விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/வஞ்சகத் தாக்குதல்

விக்கிமூலம் இலிருந்து

8

வஞ்சகத் தாக்குதல்
1795-ம் ஆண்டு-ஜனவரி மாதம்

பரங்கிகள் புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்களையும் விருந்துகளையும் முடித்திருந்த நேரம். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கவர்னரது அறையில் முக்கியமான கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கும்பெனியின் பொறுப்புள்ள அலுவலர்களான எட்வர்டு சாண்டர்ஸும் எர்னஸ்ட் வில்லியம் டால் போல்ட்டும் கலந்து கொண்டனர். நீண்டநேர பரிசீலனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர்.[1] அதுவும் ஒரு மிக முக்கியமான முடிவாக இருத்தல் வேண்டும். ஏனெனில் சிறிது நேரத்துக்குள்ளாகவே ரகசியக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட அந்தக் குதிரை அணிகள் திருச்சிக் கோட்டைக்கும் பாளையங்கோட்டைக்கும் புறப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் சென்னையிலிருந்து திருச்சி, குதிரை மூலமாக நான்கு நாட்கள் பயணத்திலும், பாளையங்கோட்டை 8 நாட்கள் பயணத்திலும், எட்டும் நிலையில் இருந்தன.

பிப்ரவரி மாதம் எட்டாம் நாள்.

வைகறைப் பொழுது. கதிரவனின் மங்கிய கதிர்கள் இன்னும் கிழக்கில் எழவில்லை. என்றாலும் அந்தக் காலை இருட்டோடு இருட்டாக இராமநாதபுரம் கோட்டையின் தென்மேற்குத் திசையிலிருந்து வந்த கும்பெனியாரின் படை அணிகள் பல, கோட்டைக்குள் நுழைந்தன. நிமிட நேரத்தில் சேதுபதி மன்னரது அரண்மனையைச் சூழ்ந்து கொண்டன. அந்த ஆரவாரத்தினால் கண்விழித்த மக்கள் கும்பெனிப்படையின் முகத்தில்தான் விழித்தனர். யாரும் எதிர்பாராத இந்தச் சூழ்நிலையில், மக்களது முகத்தில் துக்கக் கலக்கத்துடன் குழப்பமும் வியப்பும் கலந்து பிரதிபலித்தன. இராமநாதபுரம் கோட்டையின் பொறுப்பு கி.பி. 1772 முதல் கும்பெனித் தளபதி மார்ட்டின்ஸ் பொறுப்பிலிருந்ததால் கும்பெனியாரது படைஅணி கோட்டைக்குள் நுழைவதில் எவ்விதத் தடங்கலும் இல்லாது போயிற்று. கோட்டைத் தளபதி மார்ட்டின்ஸ்-சடன் படை அணிகளின் தளபதி ஸ்டீவன்சனும் அரண்மனைக்குள் சென்றனர். இராமநாதபுரத்திலிருந்து ஸ்டீவன்சன் சென்னைக் கோட்டைக்கு அனுப்பிய மடலில், ...திருநெல்வேலியிலிருந்து 5.ம் தேதி புறப்பட்டேன். தளபதி பெளவேடிர் தமது அணியுடன் கயத்தாற்றில் என்னுடன் சேர்ந்து கொண்டார். விரைவான பயணத்தை மேற்கொண்டு இன்று (8-2-1795) இங்கு வந்து சேர்ந்தோம். தளபதி மார்ட்டின்ஸின் வீரர்கள் எங்களை கோட்டைக்குள் அனுமதித்தனர். தளபதி பெளவேடிரின் அணி, அரண்மனையைக் கைப்பற்றியது. சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு எங்களிடம் சச்சரவிட்ட மன்னர் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டார். நாளை அல்லது மறுநாள் கலெக்டர் பவுனி இங்கு வந்து சேர்ந்ததும், பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்... எனத் தெரிவித்திருந்தார்.


இராமநாதபுரம் கோட்டைக்கு வந்த கலெக்டர் பவுனி சென்னை கவர்னருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார். அதில் முதல்நாள் இரவு, அரசருக்கு எதிராக படைகள் வந்து கொண்டிருப்பது பற்றிய தகவல் அவருக்கு கிடைத்ததாகத் தெரிகிறது. அதனால் தப்பிச் செல்வதற்கான எல்லா முயற்சி களையும் அவர் செய்திருந்தார். ஆனால் நமது துருப்புக்களின் அசாதாரண முயற்சியினால் ஆச்சரியப்படும் வகையில் அவரை சிக்கவைத்து விட்டனர். இன்று காலையில் தளபதி பெளவேடிர் பொறுப்பில் அவரை மேலுருக்கு அனுப்பி வைத்துள்ளேன். திருச்சிக் கோட்டைத் தளபதி அங்கு வந்தால் அவரிடம் மன்னரை ஒப்படைக்கும் படியும் இல்லையெனில் நேரே திருச்சிக்குச் சென்று ஒப்படைத்துவிட்டு வருமாறும் அறிவுறுத்தி இருக்கிறேன். இங்குள்ள படைகளை ஏற்கனவே திட்டமிட்டபடி இப்பொழுதைக்குச் சிவகங்கை அனுப்பவில்லை.[2] நமது நட வடிக்கையின் எதிரொலி எப்படி இருக்கிறது என்பதை நோட்டமிட்டு வருகிறேன். படைப்பிரிவுகளை இங்கிருந்து அனுப்பிவிட்டால் வன்செயல்கள் நிகழும்பொழுது அவைகளை கட்டுப்படுத்த இயலாமல் போய்விடும். மற்றும் மன்னரைப் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தும், அவரை இங்கிருந்து அகற்றுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. நமது கட்டுப்பாட்டிற்குள் இருந்த அவரது போக்கு சூழ்நிலைக்கு ஒவ்வாதவாறு இருந்தது. அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது ஊழியர்கள் பொறுப்பிலும் அரண்மனையில் நிறுத்தப்பட்டுள்ள தளபதி மார்ட்டின்ஸின் வீரர்களின் பாதுகாப்பிலும் உள்ளன' என்று தெரிவித்திருந்தார்.[3]

மறவர் சீமை இதிகாசத்தின் இணையற்ற இறுதிப்பகுதி தொடங்கி விட்டது. பாண்டியர், சோழ பாண்டியர், மதுரை சுல்தான்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோரது ஆயிர வருட ஆட்சிக் காலத்தில், அந்தந்த ஆட்சியாளருக்கு உறுதுணையாக இருந்து தங்களது மானத்தையும், வீரத்தையும் நிலை நிறுத்திய மறவர்கள் நிலைகுலைந்து விட்டனரா? அவர்களது புகழ் பரப்பும் பரணியும், போர் மணக்கும் வஞ்சியும் காஞ்சியும், பொன்றி விட்டனவா? மதுரையை மைசூர் படையெடுப்பில் இருந்து மீட்டு திருமலை நாயக்கரது ஆட்சியைக் காத்தவர்கள்-சொக்கப்ப நாயக்கரை திருச்சியிலிருந்து சிறை மீட்டவர்கள்-தென் பாண்டிச் சீமை முழுவதிலுமுள்ள அனைத்துப் பாளையக்காரர்களது தலைவராக திகழ்ந்து வீரக் கழல் சூடி இருந்தவர்கள் அவர்களது வீறுகொண்ட தோள்களில் விளையாடிய வீரம் எங்கே? கண்ணை மறைக்கும் விண்ணை சாடிட வெகுண்டெழுந்த இமயமும் வீழ்ச்சி பெற்ற வரலாறும் உண்டா? இல்லையே!! தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வ, தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற இயற்கை மர்மம் எப்பொழுது வெளியாகும்? இந்த வினாக்களுக்கு விடையளிக்க காலந்தான் கனிந்து வர வேண்டும்!

மறவர் சீமை முழுவதும் கும்பெனியாரின் கைக்குள் வந்து விட்டது. சேதுபதி மன்னரது சொத்துக்கள் அனைத்தையும் கும்பெனியார் பறிமுதல் செய்து தமதுடமையாக்கிக் கொண்டனர்.[4] எதிர்பாராத வகையில் இடர்ப்பாடுற்ற முகவை மன்னர் என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தார். அவர்களைப் பயமுறுத்துவதற்காக பீரங்கி வண்டிகளும், வெடிமருந்து பொதிகளும், இராமநாதபுரம் கோட்டையைச் சுற்றி வரிசை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கும்பெனியார்களது ஒற்றர்களான மார்ட்டின்ஸாம், பவுனியும் இராமநாதபுரம் அரண்மனையைக் கொள்ளையிட்டனர். அந்த பகல் கொள்ளையை, அவர்களது நாகரீகமான சொற்களில், மன்னரது சொந்த கருவூலத்திலிருந்து 'புதையல்களை' கண்டுபிடித்து சர்க்கார் கணக்கில் சேர்த்து விட்டதாக கலெக்டாது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பகல் கொள்ளையில் நூற்றி இருபது சாக்குப் பைகளில் இருந்த 50,455 சூழிச்சக்கரம் பணத்தையும், அந்தப்புரத்திலிருந்த அரசரது பெண்டுகளிடமிருந்து பத்து சாக்குப் பைகளிலிருந்த 10,000-ம் ஸ்டார் பக்கோடா பணத்தையும், 41 பைகளில் வைத்திருந்த 20,475 சூழிச்சக்கரம் பணத்தையும் கைப்பற்றினர்.[5] மற்றும் சேதுபதி மன்னரது கருவூலக் கணக்குகளையெல்லாம் பரிசீலித்த பிறகு, 58,751.14.0 ஸ்டார் பக்கோடா பணத்தைக் கைப்பற்றி இருப்பதாகவும், மேலும் 99,945.15.70 ஸ்டார் பக்கோடா பணத்திற்கு விபரம் தேவைப்படுவதாகவும், இதில் மன்னர் நவரத்தினங்கள் வாங்குவதற்காக காயல்பட்டினம் மரைக்காயரிடம் கொடுத்திருந்த 44,165.87.49 ஸ்டார் பக்கோடாக்களும், திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படும் பொழுது அவர் எடுத்துச் சென்ற 6,041.15.0 ஸ்டார் பக்கோடாக்களும், திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படும் பொழுது அவர் எடுத்துச் சென்ற 6.04.1.15.0 ஸ்டார் பக்கோடாக்களும் ஆக 50,206.0.0.0 ஸ்டார் பக்கோடாக்களை நீக்கி எஞ்சிய தொகையை-அல்லது 'புதையலை' (அவர்களது கருத்துப்படி) கைப்பற்ற பெரு முயற்சி செய்தனர். இவ்வளவு பெருந்தொகையான 'புதையலை' கலெக்டர் கைப்பற்றியதற்கு கவர்னர் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.[6]

அரசரது அந்தரங்கப் பணியாளர்களான இராமசாமி சேர்வைக்கார், முத்தழகு, வீராசாமி, நாச்சியப்பன், சமையல் வெங்கட்டராம நாயுடு ஆகியவர்களை திருச்சிக் கோட்டையிலிருந்து வரவழைத்து விசாரித்தனர். அவர்களில், ஒருவரது வாக்குமூலத்திலிருந்து ஒரு கிணற்றுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சில பணப்பைகளையும் கைப்பற்றினர்.[7] மேலும், சேதுபதி மன்னர் இராமநாதபுரத்திலிருந்து திருச்சி புறப்படும் சமயம் எடுத்துச் சென்ற பணப்பெட்டி, நகைப்பெட்டி ஆகிய இரண்டு பெட்டிகளைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளுவதற்காக அரண்மனையிலுள்ள நான்கு கணக்கப்பிள்ளைகளை படாதபாடுபடுத்தினர். இவ்விதம் இராமநாதபுரம் அரசை கைப்பற்றியதுமல்லாமல், இராமநாதபுரம் அரசரது சொந்த சொத்துக்களையும். அணி மணிகளையும் கைப்பற்றுவதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இவை பரங்கிகள் இராமநாதபுரத்தில் மட்டும் மேற்கொண்ட நடவடிக்கைகள் அல்ல. அவர்களது ஏகாதிபத்திய கொள்கையின் உள்ளடக்கமான பகல்கொள்ளையை, இந்திய நாட்டில் எங்கெல்லாம் தன்னரசு மன்னர்களை அவர்களது ஆட்சியிலிருந்து அகற்றி, தங்களது இரும்புப் பிடியை இறுக்கிக் கொண்டார்களோ, அங்கெல்லாம் இத்தகைய இழி செயல்களில்தான் அவர்கள் ஈடுபட்டனர். தஞ்சாவூர், குடகு, நாகபுரி, பேரார் மன்னர்களிடத்திலும் அவர்களது இராஜ குடும்பங்களிலும் பரங்கிகள் நடத்திய முறைகேடான கொள்ளைகளுக்கு வரலாற்றில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.[8] இத்தகைய ஈனச் செயல் களில், ஈடுபட்டிருந்த தங்களது பணியாளர்களை அன்றைய இங்கிலாந்து நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மனம் வெதும்பி மன்றத்தில் கண்டனத் தீர்மானம் ஒன்றை கி.பி. 1784-ல் நிறைவேற்றி கண்டனம் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதி, கும்பெனியாரது நடவடிக்கைகள் முழுவதும், ஊழல் நிறைந்ததாகவும், எந்தக் குறிக்கோள்களுக்காக அந்த நிறுவனம் அமைக்கப்பட்டதோ அதற்குப் புறம்பானதாகவும் உள்ளன. போர்க்காலத்திற்கும் அமைதி காலத்திற்குமாக கும்பெனியாருக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமைகள் மீறப்பட்டு எல்லா நிலைகளிலும் வெறுப்பைத் தூண்டக்கூடியதாக இருக்கின்றன. அவர்கள் கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கைகள் பொது மக்களது நம்பிக்கையை இழக்கச் செய்வதற்குக் காரணமாகவும், செல்வவள மிக்க நாடுகளை அழிவிற்கும், அவமானத்திற்கும் ஆளாக்கி நமது வலிமைக்கும், தேசிய கவுரவத்திற்கும் குந்தகம் விளைவிப்பதாக உள்ளன...' எனத் தொடர்கிறது. பின்னர், அதே பாராளுமன்றத்தில் பேசிய சர். ஜார்ஜ் கான்வெல் பிரபு என்பவர், உலகத்தின் எந்த மூலையிலும் இத்தகைய லஞ்ச லாவண்யமும், பேராசையும், துரோகமும் நிறைந்த அமைப்பு அப்பொழுது இருந்தது கிடையாதென ஆங்கிலக் கிழக்கு இந்தியக் கம்பெனிக்கு 'பாராட்டுக்கள்' வழங்கினார்.[9]


இத்தகைய சாடுதல்களின் பிரதிபலிப்பாக 'இந்தியச் சட்டம்' என்ற பெயரில் ஒரு புதிய ஆணையை இங்கிலாந்து பாராளுமன்றம் கி.பி. 1784-ல் நிறைவேற்றியது. ஆனால் 1786 ஜூலை மாதத்தில் நடைபெற்ற கும்பெனி இயக்குனர்களது இரகசியக் கூட்டம், கும்பெனியின் கவர்னர் ஜெனரலை இந்தச் சட்டத்திற்கு புறம்பான முறையில் செயல்படுமாறு அறிவுறுத்தியது. ஏனெனில் அவர்களது வியாபார நோக்கம் இங்குள்ள செல்வங்களை தங்கள் நாட்டிற்கு வாரிச்செல்வது என்பது, ஆற்காட்டு நவாப் அவர்களுக்கு அளித்த அதிகார வரம்பைக் கொண்டு தங்களது ஆதிக்க வெறியினை நிறைவு செய்து கொண்டனர். மேலும் அவர்களது வியாபாரத்தில் இன்னொரு ரகசியமும் இருந்தது. பொதுவாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் வியாபாரம் செய்பவர்கள், தங்கள் நாட்டுப் பொருள் களை அடுத்த நாட்டிற்கு எடுத்துச் சென்று விற்றுவிட்டு தங்கள் நாட்டிற்குத் தேவையான பொருட்களை அங்கிருந்து பெற்று வருவது வழக்கம். 18ம் நூற்றாண்டு இறுதியில், இந்தியாவில் விற்பனை செய்ய ஆங்கிலேயரிடம், அரசர்களுக்குரிய ஆடம்பரப் பொருட்களைத் தவிர வேறு பொருள் எதுவும் அவர்களிடத்தில் இல்லை. அவர்களுக்குத் தேவையான கைத்தறித் துணிகள். மிளகு, வாசனைத் திரவியங்கள் போன்றவற்றிற்கு விலையாகத் தங்கம், வெள்ளி நாணயங்களைக் கொடுத்து வாங்கவேண்டிய நிலை, தங்கத்திற்கு அவர்கள் எங்கே போவார்கள்? ஆதலால் முதல் இல்லாத வியாபாரம் செய்தனர்! அதாவது கொள்ளை -இந்தியப் பாட்டாளிகள் பாடுபட்டு உற்பத்தி செய்தவைகளையும், சேமித்து வைத்திருந்தவைகளையும் வன்முறையில் கொள்ளையடிப்பது. இதன் காரணமாக, கி. பி. 1763-ல் இந்தியாவிலிருந்து 30 லட்சம் பவுன் தொகையை இலாபமாக இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றதாகக் ஸ்கிராப்டன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.[10] அவர்கள் நாட்டிலிருந்து ஒரு அவுன்சு அளவு தங்கத்தையோ, வெள்ளியையோ கொண்டு வந்து இந்தியாவில் முதலீடு செய்ய முடியாதவர்கள். இவ்வளவு தொகையை அப்பொழுது இலாபமாக ஈட்டியிருப்பது ஆச்சரிய மான செயல் அல்லவா?


  1. Military Consultations, Vol. 193 A, 27–1–1759, pp. 96-106
  2. Military consultations, Vol. A, 8-2-1795, pp. 322-23
  3. Ibid., 9–2–1795, pp. 323–27
  4. Madurai Dist. Records, Vol. 1133, 4-9-1801
  5. Revenue Consultations, Vol. 62 A, 13-3-1795, р. 964
  6. Revenue Consultations, Vol. 62 B, 11-4-1795, p. 1320
  7. Revenue Consultations, Vol. 62 A, 24-3-1795, pp. 1112, 1136-230
  8. Srinivasachari. C.S., The Inwardness of British Annexation in India (1951), p. 68
  9. Palmi Dutt., R., India Today (1947), p. 89
  10. Palmi Dutt. R., India Today (1947), p. 90