விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/எரிமலை புகைந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7
எரிமலை புகைந்தது

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்க சுாலம் முதல் இந்த நாட்டின் செல்வ வளங்களை தமது நாட்டு வாணிபப் பொருளுக்கு ஈடாகப் பெற்றுச் செல்வதற்காக பரங்கிகள் இங்கு வந்தனர். இந்த முயற்சியில் முதலிடமாக. தமிழ்நாட்டின் தென்கோடியிலுள்ள துத்துக்குடிக்கு போர்ச்சுக்கீசியர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து தரங்கம்பாடியில் டச்சுக்காரரும் புதுச்சேரியில் பிரஞ்சுக்காரருடம். நிலை கொண்டனர். அவர்களை அடுத்த வந்த ஆங்கிலேயர், கி. பி. 1539-ல் சென்னைக் கடற்கரையை ஒட்டி பண்டகசாலை ஒன்றையும், கோட்டையையும் அமைத்தனர். ஆற்காட்டு நவாப்பின் ஆதரவுடன் தென் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அப்பொழுது தமிழ் நாட்டு நெசவாளிகள் உற்பத்தி செய்த கைத்தறித் துணிகளை கொள்முதல் செய்து இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலுமுள்ள சந்தைகளுக்கு அனுப்பி வந்தனர்.

இந்த வியாபாரத்தைக் கண்காணிப்பதற்காக அவர்கள் அமைத்த சென்னைக் கோட்டையில், போர்டு ஆப் டிரேடு என்ற வாணிபக் கழகம் செயல்பட்டு வந்தது. அதன் மேற்பார்வையில் நாகூர், பாளையங்கோட்டை, இராமனாதபுரம் ஆகிய ஊர்களில் கமர்ஷியல் ரெஸிடெண்டு (வர்த்தகபிரதிகள்) என்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். நாகப்பட்டினத்திலிருந்து லிருந்து தூத்துக்குடி வரையிலான தமிழ்நாட்டுக் கடற்கரை, அப்பொழுது சோழ மண்டலக்கரை என அவர்களால் வழங்கப்பட்டது. இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் கைத்தறித் துணிகளுக்கு மேல்நாடுகளில் நல்ல கிராக்கி இருந்தது. தமிழ் நாட்டின் 'Printed Calicos', வங்காளத்தின் மஸ்லின்கள் "Evening Due”, “Textile Breeze”. “Running water" என்று விரும்பி அழைக்கப்பட்ட மஸ்லின் துணிவகைகளும் நாட்டின் இதர பகுதிகளில் நெசவு செய்யப்பட்ட சாதாரண வெள்ளைத் துணிகளும் ஏராளமாக கொள்முதல் செய்து அனுப்பப்பட்டு வந்தன. ஆண்டுதோறும், ஒன்றரை மில்லியன் துணி சிப்பங்கள் மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் மஸ்லின் காலிகோ, டோரியாஸ், கைக்குட்டைகள், லாங்கிளாத், பெட்டு லாஸ் என்ற வகைகளும் அடங்கும். அவைகளின் மதிப்பு 2, 9 மில்லியன் பவுன்கள் என்று கணக்கிடப்பட்டது. இதில் மூன்றில் ஒரு பங்கு பெறுமான சரக்குகள் சோழமண்டலக்கரையான தமிழ் நாட்டைச் சேர்ந்தது என்பதை அன்றைய வாணிபப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.[1] இன்னொரு ஆய்வின்படி ஒரு சிப்பத்தில் 1000 கஜம் துணி கொண்டதாக உள்ள சிப்பங்கள் ஒரு டன் சரக்காகக் கருதப்பட்டது. சுமார் 500 டன் நிறையுள்ள கப்பலில் 34 மில்லியன் கஜத்துணி சிப்பங்களை நிரப்பி எடுத்துச் செல்ல முடியும். ஆண்டுதோறும் இங்கிருந்து இவ்விதமான துணிப் பொதிகளைச் சுமந்தவாறு பதினொன்று அல்லது பன்னிரண்டு கப்பல்கள் இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றன. மொத்தத்தில் 30 மில்லியன் கஜத்திற்கும் மிகுதியான துணி ஆண்டுதோறும் இங்கிருந்து கும்பெனியாரால் ஏற்றுமதி செய்யப்பட்டது.[2]

இத்தகைய சிறப்பான வாணிப சூழ்நிலை காரணமாக தமிழகப் பெண்களும், குழந்தைகளும்கூட நெசவுத் தொழிலில் ஈடுபடாத கிராமம் எதனையும் சோழ மண்டலக் கரையில் காண முடியவில்லை, என வரலாற்று ஆசிரியர் இராபர்ட் ஊர்ம் வரைந்து வைத்துள்ளார்.[3] இதன் காரணமாக 40,000 தறிகளுக்கு வேலை இருந்தன. இவைகளில் 50,000 நெசவாளிகள் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் பெரும்பகுதி, சென்னையிலும், கடலூர், உடையார்பாளையம், சின்னமன்னாடிபாளையம், சிர்காழி மற்றும் இராமனாதபுரம் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த சில ஊர்களில் இருந்ததாகத் தெரிகிறது.[4] இவர்கள் கைக்கோளர், சேடர், பட்டுநூல்காரர், சோனகர் என்ற பிரிவுகளைச் சார்ந்தவர்கள். இந்த வகை நெசவாளி, மாதம் ஒன்றுக்கு தனது மனைவி குழந்தைகள் உதவியுடன் இரண்டு பீஸ் துணிகளை நெசவு செய்து தர முடியும் என்றும், இவைகளின் மதிப்பு ருபாய் 4 என்றும் தெரியவருகிறது.

என்றாலும், கும்பெனியாரது ஒப்பந்தத் தறிகள் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இருந்தன. பொதுவாக, நெசவாளிகள் அப்பொழுது கும்பெனியாரிடம் பணி செய்வதற்கு விருப்பம் இல்லாதவர்களாக இருந்தனர். காரணம் அவர்கள் கும்பெனியாரது தொழில் மையங்களில் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலிக்கு கூடுதலான துணியை நெய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அவர்கள் பெற்ற கூலியில் ஒரு பீஸ் துணிக்கு நாலனா வீதம் தலைமை நெசவாளியினால் பிடித்தம் செய்து கொள்ளும் வழக்கமும் இருந்தது.[5] இதனைப் போன்றே நெசவாளிக்கு வழங்கப்படும் முன் பணத்திலும் ஒரு பகுதியை கும்பெனியாரது குமாஸ்தா இருத்தி வைத்துக் கொள்வார். அத்துடன் உற்பத்தி செய்த துணியின் தரத்தை குறைவாக மதிப்பிட்டு அதற்கு குறைவான கூலி கொடுக்கும் முறையும் இருந்து வந்தது.[6] இவைகளுக்கெல்லாம் மேலாக, அப்பொழுதைக்கப் பொழுது அதிகாரிகளது இடையீடும் தொந்தரவும் இருந்து வந்தன.[7]

நெசவாளர்களது வாழ்க்கை நிலை இவ்வளவு சிரமங்கள் நிறைந்ததாக இருந்தும், அன்றைய காலக் கட்டத்தில் அவர்களது தொழில் லாபம் தருகின்ற பெருந்தொழிலாக மதிக்கப்பட்டது. அதன் காரணமாக மறவர் சீமையின் மேலாதிக்கத்தை நவாப்பிடமிருந்து கும்பெனியார் பெற்றவுடன் மறவர் சீமையில் தங்களது தொழில் மையம் ஒன்றை துவக்கி கைத்தறி துணிகளை, முழுதுமாக கொள்முதல் செய்யும் திட்டம் ஒன்றை அவர்கள் தீட்டினர். கி.பி. 1792 டிசம்பரில் அங்குள்ள தறிகளையும், அவைகளின் உற்பத்தி விபரங்களையும் சேதுபதி மன்னருக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாக சேகரித்து அனுப்பிய கடிதத்தில், இராமநாதபுரம் பருத்தித்துணிகளுக்கு கூடுதலாக கோரப்பட்டுள்ள விலைகளை ஏற்றுக்கொள்ளாமல் இராமநாதபுரத்தில் கைத்தறித் துணி உற்பத்திக்கு முதலீடு செய்யுமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.[8] அத்துடன் அப்பொழுது நாகூரில் கும்பெனியாரது வர்த்தகப் பிரதிநிதியாக இருந்த மைக்கேல் என்பவரை மறவர் சீமைக்கு அனுப்பி அங்குள்ள நெசவுத்தொழில் பற்றிய நிலையை நேரில் அறிந்து வருமாறு செய்தனர். அவரும் நாகூரில் இருந்து கடல் மார்க்கமாக தேவிபட்டினம் துறைமுகத்தில் 24-1-93-ல் கரை இறங்கினார். இராமநாதபுரம் சீமையில் உள்ள நெசவாளர் குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டு 12-2-1793-ம் தேதியன்று சென்னை கவர்னருக்கு விரிவான அறிக்கையொன்றை அனுப்பி வைத்தார். இந்த அறிக்கையில் இராமநாதபுரம் சீமையின் கிழக்கு, மேற்கு வடக்குப் பகுதிகளில் உள்ள 800 தறிகளில் உற்பத்தியாகின்ற நெசவுத் துணியின் அளவு, அவை அனைத்தும் இராமநாதபுரம் மன்னருக்கோ அல்லது பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சுக்காரர்களுடைய ஏஜண்டுகளுக்கோ கிடைக்காமல் செய்து கிழக்கு இந்தியக் கம்பெனிக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளையும் அதில் கோடிட்டு காண்பித்து இருந்தார். அவ்விதம் செய்வதினால் இராமநாதபுரம் சீமையின் நெசவு தொழிலில் புதிய உத்திகளைப் புகுத்தி நெசவின் தரத்தையும் உயர்த்துவதுடன் நெசவாளர்களது நிலையிலும் நல்ல முன்னேற்றம் காண முடியும் என்றும், அதன் காரணமாக இராமநாதபுரம் சீமையில் மட்டும் ஆண்டு தோறும் நானுாறு முதல் ஐந்நூறு பொதிகள் கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்வதன் மூலம் ஏனைய வெளிநாட்டார் இத்துறையில் கொண்டுள்ள வணிகத் தொடர்புகளை தடுத்து நிறுத்திவிட முடியும் என்றும் உறுதிபட வரைந்து இருந் தார். மேலும், 1793 மார்ச்சில் நாகூர் கமர்ஷியல் ரெஸிடெண்டுக்கு எழுதப்பட்ட மடலில் 'மன்னரது முழு ஒத்துழைப்புடன்[9] தங்களது திட்டத்தை அமுல்படுத்தப் போவதாக கும்பெனியார் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அவர்களது பேராசையின் பிரதி ரூபம் விரைவில் வெளிப்பட்டு விட்டது. ஒரு அறிவிப்பு வடிவில் வரையப் பெற்ற நகல் ஒன்றை 15-3-1793-ல் பேண் குஷ் கலெக்டர் ஜேம்ஸ் லாண்டன் சேதுபதி மன்னரிடம் காண்பித்து அதற்கான ஒப்புதலைக் கோரினார்.[10]


அந்த அறிவிப்பின்படி, மறவர் சீமையில் உள்ள அத்தனை தறியாளர்களும் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு மட்டும் துணிகளை தயாரித்துக் கொடுக்க வேண்டும். வேறு எந்த சில்லறை அல்லது மொத்த வியாபாரியிடமும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளுதல் கூடாது.


தறிக்காரரிடம் எவ்வித வரியும் தறிக்கென வசூலிக்கப்பட மாட்டாது. அவர்களது குடியிருப்புக்களுக்கும். அல்லது விற்பனை செய்யும் துணிக்கும் எவ்வித வரியோ அல்லது கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் கோயில்களுக்கு மகமையோ பிராமணர்களுக்கு எவ்விதத் தர்மமோ கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.


கும்பெனியார், நெசவாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், அவர்களது உடமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவர்.


இராமநாதபுரம் சீமை நெசவாளர் உபயோகத்துக்கென பக்கத்து மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படும் பஞ்சு அல்லது நூலுக்கு எவ்வித சுங்கமும் வசூலிக்கப்பட மாட்டாது.


இதைப் போன்று மறவர் சீமைக்குள் கொண்டு வரப்படுகிற அல்லது வேறு மாவட்டங்களுக்கு கும்பெனியாரால் வற்றுமதி செய்யப்படுகிற துணிக்கு, சாலைகளிலும், படகுத் துறைகளிலும், சுங்கம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

சேதுபதியின் துறைமுகமாகிய பாம்பனில் இறக்குமதி செய்யப்படுகிற பொருள்களுக்கு எவ்வித சுங்கவரியும் கிடையாது.


இன்னும், இவைபோன்ற விபரங்கள் அடங்கிய அறிவிப்பை கலெக்டர் லாண்டன் இராமநாதபுரம் மன்னரிடம் கொடுத்து அவரது ஒப்புதலுடன் சீமை முழுவதும் பிரசித்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதனைப் பரிசீலித்து தமது பதிலை அளிப்பதாக அரசர் சொல்லிவிட்டார். கலெக்டரும் அரசரது ஒப்புதலைப் பெறுவதற்காக இராமநாதபுரத்தில் ஒரு வாரம் காத்திருந்தார். பொறுமையிழந்த கலெக்டருக்கு மன்னரிடமிருந்து வந்த முரண்பாடான பதில் ஏமாற்றத்தை அளித்தது முதலில் கும்பெனியாரது இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தி விட்டு பிறகு தமக்குள்ள சிரமங்களை கவர்னருக்கு அறிவிக்குமாறு மன்னரை கலெக்டர் வற்புறுத்தினார். அறிவிப்பில் கண்டுள்ளவை தமது நிர்வாகத்திற்கு இடையூறானவை என்று தெரியப்படுத்திவிட்டு கும்பெனியாரது உத்திரவை அமுல்படுத்த மன்னர் மறுத்துவிட்டார்.[11] இதனால் பெரிதும் வெறுப்படைந்ததாக 31-3-1793-ந் தேதி கவர்னருக்கு எழுதிய கலெக்டரது கடிதத்தின் வாசகம் தெரிவிக்கிறது.[12] அரசருக்கு தகுந்த கல்வி ஞானம் இல்லாத காரணத்தினாலும், தமது ஊழியர்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல் சேதுபதி மன்னர் செயல்படுவதாகவும், கும்பெனியாரிடமும் ஏனைய ஐரோப்பியரிடமும் மிகுந்த வெறுப்புடன் நடந்து கொள்வதாகவும் அதன் காரணமாக அவரது அலுவலர்கள் அனைவருமே பரங்கிகளிடம் அதே வெறுப்பு உணர்வைக் காட்டுவதாகவும் அறிவித்திருந்தார். தமது எண்ணத்தை எதிர்க்காத தமது இனத்தவரும், பணியாளர்களும் சூழப்பெற்ற அரசர், தமக்கென சுதந்திரமான பொய்மைச் சிந்தனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்த மடலில் குறிப்பிட்டி ருந்தார், நல்ல வேளையாக அந்த கலெக்டர் கும்பெனியாரது பணியில் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. !

சுங்கம் மூலமான வருவாயும் வரிவிதிப்பும் இல்லாது எந்த அரசும் செயல்பட முடியாது என்ற உண்மையை ஆங்கிலேயர் அறியாதவர்கள் அல்ல. என்றாலும், மறவர் சீமையின் கைத்தறித் தயாரிப்பு முழுவதையும் தாங்களே பெற்றுக் கொள்ளை இலாபம் அடித்து, இலாபக் கொள்ளையை இங்கிலாந்திற்கு ாடுத்து செல்ல வேண்டும் என்பது அவர்களுடைய பேராசை, ஆற்காட்டு நவாப் வழங்கிய அரசியல் ஆதிக்கம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்கள் அரசரை பயமுறுத்திப் பாத்தனர். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுவது இல்லை என்பதை அறிந்த பின்னர், அரசரது எதிர்ப்பு காரணமாக தொழில் மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டனர். ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நேரத்தை மீண்டும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்!

வடக்கே வங்காளத்தில் தங்களது நிலையை நிரந்தரப்படுத்திக் கொள்ள கும்பெனியார் அங்கிருந்த நவாப் சுராஜ் உத்தெளலாவிற்கு எதிராக அவரது உதவியாளர்களையே ஐந்தாம் படையாக உருவாக்கினர். மீர் ஜாபர், மீர் காசிம் என்ற அந்த பொம்மைகளைக் கொண்டே மாற்று அரசினை எற்படுத்தி அதற்கு கூலியாக அவர்களிடம் லட்சக்கணக்கான ருபாய்களை லஞ்சமாகப் பெற்றனர். அத்துடன் வங்க மாநிலத்தையும் தானமாகப் பெற்று, இந்த நாட்டில் ஆக்கிரமிப்பிற்கு அடித்தளம் இட்டனர்.[13] இத்தகைய ராஜதந்திரத்தில் சிறந்த அதே கும்பெனியார் தமிழகத்தில் அப்பொழுது இருந்த இரண்டு தன்னரசுகளில் ஒன்றான மறவர் சீமையை அடிமைப்படுத்த சேதுபதி மன்னரது பிரதானியை, அவருக்கு பாதகமாகப் பயன்படுத்தினர். அந்தப் பிரதானி முத்து இருளப்பபிள்ளை என்பவர். முதுகுளத்துர் பகுதியில் பிறந்தவர். மேல்நாட்டுக் கல்வியில் பயிற்சியும் கும்பெனியாரது தொடர்பும் பெற்றிருந்தார். அவரை, தளபதி மார்ட்டின்ஸ் சேதுபதி மன்னரிடம் பரிந்துரைத்து கி.பி. 1782-ல் இராமநாதபுரம் பிரதானியாக நியமனம் பெற உதவினார்.[14]

மன்னரது நிர்வாகத்திற்கு நன்கு உதவிய இவர், நாளடைவில் மன்னரது நம்பிக்கையை இழந்து கும்பெனியாருக்கும் ஆற் காட்டு நவாப்பிற்கும் விசுவாசம் உடையவராக மாறினார். இவரைப்பற்றி சேது சமஸ்தானப் புலவர்கள் பாராட்டிப் பாடிய பாடல்களுக்குக் கூட தாம் அருகதை அற்றவர் என்பதை அவரது பிந்தைய நடவடிக்கைகள் புலப்படுத்தின. நாட்டு நிர்வாகத்திற்கும் அரசியலுக்கும் மிகவும் புதியவரான இளம் மன்னருக்கு இரு கண்களாக இருந்து, பாரம்பரியம் மிக்க சேது நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்புள்ள அவர், தமது சுயநலத்திற்காக இராஜ விசுவாசத்தை இழந்தார். கி.பி. 1796-ல் சென்னைக் கவர்னருக்கு மன்னர் வரைந்த கடிதம் ஒன்றில் முத்து இருளப்பபிள்ளை கும்பெனி தளபதி மார்ட்டின்சுடன் கொண்டிருந்த நட்பு காரணமாக தமது நாட்டின் நிர்வாக விஷயங்களை தெரிந்துகொள்ள இயலாத வகையில் தம்மை இந்தப் பிரதானி நடத்தினார், என்ற குற்றச்சாட்டிலிருந்து அந்த உண்மை உறுதிப்படுகிறது.[15]


மேலும் அவர் சேதுபதி மன்னரது பிரதானி என்ற எண்ணமே இல்லாதவாறு மதுரைக்குச் சென்று, அங்கு கும்பெனியாரது குத்தகைதாரராக பதவிபெற்று மதுரையிலேயே வாழத் துவங்கினார். விபரம் அறிந்தபின்னர் அரசர் தமது பணியாட்களை அவரிடம் அனுப்பி அவரிடமிருந்து பிரதானிப் பதவிக்குரிய முத்திரை மோதிரத்தையும், இதரப் பொருள்களையும் பெற்று வருமாறு செய்தார்.[16] பின்னர் மதுரையில் மிகக் கொடுரமான, அடாவடியான நடவடிக்கைகளுக்கு அவர் காரணமாக இருந்ததுடன், மேலுார் கள்ளர்கள் அசம்பாவிதமான செயல்களில் ஈடுபடுவதற்கு அவர் தூண்டுதலாகவும் இருந்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மதுரைக் கலெக்டரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[17] மீண்டும் இராமநாதபுரத்திற்கு திரும்பிய அவர், தளபதி மார்ட்டின்சின் பாதுகாப்பில் இருந்து கொண்டு சமஸ்தானம் சம்பந்தப்பட்ட வரவு செலவுக் கணக்குகளை ஒப்படைக்காமல், காலம் கடத்தி வந்தார். சென்னையிலுள்ள கும்பெனியாரது தலைமையிடத்திற்கும், ஆற்காட்டு நவாப்பிற் கும், இராமநாதபுரம் மன்னர் இது சம்பந்தமாக பல ஒலைகள் அனுப்பியும் பலன் எதுவும் ஏற்படவில்லை.


மன்னரது மூத்த சகோதரி மங்களேஸ்வரி நாச்சியார் அரசுப் பதவிக்கு போட்டியிட்டு மன்னருக்கு எதிராக கவர்னரிடம் அளித்துள்ள புகார் மனுவில் பிரதானி முத்து இருளப்பபிள்ளையப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். தமது பணியை அவர் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் நிறைவேற்றவில்லை என்றும், வரவு செலவுக் கணக்குகளை ஒப்பைடக்கவில்லை என்றும், மோசடி மூலமாகச் சேர்த்துள்ள அரசுப்பணத்தை இப்பொழுது விண்செலவு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.[18] அதிகாரபூர்வமான இத்தகைய புகார்களையெல்லாம் முத்து இருளப்பபிள்ளைக்குக் கிடைத்த சிறந்த சான்றிதழ்களாக கருதி மீண்டும் அவருக்கு தக்க பதவி அளிக்குமாறு தளபதி மார்ட்டின்ஸ் கவர்னருக்குப் பரிந்துரைகள் அனுப்பிக் கொண்டிருந்தார்.[19] அத்துடன் சேதுபதி மன்னர் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்வதாக புனைந்து உரைத்த அறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருந்தார்.[20] ஏற்கெனவேயுள்ள எதிரிகளையும் சேர்த்து இப்பொழுது சேதுபதி மன்னருக்கு இவர்களும் புதிய வில்லன்களாக ஏற்பட்டனர். அவர்கள் வைத்த வத்திகள் பல வழிகளிலும் வேகமாக பற்றி எரியத் தொடங்கின.


ஆனால், இவர்களையெல்லாம் சேதுபதி மன்னர் பொருட்படுத்தவில்லை. தமது நலன்களைக் காக்க கும்பெனியாருடன் நேரடியாக மோதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். முத்திருளப்ப பிள்ளை, பிரதானியாக இருக்கும்பொழுது செய்த அனாவசியமான செலவுகளுக்கு அவரது முகாந்திரத்தை பெற வேண்டியதிருப்பதால் அவரை கும்பெனியாரது பாதுகாப்பிலிருந்து தம்முடைய வீரர்களது காவலுக்கு மாற்றிக் கொடுக்கு மாறு கவர்னரைக் கோரினார்.[21] இந்த கோரிக்கைக்கு இணங்காமல் பிரதானியை பத்திரமாக பாதுகாப்பதற்காக தங்களது காவலில் வைத்திருப்பதாகவும், அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு விட்டால் அவருக்குரிய தண்டனை வழங்கப்படும் என்றும் அரசருக்கு கும்பெனியார் சமாதானம் சொல்லினார்.[22] வரவு செலவுக் கணக்குகளை நேர் செய்வதில் ஓராண்டு காலமாக காலம் கடத்தி வருவதாகவும், அரசுப் பணியாளர்களை அவமரியாதையான முறையில் பேசிவருவதாகவும் முத்து இருளப்ப பிள்ளைப் பற்றி மீண்டும் மன்னர் குறை கூறி கவர்னருக்குத் தெரிவித்தார்.[23] அதற்கும் எவ்விதப் பலனும் இல்லை.


கி.பி. 1794-ல் மழை வளம் குறைந்து, மறவர் சீமை எங்கும் வறட்சி காணப்பட்டது. அதனைக் காரணமாக வைத்து கும்பெனியார் தஞ்சைச் சீமையிலிருந்து நெல்லை வர வழைத்து சிவகங்கை, இராமநாதபுரம் சீமைகளில் தானிய வியாபாரத்தில் இறங்க முற்பட்டனர். அதற்கு ஆதரவாக இறக்குமதி செய்யவிருக்கும் தானியத்திற்கு சுங்க வரிவிலக்கு வழங்க வேண்டுமென கும்பெனியார் கோரிக்கை விடுத்தனர்.[24] அவ்விதமே செய்கிறோம் என்று சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் இணக்கமான பதில் கொடுத்து கும்பெனியாருக்கு நல்ல பிள்ளைகளாகி விட்டனர்.[25] ஆனால், சேதுபதி மன்னர், கும்பெனியாரது கோரிக்கையை முற்றாகப் புறக்கணித்தார். அவர் சிந்தனை வேறுவிதமாக செயல்பட்டது. மறவர் சீமையில் வறட்சி என்பது புதுமையான நிகழ்ச்சியல்ல. அங்கு ஆண்டு தோறும் மழை வளம் ஒரே சீராக இருப்பது இல்லை. அங்குள்ள மக்கள் அந்த உண்மையை நன்கு அறிந்து அதில் அனுபவப் பட்டவர்கள். அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தேவைப்படும் தானியம் எவ்வளவு என்பதும் அரசருக்குத் தெரியும். இறை ஆயிரம் கொண்டான்' என்ற இராமநாதபுரம் அரண்மனைக் களஞ்சியத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இருப்பு குறைந்து விட்டால், மக்களுக்குத் தேவையான நெல், அல்லது அரிசியை மன்னரே தமது வியாபாரப் பிரிவு மூலமும், தமது நாகூர் ஏஜண்டு சாமி செட்டி மூலமும், தஞ்சைப் பகுதியிலிருந்து கொள் முதல் செய்து, மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வருவது உண்டு. இந்த விபரங்கள் இராமநாதபுரம் சமஸ்தான 1790, 1794 ஆண்டு வரவு செலவுக் கணக்குகளிலிருந்து தெரிய வருகிறது.[26]


ஆதலால், மறவர் சீமை மக்களுக்கு உதவ கும்பெனியார்தான் தானியங்களைக் கொண்டு வந்து வழங்க வேண்டுமென்பதும் இல்லை. அந்த ஆண்டைவிட மிகவும் மோசமான முந்தைய ஆண்டுகளில் இடர்ப்பாடான சூழ்நிலைகளை சேது மன்னர்கள் சமாளிக்கவில்லையா? கும்பெனியார் தானியங்களைக் கொண்டு வந்து வியாபார முறையில், மறவர் சீமையில் விற்க முன்வரும் பொழுது, அதற்கு உரிய சுங்கத்தை செலுத்தினால் என்ன? இதற்கு ஏன் வரிவிலக்கு கோர வேண்டும்? சென்ற ஆண்டில் கைத்தறி துணிக் கொள்முதலில், ஏகபோக உரிமை கொள்ள முயன்றது போல, இப்பொழுதும் தமக்கு எதிராக தானிய வியாபாரத்திலும் கும்பெனியார் நிலை கொள்வதற்கான சூழ்ச்சி இதுவென சேதுபதி மன்னர் சந்தேகம் கொண்டார். எற்கனவே திருநெல்வேலி சீமையில் கும்பெனியாரும் இன்னும் சில பரங்கிகளும் பரவலாக தானிய வியாபாரத்தில் ஈடுபட்டி ருந்ததையும் மன்னர் அறிவார்.[27] வறட்சியைக் காரணமாகக் கொண்டு மறவர் சீமை அரசியலில் அவர்கள் நுழைவதற்கான மறைமுக முயற்சி என நம்பினார்.


மேலும், அப்பொழுதைய வறட்சி நிலை மறவர் சீமையில் மட்டும் நீடிக்கவில்லை. கும்பெனியாரது நேரடிப் பொறுப்பிலுள்ள திருநெல்வேலிச் சீமையிலும் அது பரவியிருந்தது. அங் கெல்லாம் கும்பெனியார் இத்தகைய அவசர இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை ஸ்ரீவில்லிப்புத்துார் கோட்டையிலுள்ள தளபதி ஒருவர் சென்னைக்கு அனுப்பிய அவசர ஓலை ஒன்றிலிருந்து தெரியவருகிறது. அந்தக் கடிதத்தில் வறட்சி காரணமாக தானிய விலை மிக மிக அதிகமாக உயர்ந்து விட்டது என்றும் கும்பெனியாரது போர்வீரர்கள் தானியங்களை வாங்க இயலாமல் மிகுந்த அல்லலுக்கு ஆளாகி உள்ளனர் என்ற விபரத்தைத் தெரிவித்து இருந்தார்.[28] இந்த நிலையில் இராமநாதபுரம் மன்னர் கும்பெனியார் கோரினவாறு தஞ்சையிலிருந்து இறக்குமதியாக இருக்கும் தானியத்துக்கு சுங்கவரி விலக்கு வழங்க மறுத்து விட்டார். உடனே கும்பெனியார் ஆற்காட்டு நவாப்பை அணுகி இராமநாதபுரம் மன்னருக்கு தகுந்த உத்திரவை அனுப்பி வைக்கச் செய்து தங்களது கோரிக்கையை அங்கீகரிக்குமாறு முயற்சி செய்தனர்.[29] இதனைத் தொடர்ந்து ஆற்காட்டு நவாப்பின் கண்டிப்பான உத்திரவையும் ஏற்க சேதுபதி மன்னர் மறுத்து விட்டார். மறவர் சீமையின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கை எந்தத் திக்கில் இருந்து வந்தால் என்ன?


அடுத்து அடுத்து பல உத்தரவுகள். அதிகார ஆர்ப்பாட்டங்கள், மிரட்டல்கள், எதனையும் சேதுபதி மன்னர் செவிமடுக்கவில்லை. பொருட்படுத்தவில்லை.[30] இதற்கிடையில் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் இராமநாதபுரம் சீமையின் வடமேற்குப் பகுதிகளில் புகுந்து நடத்தி அத்துமீறல்களை விரிவாக எடுத்துரைத்து அவர்களை ஒடுக்குவதற்கு உதவியாக சிவகங்கைச் சீமையை தமது மேற்பார்வையில் மாற்றி உத்தர விடுமாறு கும்பெனியாரை மன்னர் கோரினார்.[31] இந்த கோரிக் கையை ஏற்றுக் கொள்ள இயலாவிட்டால் தமது முயற்சிக்கு ஆதரவாக இராணுவ உதவியாவது வழங்குமாறும், அவர் கேட்டிருந்தார்.[32] அத்துடன் சிவகங்கைச் சீமைக்காரர்கள் அதீதமான முறையில் சிவகங்கை அரசி வேல்நாச்சியாரையும் இளவரசி வெள்ளச்சியையும், சிவகங்கை அரண்மனைக்குள் சிறை வைத்திருப்பதாகவும், அந்த அரச வழியினரான படமாத்துார் கவுரி வல்லபத் தேவரை சிவகங்கை சேர்வைக்காரர்கள் கொன்றுவிடச் செய்த முயற்சியினின்று தப்பிய அவர் இராமநாதபுரம் கோட்டையின் அடைக்கலம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும், சிவகங்கை அரசியாரை சிறை மீட்பதற்கும், அந்தச் சீமை அரசை கவுரி வல்லபத் தேவருக்கு வழங்கி நல்லாட்சி நடைபெற உதவுமாறும் யோசனைகள் தெரிவித்திருந்தார். கும்பெனியார் அவரது பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.[33] என்றாலும் பொறுமையைக் கையாளுமாறு கும்பெனியாரும் நவாப்புமாக சேதுபதி மன்னருக்கு வழங்கிய அறிவுரைகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லை.[34]


பொறுமை என்பது நல்ல பண்புதான், ஆனால் அதனை எப்பொழுது கடைப்பிடிப்பது? தன்மான உணர்வுகளை முறுக்கிவிட்டு, தலைக்குனிவை ஏற்படுத்தி, பொதுமக்களது கண்ணிரையும், செந்நீரையும் சிந்தச் செய்து அவலம் மிகுந்த ஆற்றொணாத நிலையை எய்திய பிறகு எங்ங்ணம் பொறுமையாக இருப்பது? கைகட்டி வாய் புதைத்து வீணாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது பொறுப்புள்ள மன்னருக்கு பொருத்தமான செயல் அல்லவே. வன்முறைகளை ஒழிக்க சரியான வழி வன்முறைதான். மறக்குடிப் பிறந்த வீர மறவனது பிறவிப் பண்பும் அதுதானே. இவ்வாறுதான் சேதுபதி மன்னரது சிந்தனை சிறகடித்தது.

இராமநாதபுரம் படைகள் தங்களது சீமைக்குள் புகுந்து மக்களது உயிருக்கும் உடலுக்கும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாக சிவகங்கைச் சேர்வைக்காரர்கள், கும்பெனியாருக்கும் நவாப்பிற்கும் பலமுறையீடுகளை அனுப்பிவைத்தனர்.[35] கும்பெனியாரது ஒற்றனான மார்ட்டின்சும் இராமநாதபுரம் மன்னருக்கு மேல் இடத்து உத்தரவுகளை மதித்து நடக்கும் மனோபாவம் இல்லை என்று தெரிவித்து இருந்ததுடன் இப்பொழுதைய பூசல்களுக்குக் காரணம் சிவகங்கைச் சீமையை மீண்டும் இராமநாதபுரத்துடன் இணைத்துவிட வேண்டும் என்ற சேதுபதி மன்னரது இடைவிடாத எண்ணந்தான் என்பதையும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தான்.[36] இத்தகைய பயனற்ற பிரமையில் ஈடுபட்டுள்ள சேதுபதி மன்னரிடமிருந்து அறியாமையையும் கொடுமை மிகுந்த அட்டுழியங்களையும் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும் என்று தனது கணிப்புக்களை அவன் இன்னொரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.[37]

தொடர்ந்து சேதுபதி மன்னருக்கும் சிவகங்கைச் சேர்வைக்காரர்களுக்கும் நவாப் அறிவுரைகள் அனுப்பி வந்தார். அவர்கள் இருவரும் தங்களது வன்செயல்களைத் தவிர்த்து அமைதிப் போக்கை கைக்கொள்ள வேண்டும் என்பது அவரது அறிவுரைகளின் சுருக்கமாகும்.[38] ஆனால் அதே சமயம் கும்பெனி கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அடங்காப்பிடாரியான' சேதுபதியை சிறையில் வைத்து விட்டால் மறவர் சீமையின் சிக்கலைத் தீர்த்துவிடலாம் என்ற கருத்தையும் அவர் குறிப் பிட்டிருந்தார்.[39] தங்களது தலைமை நிலையமான கல்கத்தாவிற்கு இந்த விவரங்களைத் தெரிவித்த கும்பெனியார் மேல் நடவடிக்கை பற்றிய ஆலோசனைகளைக் கோரினார். சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் தண்டித்து ஒடுக்குமாறு கவர்னர் ஜெனரலது பதில் கிடைத்தது.[40] இதற்கிடையில் ஆற்காட்டு நவாப் திருச்சிக் கோட்டையிலுள்ள தமது மகன் உம்தத்துல் உம்ராவிற்கு அவசர ஓலை அனுப்பி, இராமநாதபுரம் பேஷ் குஷ் கலெக்டரை சந்தித்து, மறவர் சீமை பிரச்சினைக்கு முடிவு ஏற்படுத்துமாறு கட்டளை பிறப்பித்து இருந்தார்.[41] அதுவரை நிகழ்ந்துள்ளவைகளை கலெக்டர் பவுனி இளைய நவாப்பிற்கு தெரிவித்து அந்த நிகழ்ச்சிகளின் பின்னணியான காரணங்களையும் விளக்கிக் கூறினார். சிவகங்கைச் சேர்வைக்காரர்களின் நடவடிக்கைகளில் உள்ள அநீதிகளை அவர் சுட்டிக் காண்பித்ததுடன், அவர்கள் கும்பெனியாரது கட்டளைகளைப் பெற்றவுடன் அவைகளுக்கு கட்டுப்பட்டு பணிந்துள்ள நிலையையும், இராமநாதபுரம் மன்னர் கும்பெனியாரது கட்டளைகளுக்குப் பிறகும் சிறிதுகூட அடக்கமும் பணிவும் இல்லாமல் தங்குதடையற்ற அடாவடித்தனத்தில் ஆழ்ந்து இருப்பதையும் இளைய நவாப்பிற்குத் தெரிவித்தார்.

மேலும், இந்த இருதரப்பினருக்கு இடையே எழுந்துள்ள பிணக்கு, பூசல்களுக்கு ஆதாரமான சிக்கல் அப்படியே முடிவு பெறாமல் இருந்து வருவதாலும், சேதுபதி அரசரது சுயேச்சையான மனோபாவம், சுதந்திரமான செயல்முறை ஆகியவைகளிலிருந்து-அவரது போக்கில் மாற்றம் ஏதும் ஏற்படும் என தமக்கு நம்பிக்கையில்லை என்ற கருத்தையும் தெரிவித்தார். அத்துடன் இராமநாதபுரம் அரசரால் எந்தச் சூழ்நிலையிலும் பன்னிரண்டாயிரம் போர் வீரர்களை களத்தில் இறக்கிவிடும் வாய்ப்பு இருப்பதுடன், சிவகங்கைச் சீமையைக் கொள்ளையிட்டுப் பாழாக்கிய மேல்நாட்டுக் கள்ளர்களையும், திருநெல்வேலிச்சீமை பாளையக்காரர்களையும், தமது அணியில் சேதுபதி மன்னர் ஆயத்தமாக வைத்துள்ளார் என்றும் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படுமானால் அவர்கள் ஆயுதம் தாங்கியவர்களாக சேதுபதி மன்னரது உதவிக்கு ஓடோடி வருவார்கள் என்றும் அதன் விளைவை தம்மால் விவரித்துச் சொல்ல இயலாத நிலையில் இருப்பதாக கலெக்டர் இன்னொரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.[42]


அதனை ஆராய்ந்த சென்னைக் கவர்னர், மன்னரை நேரில் விசாரித்து அவரது சுயேச்சையான போக்கிற்கு முகாந்திரத்தை பெற்று அனுப்புமாறு கலெக்டருக்கு உத்தரவு அனுப்பினார். தொண்டியில் உள்ள கச்சேரியில் தம்மை வந்து சந்திக்குமாறு சேதுபதி மன்னருக்கு கலெக்டர் பவுனி 'சம்மன்' அனுப்பி வைத்தார்.[43] பேஷ்குஷ் கலெக்டரது தலைமையிடமாக அப்பொழுது தொண்டி இருந்து வந்தது. மணப்பாறையிலிருந்து திருநெல்வேலி வரையிலான பகுதி பாளையக்காரர்களது வரவு செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து அவர்கள் செலுத்த வேண்டிய பேஷ்குவி தொகையை நிர்ணயம் செய்யும் ஜமா பந்தியை அங்கு கலெக்டர் நடத்தி வந்தார். சிவகங்கைச் சீமையின் பகுதியான தொண்டிக்கு வருவதில் சேதுபதி மன்னருக்கு ஆட்சேபணை இருந்தால், அந்த ஊருக்கு அண்மையிலுள்ள இராமநாதபுரம் சீமையான முத்துராமலிங்கபுரம் சத்திரத்தில் தங்களது சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்ற மாற்று யோசனையும் கலெக்டரது உத்திரவில் கண்டிருந்தது.[44] ஆனால் பின்னர் சென்னைக் கோட்டைக்கு அனுப்பிய மடலில் தமது இந்த உத்தரவை இராமநாதபுரம் மன்னர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தை கலெக்டர் வெளியிட்டிருந்தார்.[45] இராமநாதபுரம் மன்னரது இத்தகைய அவமரியாதையான நடவடிக்கையை புறக்கணித்து விட்டால், இராமநாதபுரம் மன்னரைச் சார்ந்த ஏனைய பாளையக்காரர்களும் கும்பெனியாரது உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாது உதாசீனமாக நடந்து கொள்ளும் நிலை தோன்றிவிடும் என்ற குறிப்பினையும் சேர்த்திருந்தார். திருமலை நாயக்க மன்னரது ஆட்சிக்காலம் தொட்டு மதுரை நெல்லை சீமையிலுள்ள எழுபத்து இரண்டு பாளையக்காரர்களுக்கும் மறவர் சீமையின் மன்னர்தான் தலைவராக அப்பொழுது கருதப்பட்டு வந்தார்.[46]


இந்தச் சூழ்நிலையில் தூத்துக்குடியில் இருந்து பாம்பன் நீர்வழியைக் கடந்து, சென்னை செல்லும் கும்பெனியாரது இரண்டு சரக்குக் கப்பல்களை பாம்பன் துறைமுகத்தில், மன்னரது பணியாளர்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு கப்பலுக்கு சுங்கச் சோதனையிலிருந்து விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கும்பெனியார் தரப்பில் விளக்கம் தரப்பட்டும், ஏனைய கப்பல்களைப் போன்று வரிசைக் கிரமத்தில் உரிய சோதனையையும், சுங்க விதிப்பையும் முறையாக முடித்தபிறகுதான் கும்பெனியாரது இரண்டு கப்பல்களும் பாம்பனை விட்டு புறப்படுவதற்கு சேதுபதி மன்னரது பணியாளர்கள் அனுமதித்தனர். இதனால் திட்டமிட்டபடி அவைகள் சென்னைக்குப் போய்ச் சேர்வதில் வீணாகத் தாமதம் ஏற்பட்டு அதனால் சென்னையிலிருந்து இங்கிலாந்திற்கு புறப்படும் கப்பலும் தாமதமாகப் புறப்படும் நிலை ஏற்பட்டதென கும்பெனியார் ஆயாசப்பட்டனர்.[47] மன்னர் மீது ஆத்திரங் கொண்டனர். சர்வ வல்லமை படைத்த ஆங்கிலேயருக்கு மறவர் சீமையில் தகுந்த மதிப்பு இல்லை என்பதும், சேதுபதி மன்னரது நிர்வாகம் தங்களுக்கு சிறிதளவு கூட வளைந்து கொடுக்க முன்வரவில்லை என்பதும் அவர்களுக்கு உள்ளப் புழுங்கல். மன்னரது உதாசீனத்திற்கு இந்த நிகழ்ச்சியையும் ஒரு எடுத்துக்காட்டாகக் கலெக்டர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.[48]

இவைகளையெல்லாம் அறிந்த கும்பெனியாரது மேலிடம், சேதுபதி மன்னர்மீது கடும்சினம் கொண்டு சீறியது. கலெக்டரது சமன்களுக்கு மன்னர் ஆஜராக வேண்டும் என்றும், ஏற்கெனவே அறிவித்திருந்தவாறு தஞ்சையிலிருந்து இறக்குமதி செய்யவிருக்கும் தானிய பொதிகளுக்கு சுங்க விதிப்பிலிருந்து விலக்கு வழங்க வேண்டுமென்றும் கட்டளைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த முரண்பட்ட சூழ்நிலையை பயன்படுத்தி, ஆழ்ந்த சிந்தனையும் கவனமும் இல்லாமல் வெள்ளையருக்கு விட்டுக் கொடுத்த மறவர் சீமையை மீண்டும் பெறுவதற்கு நவாப் முயற்சி செய்தார். அதன் தொடர்பாக தமது நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொள்ளும் முந்தைய பிரதானி முத்து இருளப்பபிள்ளையை இராமநாதபுரம் சீமை பேஷ்காரராக நியமித்து சேதுபதி மன்னரது கொடுமைகளைக் களைந்து விடலாம் என்ற யோசனையை நவாப் கும்பெனியாருக்குத் தெரிவித்தார்.[49] ஆனால் நவாப்பைவிட, இப்பொழுது மறவர் சீமையில் கும்பெனியார் மிகுந்த அக்கறையுடன் இருந்தனர். தக்க சூழ்நிலையையும், சந்தர்ப்பத்தையும் அவர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆதலால், நவாப்பின் அனுமதியோ ஆலோசனையோ அவர்களுக்கு தேவைப்படவில்லை.

சேதுபதி மன்னரது ஆயுதக் கிடங்கு, வெடி மருந்து இருப்பு, போர் வீரர் எண்ணிக்கை பற்றிய முழு விபரங்களையும் மற்றும் மன்னரது நிலக்கொடை பெற்று, அனுபவித்து வரும் போர்ப் பயிற்சி பெற்ற நாலாயிரம் வீரர்கள் நாட்டுப்புறத்தில் பல கிராமங்களில் வசித்து வருவதையும் இன்னும் பலவித ஆயுதங்களை ஏந்தக்கூடிய ஆறாயிரம் மக்கள், மன்னரது அறிவிப்பு பெற்ற உடனே கோட்டையில் குழுமிவிடக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்றும் தமது அறிக்கையில் மார்ட்டின்ஸ் துலக்கி இருந்தார். என்றாலும் அங்கு அப்பொழுது வறட்சி பரவி இருந்ததால் வறட்சியின் கொடூரத்தையும் கும்பெனியாருக்கு தளபதி மார்ட்டின்ஸ் அனுப்பிய மடல் பிரதிபலித்தது. பஞ்சம் பிழைப்பதற்கு குடி மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களை விட்டு வெளியேறினார்கள். எங்கும் புல், பூண்டுகூட காணப்பட வில்லை. பொது மக்களுக்கும் குடிமக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் இல்லை. கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணிரும் பருகுவதற்கு தகுதியற்ற உவர்நீராக இருந்தது. தஞ்சையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள அரிசிதான் மக்கள் உயிரைக் காத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அங்கு ராணுவப் படையெடுப்பை மேற்கொண்டால் குதிரைப்படை அணிக்கும், பாரவண்டி மாடுகளுக்கும் தீவனத்திற்கு என்ன செய்வது என வினவி இருந்தார்.[50] கும்பெனியார் தங்களது இரகசியத் திட்டத்தை அப்பொழுது மேற்கொள்ள முனைய வில்லை. அங்கு மழைவளம் ஏற்படும் வரை காத்து இருந்தனர்.

ஆதலால் இராமநாதபுரம் சீமை மீதான கும்பெனியாரது இரகசியப் படையெடுப்பு தாமதப்பட்டது.


 1. Venkataraman, K. S. Handloom Industry in South India (1940)
 2. Dodwell, H., Madras Weavers under the company (1910), p. 41
 3. Robert Oorme, Historical Fragments of Mogul Empire, p. 413
 4. Dodwell, Indian Historical Records Commission Proceedings Meetings, Vol. IV. (1922), p. 42
 5. Dodwell, H., Madras weavers under the Company, p. 45
 6. Ibid
 7. Ibid
 8. Revenue Consultations, Vol. 50, 1793, pp. 657-58. 2. Public Consultations, Vol. 182-A, 12-2-1793, pp. 852-862
 9. Guide to the Records, Tanjore District, Vol. No. 3345, 27-2-1793
 10. Revenue Consultations, Vol. 50 A. (1793), pp. 539-56
 11. Revenue Consultations, 50 A (1793), pp. 586, 87
 12. Ibid pp. 552-78
 13. Edmond Burke-Impeachment of Warren Hastings (London), 19 () 8, VoI. I
 14. Revenue Consultations, Vol. 62, 10–4–1795, pp. 1 268, 69
 15. Revenue Consultations, Vol. 62, 10-4-1795, p. 1268, 69
 16. Revenue Consultations, Vol. 62, 10–4–1795, p. 69
 17. Alexandar Nelson, Manual of Madurai Country. Vol. V, p. 112.
 18. Revenue Consultations, Vol. 63 B, 23-3-1795, p. 1282, 83
 19. Military Country Correspondence. Vol. 45, 27-8–1794. p. 333–38
 20. Military Consultations, Vol. 174, (1793), pp. 1688-95
 21. Military Country Correspondence, Vol. 44. (1793). pp. 127-28
 22. Military Country Correspondence, VoI. 44, 11-4-1793, pp. 137-38
 23. Ibid., 2-4-1793, p. 127
 24. Military Consultations, Vol 182, 7–1–1794, p. 79
 25. Military Consultations, Vol. 183, 1-9-37, pp. 996-10 04
 26. Revenue consultations, Vol. 62 A, (1795), pp. 1296-97
 27. Secret consultations, Vol. 10 B, pp. 177-94
 28. Military Miscellaneous Book, Vol. 41, 31-5-1794, pp. 527
 29. Military country correspondence, Vol. 45, 7-3-1794, pp. 2729
 30. Military Consultations, Vol. 184, 25–3-1794, pp. 1236-70
 31. Military Country Correspondence, Vol 45, 6-5-1894, pp. 101-104
 32. Military Country Correspondence, Vol.45. 5-6-1794, pp. 159-60.
  |bid. 14-6-94, pp. 1-116.
 33. Military Consultations, 185, 10–5–1794, pp. 1762-68
 34. Military Country Correspondence Vol. 45, pp. 232-233
 35. Military country correspondence, Vol. 45, 12-6-1794. 19-7-1794 pp. 108-200, 234-238.
  Military, consultations, Vol. 186, 17-6-1794, pp. 2348-420
 36. Military consultations, Vol. 187, 4-7-1794, pp. 2948-67
 37. Military consultations, Vol. 186, 21-6-1794, р. 2757-60
 38. Military country correspondence, Vol. 45, 3-7-1794, pp. 201-203
 39. Military country correspondence, 26-6-1794, p. 194-201
 40. Military Consultations, Vol. 187, 28-7-1794, p. 3293-343
 41. Military Country Correspondence, Vol. 45, 27-8-1794 D. 292-94.
 42. Military consultations, Vol. 189 B, 29-8-1794 p. 39.10
 43. Military consultations, Vol. 189 A, 26-9-1794, p. 39.10
 44. Ibid., 7-9-1794, pp. 3923, 24
 45. Ibid., 13–9–1794, pp. 3920-28
 46. Rajaram Row. T., Ramnad Manual (1891), p. 216
 47. Military Consultations, Vol. 189 A, 1794, pp. 2924–38
 48. Military consultations, Vol. 190, 1794, pp. 4266–83, MIII tary Country Correspondence, Vol. 45, 25-10-1794 - pp. 8 O'l -86
 49. Military Country Correspondence, Vol. 45, 17-10-1794, p. 348-52. Military Consultations, Vol. 189, 14-10-1794, pp. 4180-267
 50. Military Consultations, Vol. 188 A, 21-7-1794, pp. 8302-08