விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/கிளர்ச்சியின் தொடர்ச்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11
கிளர்ச்சியின் தொடர்ச்சி

அந்நிய எதிர்ப்பு உணர்வும் ஆவேசமும் கொண்டு போர்க் கோலம் பூண்ட மறவர்கள், அதற்குள்ளாக அடங்கி விட்டனரா? கிளர்ச்சியின் போக்கு பற்றிய விவரங்களை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆர்வத்துடன் கேள்விப்பட்டு வந்த சேதுபதி மன்னருக்கு மறவர் சீமையின் நிலை வியப்பையும் வேதனையையும் அளித்தது. ஐந்து ஆண்டுகளாக திருச்சிக் கோட்டையில் அனுபவித்து வந்த அவலத்தின் ஆயிரம் மடங்கு அந்த ஒரு நொடிப்பொழுதில் அவரது நெஞ்சத்தில் மிஞ்சி நின்றது.

தொன்று தொட்டு வந்துள்ள மறவர் மக்களின் தன்னரசைப் புறக்கணித்து அவர்களது சுதந்திர உணர்வுகளை மதிக்காது ஆட்சி செய்கின்ற பரங்கியரையும் நவாப்பையும் தங்களது நாட்டினின்றும் அகற்ற வேண்டும்; மாற்றானுக்கு அடிபணியாத, மானம் மிகுந்த, சுதந்திர மண்ணாக மறவர் சீமையை என்றென்றும் மிளிரச் செய்ய வேண்டும்; என்ற சிறப்பான இலட்சியங்களைச் செயல்படுத்த துடித்துக் கொண்டிருந்தவர் அல்லவா. சேதுபதி மன்னர். சிறகொடிந்த பருந்தாக சிறைக்குள் அடைக்கப்பட்டுக் கிடக்கும் அவருக்கு முதுகுளத்தூர் பகுதியின் மக்கள் கிளர்ச்சி தமது கனவை நனவாக்க உதவும் என்று நம்பி இருந்த நிலையில் கிளர்ச்சி தளர்ந்த செய்தி கிடைத்தது. கிளர்ச்சிகளைத் தலைமை தாங்கிய மயிலப்பன், வீரம் மணக்கும் முதுகுளத்துர் மண்ணில் பிறந்த மாவீரன் ஆயிற்றே. மாப்பிள்ளைத் தேவனுடன் நடத்திய மோதல்களில் பங்கு கொண்டு இராமனாதபுரம் அாசுக்கு சிறந்த சேவை செய்த சேர்வைக்காரர். ஏற்கெனவே சேதுபதி மன்னரை திருச்சி கோட்டைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொழுது பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சுக்கார்களுடன் ராணுவ உதவி கோரி பேச்சு வார்த்தை நடத்தியவர்.[1] அத்துடன் சிறையில் உள்ள சேதுபதி மன்னரை திருச்சிக் கோட்டையில் இருந்து தப்புவிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தி தோல்வி கண்டவர்.[2] கிளர்ச்சி நடந்த பகுதிகளையும் அங்குள்ள மக்களையும் நன்கு அறிந்தவர். நிலைமைகளை நன்கு தெரிந்து தக்க திட்டங்களுடன் எதிரிக்கும் பலமான இழப்பையும் தோல்வியையும் ஏற்படுத்தக்கூடிய அரசியல் தலைவன். கமுதிக்கோட்டையிலிருந்து பின்வாங்கி, கீழ்க்குளம் காட்டிற்குள் அவர் சென்றிருக்கக் கூடாது. தொடர்ந்து வரும் எதிரியை சரியான முறையில் தெரிந்துகொள்ள இயலாது. சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்டதுபோல் ஆகிவிட்டதே; அவரது அணிக்கு மரண அடி கொடுத்த எட்டப்பனது சிப்பாய்களும் மருது சேர்வைக்காரர்களின் படைகளும் முதுகுளத்துார் மறவர்களைவிட எந்த வகையில் உயர்ந்தவர்கள்? வாள்வீச்சிலா? வேல் பாய்ச்சலிலா? அல்லது துப்பாக்கி சுடுவதிலா? என்ன இருந்தாலும் மயிலப்பன் பிறந்த மண்ணைச் சேர்ந்த சித்திரங்குடி நாட்டாரும், ஆப்பனுர் தேவர்களும் அவனுக்கு எதிரான அணியில் சேர்ந்து இவ்விதம் துரோகம் செய்திருக்கக் கூடாது...

இப்படி எத்தனையோ கேள்விகளை சேதுபதி மன்னர் தமக்குள் தொடுத்துக்கொண்டு விடையும் சொல்லிக்கொண்டார். தமது சீமையில், இத்தகைய இழிநிலை ஏற்பட சிவகங்கை சீமை சேர்வைக்காரர் படை உதவி வழங்கியதுடன், போரிலும் பரங்கியருக்கு பக்க பலமாக இருந்ததை[3] நினைக்க மன்னரது சிந்தனையெல்லாம் சினத்தால் கொப்பளித்தது. இப்பொழுதே புறப்பட்டுப்போய் அந்த சின்ன மருதுவை...எதிரே பலமான சிறைக்கதவுகள் இருப்பதை அப்பொழுது அவர் உணர்ந்தார்.

சிறைக்கதவுகள்-மனிதனது எல்லையற்ற கற்பனையோடு இயைந்த உணர்வு இழைகள், எண்ணங்கள், ஆசைகள், இலட்சியங்கள்-இவைகளுக்கான இயக்கங்கள் அனைத்தையும் தனது வலிய குறுக்குச் சட்டங்களினால் குலைத்துத் தடுத்துவிடும் ஆற்றல் சிறைக்கதவுகளுக்கு மட்டும்தான் உள்ளது. அதிகார பலம்கொண்டு ஆட்சி செய்தவர்கள், ஆன்ம வலிமை கொண்டு கொடுமைகளைச் சாடி, சமுதாய நீதி கோரியவர்கள், அவர்கள் எத்தகையவராய் இருந்தாலும் சிறைக்கதவுகளுக்குப் பின்னால் அவைகளின் ஆற்றலை எதிர்த்து எக்காளமிட முடியாதவாறு நம்பிக்கை இழந்தவர்களாக அடங்கி ஒடுங்கி விடுகின்றனர். இவர்களில் ஒரு சிலரை மட்டும் தியாகி என வரலாறு வாழ்த்து கிறது.

சேது மன்னரின் சிறை வாழ்க்கை சாரமற்றதாக கழிந்து கொண்டிருந்தது. என்றாலும் அவரது தன்னம்பிக்கையும், திடமான உறுதியும் உடைந்து விடவில்லை. எப்பொழுதாவது இராமனாதபுரத்திலிருந்து சேவகர்கள் செய்தி கொண்டு வருவார்கள். அவரது குடும்பத்தினர் பற்றியும், அருமை மகள் சிவகாமி பற்றியும், அவர்கள் தெரிவிக்கும் விவரங்களைக் கேட்டு, அவரது உள்ளத்தில் ஏற்படும் சலனங்கள், இனிமை, ஏக்கம் ஏமாற்றம் ஆகிய உணர்வுகள்-நெளிந்து மறையும் நீர்க்கோடுகளைப் போல் அவர் முகம் பிரதிபலிக்கும். தொடர்ந்து வேதனைப் பின்னல்கள், விரக்தியான தோற்றம், இதுவே அவருடைய அன்றாட சிறை வாழ்க்கையாக இருந்தது.

О О О О О

தஞ்சைத் தரணியில் தலைமறைவாக இருந்த தளபதி மயிலப்பன், மறவர் சீமைக்குத் திரும்பினார். அவரையும் அவரது கிளர்ச்சி ஆதரவாளர்களையும் அடக்கி ஒடுக்க முன்பு கும்பெனியாருக்கு சிவகங்கைப் படைகளைக் கொடுத்து உதவிய மருது சகோதரர்கள், இப்பொழுது மயிலப்பனை, தங்களுக்கு பக்கபலமாக, பரங்கியருக்கு எதிரான புரட்சித் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். மயிலப்பனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. அவரது மனத்தில் மங்காது ஒளிர்ந்து கொண்டிருந்த மறவர் சீமைப் பற்றிய விடுதலைக் கனவுகள் மகிழ்ச்சி அளித்தன. மருது சேர்வைக்காரர்கள் மீது கொண்டிருந்த பகைமையை மறந்து, பொதுஎதிரியான பரங்கியரை அழிக்க, அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவரது தாக்குதல்கள் இப்பொழுது மிகவும் கடுமையானதாக இருந்தது. பரங்கிகளது குறிப்புகளில் மயிலப்பனுக்கு முரடன் (Rogue) என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. அவரது பேராற்றலையும் பகைவரைச் சின்னாபின்னப் படுத்தும் சீற்றத்தையும் கண்டு வியந்த சின்னமருதுவும் பாஞ்சைப் பாளையக்காரரும், அவருக்கு பல அன்பளிப்புகளை வழங்கிச் சிறப்பித்தனர்.[4] மேலமாந்தையிலிருந்து மறவமங்கலம் வரையிலான பரந்த பகுதியில் அவரது குதிரையின் கால் குளம்புகள் படாத இடம் இல்லை, என்னும் அளவிற்கு சுழன்று சுழன்று போரிட்டு வந்தார். கும்பெனியாரது தானியக் கிடங்குகள், அவர்கள் கைக்கூலிகளது பொருட்கள், கால்நடைகள் அனைத்தையும் அவரது கொள்ளைப் பொருட்களாகின. மைசூர் மன்னர் திப்புசுல்தானுடன் தொடுத்த போர் அப்பொழுது முடிந்து விட்டதால் தங்களது மூல பலம் முழுவதையும் மறவர் சீமையின் மீது முடுக்கி விட்டனர் கும்பெனியார். பரங்கி அணிகள் பல இராமனாதபுரம் சீமையையும் சிவகங்கை சிமையையும் துளைத்து தொல்லைகள் கொடுத்து சுடுகாடாக்கின.

கி.பி. 1800-ம் ஆண்டு ஜனவரி மாதம் சேதுபதி மன்னரது வங்க நாட்டு வணிகப் பிரதிநிதி தருமப்பிள்ளை கல்கத்தாவிலிருந்து திரும்பி வந்தார். திருச்சிக் கோட்டையில் அரசரைச் சந்தித்து உரையாடி விட்டு வெளியே வந்தார். அவரை எதிர் பார்த்துக் காத்திருந்த கும்பெனி வீரர்கள் அவரைக் கைது செய்து இராமனாதபுரத்திற்கு அழைத்துச் சென்றனர்.[5] கலெக்டர் லூவிங்டனது கச்சேரியில் கொண்டு போய் நிறுத்தினர். தருமப்பிள்ளை கல்கத்தாவில் தங்கி இருந்து சேதுபதி மன்னருக்காக சங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்ததை கும்பெனியார் அறிவர். ஆதலால் அவரை விசாரித்து சேதுபதி மன்னரது சொத்துக்கள், வங்கத்தில் முடக்கியுள்ள முதலீடுகள் ஆகியவைகளை அறிந்து கைப்பற்றுவது கும்பெனியாரது திட்டம்! கலெக்டர் அவரை நீண்ட நேரம் விசாரித்தார். அவரிடத்தி லிருந்த கணக்குகளையும் பார்வையிட்டார். 1794-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இரண்டு இலட்சத்து இருபதினாயிரம் சங்குகள் அடங்கிய சாக்குப் பொதிகளுடன் தேவிப்பட்டினம் துறை முகத்திலிருந்து வங்காளத்திற்குப் பயணம் சென்று வந்த விவரத்தைத் தெரிவித்தார் தருமப்பிள்ளை.[6]

கிழக்கரையைச் சேர்ந்த எல்லத்தண்டல் என்ற மாலுமி செலுத்திய கப்பலில் 40 நாட்களில் கல்கத்தா துறைமுகம் சென்று அடைந்ததையும், அங்கு சங்குகளில் ஒரு பகுதியை 20,000-தங்க முகராக்களுக்கு விற்பனை செய்து, அவைகளைக் கொண்டு சிறந்த வகை அரிசி, பட்டு, மற்றும், பலவிதமான சாமான்களைக் கொள்முதல் செய்து இராமனாதபுரத்திற்கு அனுப்பிவிட்டு, தாம் அங்கிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதையும், அப்பொழுது கலெக்டர் ஜாக்ஸன் துாண்டுதலின் பேரில் ராணி மங்களேஸ்வரி நாச்சியார், இராமனாதபுரம் மன்னருக்குச் சொந்தமான சங்கு வியாபார முதலீடுகளை, அவரது பதவி நீக்கத்திற்குப் பின்னர், தமக்கே சொந்தமானவை என கல்கத்தா சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கை[7] இராமனாதபுரம் மன்னர் சார்பாக அவர் வாதாடி வெற்றி கொண்டமையும், சங்கு வியா பாரத்தில் ஈட்டிய வருவாயை அப்பொழுதைக்கப்பொழுது திருச்சிக் கோட்டையில் உள்ள சேதுபதி மன்னருக்கு, யாழ்ப்பாணம் வைத்தியநாதன். நாகப்பட்டினம் சுப்பராயப்பிள்ளை, வீரப்பெருமாள்பிள்ளை, கீழக்கரை அகமது நெய்னா, மீரா நெய்னா ஆகியவர்கள் மூலம் அனுப்பி வைத்த விவரங்களை, தருமபிள்ளை கலெக்டரது விசாரணையில் தெரிவித்தார்.[8]

இந்த வங்காள வியாபாரத்தின் ஒரு பகுதியைக்கூட பறிமுதல் செய்ய இயலாமல் போய்விட்டது. ஒருபுறம் கும்பெனியாருக்கு ஏமாற்றம் தந்தாலும், இன்னொரு முக்கிய விஷயம் அவர்களுடைய சிந்தனையை தீவிரமாகக் கவர்ந்தது. அதாவது கடந்த ஐந்தாண்டுகளில், வங்காளத்திலிருந்து இராமனாதபுரம் அாசருக்குக் கிடைத்த பணம் முழுவதும், முதுகுளத்துர் பகுதியில் கிளர்ந்து எழுந்த கிளர்ச்சிக்கு பயன்பட்டிருக்க வேண்டும் என்ற உறுதியான முடிவிற்கு கலெக்டர் வந்தார். அதனை தமது மேலிடத்திற்கும் அறிக்கை செய்தார்.[9] இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளிக் கோட்டையில், இராமனாதபுரம் அரசரைச் சந்தித்து விட்டுச் செல்லுபவர்கள் மீது கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மறைந்துவிட்டன. இராமனாதபுரம் அரசர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். சிவகங்கைச் சீமைகளில் சென்ற ஆண்டு ராணி வேலுநாச்சியார் மறைந்த பிறகு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.

தென்னிந்தியாவில் கும்பெனியாரது கொடுங்கோன்மைக்கு எதிராக இயங்கிய கிளர்ச்சிக்காரர்கள் அனைவருடனும் தொடர்பு கொண்டார். சிவகங்கை பிரதானி சின்னமருது சேர்வைக்காரர் திண்டுக்கல்லில் மைசூர் தளபதி தூந்தியாவின் தலைமையில் கூடிய புரட்சிக்காரர்களது கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட விவரம், கும்பெனியாரின் காதுகளுக்கு எட்டியது.[10] அன்றிலிருந்து அவரது நடவடிக்கையை கும்பெனியார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதுவரை சின்னமருது சேர்வைக்காரரை, தங்களது 'விசுவாசமுள்ள நண்பராகவே' அவர்கள் கருதி வந்தனர். கும்பெனியார் பணியில் இருந்த தளபதி மார்ட் டின்ஸ்-தளபதி வெல்ஷா, கலெக்டர் சல்லிவன் ஆகிய வெள்ளையரின் பாராட்டுதலையும் நட்பையும் அவர் பெற்றிருந்தார். சிவகங்கைக்குத் தனியாக வேங்கன் பெரிய உடையாத் தேவர் என்ற அரசர் இருப்பதை மறந்து சிவகங்கை சீமை சம்பந்தப்பட்ட கடிதப் போக்குவரத்துக்களை சிவகங்கை பிரதானி சின்ன மருது சேர்வைக்காரர் என்றே எழுதி வந்தனர். கும்பெனியார் சிவகங்கைச் சீமையில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த தளபதி மயிலப்பனைப் பிடித்துக் கொடுக்குமாறு கூட கலெக்டர் லூவிங்டன் சின்ன மருதுவிற்கு ஒருமுறை கடிதம் எழுதினார்.[11] அந்த அளவிற்கு சிவகங்கைப் பிரதானி மீது கும்பெனியாரது நம்பிக்கை இராமநாதபுரம் சீமையில் கலெக்டர் ஜாக்ஸன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த 'ரங்கபிள்ளை ஊழல்' சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையை தயாரித்து அனுப்புவதில் கலெக்டர் ஈடுபட்டிருந்தார். பாஞ்சைப் பகுதியில் பதட்டம் நிலவி வந்தது. அந்த பாளையத்தின் பாளையக்காரர் ஆன கட்டப்பொம்மு நாயக்கரை பிடித்து கயத்தாற்றில், தூக்கில் தொங்கவிட்டு பாஞ்சாலங்குறிச்சியை தரைமட்டமாக்கிய பிறகும், கும்பெனியாரிடையே ஒருவித பயமும் அருவருப்பும் இருந்துவந்தது. அதனால் அரசு ஆவணங்களில் அந்தக் கோட்டையின் பெயர்கூட. இடம் பெறாதவாறு செய்தனர்.[12]

இதற்கு வலுவூட்டும் வகையில் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்து ஊமைத்துரை தமது நண்பர்களுடன் 2-2-1801 அன்று இரவு தப்பித்து ஓடியச் செய்தி அமைந்தது.[13] அழிந்த பாஞ்சை மீண்டும் உருப்பெற்று எழுந்தது. ஊமைத்துரை மீது கும்பெனியாரது தாக்குதல் தொடுக்கப்பட்டது.[14] போரின் முடிவு பரங்கியருக்கு சாதகமாக அமைந்ததால் ஊமைத்துரை பலத்த காயங்களுடன் சிவகங்கை மருது சேர்வைக்காரர்களிடம் தஞ்சம் புகுந்தார்.[15] அதுவரை கும்பெனியாரது செல்லப் பிள்ளைகளாக இருந்து வந்த சிவகங்கைச் சேர்வைக்காரர்கள், கும்பெனியாரது சினத்துக்கு ஆளானார்கள். மருது சகோதரர்களும் இந்த சூழ்நிலையை எதிர்பார்த்து தக்க முன்னேற்பாடுகளில் முனைந்து இருந்தனர். திண்டுக்கல், மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இராணுவ நிலைகளில் இருந்த கும்பெனிப்படைகள் மறவர் சீமையிலும், சிவகங்கைச் சீமையிலும் பாய்ந்து புகுந்தன. வழக்கம் போல எட்டப்பனும் தொண்டைமானும் கும்பெனியாரது அணியில் சேர்ந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவான 'தொண்டுகளை' செய்து வந்தனர். மறைந்திருந்த மயிலப்பனும், நெல்லைச் சீமையைச் சேர்ந்த காடல்குடி, குளத்தூர் பாளையக்காரர்களுடன், மதுரைச் சீமையின் விருப்பாச்சி, திண்டுக்கல், கோம்பை, பழனி பாளையக் காரர்களும் சிவகங்கைச் சேர்வைக்காரர்களுக்கு ஆதரவாக நின்றனர். மறவர் சீமையில் மக்கள் கிளர்ச்சி வலுவுடன் நிறை வேற, பல பகுதிகளில் கும்பெனிப் படைகளுடன் பயங்கரமாக மோதினர்.

1801-ம் வருடம் அக்டோபர் திங்கள்.

கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் பரங்கியர் எதிர்ப்பு போர் முடிவு நிலைக்கு வந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் அந்நிய எதிர்ப்பு உணர்வு பொங்கிய வீர மறவர்களது எழுச்சி, போராட்டம், இரத்த வெள்ளம், பிணக்காடு, தெற்கே பள்ளிமடத்திலிருந்து வடக்கே பிரான்மலை வரையான பகுதி அனைத்தும் பரவலாக போர்கள் பல தொடர்ந்தன. என்றாலும், இறுதி வெற்றி பரங்கியர் பக்கமே இருந்தது. மானம், வீரம் என்ற சொற்களுக்கும் உள்ள பொருளும் பயனும் துரோகம், கைக்கூலி என்ற சொற்களுக்கும் அமைந்திருந்தன. பரங்கியரை எதிர்த்துப் போரிட்ட வீரர்களிடையே சாதிப் பிரிவினையை புகுத்தி கும்பெனியார் அவர்களது ஐக்கியத்தைப் பலவீனப்படுத்தினர். முந்திய சிவகங்கை அரசப் பரம்பரையைச் சேர்ந்த படமாத்துார் ஒய்யத் தேவருக்கு சோழபுரம் ஆலயத்தில் ஜமீன்தார் பட்டம் சூட்டப்பட்டு சிவகங்கையின் அதிகார பூர்வமான ஆட்சியாளராக பிரசித்தம் செய்யப்பட்டார்.[16] அதுவரை தோளொடு தோள் சேர்த்து கும்பெனியாருக்கு எதிராக போரிட்ட வீரர்கள் இப்பொழுது சிவகங்கை ஜமீன்தார் பக்கமும், மருது சேர்வைக்காரர்கள் பக்கமும் பிரிந்து நின்றனர். தேவர், சேர்வைக்காரர் என்ற ஜாதி அடிப்படையிலான இரண்டு அணிகள் உருவாகியதால் பரங்கியர் எதிர்ப்பு அணி நிலைகுலைந்தது.

மருது பாண்டியரும் அவர்தம் குடும்பத்தினர், தோழர்கள். உறவினர், குடிமக்கள் அனைவரும் போரில் களபலியாயினர், அல்லது ஆங்காங்கு கோட்டை வாசல்களில் தூக்குக் கயிற்றில் தியாகிகளாகி தொங்கினர். கும்பெனியாரின் மூர்க்கத்தனமான கோரச் செயல்களினால் இந்தப் பகுதிகளில் மக்கள் கிளர்ச்சி இப்பொழுது மூன்றாவது முறையாக நசுக்கப்பட்ட பொழுதும்[17] அவர்களது மேலிடம் எதோ ஒரு வகையான இயல்பு அற்ற நிலைமையினால் பீதி கொண்டிருந்தது. மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டால்? காரணம் மருது சகோதரர்களின் தலைமையில் இயங்கிய கிளர்ச்சிக்காரர் மயிலப்பனையும் மதுரை மாவட்ட பாளையக்காரர்கள் சிலரையும் எவ்வளவோ முயற்சித்தும் கும்பெனியாரால் கைது செய்ய முடியவில்லை. அவர்கள் கிளர்ச்சியை மீண்டும் துவக்கினால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கத்தக்க வேறு தலைவர்கள் இருக்கின்றனரா என்பதை கும்பெனியார் சிரத்தையுடன் ஆராய்ந்து பார்த்தனர். ஆம்! இன்னும் ஒருவர் இருக்கிறார். மிகவும் பாதுகாப்பான சிறைக்குள்! அவர் இராமனாதபுரம் அரசர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி என்பது அவர்கள் கண்ட முடிவு.

திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் அவரைத் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது தங்களுக்கு ஆபத்தாக முடியும் என கும்பெனியார் கருதினர். முதுகுளத்துார் புரட்சியின் போது அவரை தொலை தூரத்தில் உள்ள ஆந்திர மாநிலத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டர் லூவிங்டன் பரிந்துரைத்திருந்தார்.[18] ஆதலால் திருச்சிக் கோட்டையில் இருந்து அவரை அப்புறப்படுத்துவது என்ற முடிவு ஏற்பட்டது. அதனை செயல்படுத்தினால் தான் தெற்கேயுள்ள கும்பெனி கலெக்டருக்கும் மற்ற தளபதிகளுக்கும் மனநிம்மதி ஏற்படும் என்ற நிலை!


 1. Kathirvelu, S. Dr., History of Marawas, (1972), p. 220.
 2. Board of Revenue Proceedings, Vol. 226 (2-5-1799), pp. 3782-86.
 3. Madurai Collectorate Records, Vol. 1122 (1799), 25–5–1799.
 4. Madurai Collectorate Records, Vol. 1146 (1803. AD), p. 45.
 5. Military Consultations, Vol. 1054, 4-9-1800, р. 2 б13.
 6. Military consultations, 105 A, 4-9-1800, p. 2613
 7. Military consultations, Vol. 105 A, 4–9–1800, р. 2608-22.
 8. Revenue consultations, Vol. 105, 21–8–1800, pp. 2615-16.
 9. Military consultations, Vol. 10.5 A, 4-9-1800, pp. 2611-12, 265 2.
 10. Rajayyan, K. Vol. South Indian Rebellion, 1800, 1801. p. 114.
 11. Madurai Collectorate Records. Vol. 1133. 17-3-1801. p. 197.
 12. Date I. C. 5., Tinnenely Gazetteer (1917), p. 85.
 13. குரு குகதாஸப்பிள்ளை, திருநெல்வேலி சீமைச் சரித்திரம் (1931), பக். 263.
 14. குரு. குகதாஸப்பிள்ளை, திருநெல்வேலி சீமைச் சரித்திரம் (1931), பக். 271.
 15. Military Consultations, Vol. 285 A, 11-6-1801. pp. 5051-52.
 16. Military consultations, Vol. 285 A. 6-7–1801, p. 4875 Revenue consultations, Vol. 110, 24-7-1801, p. 1361-69.
 17. Military consultations, Vol. 289, 29-10-1801, p. 7728
 18. Madurai collectorate Records, Vol. 1157, 27-4-1799 pp. 75-78.