விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 14
பிரிட்டிஷாருக்கு அமெரிக்காவின் பக்கபலமும் டாலர் உதவியும் தேவைப்பட்டது. அமெரிக்கர் பலர் இந்தியாவுக்கு அனுதாபம் காட்டி வந்தனர். இந்தியா விஷயத்தில் பிரிட்டன் நடந்து கொள்வது சரியல்ல என்ற கருத்து அமெரிக்காவில் பரவி வந்தது.
காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவின் உண்மை நிலைமை பற்றியும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பண்புகள் குறித்தும் உலகின் பல பகுதிகளிலும் பிரசாரம் செய்து வரத்தவறியதில்லை. இதன்மூலம் உலகநாடுகளின் அனுதாபத்தையும் ஆதரவையும் இந்தியா பெற முடிந்தது. அமெரிக்காவிலும் நம் நாட்டுத் தலைவர்களின் பிரசாரம் வேலை செய்திருந்தது.
’ஹிட்லர், முசோலினி ஆகியோரின் சர்வாதிகாரத்தைக் கண்டித்து, ஐரோப்பிய நாடுகளுக்காகப் பரிந்து பேசுகிற பிரிட்டன் இந்தியாவை அடிமை நாடாக வைத்திருப்பது ஏன்?’ என்ற குரல் அமெரிக்காவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. தனது கெளரவத்தைப் பாதுகாப்பதற்காக இங்கிலாந்து அந்நாட்டில் பிரசாரம் செய்ய வேண்டியது அவசியமாயிற்று.
அவ்வகையில் இந்தியசர்க்காரும், பிரிட்டிஷ் அரசாங்கமும் கோடிக்கணக்கிலே பணத்தைச் செலவு செய்தது. இந்திய சர்க்காரின் ஆதரவு பெற்ற கைக்கூலிகள் பலர், ஆங்கிலேயருக்கு சாதகமாக பொய் பிரசாரம் செய்து வந்தார்கள் அங்கே. ஆங்கிலேயர் ஆளுகையினால் இந்தியா பெற்று வருகிற இன்பங்கள், லாபங்கள் பற்றிக் கணக்கில்லாது கதைத்தார்கள்.
அமெரிக்காவில் தங்கி உண்மையை உலகுக்கு உணர்த்த முயன்ற ஒரு சிலரின் பேச்சு, கட்டுப்பாடான பொய்ப் பிரசாரத்தின் முன்னுல் எடுபடமுடியாது போயிற்று.
இச் சந்தர்ப்பத்தில்தான் உலக சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் மகாசபை ஒன்று கூடியது. அதில் கலந்துள்ள இந்திய சர்க்காரின் சார்பிலே ஸர். ராமசாமி முதலியார், ஸர். பிரோஸ் தான் நூன், ஸர் வி. டி. கிருஷ்ணமாச்சாரியார் ஆகிய மூவரும் சென்றனர் அவர்களது திறமையும் வாக்குவன்மையும் இந்திய சர்க்காரின் புளுகுப் பிரசாரத்துக்குத் துணை புரிந்தன.
ஐக்கிய நாடுகளின் சபைக்கும, அமெரிக்காவுக்கும் இந்தியா பற்றிய உண்மைகளை ஆணித்தரமாக எடுத்துச்சொல்ல வேண்டியது அவசர அவசியம் என்ற நிலைமை ஏற்பட்டது. சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்திருந்த விஜயலக்ஷ்மி அந்தப் பணியைச் செய்யத் துடித்தாள். அதற்கு அரசாங்கம் அனுமதிச் சீட்டு மறுக்கும் என்பது அவள் அறிந்தது தான்.
ஆகையினால், அமெரிக்கக் கலாசாலை ஒன்றில் கல்வி பெற்று வாழும் தன் புதல்வியர் இருவரையும் காணும் ஆசையினால் அமெரிக்கா செல்வதாகச் சொல்லி, அனுமதிச் சீட்டு கோரினள் அவள். சில்லறைத் தடைகள் எழுப்பி, பிறகு சீட்டு வழங்கியது அரசாங்கம். 1944 நவம்பரில் விஜயலக்ஷ்மி அமெரிக்காவுக்குக் கப்பலேறினாள்.
அமெரிக்கா சேர்ந்ததும், அங்கு வசித்த தேசபக்த இந்தியர்களின் துணைய்யோடு, தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டாள் அவள். இந்திய அநசாங்கத்தின் கையாட்கள் இந்தியாவின் பிரதிநிதிகள் அல்லர் : அவர்கள் வாக்கு இந்திய மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கவுமில்லை என்று வீரமுழக்கம் செய்தாள் அவள்.
”நான் இந்திய காங்கிரஸ் மகாசபையைச் சேர்ந்தவள். அமெரிக்காவில் உள்ள இந்தியன் லீக் என்னே ஒரு பிரதிநிதியாக ஏற்று, இந்தியாவின் உண்மை நிலைமையை எடுத்துச் சொல்லும் பொறுப்பை எனக்கு அளித்துள்ளது. இந்தியா இன்று இங்கிலாந்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இந்தியாவுக்குச் சுய அரசு இல்லை: சுயமான பிரதிநிதித்துவமும் இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தேர்ந்தெடுத்த நபர்களே உங்கள் சபையில் அங்கம் பெற்றிருக்கிறார்கள். இது மோசமான நிலைமை மட்டுமல்ல ; நியாய விரோதமும் கூட. ராஜ்ய தர்மத்துக்கு ஒத்து வராத செயலுமாகும். ஆகவே, சர்வ சுதந்திரம் பெற்ற சகல நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட சபை என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. உலக ஜனத்தொகையில் ஐந்திலொரு பங்கு கொண்ட இந்தியா பரிபூரண சுதந்திரம் பெற நீங்கள் பிரகடனம் செய்ய வேண்டும். ஏகாதிபத்திய ஆசையும் சுரண்டலும் மமதையும் ஒழிந்தாலன்றி உலகில் சமாதானம் நிலைக்காது. உங்கள் சபையும் தன் கடமையைச் செய்ததாகக் கொள்ள முடியாது. இவ்விதம் மனு ஒன்று தயாரித்து விஜயலக்ஷ்மி ஐக்கிய நாடுகளின் மகாநாட்டினருக்கு அனுப்பி வைத்தாள். அச்சபைக்கு வந்திருந்த பல தேசத்துப் பிரதிநிதிகளில் பெரும்பாலானவருக்கு பேட்டி அளித்து இந்தியாவின் பிரச்சினைகளை விளக்கிச் சொன்னாள். பத்திரிகை நிருபர்களைச் சந்தித்து இந்தியா பற்றிய உண்மைகளை உணர்த்தினாள். பிரிட்டிஷாரின் பொய்ப் பிரசாரத்தை எதிர்த்துப் பல வகைகளிலும் ஆதரவும், நன்மதிப்பும் தேடினாள்.
அவளது வசீகரத் தோற்றம், இனிய பேச்சு, மோகன முறுவல், சுறுசுறுப்பு, ஆர்வம், அழகான உடை முதலியவற்றைக் கண்டு வியந்த போற்றியது அமெரிக்கா. பல இடங்களிலும் வந்து பேச வேண்டும் என்று அழைப்புகள் குவிந்தன. அவள் பெயரும் புகழும் பரவாத இடம் இல்லை என்று ஆயிற்று.
கலிபோர்னியா, பால்டிமோர் ஆகிய மாகாணங்களின் சட்டசபைகள் விஜயலக்ஷ்மிக்கு வரவேற்பு அளித்து மரியாதை செய்தன. அவளது பிரசாரத்தின் வன்மையால், அமெரிக்காவும் இதர நாடுகளும் ’இந்தியாவை திருப்தி செய்தாக வேண்டும். உலக சமாதானத்துக்கு இந்தியா சுதந்திரம் பெற வேண்டியது அவசியமாம் என்று வற்புறுத்த முன் வந்தன.
அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு விஜயலக்ஷ்மி 1945 அக்டோபர் மாதம் லண்டன் நகரடைந்தாள். அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்தாள். அவளுடைய் கீர்த்தி மிகவும் ஓங்கியிருந்தது.
விஜயலக்ஷ்மியின் கணவர் ரஞ்சித் பண்டிட் 1944-ம் வருஷம் உயிர் நீத்தார்.தேச சேவையில் ஈடுபட்டு, வாழ்வில் பத்து வருஷ காலத்தை அவர் சிறையில் கழிக்க நேர்ந்தது.அது அவர் உடல் நலனை மிகுதியும் பாதித்து வந்து, மரணத்தை சீக்கிரமே கொண்டு வந்தது.