உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/அக்டோபர் 2017/01

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"செயலும் செயல்திறனும்", பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய தன்வளர்ச்சி நூலாகும். செயல்களின் உயர்வு தாழ்வு, பெருமை இழிவு அறியாதவர்களே, தாழ்வான, இழிவான, எளிய செயல்களையே செய்ய முற்படுகின்றனர். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஒர் அடிப்படைக் காரணம், அவர்கள் செயல்களின் தரங்களையும் பெருமைகளையும் சிறப்புகளையும் அறியாமல் இருப்பதே ஆகும். இவற்றை அறிந்தவர்கள், கற்றவர்கள் பிறர்க்கு எடுத்துச் சொல்லுதல் வேண்டும். அவ்வாறு சொல்லுவாகளானால், அல்ல செயல்கள் மறைந்தொழியும்; நல்ல செயல்கள் தழைத்தோங்கும்.

இனி, செயல்கள் எவ்வெவ் வகையில், எவரெவர் மேற்கொள்ள வேண்டும் அவை எவ்வெவ்வாறு செய்யப் பெறுதல் வேண்டும்; என்னென்ன முயற்சிகள், முன்னெச்சரிக்கைகள், முன்னேற்பாடுகள் அவற்றுக்குத் தேவை; செயல்களுக்கு இடையில் வரும் இடையூறுகள், இடர்ப்பாடுகள், பொருள் தடைகள், ஆள்தடைகள் எவ்வெவ்வாறு இருக்கும் அவற்றை எப்படியெப்படிக் கடந்து மேற்செல்லுதல் வேண்டும்; அவற்றில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும், அவற்றை எப்படியெப்படித் தீர்ப்பது, என்றிவை பற்றியெல்லாம் மிக விளக்கமாகவும் மிக விரிவாகவும் இந்நூலுள் கூறப்பெறுகின்றன.

செயலும் செயல்திறனும்
1. முன்னுரை


1. செயலே உயிர்வாழ்க்கை:

‘வினையே ஆடவர்க்குயிரே’ என்பது குறுந்தொகை (135). ஆடவர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட வேண்டும்; செயலையே உயிராகக் கருதுதல் வேண்டும் என்பது அதன் பொருள். இக்காலத்து ஆடவர்கள் மட்டுமின்றிப் பெண்டிரும் செயல்திறன் மிக்கவர்களாக இருத்தலைப் பார்க்கின்றோம். எனவே மாந்தர் அனைவர்க்கும் செயல் பொதுவாகிறது. செயலே உயிர் வாழ்க்கை செயல் இல்லாதவரை வாழ்கிறார் என்று சொல்லமுடியாது.

2. பெருமைக்கும், சிறுமைக்கும் செயல்களே அடிப்படை

வாழ்க்கை வெறும் இன்ப துன்பத்தைப் - பெறுவதற்காக மட்டும் என்றே கொள்வோமானாலும் கூட, அந்த இன்ப துன்பங்களுக்கும் அடிப்படையாக இருப்பது செயல்தான். செயல் என்பதும் வினை என்பதும் ஒரு பொருள் தரும் சொற்கள். ஒருவன் பெருமையான வாழ்வும் ஒருவன் சிறுமையான வாழ்வும் வாழ்கிறான் என்று கொண்டால், அஃது அவனவன் செய்த, செய்கின்ற வினை செயல்களால் ஏற்படுவதே என்பது திருவள்ளுவர் கருத்து. அவனவன் செயலே அவற்றுக்கு அளவுகோல் ஆகும் என்று அவர் கூறுகிறார்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505)

(மேலும் படிக்க...)