விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 8
’உப்பு’ என்கிற சொல் ’மந்திரம் போல்’ மாறியது 1980-ம் ஆண்டிலே,
’உப்புச் சொத்து, உங்க வீட்டு அப்பன் சொத்தா?’ என்று பொங்கி எழுந்தனர் இந்தியர். அவர்களுக்கு வழி வகுத்துக் காட்டினார் மகாத்மா காந்தி.
நாட்டு நிலைமை, மக்களின் மனப்பண்பு, கால நிலை இவைகளைச் சீர்தூக்கி, சரியாக எடைபோடக் கற்றிருந்த காந்திஜீ ஜனசக்தியைப் பயன்படுத்தி ஆட்சியினரை எதிர்க்க அதுதான் தக்க தருணம் என்று கணித்திருந்தார். அதற்கு சர்க்கார் புகுத்த விரும்பிய ’உப்பு வரி’ பயன்பட்டது.
’சட்டத்தை எதிர்ப்போம். வரி கொடோம். உப்புக் காய்ச்சுவோம்’ என்றார் காந்திஜீ. சாத்வீகமான மறியலுக்கான பயிற்சி நாட்டு மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.ஆண்கள் மட்டுமல்ல வீட்டினுள் பொழுது போக்கி வாழ்ந்து பழகிய பெண்களும் ஆயிரக் கணக்கில் படையில் சேர்ந்தார்கள்.
கமலா நேருவும், கிருஷ்ணாவும் ராணுவ வீரர்கள் மாதிரி உடுப்பு அணிந்து தொண்டர் படைப் பயிற்சி பெற்றார்கள்.
1930 மார்ச் 12-ம் நாள் காந்திஜி உலகப் பிரசித்தி பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார். அவஅவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட, சிலரும் உப்பு காய்ச்சி சட்டத்தை மீறினார்க்ள்.காந்தி கைது செய்யப்பட்டார்.
இந்தியா பூராவும் சத்தியாக்கிரக இயக்கம் உயிர் பெற்றது. பல இடங்களில் தலைவர்கள் சட்டத்தை எதிர்த்து உப்பு காய்ச்சி சிறை சென்றார்கள்
எங்கும் மறியல்-ஊர்வலம்-சொல்மாரி பதிலுக்கு தடியடி-சிறைவாசம்-அபராதம்!.
அலகாபாத்தில் 'உப்பு சத்தியகிரகம்' செய்து ஜவஹர்லால் நேரு தண்டனை பெற்றார். அவ்வளவு தான். நாட்டிலுள்ள நகர்களும் கிராமங்களும் சீற்றம் கொண்டு எழுந்துவிட்டது போல.தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை மீண்டும் பெறப் பாய்ந்தது போல, செயல் புரியத் துணிந்தன. திகைத்துத் திணறய அரசாங்கம் தடியடி-துப்பாக்கிப் பிரயோகம்-ஜெயில் தண்டனை என்று வீசி 'கப்சிப்' தர்பார் கடத்த முனைந்தது. எனினும் மக்களின் உணர்வை ஒடுக்கிவிட இயல வில்லை.
இப் போராட்டங்களின் போது, இந்திய நாட்டின் பெண்மணிகள் காட்டிய தீரம் போற்றுதலுக்குரியது. திகைக்கச் செய்வது. அக்காலத்தில் யாரும் எதிர்பார்த்திராத எழுச்சி அது.
கமலா, கிருஷ்ணா, விஜயலக்ஷ்மி போன்றவர்கள், வீட்டில் மலர்கள் போலவும் மெல்லிய பூங்கொடிகள் போலவும் வாழ்ந்து பழகியவர்கள், சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் வீடு வீடாகச் சென்று,
4 வீதி வீதியாக அலைந்து, தேச பக்திக்கனல் பொங்கிப் பரவுவதற்காக உழைத்தார்கள். அவர்கள் அப்படி அதிக உற்சாகத்துடன் அலைந்து திரிந்து பணியாற்றியது, தந்தை நேருவுக்குக் கூட அதிசயமாகத்தான் தோன்றியது. அவருக்கு அது பிடிக்கவுமில்லை, ஆயினும், அவர் தனது குடும்பத்தினரைக் கண்டித்து கட்டுப்பாடுசெய்து அவர்களை ஒடுக்கிவிட விரும்பவில்லை.
மோதிலால் நேரு அப்பொழுது வியாதியால் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஓய்வு தேவை என்று டாக்டர்கள் சிபாரிசு செய்தனர். 'அவருக்கு ஒய்வு ஜெயிலில் நிறையக் கிடைக்கும்' என்று சொல்ல விரும்பியது போல, அரசாங்கம் அவரைக் கைது செய்தது.
நாட்டிலே பரவி நின்ற சுதந்திர ஆர்வமும், கமலா-கிருஷ்ணா ஆகியோரின் சேவையும் விஜயலஷ்மிக்கு ஊக்கம் கொடுத்தன. அவளும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் புரியலானாள். அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து எங்கும் கர்ஜனை செய்து வந்தாள்.
தலைவர்களையும் தொண்டர்களையும் லட்சக் கணக்கில் சிறைகளுக்குள் தள்ளிய அரசாங்கம் பெண்களைக் கைது செய்யத் தயங்கியது. ஆகவே, வெறும் எச்சரிக்கைகளையும் தடைகளையும் காட்டி மிரட்டியது. விஜயலஷ்மி பொதுஜன இயக்கத்தில் பங்கு கொள்ளாமல் ஒரு மாத காலம் ஒதுங்கி வாழ வேண்டும் என்று உத்திரவிட்டது ஆனால், அவ் வீராங்கனை அதைச் சட்டை செய்ய வில்லை. தலைவர்கள் பலரும் ஜெயிலினுள் அடைபட்டுக் கிடந்ததால், 'நாட்டில் என்ன நடக்கிறது; ஏன் இந்த இயக்கம்; அரசாங்கம் எதற்காக எல்லோரையும் சிறையில் தள்ளுகிறது; நமது லட்சியம் என்ன?' என்பன போன்ற பிரச்னைகளை நாட்டினருக்கு எடுத்துச் சொல்லி விளக்க வேண்டியது தன் கடமை எனக் கொண்டாள் விஜயலக்ஷ்மி. பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் கூட்டங்கள் என்று பலப்பல இடங்களில் பேசினாள். கூட்டத்துக்குத் தக்கபடி, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற முறையில், எல்லோருக்கும் விளங்கக் கூடிய வகையில் சொல் விருந்து அளித்து வந்தாள் அவள். இனிமையான குரல்; கவர்ச்சிகரமான உச்சரிப்பு, ஆழ்ந்த கருத்து, உணர்ச்சியும் வேகமும் கலந்த பேச்சு—எல்லாம் கூடி அவளுக்கு 'நல்ல பிரசங்கி திறமையான பேச்சாளி' என்ற சிறப்பை ஏற்றுத் தந்தன.