விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/மே 2018/18
"நித்திலவல்லி", நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதிய களப்பிரர் கால வரலாற்று புதினம்.
தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததனையே ‘இருண்ட காலம்’ என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு ஒரு நாவல் புனைவ திலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன். சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர் களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறி யிருக்கும். ஆகவே இப்படிப் பார்ப்பதுகூடப் பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற்போல் மாறி விடுகிறது. திருக்கானப்பேர்க் காட்டிலிருந்து மதுரைமாநகருக்குப் போகிற வழியில், மோகூரில் மதுராபதி வித்தகரைச் சந்தித்து விட்டுப் போகவேண்டும் என்று புறப்படும்போது பாட்டனார் கூறியிருந்ததை நினைத்துக்கொண்டான் இளையநம்பி. அவன் வாதவூர் எல்லையைக் கடக்கும்போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று. மருத நிலத்தின் அழகுகள் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும், சோலைகளும், நந்தவனங்களும், மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து வளர்ந்த மேடுகளுமாக நிறைந்திருந்தன. கூடடையும் பறவைகளின் பல்வேறு விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன. தோட்கோப்பாக வலது தோளில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த கட்டுச் சோற்று மூட்டையைக் கரையில் கழற்றி வைத்துவிட்டு, ஒரு தாமரைப் பொய்கையில் இறங்கி முழங்காலளவு நீரில் நின்று முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டு அமுதம் போன்ற அந்தப் பொய்கை நீரைத் தாகம் தீரக் குடித்தான் இளையநம்பி. குளிர்ந்த நீர் பட்டதும், வழி நடையால் களைத்திருந்த உடலுக்கு இதமாக இருந்தது. சூடேறியிருந்த கண்களில் சில்லென்று தண்ணீர் நனைந்ததும் பரம சுகமாயிருந்தது. |