விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2016/05
"உமார் கயாம்" உலகமகா கவிகளுள் ஒருவரான உமார் கயாமின் இளமைக் கால காதல் வாழ்வை, சுவையும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தொடர் கதையாக "காதல்" மாத இதழில் திரு. நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதினார். பதினொன்றாம் நூற்றாண்டில் பெர்ஷியாவில் (தற்பொழுதைய ஈரான்) பிறந்தவர் உமார் கயாம். பழைமைவாத மதத் தலைவர்களின் பல வகையான எதிர்ப்புகளுக்குமிடையே, ராஜவமிச ஆதரவினால் உமார் கயாம் மேற்கொண்ட வான் மண்டல ஆராய்வுகளும், கணித தெளிவு முறைகளும் பிற்கால வளர்ச்சிகளுக்கு பெரிதும் உதவின. அரசியல் மாற்றங்களினால் அவருடைய வாழ்வு நிலை அவ்வப்பொழுது பாதிப்புக்கு உள்ளாயினும், அவரது நான்கு வரிப் பாடல்கள் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
பழைய நிஜாப்பூர் நகரத்தில், பழைய புத்தகக் கடைகள் நிறைந்த ஒரு பஜார். புத்தக வியாபாரிகள் தூங்கி விழுந்து கொண்டிருந்தார்கள். வீதியில் பெண்கள் தங்க வாத்துகளைப் போல, தண்ணிர் ஜாடிகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு பழைய புத்தகக் கடையில் ரோஜா மொட்டைப் போல யாஸ்மி உட்கார்ந்திருந்தாள். யாஸ்மி ஒரு சின்னப் பெண். வயது பனிரெண்டிருக்கும். தலையில் ஒரு சின்ன முக்காட்டைப் போட்டுக் கொண்டு அவளுடைய தகப்பனாருடைய புத்தகக் கடையில் உட்கார்ந்திருப்பாள். அவளுக்கு ஓர் ஏக்கம். வீதியில் போகிற ஒரு பையன் கூடத் தன்னைக் கவனிப்பதில்லையே என்பதுதான் அது. சில சமயம் அவளுக்குத் தன் வீட்டில் உள்ளவர்கள் மேலேயே கோபம் கோபமாக வரும். வீட்டில் ஏதாவது வேலையாயிருந்தால்தான் அவளைப் பற்றி நினைப்பார்கள். இல்லாவிட்டால் கவனிப்பதேயில்லை. தகப்பனாருக்குப் புத்தகங்களும் அவற்றின் விலை மதிப்பும்தான் பெரிது. பெண் பெரிதல்ல. |