் தங்கள் தைரியத்தைக் காட்டுவதற்காகச் சிறிதும் முணுமுணுக்காமல் பல்லைக் கடித்துக் கொண்டு கொடிய துன்பங்களைத் தாங்குவதை நாம் பார்க்கிறோம். வேதனை அதிகரிப்பதற்கு ஓர் எல்லையுண்டு. வேதனையைப் பற்றிய உணர்ச்சியை எவ்வளவு வேண்டுமானாலும் நாம் குறைத்துக்கொள்ளவும் முடியும். ஆனால், மனிதன் தன் மிருக இயல்பையே வாழ்க்கையாக எண்ணி, எதைக் கொண்டு வேதனை உணர்ச்சியைக் குறைத்துக்கொள்ள வேண்டுமோ, அதைக் கொண்டே பெருக்கிக் கொள்கிறான்.
பிளேட்டோ[1] ஒரு கதை எழுதியிருந்தார். அதன்படி, ஆதியில் கடவுள் மனித வாழ்வு எழுபது வருடம் என்று கட்டளையிட்டிருந்தார். ஆனால், பின்னால் மனிதர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வந்ததைக் கண்டு, அவர் பழைய கட்டளையை மாற்றி, மனிதர்கள் தாங்கள் மரண மடையுங் காலத்தை அறிய முடியாமலிருக்கும்படி செய்துவிட்டார். இப்போது நாம் அதே நிலையிலிருக்கிறோம்.
இந்தக் கதையை நாம் சிறிது மாற்றிக்கொண்டு பார்ப்போம். ஆதியில் மனிதர்கள் வேதனையான உணர்ச்சிகளை அறிய முடியாத நிலையிலிருந்தார்கள். ஆகையால், துன்பமே தோன்றாம லிருந்தது. ஆனால், நாளுக்கு நாள் அவர்கள் நிலைமை மோசமாகி விட்டதும், அவர்களுடைய நன்மைக்காக வேதனை உணர்ச்சிகளை அறியும் உணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. இக்கதை வாழ்வுக்கு வேதனை அவசியமென்பதைத் தெளிவாக்கும்.
வேதனை உணர்ச்சி யில்லாமலே மனிதர்கள் படைக்கப்பட்டிருந்தால், அவர்களாகவே சீக்கிரத்தில் அது வேண்டுமென்று பிரார்த்தித்திருப்பார்கள். பிரசவவேதனை யில்லாவிட்டால், ஸ்திரீகள் உயிர் வாழவே தகுதியில்லாத பல குழந்தைகளையே பெறுவர். குழந்தை நெருப்பைத் தீண்டினால் கையைச் சுட்டு விடுகிறது; இந்த வேதனையால் அது மறுபடி நெருப்பைத் தீண்டாமல் தப்பித்துக் கொள்கிறது. எனவே, வேதனை யில்லாவிட்டால், குழந்தைகளும் இளைஞர்களும் தங்கள் உடல்களை அழித்துக்கொண்டு விடுவார்கள். வேதனை யில்லாவிட்டால், மனிதர்கள் தங்கள் தவறுகளையோ மற்றவர் தவறுகளையோ அறியவே முடியாது- அவர்கள் இந்த வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய முடியாமற் போகும். அவர்களுடைய செயலுக்கு அறிவுக்குப் பொருத்தமான இலட்சியம் இராது. உடல் அழிவதையே தங்கள் மரணமென்று பயந்து நடுங்குவதை மாற்ற முடியாது: அவர்கள் அன்பு பெறவும் முடியாமற் போகும். வேதனை யில்லாவிட்டால், மனிதனின் மிருக இயல்பு தன் விதியை மீறிச் செல்வதை எச்சரிக்க முடியாது: பகுத்தறிவு உணர்ச்சி துன்பத்தை அநுபவிக்கா விட்டால், மனிதன் உண்மையை உணர முடியாமல், தன் வாழ்க்கையின் நியதியை - சட்டத்தை - அறியாமலே இருந்து விடுவான்.
தனி மனிதர்களின் துன்பங்களையும். மானிட வர்க்கத்தின் தவறுகளின் காரணங்களையும், இவைகளைக் குறைப்பதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்வதே மனித வாழ்வின் கடமை. நான் என்னைப் போன்ற மற்றவர்களின் துயரங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்; என் பகுத்தறிவு உணர்ச்சியால், தனி மனிதர்கள் அடையும் துயரங்களிலிருந்து எல்லாவற்றிற்கும் பொதுவான காரணத்தைக் கண்டுபிடித்து, அதைத் துடைக்க வேண்டும்.
துயரப்படுவோருக்கு உதவியாகச் செல்லும்படி அன்பு நம்மைத் தூண்டுகின்றது; துயரத்தின் பொதுக் காரணங்களைக் கண்டு துடைக்கும்படி அது நம்மை ஏவுகின்றது. இதைச் செய்வதே மனிதன் தன் வாழ்க்கையில் நலனை அடையும் மார்க்கம்.
மனிதனின் வாழ்க்கை துக்க மயம். ஒரே ஒரு விஷயந்தான் மனிதனின் துயரத்திற்குக் காரணமாயுள்ளது. அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவனது நன்மை எந்த வாழ்க்கையில் இருக்கிறதோ, அதை வாழும்படி அவனை எது தூண்டுகிறதோ, அதுவே துயரத்திற்கும் காரணமானது.
உலகின் தவறுகளோடு நானும் கலந்துகொள்வதாலும், என் தவறுகளை நான் உணராததாலும், என் துன்பத்தை நானே அதிகப்படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையிலும் உலகின் வாழ்க்கையிலுமுள்ள உண்மையை உணராம லிருப்பதால், வாழ்வதற்கு வேண்டிய வல்லமையை நான் இழக்கிறேன்.
உண்மையான வாழ்க்கையைப் பற்றிய உணர்வும் அவ் வாழ்க்கையின் செயல் முறையுமே துன்பத்தைக் குறைக்கின்றன. தனி மனிதனின் வாழ்வுக்கும் அவனது இலட்சியத்திற்கும் இடையேயுள்ள அளவு கடந்த வேற்றுமையை அவை குறைத்து இரண்டையும் சமரசப்படுத்த உதவுகின்றன. மனிதன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், ஜனனத்திலிருந்து மரணம் வரையே நிலைத்திருக்கும் அவனது தனித் தன்மையில் வாழ்க்கை அடங்கவிடவில்லை என்பதை உணரவேண்டும். அவனது இலட்சியத்தைப் பற்றி அவனுக்கு ஓரளவு தெரிந்ததைக் கொண்டு, அதை அடைய முடியுமென்று நம்ப வேண்டும். அவன் வாழ்க்கையின் செயல் முறையும், உலக வாழ்க்கையின் செயல் முறையும், பிரிக்க முடியாமல் ஒன்றாகவே யுள்ளவை- இலட்சியத்தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அந்தச் செயல் முறை.
மனிதன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், அவன் வாழ்க்கையின் ஒரே உண்மையான பாதையில் செல்லும்படி உந்தப்படுகிறான். பகுத்தறிவு உணர்ச்சி அவனைத் தூண்டுகிறது; இல்லாவிட்டால், அவனுடைய தவறுகளால் ஏற்படும் துயரம் தூண்டுகிறது. அந்த உண்மைப் பாதையில் மேன்மேலும் பெருகிக் கொண்டிருக்கும் நன்மையே நிறைந்திருக்கிறது. அந்த நன்மையை எதுவும் அசைக்க முடியாது; அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை.
நன்மையை நாடிச் செல்வதே மனிதனின் வாழ்க்கை; அவன் நாடுவதே அவனுக்குக் கிடைக்கிறது.
உடல் சம்பந்தமான மிருக வாழ்வையே தன் வாழ்க்கையாகக் கொள்ளும்போது மனிதன் மரணத்தையும் துன்பங்களையும் தீமையாகக் காண்கிறான். அவன் விலங்குப் பான்மையில் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும்போதுதான் மரணமும் துன்பங்களும் அவனுக்குப் பிரமாதமாகத் தோன்றுகின்றன. கத்தரித் தோட்டத்துப் பொம்மைகளைக் கண்டு பறவைகள் பயப்படுவதுபோல், அவன் இவைகளைக் கண்டு அஞ்சுகிறான். அஞ்சி, உண்மை வாழ்க்கைக்கு ஓடி வருகிறான். உண்மையான வாழ்க்கை பகுத்தறிவின் சட்டத்திற்கு அடங்கி, அன்பின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மனிதன் தன் வாழ்க்கையின் சட்டத்தை மீறுவதே மரணமும் துன்பமும். இந்தச் சட்டப்படி வாழ்பவனுக்கு மரணமுமில்லை, துன்பமுமில்லை.
உழைத்துக் களைத்தவர்களும் பாரத்தைச் சுமப்பவர்களும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு ஓய்வளிக்கிறேன். எனது பாரத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு என்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்; ஏனெனில், நான் அடக்கமும் தாழ்மையுங் கொண்ட இதயமுடையவன். நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்குச் சாந்தி பெறுவீர்கள். எனது பாரம் எளிதானது; இலேசானது.’ (பரி. மாத்யூ.)
நன்மையை நாடுதலே மனிதனின் வாழ்க்கை. அவன் நாடுவதையே அடைகிறான்: மரணமற்ற வாழ்க்கையையும், தீமையற்ற நன்மையையும் அவன் அடைகிறான்.
- ↑ பிளேட்டோ - புகழ் பெற்ற கிரேக்க தத்துவ ஞானி.