விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/சென்னைக் கோட்டையில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

1 2
சென்னைக் கோட்டையில்

1802-ம் ஆண்டு பிறந்தது.

மறவர் சீமையின் மகத்தான மக்கள் புரட்சி மூன்றாவது முறையாக வரலாற்றில் தோல்வி கண்டது. கிளர்ச்சியைத் தலைமை தாங்கிய மயிலப்பனையும் முத்துக்கருப்பத் தேவரையும் கைக்கூலிப் படைகள் தேடிப்பிடித்து கும்பெனியாரிடம் ஒப்படைத்தது. அவர்களது முயற்சிக்கான சம்மானத்தையும் பெற்றனர்.[1] தங்களை எதிர்ப்பதற்கு மாற்றாரே இல்லையென்னும் அளவில் மறவர் சீமையை அடிமைப்படுத்தி விட்ட மறவர்களது மகுடமான கோட்டைகளை ஆங்காங்கு இடித்துத்தள்ளினர். தங்களது உடன் பிறப்புகளாக உதவும் ஆயுதங்களையும் மறக்குடி மக்களிடமிருந்து கைப்பற்றினர்.[2] மீண்டும் தங்களுக்கு எதிராக இந்த மக்கள் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்ற அச்சமும் கவலையும் கும்பெனியாருக்கு இருந்தது. அடுத்து, அதுவரை இல்லாத அளவு, வறுமையிலும், வறட்சியிலும், நைந்து போன குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து கிஸ்திப்பணம் வசூலித்தனர். கும்பெனியாரது நிர்வாகத்தில் மறவர் சீமையில் முந்தைய நான்கு ஆண்டுகளில் அவ்வளவு பணம்-அதாவது ரூ. 6,49,889 (1,85,285 ஸ்டார் பக்கோடாக்கள்)-வசூலிக்கப்படவில்லை.[3]

தமிழ்நாட்டின் வட எல்லையில் உள்ள சென்னை செயின்ட் ஜார்ஜ்கோட்டை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை இடமாக இருந்து வந்தது. அங்கு வெடிகுண்டினால் கூட சேதமுறாத பிறைவட்ட அறை ஒன்றிற்கு இராமனாதபுர மன்னர் மாற்றம் செய்யப்பட்டார்.[4] கோட்டை தளபதி பிராக்கிலி எப்பொழுதாவது அவரைச் சென்று சந்திப்பார். அவரிடத்தில் பாணர் எதைப் பற்றியும் உரையாடுவது இல்லை. வெள்ளையரைக் கண்டாலே வெறுப்பும் வேதனையும் அடையும் நிலையில் உள்ள அவரிடம் உரையாடுவதற்கு என்ன இருக்கிறது; ஓரிரண்டு சொந்த பணியாட்கள் மட்டும் மன்னருடன் சென்னைக் கோட்டைக்குள் தங்கி இருந்தனர். முன்னைப் போல இராமநாதபுரத்திலிருந்து அடிக்கடி செய்திகள் பெறுவதற்கு இயலாத நிலை - என்றாலும் இராமனாதபுரத்திலிருந்து அவரைச் சந்திப்பதற்காக வந்த ஊழியர்களும் உறவினர்களும் அவரை விட்டு பிரிந்து செல்ல மனம் இல்லாமல் சென்னையிலேயே தங்கி விட்டனர்.[5] இராமன் இருக்கும் இடம் தானே அயோத்தி கும்பெனியாரது ஆவணம் ஒன்றில் கண்டுள்ளபடி அவர்களது மொத்த எண்ணிக்கை 99 ஆகும்.[6] மன்னருக்கு தனிமையும் எமாற்றமும் விரக்தியும் தோன்றாதவாறு அவர்கள் கவனித்து வந்தனர்.

அங்கும் ஏழு ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன.

மொத்தத்தில் பதினான்கு ஆண்டுகள் கோட்டைக்குள் சிறைவாசம், கோட்டைச் சுவற்றிற்குள் இரும்புக்கதவுகளின் வல்லைக்குள் எழுதரிய பெருங்கொடுமைச் சிறைவாழ்க்கை. நொடிப்பொழுதில் அதனை எண்ணிப் பார்ப்பது எளிதானது அல்ல. நைந்து நலிந்த உணர்ச்சிகளை மாய்த்து, உள்ளத்தை முடுக்கி விடும் ஒவ்வொரு விநாடியும் அங்கு எத்தனையோ யுகங்களுக்கும் கூடுதலான காலவரையை உடையனவாக இராமனாதபுரம் மன்னர் கருதினார். இத்தனை ஆண்டுகளையும் சிறைக்குள் கழித்ததே இணையற்ற சாதனையாகும்!

1809-ம் வருடம் ஜனவரி மாதம்.

சிறை வாழ்க்கையினால் செல்லரித்துப் போன மன்னரது உடலில் நலிவு ஏற்பட்டது, நீடித்தது. உணவு எதையும் உட் கொள்ள இயலாத இறுதிநிலை வந்துவிட்டது.[7] கோட்டையிலுள்ள இராணுவ மருத்துவர் டாக்டர் ஒயிட் அளித்துவந்த மருத்துவ உதவி பயன் அளிக்கவில்லை. மன்னருக்கு அவரது இறுதிநிலை புரிந்துவிட்டது. இத்தனை ஆண்டுகால சோதனைக்கு இடையில் தாம் விரும்பி வாழ்வதற்குரிய சுதந்திர மண் கிடைக்கவில்லை என்றாலும் சாவதற்காவது இருக்க வேண்டும் என அவர் எண்ணி இருத்தல் வேண்டும். வெள்ளைப் பரங்கிகளின் அடிமைச் சிறையில் அவரது வாழ்வை முடித்துக் கொள்ள விழையாததால் அவரது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.

இதனை உணர்ந்த மன்னரது நண்பர் சர்க்காரியாபுரம் வெங்கடாசலம் செட்டியார் மன்னருக்கு இடமாற்றம் ஏற்படுத்தினால் நல்லது என நம்பினார். கும்பெனியாரது மருத்துவர் ஒயிட்டும் மன்னரது உடல் நலம் பெற இடமாற்றமும் புதிய காற்றும் பயன்படும் என்பதை கோட்டைத் தளபதி மேஜர் பிராக்கிலியிடம் தெரிவித்தார். செட்டியாரது பிணையிலும் பொறுப்பிலுமாக கோட்டையிலிருந்து, சென்னை கோட்டைக்கு அடுத்துள்ள பிளாக் டவுனில் உள்ள செட்டியாரது விட்டிற்கு மன்னரை அனுப்பி வைக்க தளபதி இசைந்தார். 22-1-1800 அன்று மாலையில் வீரர் ஒருவர் பாதுகாப்பில் மன்னரை பிளாக் டவுனுக்கு அனுப்பி வைத்தார். உற்றாருக்கும் ஊழியருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் ஒருநாள் முழுவதும் உணர்வுடன் இருந்த சேதுபதி மன்னர் 23 24-1-1809 அன்று இரவு வரலாற்றில் வாழும் பொன்றாத புகழ் உடம்பு எய்தினார்.[8]

மன்னரது மறைவு பற்றிய செய்தியை அறிந்த தளபதி பிராக்லி அவருக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை முறைப்படி நிறைவேற்றி வைக்குமாறு வெங்கடாச்சலம் செட்டியாரை கேட்டுக்கொண்டார். கும்பெனியாரது காவலில் இருந்த சேதுபதி மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி சென்னைப் பட்டினத்தில் காட்டுத்தி போல் பரவியது. பட்டினமே திரண்டு வந்தது போன்று மக்கள் கூட்டம், மன்னருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிளாக்டவுனில் குழுமியது.[9] மன்னரது இறப்பு அவரது சொந்த சீமையில், சொந்த ஊரில் ஏற்பட்டிருந்தால் அவருக்கு இறுதி சடங்குகள் எந்த அளவுக்கு ஆடம்பரமான கண்ணியமான முறையில் மேற்கொள்ளப்படுமோ அதே முறையில் 24- l-1.1809 அன்று நிறைவேற்றி வைக்கப்பட்டன.[10]

இந்த வைதீக முறைப்படியான கோதானம், பூதானம், சொர்ணதானம், தசதர்மம், பூரி, சொர்ணபுஸ்பம் ஆகிய வைதீக சடங்குகள் முடிந்தவுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அரச உடையில் மன்னரது சடலம் கிடத்தப்பட்டது. வெண்குடை முன்னே எடுத்துச் செல்ல கட்டியக்காரர்கள், சாமரம் வீசுபவர்கள், காளாஞ்சி ஏந்துபவர்கள், ஆலவட்டம் பிடித்தவர்கள், தேவரடியார்கள், தீவட்டிக்காரர்கள் ஆகியோர் முன்னே நடந்து செல்ல தாரை, தம்பட்டை, மேள தாளம் முழங்க, பணியாளர்கள் வழியெங்கும் பூக்களைச் சிதற வாணவேடிக்கைகளுடன், பல்லக்கு ஊர்வலம் மயான கட்டம் அடைந்தது. அங்கு ஐம்பது வாழை மரங்கள் நடப்பட்டு தோரணங்களுடன் மயான மேடை அமைக்கப்பட்டு இருந்தது. முப்பது வீசை நிறையுள்ள சந்தனக் கட்டைகள் அடுக்கிய சிதையில் சேதுபதி மன்னரது உடல் வைக்கப்பட்டது. மக்களது இறுதி அஞ்சலிக்குப் பிறகு அவரது மூன்றாவது நான்காவது மனைவிகளின் மைந்தர்களான பட்டாபி இராமசாமித் தேவர், நெருஞ்சித் தேவர் என்ற இளம் சிறுவர் இருவர், சிதைக்குத் தீ மூட்டினர். கும்பெனியார் மீது மன்னர் கொண்டிருந்த வெஞ்சினம் வெளிப்பட்டது போல, சிதையின் நாலாபுறமும் சீறி எழுந்த அக்கினிச் சூழலில் மன்னரது உடல் எரிந்து, மறைந்து சாம்பல் ஆகியது.

மறவர் சீமையின் மானத்தையும் ஐக்கியத்தையும் காக்க அந்நியரை எதிர்த்த இணையற்ற மாவீரன், மறவர் திலகம் மறைந்து விட்டார். தம்முடைய நாற்பத்து எட்டு ஆண்டுகால வாழ்க்கையில் இருபத்து நான்கு ஆண்டுகள் கும்பெனியாரது வெஞ்சிறையில் கழித்த தியாகி மறைந்து விட்டார். அவரது கம்பீரமான தோற்றத்தையும் கடுமையான நடவடிக்கைகளையும் கண்டு அஞ்சிய கும்பெனியாரது கட்டுப்பாட்டினின்றும் மறைந்து விட்டார். முற்றுப்பெறாத தமது போராட்டத்தில், வாழ்வின் முடிவு வந்து விட்டதே என்ற வேதனையில் மன்னர் மறைந்து விட்டார். ஆனால் மறவர் சீமை வரலாற்றில் முத்துராமலிங்க சேதுபதி மறைந்து விடவில்லை. செயற்கரிய சாதனைகளைச் செய்தவர்களை, புராணங்களிலும் இலக்கியங்களிலும் சிரஞ்சீவிகளாக என்றென்றும் வாழ்கின்றன என வழுத்துகின்றன அல்லவா? அவர்களைப் போன்று. சேதுபதி மன்னரும் விடுதலைப் போர் இலக்கியத்தில் அந்நிய எதிர்ப்பை அடியோடு சாடிய இதிகாசத்தில், என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். இந்தத் துறையில் இவருக்கு, முன்னாள் இருந்தவர்களை பலவகையிலும் விஞ்சியவராக பின்னால் வந்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் பாரம்பரியத்தை உருவாக்கிய முன்னோடியாக இவர் விளங்குகிறார் என்பதை வரலாறு விளம்புகிறது.

* * *

கி.பி. 1736-ல் நாயக்க அரசு முடிந்து, ஆற்காட்டு நவாப்பு ஆதிக்கம் தமிழகத்தில் புகுத்தப்பட்ட பொழுது, தன்னmசாக விளங்கியவர்கள் தஞ்சாவூர் அரசரும், இராமனாதபுரம் சேதுபதி மன்னரும் ஆவர். நெல்லை, மதுரை, திருச்சிப் பகுதிகளில் முந்தைய நாயக்க மன்னருக்கு கட்டுப்பட்டிருந்த பாளையக்காரர்களில் சிலர் புதிய எஜமானரான ஆற்காட்டு நவாப்பை எதிர்க்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு தலைமை தாங்கியவர் நெற்பட்டும் செவ்வலைச் சேர்ந்த பூலித்தேவர். ஆற்காட்டு நவாப்பை அவர் எதிர்த்தாரே ஒழிய அவரது தமையனாரது மதுரை ஆளுநருமான மகபூஸ்கானை அவர் எதிர்க்க வில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரையும் தமது அணியில் சேர்த்துக்கொண்டு ஆற்காட்டு நவாப்பை பூலித்தேவர் எதிர்த்துப் போரிட்டார்.[11] அவரது இயக்கத்திற்கு நெல்லைச் சீமை பாளையக்காரர்கள் அனைவரும் முழுமையான ஆதரவு அளிக்கவில்லை.[12] மறக்குடி மக்களது மூத்தக் குடிமகனான செதுபதி மன்னரது உதவியையும் அவர் பெறவில்லை. அத்துடன், நவாப்பின் படைகள், பரங்கியருடன் இணைத்து தலைமை தாங்கிய கம்மந்தான் கான்சாகிப்பின் பண்பட்ட போர்த்திறனுக்கு முன்னால் பூலித்தேவரது படை சிதறி ஓடியது[13] தோல்வியைத் தாங்க முடியாத பூலித்தேவர் நெல்லைச்- சீமையிலிருந்து தப்பி வந்து மறவர் சீமையில் தஞ்சம் புகுந்தவராக அங்கேயே கி.பி. 1761-ல் மறைந்து போனார்.[14] அவரது காயமும் பேராற்றலும் காட்டில் ஒளிர்ந்த நிலவாக பயனற்றுப் போய்விட்டன.

அடுத்து தமிழக வரலாற்றில் ஆற்காட்டு நவாப்பையும் கும்பெனியாரையும் எதிர்த்து தியாகியானவர் கம்மந்தான் கான் சாகிபு. இவை பாளையக்காரரோ அல்லது குறுநிலக்கிழாரோ அல்ல. மறவர் சீமையைச் சேர்ந்த பனையூர் என்ற சிற்றுாரில் பிறந்த சாதாரண குடிமகன். கும்பெனியாரின் சுதேசி வீரர் களது அணிக்கு தளபதியாக இருந்தவர். காலமெல்லாம் கும்பெனியாருக்கு தனது உதிரவேர்வையை உழைப்புடன் வடித்து வழங்கி உன்னத பதவிக்கு வந்தவர். தமது வீரத்தால், நிர்வாகத் திறமையால், நவாப்பின் சொத்தாக தக்கவைத்து நலம் பல விளைய காரணமாக இருந்த மதுரைச் சீமையை, தம்முடைய கோரிக்கைக்கு புறம்பாக, மாற்றானுக்கு நவாப் குத்தகை வழங்கியதால் அவர்மீது கொண்ட வெஞ்சினத்தால் வீறுகொண்டு எழுந்தவர். நவாப்பின் பின்னே வலிமைமிக்க கும்பெனியாரின் ஆயுத பலம் இருப்பது தெரிந்தும் மக்கள் பலத்துடன் மாற்றானை போரில் சந்தித்தார். அதுவரை அவரிடம் தோழமையுடன் இருந்து வந்த திருவாங்கூர் அரசரும், இராமனாதபுரம், சிவகங்கை மறவர்களும், அவருக்கு உதவிசெய்ய முன்வரவில்லை. அவர்களை உதவவிடாமல் கும்பெனியாரும் நவாப்பும் தடுத்து விட்டனர்.[15] என்றாலும் தமது தாளாத ஆற்றலில் நம்பிக்கை கொண்ட கான்சாகிப் தம்மைப் பொருதிய நவாப்பையும் அவரது துணைவரான வலிமை மிக்க பரங்கியரையும் மதுரை கோட்டை முற்றுகையில் திக்குமுக்காடச் செய்தார். ஓராண்டுக்கு மேலாக அந்த முற்றுகைப்போரில் பல உத்திகளைப் பயன்படுத்தியும், பயன் அளிக்காததினால், இறுதியாக நவாப், துரோகிகளைக்கொண்டு கான்சாகிப்பை பிடித்து 16-10-1764-ல் தூக்கில் போட்டுக் கொன்றார்.[16]

அன்றைய தமிழ்நாட்டில், ஏன், இந்திய துணைக்கண்டத்தில் இந்த இருபெரும் வீரர்களைத் தவிர, அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து போர் முழக்கம் செய்தவர் வேறு யாரும் இலர். அந்த தியாகிகளது நாட்டுப்பற்றுக்கும் போற்றலுக்கும் தமிழ் மறவர் என்றென்றும் தலைதாழ்த்தி மரியாதை செய்ய கடமைப் பட்டுள்ளனர். இந்த நாட்டின் விடுதலைப் போர் என்ற பார காவியத்தின் பல்வேறு பகுப்புகளில், அவர்களது தனித்தன்மை, இலட்சியம், அரசியல் நோக்கு, மக்கள் ஆதரவு, போன்ற பண்புகளை ஒப்பு நோக்கி ஆராயும் பொழுது, ஆண்டிலும் அனுபவத்திலும் மிகவும் இளையவரான இராமனாதபுரம் முத்து ராமலிங்க சேதுபதி மன்னர் இந்த இருபெரும் வீரரையும் பல வகையிலும் விஞ்சி நிற்கின்றார். முதலாவதாக அவர் ஒரு தன்னரசு பரம்பரையில் வந்தவர். அவரது இளம் உள்ளத்தில் அந்நிய ஆதிக்க எதிர்ப்பு மிகப்பெரும் அளவில் வேரோடி நின்றது. அவரது குறுகிய கால வாழ்க்கை நிகழ்ச்சிகளின் சிறப்பு பகுதிகள் அவர் ஒரு சுதந்திர வீரர், விடுதலை வேட்கை கொண்டவர் என்பதை விளம்புகின்றன. இன உணர்வும் மறப்பண்பும் மிகுந்த அவர், கும்பெனியாரது ஒவ்வொரு கட்டளையையும் எதிர்த்து புறக்கணித்ததுடன் அவர்களது ஆதிக்கப் பேராசைக்கு குறுக்கே நின்று வந்தார். இதன் காரணத்தினால் இந்த நாட் டில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்பு கிளர்ச்சியில், பரங்கியரை அழித்தொழிக்கும் புரட்சித் தலைவராக ஒளிவீசி உயர்ந்து உள்ளார்.

அவரைத் தொடர்ந்து, பிற்காலத்தில் தமிழகத்தில் பாஞ்சைப்பதி வீரபாண்டிய கட்டபொம்மு, சித்திரங்குடி மயிலப்பன். சிவகங்கை மருது சேர்வைக்காரர்கள், மீனங்குடி முத்து கருப்பத்தேவர், தேவதானப்பட்டி பூசாரிநாயக்கர், விருபாட்சி கோபால நாயக்கர், பழனி முத்து சேர்வைக்காரர், காடல்குடி நாயக்கர், குளத்துார் நாகராச மணியக்காரர் ஆகிய மக்கள் தலைவர்கள் வெள்ளையருக்கு எதிராக வீறு கொண்டு எழுந்து அவர்களுடன் இறுதிப்போர் நடத்துவதற்கு முன்னோடியாக இந்த சேதுபதி மன்னரது விடுதலைப் போக்கும் தியாக வாழ் அம் வழிகாட்டியாக ஒளியூட்டுவதை வரலாறு காட்டுகிறது.

இன்னும் தெளிவாக குறிப்பிடுவது என்றால், இந்திய துணைக்கண்டத்தில், இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளையருக்கு எதிரான விடுதலைக் கிளர்ச்சி, தெற்கிலிருந்து துவங்கி, நாடு தழுவிய தேசியப் புரட்சியாக பரிணமித்து எழுவதற்கு முன்னர், வெள்ளையரது ஆதிக்க கொள்கையை அரும்பு பருவத்திலே அழித்து ஒழிக்க தன்னரசு முழக்க மிட்டவர் இந்த சேதுபதி மன்னர். இவரது இலட்சியச் சிந்தனையை, பிற்காலத்தில் எழுந்த சின்னஞ்சிறு கிளர்ச்சிகளும், ஆயுதப் போராட்டங்களும் மகத்தான மக்கள் இயக்கங்களும், எதிரொலித்தன . மாற்றானை நாட்டை விட்டு விரட்டச் செய்த மகோன்னத புரட்சியாக மலர்ந்தது. ஆனால் சேது மன்னரது பரங்கியர் ஆதிக்க எதிர்ப்பு போக்கிற்கு ஏற்ற பரிசாக அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்துக் கொன்றனர். தங்களை எதிர்க்கும் நாட்டுப்பற்று மிக்கவர்களை பயமுறுத்தி நடுங்க வைப்பதற்காக கும்பெனியார் கையாண்ட உத்தி இது.

அவர்களுடைய ஆவணங்கள் இந்த வரலாற்று உண்மையை மூடிமறைப்பதற்காக சேதுபதி மன்னர் கொடுமையாக ஆட்சி செய்தார். குடிகளிடம், குறிப்பாக நெசவாளர்களிடம் கூடுதலான வரிகளை வசூலித்தார் என்ற புனைந்துரைகளை வரைந்துள்ளன. அவை அனைத்தும் உண்மை என்றே ஏற்றுக் கொண்டாலும் கூட, அவரை 8-2-1795 Political Despatches to England, Vol. II. 4-3-1795, pp. 338-40. அன்று மறவர் சீமையின் ஆட்சிக் கட்டிலிலிருந்து நீக்கிய பிறகும்கூட, அவm் இறக்கும்வரை தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஏன் சிறைக்குள் அடைத்து வைத்திருக்க வேண்டும்?

சிவகங்கைச் சேர்வைக்காரர்களுக்கு எதிராக சேதுபதி போர் தொடுத்தார் என்பது மற்றொரு புனைந்துரை. ஆங்கிலேயரது செல்லப்பிள்ளைகளாக ஆரம்பகாலத்தில் நடித்துவந்த அதே மருது சேர்வைக்காரர்களை கும்பெனியார் தங்களது எதிரிகள் என பகிரங்கமாக அறிவித்ததுடன் அவர்களது கிளர்ச்சியையும் தங்களது மிருக பலத்தாலும், துரோக உபாயங்களாலும் தோல்வியுறச் செய்து, அவர்களையும் திருப்பத்துரர் கோட்டையில் 2 1-10-1801-ல் தூக்கில் தொங்கவிட்டனர்.[17] அதற்குப் பிறகும் கூட சேதுபதி மன்னரை ஏன் சிறையில் வைத்திருக்க வேண்டும்?

அப்பொழுது தமிழ்நாட்டிலிருந்து மற்றொரு தன்னரசாைன தஞ்சாவூரின் அரசர் அமீர்சிங்கை ஆளத் தகுதியற்றவர் என நீக்கிவிட்டு கும்பெனியார் தங்களுக்குச் சாதகமாக இருந்த இளவல் சரபோஜிக்கு மன்னர் பட்டம் சூட்டிய பின்னர் அவருக்கு ஒய்வு வழங்கி தஞ்சை தரணியையும் தங்களது சொத்தாக சேர்த்துக் கொண்டனர்.[18] அதனைப் போன்று இராமநாதபுரம் மன்னரை பதவிநீக்கம் செய்த பின்னர் அவரது வாரிசுக்கு ஆட்சியுரிமை அளிக்கப்போவதாக அறிவித்தனர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெருந்தொகையை கையூட்டாகப் பெற்றுக் கொண்ட பிறகு மங்களேஸ்வரி நாச்சியாரை மறவர் சியிைன் பிரதிநிதியாக (ஜமீன்தாரினி) 20-2-1803-ல் ஏற்படுதினர்.[19] அதன் பின்னரும் கூட முத்துராமலிங்க சேதுபதியை விடுதலை செய்யவில்லையே ஏன்?

திருச்சிக் கோட்டையில் கைதியாக இருந்த சேதுபதி மன்னர் தாம் செய்த குற்றம் என்ன என கும்பெனி கவர்னரை கோரினார். பல மடல்களை அனுப்பி வைத்தார். பதில் ஏதும் வேலை. பார் புகழும் மறவர் சீமையின் மன்னராக இருந்த தங்கள் முன்னோர்களைப் போன்று முறை தவறாத ஆட்சி செய்தது குற்றமா? அல்லது காடு திருத்தி கழனி சேர்த்து, கண்மாய் நிறைத்து, கோவிலும் மடமும் சமைத்து, பஞ்சமும் பசியும் நீக்கி, வளமை சேர்த்தது குற்றமா? தம்மீதான குற்ங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க, விசாரணை ஏற்படுத்துமாறு அவர் கோரினாரே அந்த குற்றச்சாட்டுகள் விசாரனை செய்யப்பட்டனவா? அல்லது அந்த குற்றங்களுக்கு தண்டனை இல்லை என முடிவு செய்யப்பட்டதா? இல்லையே ஏன்? பரங்கியரின் பெரும் பிரதிநிதிகளான சென்னை கவர்னரும் கல்கத்தா கவர்னர் ஜெனரலும், மன்னரது கோரிக்கையை ஏற்று ஏன் நீதி விசாணை செய்யவில்லை? அவர்கள் நாட்டு நீதி வழியில் கூட செயல்படவில்லை. ஏன்?

அநீதி நிகழ்ந்து இருந்தால்தானே குற்றச்சாட்டுகளும் நீதி விசாணையும் தேவைப்படும். ஆனால் அன்றைய அரசியலில், அநீதிக்கு அடைக்கலம் கொடுத்து அவைகளை அமுல்படுத்தும் அக்கிரமக்காரர்களாக வெள்ளையர்கள் விளங்கிக் கொண்டிருந்த அவர்களது அக்கிரம ஆட்சியின் பிரதிபலிப்பாக அவர்களது இனத்தவர்களே, அமெரிக்க நாட்டில் கி.பி. 1776-83 வரை அவர்களை எதிர்த்துப் போரிட்டனர். வெற்றியும் விடுதலயும் பெற்றனர். உலக வரலாற்றில் அந்த இயக்கம் அமெரிக்க நாட்டு விடுதலைப் போராக இன்றும் போற்றப்படுகிறது. அவர்களது சிறந்த அரசியல்வாதியான எட்மண்ட்பர்க் இந்திய நாட்டில், பரங்கியர் இழைத்த கொடுமைகளை இங்கி லாந்து பாராளுமன்றத்தில் எடுத்துக்காட்டி எட்டு ஆண்டுகள் ஆங்கில ஆட்சியையும் பிரதிநிதிகளையும் சாடியபொழுதும் வரலாற்றின் படிப்பினை புரிந்து கொள்ளாமல் நாடு பிடித்து ஆளும் நசிவுக் கொள்கையில் அவர்கள் நிலைத்து நின்றனர்.

நீதியும் நேர்மையும் சேதுபதி மன்னரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என அவர்களை நினவூட்டி இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவர்கள் நெஞ்சிலே மறவர் சீமையைப் பற்றிய பயமும் பீதியும் நிரந்தரமாக நிறை , திருக்க வேண்டும். சேதுபதி மன்னர் சிறையில் இருந்து வெளியே வந்தால் ஏற்படும் நிலைமையை அவர்களால் எங்ங்னம் கட்டுப்படுத்த முடியும்? திருச்சிக் கோட்டை சிறையில் இருக்கும் பொழுது அவரது பெயரைப் பயன்படுத்தி பதினாயிரக்கணககான மறவர்களை மயிலப்பன் மன்னருக்கு ஆதரவாக கிளர்ந்தெழுமாறு செய்தார். இப்பொழுது மன்னரே நேரில் வந்து மறவர்களது உதவி கோரினால், மறவர் சீமையில் உள்ள அவைவரும் அல்லவா பரங்கியருக்கு எதிராகப் புறப்படுவர். அத்துடன் நெல்லைச்சீமை பாளையக்காரர்களும் திருவாங்கூர் அரசர் வீரர்களும், மேல்நாட்டு கள்ளர்களும் இன்னும் சிவகங்கை சீமை, படமாத்துார் மறவர்களும் அல்லவா சேதுபதி மன்னாது உதவிக்கு ஓடி வருவார்கள். பிறந்த மண்ணின் மீதுள்ள பற்றும். அந்நிய எதிர்ப்பு உணர்வும், உள்ளத்தில் நிறைத்து அணி திரளும் மக்களை எந்த சக்தியினால் எதிர்க்க முடியும்?

இதனால் தான் சேதுபதி மன்னரை மக்களிடமிருந்து பிரித்து கொடுஞ்சிறையில் அடைத்து அவரது வாழ்நாள் முழுவதையும் பாதுகாப்புக் கைதியாகவே கழித்து முடிக்குமாறு செய்தனர். தீரர் திப்புசுல்தானுக்கும், வீரர் கான்சாகிப்புக்கும் அஞ்சாத கும்பெனியார் மறவர் சீமையின் சேதுபதி மன்னருக்கு அஞ்சி நடுங்கினர், என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். மன்னரது வாழ்வுடன் மக்களது தன் மான உணர்வும், விடுதலை வேகமும் மங்கி மறைந்துவிடும் என்பது அவர்கள் கொண்டிருந்த முடிவு. ஆனால் அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவர்களது கணிப்பைப் பொய்யாக்கின. 1799-ல் வெடித்த முதுகுளத்து கிளர்ச்சி பாஞ்சாலங்குறிச்சிப் போர், 1800-ல் மதுரை, திண் டுக்கல் பகுதி பாளையக்காரர்களது தீவிரமான கிளர்ச்சி, 1801-ல் மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக தொடுத்த போர். 1806 ல் வேலூர் கோட்டையில் கும்பெனித் தளபதிகளைக் கொாறு சிப்பாய்கள். கோட்டையை கைப்பற்றிய கிளர்ச்சி 1808 ல் ராமன் நாயரது வயநாட்டுக் கிளர்ச்சி, 1809 -ல் முருவாங்கூரில் தளவாய் வேலுத்தம்பியின் எதிர்ப்பு. 1857-ல் மாநிலங்களில் பரவிய சிப்பாய்களது சூறாவளிப் புரட்சி...

இவ்விதம் நீண்டு தொடர்ந்து, வெள்ளையருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த இயக்கங்கள், புரட்சிகள், இவையனைத்தும் மாறவர் சீமையில் மட்டும் அல்லாது இந்திய துணைக்கண்டத்தின் வடகோடிவரை பரவின; தொடர்ந்தன. சுமார் இருநூறு ஆண்டு காலம் நீடித்த இந்த வீர வரலாற்றின் முடிவு நமக்கு சுதந்திரத்தை விடுதலையை பெற்று வழங்கியது. ஆதிக்க வெறியர்களுக்கு மரண அடி அளித்தது அவர்களை நமது நாட்டை விட்டு ஓடச் செய்தது.

இறைவனது சந்நிதானத்தில் இணைந்து சுடர்விடும் இலட்ச தீபங்களை ஒளி ஏற்றுவதற்கு ஒரே ஒரு சுடர்தான் பயன்படுகிறது. அதைபோன்று இந்த நாட்டில் இலட்சக்கணக்கான தொண்டர்கள், தீரர்கள். தியாகிகளது உள்ளங்களில், உரினும் மேலான தாய்நாட்டுப் பற்றையும், தியாக சிந்தனையயும் ஊட்டி, வெள்ளை அரசினருக்கு எதிராக வெகுண்டு எழச்செய்து, வெற்றி காண்பதற்கு, சுதந்திர தேவியின் சந்நிதானத்தை சுடர் மிகுந்த ஆலயமாக்குவதற்கு, மறவர் சீமையின் முத்துராமலிங்க சேதுபதி என்ற அக்கினிக் கொழுந்து பயன்பட்டு இருப்பதை விடுதலை வரலாறு விளம்புகிறது. அந்த வேள்வியில் தன்னையே ஆகுதியாக அளித்து பெருமை பெற்றுள் தியாகிகளின் பட்டியலில் முதலிடத்தில் விளங்குபவர் இந்த சேதுபதி மன்னர். அவரது நினைவிற்கு நமது விடுதலை இயக்கம் என்றென்றும் அஞ்சலி செலுத்தும் என்பதில் ஐயமில்லை.


 1. Madurai collectorate Records, Vol. 1139, 14-4-1802/ 1146, 24-9-1803.
 2. Madurai collectorate Records, Vol. 1140, 10-1-1803.
 3. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 257.
 4. Revenue Consultations, Vol. 167 (1809), pp. 315-17, p. 222
 5. Madurai collectorate Records, Vol. p. 1163 (1815) pp. 206-207.
 6. Ibid., p. 320.
 7. Madurai collectorate Records, Vol. 1197. 1-2-1809 p. 136.
 8. Ibid., 1-2-1809, pp. 135-37.
 9. Madurai Collectorate Records, Vol. 1197. 1-2-1809 pp. 135-40.
 10. Revenue consultations, Vol. 167, 14–2-1809, pp. 312-31.
 11. Military Country Correspondence, Vol. VI, 9-1-1758, p. 6
 12. Rajayyan, K., Dr., Rise and Fall of Polegars of Tamilnadu (1974), pp. 48–50.
 13. Military Country Correspondence, Vol. IX, 25-5-1761, р. 58.
 14. Kathirvelu, S., Dr., History of Marawa (1972), p. 140.
 15. Military Country Correspondence, Vol. X., 13-7-1763 р. 99.
 16. Hill, S.C.. Yousuffkhan, the Rebel Commandant (1914).
 17. Military Despatches to England, Vol. 33, 20-10-1802, р. 668.
 18. Revenue Despatches to England, Vol. VII. 9-5-1803, pp. 528-40.
 19. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 248