உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/சில விளக்கக் குறிப்புகள்

விக்கிமூலம் இலிருந்து

இணைப்பு 3


சில விளக்கக் குறிப்புகள்


சேதுபதி மன்னரது குடும்பம்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளையும் ஆக்கிரமித்து அடிமைப்படுத்திய ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் அந்தப் பகுதியில் ஆட்சி செய்த மன்னர் குடும்பங்களை மாற்றாந்தாய் மக்களைப் போல நடத்தினர். அவர்களது இந்த மனிதாபிமானமற்ற போக்கிற்கு இராமனாதபுரம் மன்னரது குடும்பமும் விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அல்ல. விடுதலை வேட்கையின் வடிவாக விளங்கிய இராமனாதபுரம் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மன்னரது அரச வாழ்வை அழித்து, அவரது உடமைகளை தமதாக்கி, அவரை சிறையில் தள்ளியதுடன், அவரது குடும்பத்தினரும் அல்லற்பட்டு, ஆற்றாது அழுத கண்ணிருடன் ஊமைகளாகக் காலமெல்லாம், வறுமையிலும், வாழ்வின் சிறுமையிலும் நலிந்து அல்லலுமாறு செய்தனர்.

சென்னைக் கோட்டையில் சேதுபதி மன்னர் இறந்த செய்தி அறிந்து, அவரது முதல் மனைவி ராஜேஸ்வரி நாச்சியார், நமது கைம்மையை கருத்தில் கொண்டு இராமனாதபுரம் அரண்மனையில் தீக்குளிக்கத் தயாரானார். கொடுமையின் உருவாக இருந்த தளபதி மார்ட்டின்ஸின் கடிய மனதைக்கூட கரைத்தது. ராணியாரின் நிலை கிழக்கிந்திய கும்பெனி துரைத்தனத்தாரின் பிரதிநிதி என்ற முறையில், ராணியாரை நேரில் சந்தித்து அவரது முயற்சியைக் கைவிடுமாறு செய்து அவருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் மறைந்த மன்னரது குடும்பத்தினர் அனைவரும் எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் வாழ்வதற்கு வழி செய்வதாகவும் வாக்களித்தார். ஒன்பது மாதங்களுக்குத் தொடர்ந்து பராமரிப்புத் தொகை வழங்கப்பட்டது. மாதம் ஓராயிரம் ரூபாய்கள். ஆடம்பரமாக எல்ல வசதிகளுடன் வாழ்ந்த அந்தக் குடும்பத்தினர் - நான்கு மனைவிகளும், அவர்களது குழந்தைகளும், பணியாளர்களும்-அந்தத் தொகையில் தங்கள் வாழ்க்கையை சமாளித்து வந்தனர்.

ஆனால் கி.பி. 1809 அக்டோபர் முதல் அந்தத் தொகையும் நிறுத்தப்பட்டு விட்டது. பெண்பாலரான அவர்கள் அனை வரும் படாத பாடு பட்டனர். மேலிடத்திற்கு பல முறையீடுகள் அனுப்பினர். பலன் எதுவும் இல்லை. அவர்களது கண்ணிர் கதைகள் கும்பெனியாரது ஆவணங்களே கூறியுள்ளன. ஆனால் அன்றைய ஆளவந்தார்களுக்கு அந்த ஆவணங்கள் பொழுதுபோக்கு புதினமாக இருந்து இருக்க வேண்டும்! மன்னரது குடும்ப நலிவு பற்றி அவர்கள் கொஞ்சமும் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் அதே நேரத்தில் இறந்துபோன மன்னரது அஸ்தியை யாரிடம் ஒப்படைப்பது? அவர் சென்னைக் கோட்டையில் விட்டுச் சென்றுள்ள பெட்டகங்களுக்கு வாரிசு தாரர் யார்? என்பன போன்ற வீணான பிரச்சினைகளில் ஓராண்டிற்கும் மேலாக ஈடுபட்டு இருந்தனர்.

இதற்கிடையில், பசியிலும், பட்டினிக் கொடுமையிலும் பரிதவித்துக் கொண்டிருந்த மன்னரது குடும்பத்தினர் நிலையைக் கேள்வியுற்ற இராமனாதபுரம் ராணி மங்களேசுவர நாச்சியார், அந்தக் குடும்பத்தினருக்கு சமஸ்தான நிதியில் இருந்து, மாதந் தோறும் உதவித் தொகை வழங்கி உதவினார். ஆனால், இந்த ஏற்பாடும், ராணியார் கி. பி. 1812-ல் இறந்தவுடன் தடைப்பட்டது. அப்பொழுது கலெக்டராக இருந்த ரூயிஸ் பீட்டர் மூலம், கும்பெனியாரது உதவியை அந்தக் குடும்பத்தினர் நாடினர். பரங்கியரான கலெக்டரது பரிந்துரைக்குக்கூட பயன் கிட்டவில்லை. இடையில் இராமனாதபுரம் சமஸ்தான நிர்வாகிகள் வேண்டா வெறுப்பாக அந்தக் குடும்பத்தினருக்கு சில சமயங்களில் உதவி வந்தனர். தாங்கள் குடியிருந்த விட்டின் இடிபாட்டைக்கூட பழுதுபார்க்க முடியாமல், கும்பெனியாரது உதவி கோரிய அவர்களது முறையீடுகளைப் பற்றிய ஆவணங்களைப் படிக்கும் யாரும் கண்ணிர் வடிக்காமல் இருக்க முடியாது.

இங்ஙனம், கி.பி. 1809-ல் தொடங்கிய அவர்களது கண்ணீர்க் கதை, வழிவழியாக, ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமாகத் தொடர்ந்து வந்து இருப்பதிலிருந்து அந்த அப்பாவிகளது அவலத்தின் மிகுதியையும், ஆழத்தையும் யாரும் எளிதில், புரிந்து கொள்ள இயலும். முத்து ராமலிங்க சேதுபதி மன்னரது மகன் கல்யாண ராமசாமித் தேவரது வழியினர், கி.பி. 1920-ல் கூட 'காருண்யமிக்க' ஆங்கில ஆளுநருக்கு உதவி கோரிய முறையீடு ஒன்று உள்ளது. மன்னரது ஏனைய மக்களான பட்டாபி இராமசாமித் தேவர். நெருஞ்சித் தேவர் ஆகியோர் பற்றிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. மாற்றானது ஆதிக்கம் மறவர் சீமையில் எற்படுவதைத் தடுத்த மாபெரும் குற்றத்திற்காக பரம்பரை அரசு உரிமையையும் பெருமைக்குரிய அரண்மனையையும். சொந்த உடமைகளையும் பகற்கொள்ளைகாரர்களான பரங்கியர்களிடம் பறிகொடுத்து, நாற்பத்து எட்டு ஆண்டு வாழ்வில் இருபத்து நான்கு ஆண்டுகளை இதந்தரு மனையில் நீங்கி, இடர்மிகு சிறையில் கழித்து அங்கேயே தமது வாழ்வை முடித்த அந்தச் சுதந்திரச் செம்மலின் குடும்பம், சமுதாயத்தின் பார்வையில் இருந்து விடுபட்டு, சிதைந்து. சீரழிந்து. மறைந்தது வரலாற்றின் வேதனை நிறைந்த பகுதியாக விளங்குகிறது.

2. ஆற்காட்டு நவாப்

இந்திய பேரரசராக இருந்த அவுரங்க ஜேப் தக்கானததில் உள்ள பேராரையும் கோல்கொண்டாவையும் கி.பி. 1685 88-ல் வெற்றிக் கொண்டார். செஞ்சிக்கோட்டை வரையிலான அவரது ஆதிக்கத்தில் உள்ள தென்னிந்திய பகுதிக்கு ஜு்ல்பிகார்கானை நவாப்பாக நியமனம் செய்தார். கி.பி. 1691-ல அவர் ஆற்காட்டை தலைமை இடமாகக் கொண்டு கர்நாடக நவாப் என இயங்கி வந்தார். முகலாய பேரரசரது மரணத்தியகுப் பிறகு, கிழக்கு, மேற்கு, தெற்கில் உள்ள அவரது பிரதிநிதிகள் சுயேச்சை பெற்றனர். தக்காணப் பிரதிநிதியான நிஜாம், கர்நாடக நவாப்பான சாததுல்லாவை ஆற்காட்டு நவாப்பாக நியமித்தார். அவரும் ஆற்காட்டில் இருந்து கொண்டு வேலுர் . தஞ்சை, மதுரை ஆகிய ஊர்களில் உள்ள நாயக்க மன்னர்களிடம் கப்பம் வசூலித்து வந்தார்.

இவருக்கு வாரிசு இல்லாததால், அவரது சகோதரரின் மகன் தோஸ்து அலி கி.பி. 1732-40-ல் நவாப்பாக இருந்தார். அவரது உறவினரான சந்தா சாகிபு திருவாங்கூர் வரை படை எடுத்துச் சென்று கர்நாடகம் முழுவதையும் நவாப்பிற்கு கட்டுப்பட்டதாகச் செய்தார். கி.பி. 1740-ல் தோஸ்து அலி மராத்தியருடன் நடத்திய தமலாச்சேரி போரில் இறந்தார். அவரது மகன் ஸப்தார் அலி மராத்தியருக்கு கட்டுப்பட்டு நவாப்பாக இருந்தார். இதனைத் தொடர்ந்து சந்தாசாகிபு அரசியல் கைதி யாக மராத்தியரால் கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையில் நவாப்பின் மைத்துனன் முர்த்தளலா அலி என்பவன் நவாப்பை படுகொலை செய்தான். இறந்தவரின் இளம் மகன் நவாப்பாக தெரிவு செய்யப்பட்டான். அந்த சிறுவனை அவனது பாதுகாப்பாளராக இருந்த அன்வர்தீனும், முர்த்தலா அலியும் சேர்ந்து சதி செய்து கொன்றனர். அடுத்து அன்வர்தீன் கர்நாடக நவாப் என்று பட்டம் புனைந்து கொண்டான்.

மராட்டிய மாநிலத்தினின்றும் தப்பி வந்த சந்தாசாகிபு, தமது உறவினரான நவாப்பைக் கொன்ற பாதகன் அன்வர்தினைப் போரில் கொன்று ஆற்காட்டைக் கைப்பற்றினார். அன்வர்தீன் மகன் வாலாஜா என்ற முகம்மது அலி, சந்தா சாகிபுவிடமிருந்து தப்பி திருச்சிக் கோட்டைக்கு ஓடினார். நிஜாம் சந்தா சாகிபுவை நவாப்பாக அங்கீகரித்தார். பிரஞ்சுக் காரர்களும் அவரை ஆதரித்தனர். என்றாலும், ஆங்கிலேயரது உதவி கொண்டு முகம்மது அலி சந்தா சாகிபுவை எதிர்த்தார். சந்தா சாகிபுவை துரோகத்தால் கொன்று ஆற்காட்டு நவாப் ஆனார். ஆந்திரத்திலிருந்து திருவாங்கூர் வரையான பகுதிக்கு ஆதிக்க உரிமை கொண்டாடி அதனை நிலைநாட்ட பல போர்களை மேற்கொண்டார். ஆனால் திருநெல்வேலிச் சீமையில் பாளையக்காரர் அவரை தங்களது மன்னராக அங்கீகரிக்க மறுத்தனர். இவர்களுக்கு நெற்கட்டும் செவ்வல் பாளையக்காரரான பூலித்தேவர் தலைமை தாங்கினார்.

ஏறத்தாழ இருபது வருடங்கள், நீடித்த இந்த உள்நாட்டுப் போரிலும், மறவர் சீமை மன்னர்கள், தஞ்சை மன்னர், மைசூர் மன்னர், பிரஞ்சுக்காரர் ஆகியவர்களுடன் நடத்திய போர்களிலும் முகம்மதுஅலி ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் பெருங் கடனாளியானார். அவர்கள் இந்தப் போர்களில் நவாப்பிற்கு உதவியதற்காக பல சலுகைகளை நவாப்பிடமிருந்து பெற்ற பொழுதும், தங்களது கடனை வட்டியுடன் வசூலிக்கத் தவறவில்லை, இந்தக் கடன் கணக்கு எப்படி எழுதப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணம். கி.பி. 1758-59-ல் பிரஞ்சு தளபதி ஆங்கிலேயரின் சென்னைக் கோட்டை மீது தாக்குதல் நடத்தினார். அந்தப் போரில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட செலவு அனைத்தும் முகம்மது அலியின் செலவாக கணக்கு எழுதப்பட்டது. முகம்மது அலியின் நண்பர்கள் அல்லவா ஆங்கிலேயர்! இதைப்போலவே கி.பி. 1761-ல் ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்களது பாண்டிச்சேரிக் கேர்ட்டை மீது போர் தொடுத்தனர் . இந்தப் போர்ச் செலவும் நவாப்பின் பற்றுக் கணக்கில் எழுதப்பட்டது. காரணம் பிரஞ்சுக்காரர்கள் நவாப்பின் எதிரிகள் அல்லவா?

இவ்விதம் பாக்கிப்பட்டுப்போன கடனை வசூலிப்பதற்கு, கும்பெனியார் கி.பி. 178 , 1785, 1787, 1792 ஆகிய ஆண்டுகளில் நவாப்புடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்னர். இதன் மூலமாக தென்னக அரசியலில் நேரடியாகத் தலையிட்டு தாங்களே மறைமுகமான ஆட்சியாளராக மாறினர். கி.பி. 1795-ல் நவாப் முகம்மது அலி இறந்தவுடன் அவரது மகன் உம்தத்துல் உம்ராவை நவாப்பாக மதிக்காதததுடன் அவர் மீதும் அவரது இறந்த தந்தையின் மீதும் வீண் பழிகளை கும்பெனியார் சுமத்தினர். இந்தக் கவலையினால் மனம் உடைந்த நவாப் கி.பி. 1801-ல் இறந்து போனார். அவரது மகன் தாஜுல் உம்ரா நவாப்பாக இருப்பதற்கு தகுதி இல்லையென புறக்கணித்து விட்டு அவரது சிறிய தந்தையின் மகனான அஜிம் உத்தெளலாவை நவாப்பாக அங்கீகரித்தனர். அவரையும் மிரட்டி, அவரிடமிருந்து அதிகார பூர்வமாக தென்னகம் முழுவதற்கும் ஆளும் உரிமையைப் பறித்தனர். ஆற்காட்டு நவாப் என பெயரளவில் இருந்த அவர் கி.பி. 1819-லும் அவரது மகன் கி.பி. 1825-லும் இறந்த பிறகு அவர்களது குடும்பத்தினரை சேப்பாக்கம் அரண்மனையில் இருந்து அகற்றிவிட்டு, அந்த மாளிகையைப் பொது ஏலத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். குதிரை, வீரனைக் குழியில் தள்ளியதுடன் மண்ணை வாரி மூடிய கதை!

தமது கும்பெனி நண்பர்களுக்கு அண்மையில் இருக்க வேண்டுமென்பதற்காக, நவாப் முகம்மது அலி ஆற்காட்டில் இருந்து சென்னைக்கு வந்து கும்பெனியினரது கோட்டைக்கு அருகிலேயே இந்த மாளிகையை அமைத்து மிகுந்த ஆரவாரத் துடன் குடியேறினர். அன்றைய அந்த 'புதுமனை புகுதலை' மிகச் சிறப்பாக நடத்தினார். கோட்டையில் இருந்த கவர்னர் உள்ளிட்ட அனைத்துப் பரங்கிகளையும் தமது புதிய மாளிகைக்கு வரவழைத்து பெரும் விருந்து நடத்தி, அன்பளிப்பும் வழங்கி, அவர்களுக்கு கையில் 'இனாமு'ம் கொடுத்து அனுப்பி வைத்தார். இனாம் தொகை ரூ. 30,000/- கவர்னருக்கு கொடுத்தது மட்டும் ரூ. 7,000/- இதைத் தவிர இந்த அரண்மனையில் வெள்ளையருக்கு விருந்து நடக்காத இரவோ, பகலோ இல்லை யென்று சொல்லும் அளவிற்கு பரங்கிகளுடன் குலவிய நவாப் முகம்மது அலியின் குடும்பத்திற்கு கும்பெனியார் அந்த மாளிகையை ஏலத்தில் விடுவதைவிட வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும்?

இவ்விதம், கும்பெனியார் மீது கொண்டிருந்த பொய்மையான மயக்கத்தினால் அவர்களை முழுக்க முழுக்க நம்பி செயல்பட்ட முகம்மது அலி, நாட்டுப்பற்றும் பேராற்றலும் மிக்க பூலித் தேவர், கம்மந்தான் சாகிபும், முத்துராமலிங்க சேதுபதி மன்னர் போன்ற ஒப்பற்ற வீரர்களை கும்பெனியாரது கொடுமைக்கு பலியாக்கினார். ஆனால் அந்த நவாப்பும், அவருடைய வாரிசு களும் அதே கும்பெனியாரின் கொடுமைக்கு தப்பியவர்கள் அல்ல என்பதை வரலாறு உணர்த்துகிறது.


3. தளபதி மார்ட்டின்ஸ்

ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிச் சேவகத்தில் மறவர் சீமைக்கு வந்த போர்ச்சுக்கல் நாட்டு வீரன், கி பி. 1772-ல் ஆற்காட்டு நவாப் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்தவுடன், அந்தக் கோட்டையின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டான். முத்துராமலிங்க சேதுபதி மன்னர் கி. பி. 1781-ல் விடுதலை பெற்று, மறவர் சீமையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கொண்ட பிறகும் தொடர்ந்து கோட்டைப் பொறுப்பு அலுவலராக இருந்து வந்தான். அத்துடன் கும்பெனியாருக்கும் நவாப்பிற்கும் மறவர் சீமை அரசியலை அந்தரங்கமாகத் தெரிவிக்கும் அரசியல் ஒற்றனாகவும் இருந்தான். இவனது 'அறிவுரை' யைக் கேட்டு வந்த இராமனாதபுரம் அரசரின் பிரதானி முத்து இருளப்பபிள்ளை, விரைவிலேயே கும்பெனியாரது 'செல்லப் பிள்ளை'யாக மாறிவிட்டார். இந்த இரு பிரமுகர்களின் பெரு முயற்சியினால் இராமநாதபுரம் சேதுபதி மன்னரது திட்டம் தோல்வியுற்று வாழ்நாள் முழுவதும் திருச்சி, சென்னைக் கோட்டைகளில் அரசியல் கைதியாக இருந்து இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கி. பி. 1781-ல் ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைத்தேவனும் கி. பி. 1801-ல் மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரும் கிளர்ச்சிக்காரர்களுடன் இராமனாதபுரம் கோட்டையை கைப்பற்ற முயற்சித்த பொழுதும், கி. பி. 1799-ல் முதுகுளத்துார் பகுதியில் மக்கள் கிளர்ச்சி வெடித்தபொழுதும், அவைகளை முறியடிக்க திட்டம் திட்டித் தந்தவனும் இந்த தளபதிதான். இலங்கை செல்லும் வழியில் கி பி 1797-ல் இராமனாதபுரம் கோட்டைக்கு வந்த தளபதி வெல்ஷ் தமது குறிப்புகளில் இவனைப்பற்றி வரைந்துள்ளான். உலகத்திலேயே விருந்தோம்பலுக்குப் பெயர் போன இந்த நாட்டில் இந்த வயோதிக தளபதி சிறந்து விளங்குவதாகவும் அவரது இல்லத்து நிலவறையில் சிறந்த ரக சாராயங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்ததையும், இந்த மனிதனது கோமாளித்தனமான தோற்றம், நடவடிக்கைகள் பற்றியும் நகைச்சுவையுடன் வரைந்து வைத்துள் ளான். கி. பி. 1801-ல் இராமனாதபுரம் வந்த ஜியார்ஜ் வாலண்டினா பிரபுவும் தமது புக் ஆல் டிராவல்ஸ்' என்ற நூலில், இந்தப் பரங்கியை குறிப்பிட்டுள்ளார்.

இராமனாதபுரம் கோட்டைக்குள் வட பகுதியில் உள்ள புராடஸ்டண்ட் தேவாலயத்தை நிர்ணயிப்பதற்கு இவன் பெரு முயற்சி எடுத்துக் கொண்டான். 7.10-1810-ல் இறந்த இந்த தளபதியின் சடலம் அதே தேவாலயத்தின் தென்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

4. பிரதானி முத்து இருளப்ப பிள்ளை

இராமனாதபுரம் மாவட்டம் முதுகுளத்துர் பகுதியில் பிறந்த இவர் பிள்ளைப்பருவத்திலேயே தந்தையை இழந்தார். இவருக்கும் இவரது விதவைத் தாயாருக்கும் புகலிடம் கொடுத்துக் காத்தவர் உச்சிநத்தம் கிராம நிலக்கிழார் மல்லையரெட்டியார். அவரது ஆதரவில் வளர்ந்து கல்வியில் தேர்ந்த இவருக்கும் இராமனாதபுரம் கோட்டைத் தளபதி மார்ட்டின்ஸுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஆங்கில மொழியில் அவர் பெற்று இருந்த சிறந்த ஞானம் அவருக்கு துணையாக அமைந்து இருத்தல் வேண்டும். தளபதியின் பரிந்துரையின் பேரில், சேதுபதி மன்னர், இவரைத் தயது பிரதானியாக பணியில் அமர்த்தினார்.

அவரது நிர்வாகத்தில், சேது நாடு பல புதிய மாற்றங்களைக் கண்டது. அவரது ஆர்வம் மிக்க நடவடிக்கைகளுக்கு மன்னரது முழு ஆதரவும் இருந்ததால் பிரதானி தமது பணியை எளிதாக நிறைவேற்றி வந்தார். நாடு முழுவதும் உள்ள விளை நிலங்களை அளவு செய்து அவைகளுக்கு உரிய தீர்வையை நிகுதி செய்தார். இயற்கையாக அமைந்துள்ள மண் வளத்திற்கு அக்கவாறு தீர்வையின் தரமும் அளவும் அமைக்கப்பட்டன. கண்மாய்களும் வரத்துக்கால்களும் செப்பனிடப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரெகுநாத சமுத்திாம் என வழங்கப்பட்ட இராமனாதபுரம் பெரிய கண்மாயும் மராமத்து செய்யப்பட்டன.

இன்னும். கோயில்களைப் பராமரிக்க தரும மகமை, ஜாரி மகமை என்ற இரு பொது நிதிகள் தோற்றுவிக்கப்பட்டன. மானியமாக வழங்கப்பட்ட நிலங்கள் மான்யதாரர்களால் தனியாருக்கு மாற்றப்படும் பொழுதும், தரிசு நிலங்கள் விளைநிலமாக மாற்றப்படும் பொழுதும், அவைகளும் வரிவிதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டன. நெசவாளர்களிடமிருந்து கைத்தறி துணியை வாங்குகின்ற வணிகர்களும் ஒப்பந்தக்காரர்களும் இடைத்தரகர்கரும் புதிய வரியொன்றை செலுத்துமாறு செய்தார். இத்தகைய புதிய இன வருவாய்களினால் திருக்கோவில்களும் மடங்களும், அன்னச் சத்திரங்களும் சிறப்பாக செயல்பட்டன. இவரது இன்னொரு சிறப்பான சாதனை வறட்சிமயமான மறவர் சீமைக்கு வருடம் முழுவதும் வைகை ஆற்று நீர் கிடைக்கத் தீட்டிய திட்டமாகும். மதுரை மாவட்டத்தில் வர்ஷநாட்டு மலைமுகட்டில் தோற்றம் பெறும் வைகை ஆற்றின் முழு அளவு தண்ணிரும் மறவர் சீமைக்கு கிடைக்கச் செய்வதுதான் அந்த திட்டம். சேதுபதி மன்னரது நிதி உதவியை மட்டும் கொண்டு அதனை நிறைவேற்ற இயலாத நிலை இருந்ததால் அந்த திட்டம் அப்பொழுது செயல் வடிவம் பெறவில்லை. அத்துடன் இந்தப்பிரதானி சேதுபதி மன்னரது சேவையில் நிலைத்து இருக்க வில்லை.

நாளடைவில், பிரதானியின் ராஜவிசுவாசம் குறைந்து, கும்பெனியாரிடத்து கூடுதலான விசுவாசம் கொண்டார். மன்னரது தன்னரசு நோக்கங்களுக்கு அவர் இடையூறாக இருப்பதையும், இராமனாதபுரம் சமஸ்தான போது நிதியில் பல ஆயிரக் கணக்கான ருபாய் செலவுகளுக்கு விவரம் அளிக்க இயலாதவ ராக இருப்பதையும் சேதுபதி மன்னர் புரிந்து கொண்டவுடன், மன்னரது ஒப்புதல் இல்லாமல் மதுரைக் கலெக்டர் மக்ளாயிட்டின் கீழ் மதுரை மேலுர் பகுதிக்கு கும்பெனியாரது குத்தகைதாரராக மாறிவிட்டார். கள்ளர்களது வெறுப்பிற்கும் அவமதிப்பிற்கும் ஆளாகி கும்பெனி நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக கி.பி. 1791-ல் கலெக்டர் அவரை குத்தகைதாரர் பதவியில் இருந்து நீக்கினார். இதற்கிடையில் இராமனாதபுரம் சமஸ்தான வரவு செலவு கணக்கை நேர் செய்து கொடுக்குமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டும் அதில் கவனம் செலுத்தாமல் தமக்கு மன்னரால் தீங்கு ஏற்படலாம் என பயந்து தளபதி மார்ட்டின்ஸ் பாதுகாப்பில் இருந்து வந்தார். மாறாக, அவனுடன் இணைந்து மன்னருக்கு எதிரான பல புனைந்துரைகளை அனுப்பி, இராமனாதபுரம் சீமை அரசியலில் கும்பெனியார் நேரடியாகத் தலையிடுவதற்கு உதவி வந்தார். 8-2-1795-ல் கும்பெனியார் சேதுபதி மன்னரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்த பிறகு, தற்காலிக பேஷ்காராாக, கும்பெனியாரால் நியமனம் செய்யப்பட்டார். மீண்டும் கம்பம், பெரியகுளம் பகுதிக்கு கும்பெனியாரது குத்தகைதாரராக நியமனம் பெற்றார்.

இவ்விதம் காலமெல்லாம், கும்பெனியாரது எடுபிடியாக இவர் பணியாற்றி வந்தார் என்பதை அவர்களது ஆவணங்கள் காட்டுகின்றன. சிறந்த நிர்வாகியென பெயர் பெற்ற இந்த சேது நாட்டு குடிமகன், தான் பிறந்த மண்ணிற்குரிய பண்புகளை மறந்து, மாற்றானுக்கு துணைபோனதை வரலாறு மறக்காது. கம்மந்தான் கான் சாகிபுவைப் பிடித்துக் கொடுத்த சீனிவாஸ்ராவ், கட்டபொம்முவை காட்டிக் கொடுத்த புதுக் கோட்டைத் தொண்டமான், மருது பாண்டியர்களது வீழ்ச்சியை உண்டாக்கிய வன்னித்தேவன், கட்டை சேர்வைக்காரன் ஆகிய மக்கள் விரோதிகள் அணியில், முத்துராமலிங்க சேதுபதி மன்னரது முடிவிற்கு உதவிய முத்து இருளப்ப பிள்ளையையும் சேர்த்து, எண்ணப்படத் தக்கவராக உள்ளார்.

5. ராணி மங்களேசுவரி நாச்சியார்

கி.பி. 1795 வரை மறவர் சீமையை ஆண்ட இராமனாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது மூத்த சகோதரி இவர். மன்னரது தந்தையைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர், இவரது தாயார் முத்துதிருவாயி நாச்சியார். ஏற்கெனவே மணம் புரிந்த கணவர் மூலம் இவர் பிறந்தார். தமது தம்பியியின் அந்நிய ஆதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளால் அவரது அரச பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை தோன்றிய பொழுது கி.பி. 1794-ல் இவரது உள்ளத்தில் பதவி ஆசை எழுந்தது. இராமனாதபுரம் பட்டத்தை தமக்கு அளிக்குமாறு ஆற்காட்டு நவாப்பையும் கிழக்கிந்திய கும்பெனி கவர்னரையும் அடுத்தடுத்து வலியுறுத்தி வந்தார். மறவர் சீமையின் ஆட்சி பீடத்தில் அமருவதற்கு பெண் மக்கள் பலர் அருகதையுடையவர்களாக முன்னர் இருந்தனர் என்ற ஆதாரங்களை கும்பெனியாருக்கு எடுத்துக்கூறி தனது உரிமையை நிலைநாட்ட முயன்றதுடன் அல்லாமல், தனது தம்பியின் மீது பல அவதூறுகளையும் சுமத்தினார். பதவி வெறியின் முன்னர் இரத்தபாசம் பதுங்கிவிடும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாகும்.

இத்துடன் தமது முயற்சியில் முழு வெற்றி பெறுவதற்காக, தமது கணவர் ராமசாமித்தேவன் என்ற மாப்பிள்ளைத் தேவனுடன் மூன்று ஆண்டுகள் சென்னையிலேயே தங்கி இருந்தார்.

ஆனால் கும்பெனியார் சேதுபதி மன்னரை கி.பி. 1795-ல் பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்த பிறகும். இவரை இராமநாதபுரம் சீமையின் அரசியாக அங்கீகரிக்காமல் காலங்கடத்தி வந்தனர். ஆற்காட்டு நவாப்புடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு முரணாக மறவர் சீமையை அவர்கள் தங்கள் நிர்வாகத்தில் இருத்தி வைத்திருந்தனர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவரிடம் ஏராளமான தொகையை கையூட்டாகப் பெற்றுக் கொண்ட பின்னர், 22-4-1803-ல் இராமனாதபுரம் அரசியாக அல்லாமல் ஜமீன்தாரினியாக நியமனம் செய்தனர். தலைமுறை தலைமுறையாக தன்னரசாக விளங்கிய மறவர் சீமை இவரது பதவிப் பேராசையால் தனது மகோன்னத நிலையை இழந்து கும்பெனியாரது தயவில் வாழும் குறுநிலமாக (ஜமீனாக) மாறியது; கோபுரம் இல்லாத கோயிலைப் போன்று.

ராணி மங்களேசுவரி நாச்சியார், தெய்வ பக்தியும் தரும சிந்தனையும் மிகுந்தவராக விளங்கினார். திருச்செந்துாருக்கு தலயாத்திரை மேற்கொண்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்த்தஜாமக் கட்டளையை நிறுவி அதற்காக பல கிராமங்களை மானியங்களாக வழங்கினார். இராமேசுவரம் செல்லும் பயணிகளது வசதிக்காக, இராமநாதபுரத்திலும் புகலூரிலும் புதிய அன்ன சத்திரங்களை அமைத்தார். மல்லாங் கிணறு, பிடாரிசேரி ஆகிய ஊர்களில் இருந்த சிதைந்த அன்னச் சத்திரங்களையும் புதுப்பித்து இயங்குமாறு செய்தார். இவை தவிர, கல்விமான்களுக்கும் வேதவிற்பள்ளிகளுக்கும் இவர் வழங்கிய மான்ய கிராமங்கள் இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் 'தொன்னுாற்று ஆறு தர்மாசனங்கள்' என குறிப்பிடப்படுகின்றன. இவரது நிர்வாகத்திற்கு உதவியாக இருந்தவர் பிரதானி தியாகராஜபிள்ளை என்பர்.

கி.பி. 1804-ல் இராமனாதபுரம் கோட்டைக்கு வருகை தந்த ஜியார்ஜி வாலண்டினோ என்ற இங்கிலாந்து நாட்டு பிரமுகர் இவரைச் சந்தித்து உரையாடியதை தமது பயண நூலில் குறித்து வைத்துள்ளார். .ஒல்லியான உயர்ந்த தோற்றமுடையவர். அண்மையில் அவரது கணவனை இழந்து விட்டதால், இந்தியர்களது வழக்கப்படி, அவர் எவ்வித அணிகலன்களும் அணிந்து இருக்கவில்லை. சீனப்பட்டும் வெண்மையான மஸ்லின் துணியும் புனைந்து இருந்தார். பொன்னாலான தொங்கட்டான்களுடன் கூடிய அவரது நீண்ட காதுகள், பளுவினால் தோள் பட்டைக்கும் கீழே தொங்கின. பெரிய இதழ்கள் சற்று கருமையான நிறம்...' என்று தொடர்கிறது அவரது குறிப்புக்கள்.

இவருக்கு மகட்பேறு இல்லாததால் தமது கணவரது உறவினரான அண்ணாசாமி என்பவரை தமது வாரிசாகக் கொண்டிருந்தார். 18-7-1812-ல், இவர் இராமனாதபுரத்தில் காலமானார்.

6. கும்பெனியார்

ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாரைக் குறிக்கும் சொல். ஆங்கிலேயர்கள் இந்தியா, சீனம் போன்ற கீழை நாடுகளுடன் வாணிகம் மேற்கொள்ளுவதற்காக இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இங்கிலாந்து நாட்டு அரசு வழங்கிய அனுமதியுடன் இந்தக் குழுவினர் கி.பி. 1600-ல் தில்லியில் முகலாயப் பேரரசராக இருந்த ஜஹாங்கீர் மன்னரைப் பேட்டி கண்டு, அவரது ஒப்புதல் பெற்று இந்திய நாட்டில் தங்களது வாணிபத்தை துவக்கினர். அதற்காக கி.பி. 1612-ல் சூரத்திலும், கி.பி.1639ல் சென்னையிலும் கி.பி. 1692-ல் பம்பாயிலும், கி.பி. 1692-ல் கல்கத்தாவிலும் தங்களது பண்டக சாலைகளை நிறுவினர்.

அவர்களது வியாபாரம் எப்படி நடைபெற்றது என்பதை வங்காள நவாப் இங்கிலாந்து நாட்டுப் பேரரசர்க்கு அனுப்பிய புகாரில் இருந்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ...தங்களது நாட்டு வியாபாரிகள் குடிகளிடமிருந்து உள்ளுர் வணிகர்களிடமிது பொருட்களை பயமுறுத்தி எடுத்துச் செல்கின்றனர். அவர்களது அடாவடித்தனத்திற்கு ஆளாகிய குடிமக்கள் ஐந்து ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு விலையாக ஒரு ரூபாயைப் பெற்றுக் கொள்ள கொள்ள வேண்டியதாக உள்ளது.' இவ்விதம் வாணிபம் நடத்திய அவர்கள் நாளடைவில் வங்காளத்தில் இருந்த, முகலாயப் பேரரசரது பிரதிநிதிக்கு எதிரான சூழ்ச்சிகளிலும், சதிகளிலும் ஈடுபட்டு அவரை கி. பி. 1757-ல் பிளாசிப் போரில் தோற்கடித்து, வங்காள பீகார் பகுதிகளில் தங்களது நிர்வாகத்தை மேற்கொண்டனர். அதே காலத்தில் தெற்கே, ஆறாகாட்டு நவாப்பிற்கு எதிரான உள்நாட்டு போ ர்களில் நவாப்பிற்கு ராணுவ உதவி வழங்கியதுடன், அவரைத் தங்களுடைய கடனாளியாக மாற்றி, முழுக்க முழுக்க அவர்களையே நம்பி இருக்குமாறு செய்தனர். இதனால் நவாப் முகம்மது அலி, அாகளுக்கு பல சலுகைகளை அளித்தார். அவர் கொடுக்கவேண்டிய பாக்கிக்காக சில மாவட்டங்களில் வரி வசூலிக்கும் உரியையும் கி.பி. 1781-85-ல் வழங்கினார்.

மைசூர் மன்னர் திப்புசுல்தானுடன் நடத்திய போரின் முடிவில், கி.பி. 1792-ல் தானமாகப் பெற்ற சத்தியமங்கலம், சேலம், திண்டுக்கல் பகுதிகளுடன் ஆற்காட்டு நவாப்பிடம் இருந்து ஒப்பந்தத்தில் பெற்ற திருநெல்வேலி, மதுரை, மறவர் சீமைகளிலும் முதன் முதலாக, வியாபாரத்துடன் வரி வசூலை மேற்கொண்டனர். கி.பி. 1795-ல் நவாப் முகம்மது அலி இறந்தவுடன் அவரது வாரிசுகளைத் தொடர்ந்து பயமுறுத்தி நிர்ப்பந்தித்து எஞ்சிய தமிழ்நாட்டின் பகுதிகளையும் நவாப்பின் அதிகார வரம்பிலிருந்து முழுமையாகப் பெற்று கி.பி. 1801-ல் கர்நாடகம் முழுவதும் தங்களது புதிய ஆட்சி முறையை அமுலுக்கு கொண்டு வந்தனர்.

பெயரளவில் வாணிபக் கழகமாக இயங்கிய இந்தக் கூட்டுக்கொள்ளை நிறுவனத்தை இங்கிலாந்து அரசியாக இருந்த விக்டோரியா ராணியார் கி.பி. 1858-ல் கலைத்து உத்தரவிட்டு அந்த நிறுவனம் சம்பாதித்து வைத்து இருந்த இந்திய நாட்டுப் பகுதிகள் அனைத்தையும் தமது ஆங்கிலப் பேரரசின் பகுதியாக மாற்றி விட்டார். இங்ஙனம் ஆங்கில ஆட்சியுடன் இணைக்கப்பட்ட நமது நாட்டின் விடுதலையைப் பெறுவதற்கு நமது முன்னோர்கள் பல தியாகங்களைப் புரிந்து போராடியதை பல விடுதலை இயக்கங்கள் எடுத்துச் சொல்கின்றன.

7. துபாஷ் ரங்கப்பிள்ளை

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழக அரசியலை தமதுடமையாக்கிக் கொண்ட கும்பெனியாருக்கு. தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள தமிழர், வடுகர், இசுலாமியர் ஆகியோரது பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதற்கும். பாளையக்காரர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கும். மொழி பெயர்ப்பாளர்கள் இன்றியமையாதவர்களாக இருந்தனர். அவர்கள் துவி-பாஷி (இருமொழியாளர்) அல்லது துபாஷ் என வழங்கப்பட்டனர். அவர்களில் துபாஷ் பச்சையப்ப முதலியார் (காஞ்சிபுரம்) துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை (பாண்டிச்சேரி) துபாஷ் அப்துல்காதர் (அபிராமம்) ஆகியோர்களை இன்னும் மக்கள் நினைவுக் கூறப்படுகின்றனர்.

அவர்களைப் போன்று இராமனாதபுரம் சீமை வரலாற்றில் பெயர் போனவர் துபாஷ் ரங்கப்பிள்ளையாகும். சென்னையை அடுத்த ஆச்சாள்புரத்தில் சோழமண்டல கருணிகர் குலத்தில் பிறந்த இவரது மூதாதையர்கள் கும்பெனி கவர்னராக இருந்த எலிஜா எல் காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தனர். இவரும் சென்னைக் கோட்டையில், ஜார்ஜ் ஸ்டிரஸ்டடனி, ஜார்ஜ் பவுனி ஆகியோருக்கு துபாஷாக இருந்தார். பின்னர் காலின்ஸ் ஜாக்லன் இராமநாதபுரம் சீமைக் கலெக்டராக பணியேற்ற பொழுது அவரது துபாஷாக இராமநாதபுரத்திற்கு வந்தார். கலெக்டருக்கு ரங்கபிள்ளை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. துபாஷ் தமது சுயநலத்திற்கு அதனைப் பயன்படுத்தினார். விரைவிலேயே ஜாக்ஸனது நிர்வாகம் ஊழல் மிகுந்து உழன்றது.

கும்பெனியாரது வருவாய் குறைந்து காணப்பட்டது. கணக்குகள் வளமையான வருமான வசூலைக் காண்பித்தன. ஆனால் வரவு இனத்தில் தொகை குறைந்தது. வசூலான தானியத்தை மிகவும் குறைவான விலைக்கு விற்று, வித்தியாசத் தொகையை தமது பேரத்திற்கு கிடைத்த தொகையாக துபாஷ் எடுத்துக் கொண்டார். அத்துடன் வேறு சலுகைகள் அளிப்பதாகச் சொல்லி இன்னும் சில வியாபாரிகளிடம் பணம் வசூலித்து வந்தார். மேலும், சிவகங்கை சேர்வைக்காரர்கள், எட்டையாபுரம் பாளையக்காரர் ஆகியோர் கி.பி. நவம்பர் 1797, மார்ச்சு ஜூலை 1798-ல் கும்பெனியாருக்கு செலுத்திய கிஸ்தித் தொகைகளும் அரசாங்க வரவுகளில் இடம் பெறவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் இவை போன்ற பல கையாடல்கள், ஊழல்கள், இதற்கு சில சம்பிரதி, அமில்தாரும் உடந்தையாக இருந்தனர். இவை தவிர இவரும் இவரது உறவினர்களும் இராமநாதபுரம் சமஸ்தானக் கோயில்களுக்கு அடிக்கடி போய் வந்தனர். பக்தி மேலிட்டால் அல்ல. கோயில் செலவுகளிலும் கிடைத்ததைப் பெற்று வருவதற்காக.

இவரது ஊழல்களின் எதிரொலியாக கலெக்டர் ஜாக்ஸன் தமது பதவியை இழந்தார். சென்னை கவர்னர், இராமனாதபுரம் விசாரணைக்குழு' என்ற குழுவை நியமித்து இந்த ஊழலின் முழு விவரத்தையும் சேகரிக்க செய்தார். பெட்ரிக், ஒயிட், கோர்ல்பரோ, ஹாரிங்க்டன் என்ற பரங்கி அலுவலர்கள் அந்தக் குழுவில் இருந்தனர். 22,285, ஸ்டார் பக்கோடாக்கள் வரை அரசாங்கக் கணக்கில் கையாடல் செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ரங்கப்பிள்ளை கையில் விலங்கிடப்பட்டு இராமனாதபுரம் வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 14,851 ஸ்டார் பக்கோடா தொகையை கும்பெனியாருக்கு செலுத்தி ரங்கபிள்ளையை விடுவிக்குமாறு அவரது குடும்பத்தினர் கோரினர். அந்தக் கோரிக்கையை கும்பெனியார் ஏற்றுக் கொண்டனரா? எஞ்சிய தொகை வசூலிக்கப்பட்டதா? என்ற விவரங்கள் தெரியவில்லை.

ஆனால், சிவகங்கை மருது சேர்வைக்காரர், எட்டையாபுரம் பாளையக்காரர், கீழ்க்கரை அப்துல் காதிர் மரைக்காயர், சென்னை நயினியப்பமுதலி, சென்னை ஷேக் தமால்ஜி ஆகியோர்களிடம் ரங்கப்பிள்ளை வசூலித்த தொகைகள் மட்டும் திரும்பக் கிடைக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

8. இராமலிங்க விலாசம்

சேதுபதி மன்னர்களது சிறப்பான இருக்கையாக விளங்கிய இடம். இராமனாதபுரம் சேதுபதி மன்னர்களில் இணையற்ற பெருமன்னராக விளங்கிய ரெகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி (கி.பி. 1674-1710) இந்த அரண்மனையை அமைத்தார். இதனையும் இதனைச் சூழ்ந்த இராமனாதபுரம் கோட்டையையும் அமைக்க கீழக்கரைப் பெருவணிகரும் சேதுபதி மன்னரது நல்லமைச்சருமான வள்ளல் சீதக்காதியின் பெரும் பொருளும் அரும் உழைப்பும் உதவியதாக வரலாற்று ஆவணங்களில் வரையப்பட்டுள்ளன. சேதுபதி மன்னர்களது ஆட்சி பீடமாகவும் அத்தாணி மண்டபமாகவும் விளங்கிய இந்த அரண்மனையை அழகுப் பேழையாக மாற்றியமைத்தவர்கள் விஜய ரகுநாத சேதுபதி (1710-25) , முத்துக்குமார விஜய ரகுநாத சேதுபதி (1730-35) சிவகுமார், முத்துக்குமா சேதுபதி (1784-1747) ஆகியவர்கள்.

இந்த சிங்கார மாளிகை உயர்ந்த மதில்களும், வளைந்த விதானங்களும், வண்ண ஓவியங்களால் நிறைக்கப்பட்டுள்ளன. இராமாயண, பாகவதக் கதைகளைச் சொல்லும் ஓவியங்களையும், வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் ஒவியங்களும் அடுத்தடுத்து வரையப்பட்டுள்ளன. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மன்னர் சேதுபதி மன்னருக்கு ரத்தின அபிஷேகம் செய்தல், முத்து விஜயரகுநாத சேதுபதியின் தெய்வீகத் தொடர்புகள், சேதுபதி மன்னருக்கு அன்பளிப்புகளுடன் பரங்கியர் காத்து இருத்தல், அந்தப்புர கேளிக்கைகள், மராத்தியருனான அறந்தாங்கிப் போர், மறவர் சீமைக்குள் புகுந்த மராத்தியரைக் கைது செய்தல், அரண்மனையில் உறங்கிவிட்ட தமிழ்ப் புலவருக்கு ஆயாசம் தீர உபசரித்தல் போன்ற காட்சிகள் கண்ணையும், கருத்தையும் கவருவனவாக உள்ளன. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மறவர் சீமையில் இருந்த மகளிரது வீர விளையாட்டுக்கள், ஆடல் குட்டியர், ஆரணங்குகளின் ஆடை அணிகலன்கள், படைவீரர்களது ஆயுதங்கள், அரச ஊழியர் பணிகள் ஆகியவைகளைச் சித்தரிக்கும் பல ஓவியங்கள் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. காலத்தையும் வென்று காட்சியளிக்கும் இவ்வளவு ஓவியங்கள் ஒரே இடத்தில் இந்தியாவில் வேறு எங்குமே இல்லையென தொல்பொருள் துறை மேதை திரு. நாகசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆற்காட்டு நவாப்பிற்காக, முற்றுகையிட்டு இராமனாதபுரம் கோட்டையை 3-6- 1772-ல் மறவரது கடும் போருக்குப் பிறகு கைப்பற்றிய தளபதி ஜோஸப் ஸ்மித் இந்த அரண்மனையைப் பார்த்து வியந்து வரைந்துள்ளார். கும்பெனியார் முத்து ராமலிங்க சேதுபதி மன்னரைப் பதவி நீக்கம் செய்து அவரை திருச்சிக் கோட்டையில் அடைத்து வைத்து இருந்த பொழுது, இந்த அரண்மனையைத் தங்களது இருப்பிடமாகவும், அலுவலகமாகவும், கலெக்டர் பவுனியும், கலெக்டர் ஜாக்ஸனும் பயன்படுத்தினர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரரான வீர பாண்டியகெட்டி பொம்மு நாயக்கரை இந்த அரண்மனையின் மச்சுவீட்டில் மூன்று மணி நேரம் நிற்கவைத்து விசாரணை செய்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் வீரபாண்டியனாக மாறினர். கெட்டி பொம்முவின் புகார் மனுமீது மூன்று பேர் கொண்ட தூதுக்குழு ஒன்றை அனுப்பி கலெக்டர் ஜாக்ஸ்னையும் கெட்டி பொம்முவையும் விசாரிக்குமாறு சென்னை கவர்னர் உத்தரவிட்டார். அந்த குழுவினரது விசாரணை இந்த அரண் மனையில் தான் நடந்தது.

அறிஞர் பெருமக்களின் அரிய படைப்புக்களும் கலைஞர் பலரது சிறந்த கலைநிகழ்ச்சிகளும், அரங்கேற்றம் பெறுவதற்கும் பரிசுகளும் பாராட்டுக்களும் பெறுவதற்கும் இந்த அரண்மனை ஆய்வுக்களமாக விளங்கியது என்பது பிற்கால வரலாற்றில் இருந்து தெரிகிறது.

9. இராமேஸ்வரம் திருக்கோயில் மூன்றாவது பிரகாரம்

இராமேஸ்வரம் திருக்கோயில், இராமனாதபுரம் சேதுமன்னர்களது பண்பட்ட சமய உணர்வையும் கலை ஆர்வத்தையும் காலமெல்லாம் காட்டி நிற்கும் கலங்கரை விளக்கமாகும். இந்த கோயிலின் கட்டுமானங்கள் அனைத்திலும் சிறப்பாகக் கருதப்படுவது மூன்றாவது பிரகாரமாகும். இந்தக் கலைப்பணி கி.பி. 1740-ல் சிவகுமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி மன்னர் காலத்தில் துவக்கப்பெற்று கி.பி. 1769-ல் முத்து ராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மன்னர் ஆட்சியில் நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவினையொட்டி திருக்கோயிலின் மேலக் கோபுர வாசலில் இந்த மன்னரது திருவுருவச்சிலை நிறுவப் பட்டது. (பார்க்க மேலட்டை சித்திரம்)

கோயிலின் திருமதிலுக்கு 30 முதல் 40 அடி உட்புறமாக கிழமேல் திக்கில் 880 அடியும் தெற்கு வடக்கில் 672 அடியுமாக 17 அடி அகலத்தில் இந்தப் பிரகாரம் முழுவதும் கல்லால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரகாரத்தின் இருபுறமும், 5 அடி உயர நீண்ட மேடையில், 12 அடி உயரமுள்ள 1212 கல்துண்கள், இருபுறமும் வரிசையாக நிற்கின்றன. ஒரே கல்லாலான ஒவ்வொரு துாணும் சிற்பக் கலையழகுடன், ஒரே அளவிலும், பரிணாமத்திலும் வடித்தெடுக்கப்பட்டுள்ளது. உலகத்தில் வேறு எங்கும் காணப்படாத இவ்வளவு நீண்ட கல் கட்டுமானம் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலை முடிவைப் பார்ப்பவர்களது கண்களுக்கு சிறந்த கலை விருந்தாக காட்சி அளிக்கிறது. கட்டுமானக் கலையின் சிறந்த உத்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரகாரத்தின் பிரம்மாண்டமான தோற்றமும் அதனை ஊடுருவித் தெளிவாகப் புலப்படுத்தும் நல்ல வெளிச்ச வசதியும், இந்த அமைப்பைக் காண்பவர்களது உள்ளத்தில் வியப்பையும் ஒருவித பிரமையையும் தோற்றுவித்துக் கொண்டு இருக்கிறது.

இந்தக் கட்டுமான அழகில் மிகவும் ஈடுபட்ட வெளிநாட்டறிஞர்களான பர்ஜஸ், பெர்குஸன் ஆகியோர் தங்களது நூல்களில் இந்த அமைப்பை மிகவும் பாராட்டி வரைந்துள்ளார்கள். இந்தச் சிறந்த அமைப்பை நிர்மாணித்த சிற்பாசிரியன் பெயரை வரலாறு மறைத்து விட்டது வருந்தத்தக்கது. இன்னும் ஒரு புதிர் என்னவென்றால் இராமேஸ்வரம் தீவு நான்கு புறமும் கடலால் சூழப்பட்டு இருக்கும்பொழுது, இந்தக் கட்டுமானத்திற்குத் தேவையான இவ்வளவு பாறாங்கற்கள் எந்த மலையிலிருந்து, எவ்விதம் இந்தக் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன என்பதாகும்.

10. பக்கோடா

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டில், தென்னகத்தில் செலாவணியில் இருந்த நாணய வகைகளில் ஒன்று பக்கோடா என்ற தங்க நாணயம். இதனை முதலில் தயாரித்து வெளியிட்டவர் ராஜா காந்திவராஜ். (கி.பி. 1638-58) என்ற மைசூர் மன்னர். அவர் தமது இஷ்ட தெய்வமான விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான பன்றியின் உருவத்தைப் பொறித்து வெளியிட்டார். இந்த வராக முத்திரை காரணமாகவே இந்த நாணயம் பின்னர் வராகன் எனவும் பெயர் பெற்றது.

இத்தகைய நாணயம் பாரசீக மொழியில் பட்-கடர்' எனப்பட்டது. முகலாயப் பேரரசர்கள் பாரசீக மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டு இருந்ததால், மைசூர் மன்னரும் தமது நாணயத்திற்கு பக்கோடா எனப் பெயர் சூட்டி வழங்கினார். இவரைப் பின்பற்றி ஆங்கில, போர்த்துகீஸிய, டச்சுக் காரர்களும் தென்னகத்தில் தங்களது பக்கோடா நாணயங்களைப் புழக்கத்திற்கு கொண்டு வந்தனர். போர்ச்சுக்கீஸியர் நாணயம் பேத்ரி பக்கோடா என்றும், டச்சுக்காரரது நாணயம் போர்ட்டோ நோவே பக்கோடா என்றும், ஆங்கிலேயர் நாணயம் ஸ்டார் பக்கோடா எனவும் குறிப்பிடப்பட்டன.

மறவர் சீமையைப் பொறுத்தவரையில், ஏனைய வெளி நாட்டினரைவிட, டச்சுக்காரர்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. முத்து இராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் ஆட்சியின் பொழுது, மறவர் சீமைத் தறிகளில் தயாரிக்கப்படும் கைத்தறித் துணிகளைப் பெரும் அளவில் டச்சுக்காரர்கள் கொள்முதல் செய்து தேவிபட்டினம் துறைமுகம் வழியாக தரங்கம்பாடிக்கும் பின்னர் ஐரோப்பிய சந்தைகளுக்கும் அனுப்பி வைத்தனர். அதனால் டச்சுக்காரரது போர்ட்டோ நோவோ பக்கோடா நாணயம் இராமனாதபுரம் சீமையில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மிகவும் விறுவிறுப்பான செலாவணியில் இருந்தது. கி.பி. 1795-ல் இந்தச் சீமையின் ஆதிக்கத்தை மேற்கொண்ட ஆங்கிலக் கும்பெனியார் தங்களது ஸ்டார் பக்கோடா நாணயத்தை இங்கே செலாவணியில் ஈடுபடுத்தினர். என்றாலும் தொடர்ந்து நீண்ட காலம் வரை டச்சுக்காரரது போர்ட்டோ நோவோ பக்கோடா செலாவணியில் இருந்தது. அதனால் கும்பெனியார் தங்களது நாணயத்துடனான டச்சு நாணய மதிப்பைக் கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்து இருந்தனர்.

கி.பி. 1801-ல் 116 போர்ட்டோ நோவோ பக்கோடா 100 ஸ்டார் பக்கோடா டாவுக்கு சமம்
கி. பி. 1806 -ல் 120 ௸ 100 ௸
கி.பி. 1821-ல் 34 ௸ மதராஸ் ரூபாய் 0.13, 4-க்குச் சமம்

கி.பி. 1825-க்குப் பிறகு இந்த நாணயம் புழக்கத்தில் இருந்து மறைந்தது.

கி.பி. 1798-ல் 100 ஸ்டார் பக்கோடா 350 ஆற்காட்டு ரூபாய்களுக்கு சமம்
கி.பி. 1799-ல் 1 ஸ்டார் பக்கோடா 16 உள்ளூர் தங்கபணம்
கி.பி. 1800-ல் 1 ஸ்டார் பக்கோடா 42 ௸

11. பிரதானி தாண்டவராய பிள்ளை

சிவகங்கைச் சீமையின் முதலாவது மன்னராக இருந்த சசிவர்ணப் பெரிய உடையாத் தேவருக்கும் அவரை அடுத்து அரியணை ஏறிய முத்துவடுகனாதப் பெரிய உடையாத் தேவருக்கும் பிரதானியாகப் பணியாற்றியவர் இவர். பிரதானி என்பது நிர்வாகப் பொறுப்பிற்குரிய அமைச்சர், படையணிக்குள்ள தளபதி ஆகிய இருபதவிகளும் இணைந்த பெரும் பதவி. அரசருக்கு அடுத்த இடம். இந்த உயர்ந்த நிலையை, சாதாரண கருணிகர் குடும்பத்தில் தோன்றிய இவர் எய்தியதற்கு அவரது திறமையும் அறிவுடமையுமே காரணம் ஆகும்.

மறவர் சீமையின் பிரதானியாக இராமனாதபுரத்தில் இருந்த தாமோதரம் பிள்ளையும் இவரும் உடன்பிறப்புக்கள் போன்று அரசியலில் ஒரே கொள்கையுடன் அன்னியோன்னியமாக இருந்து வந்தனர். மதுரையில் முடிந்து போன நாயக்கப் பேரரசை நிறுவுவதற்கு இருவரும் இணைந்து முயன்றனர். அப்பொழுது ஆற்காட்டு நவாப்பாக இருந்த சந்தா சாகிப்பை இணங்க வைத்து, நாயக்க மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இளவல் விஜயகுமார பங்காரு திருமலை நாயக்கரை கி.பி. 1751-ல் மதுரைப் பேரரசராக முடிசூடும்படி செய்தனர். ஐந்து ஆண்டுகள் கழித்து ஆற்காட்டு நவாப் முகமது அலியின் பிரதிநிதியாக மதுரை கவர்னராகப் பணியாற்றிய கம்மந்தான் கான்சாகிபுடன் நெருக்கமாக இருந்து அவரது நல்லாட்சிக்கு ஆதரவாக இருந்தார். இவர்.

கான்சாகிபுவின் ஆண் குழந்தைக்கு சிறந்த அணிமணிகளை அன்பளிப்பாக வழங்கியதற்காக மேலுர் வட்டத்தில் உள்ள சிறுமணியேந்தல் என்ற சிற்றுரரை கம்மந்தானிடமிருந்து சர்வமானியமாகப் பெற்றார். ஆனால் அதனை தனக்கென வைத்துக் கொள்ளாமல் தாம் வழிபடும் மதுரை மீனாட்சிக்கு தானமாக வழங்கி விட்டார். இந்த அளவிற்கு கம்மந்தானுடன் நட்பாக இருந்த இவர், கம்மந்தான் ஆற்காட்டு நவாப்புடனும் கும்பெனியாருடனும் மனந் திரிந்தவராக கி.பி. 1763-64-ல் வீரமரணப் போரிட்ட பொழுது, அவருக்கு உதவ முன்வராது பெரும் பழிக்கு ஆளானார். காரணம் நவாப் முகம்மதலியின் பேச்சை முழுதுமாக நம்பியதுதான்.

ஆனால் ஏழு ஆண்டுகளில் நவாப் முகம்மது அலியின்வாக் குறுதி பொய்த்து விட்டது. சிவகங்கை மீது நவாப்பின் படைகளும் பரங்கிப் படைகளும் தாக்குதல் தொடுத்தன. எதிர்பாராத வகையில் காளையார் கோவில் போரில் சிவகங்கை மன்னருடன் நின்று கடும் போர் புரிந்தார். முடிவு மன்னர் குண்டடிபட்டு வீழ்ந்து இறந்தார். கோட்டையும் விழுந்தது. ஆனால் இந்தப் பிரதானி நவாப்பிடம் சரணடையவில்லை. சிவகங்கை அரசி வேலுநாச்சியாரை பாதுகாப்பாக மைசூர் மன்னரது விருபாட்சியில் வைத்து விட்டு சிவகங்கைச் சீமையை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளில் இறங்கினார். மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு தூது அனுப்பி சிவகங்கை மீட்சிக்கு ராணுவ உதவி கோரினார். சிவகங்கை சீமையில் உள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் ஒலைகள் அனுப்பி நவாப்புடனும் கும்பெனியாருடனும் மோதுவதற்கு தயாராகிக் கொண்டு இருந்தார். நாளெல்லாம் நாட்டு விடுதலை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து செயல்படும் பொழுதே மரணம் அவரைப் பறித்துக் கொண்டு போய் விட்டது. என்றாலும் அவரது சிறந்த பண்புகளையும் செயல் திறனையும் நாடோடி இலக்கியமான 'கான்சாகிபு சண்டை' யும் குழந்தைக் கவிராயரது மான்விடு தூதும் காலமெல்லாம் கட்டியங் கூறிக்கொண்டு இருக் கின்றன.

12. மருது சேர்வைக்காரர்கள்

மறவர் சீமையின் முப்பெரும் இனத்தில் ஒன்றாகிய 'அகம்படியர்' பெரும்பாலும் இராமனாதபுரம் சேதுபதி மன்னரது பணியில் இருந்து வந்தனர் அவர்களில் முக்குளம் கிராமத்தினைச் சேர்ந்த மொக்கைப் பழனி சேர்வை என்பவரது மக்கள் தான் வரலாறு புகழும் மருது சகோதரர்கள். மூத்தவர் வெள்ளை மருது அல்லது பெரிய மருது என்றும், இளையவர் சின்னமருது அல்லது மருது பாண்டியன் என்றும் வழங்கப்பட்டனர். இவ்விருவரும் மறவர்களுக்குரிய ஆண்மையும் மனத் திண்மையும் பெற்று இருந்ததுடன், மற்றவர்களுக்கு இல்லாத உடல் வலிவும் வாய்க்கப் பெற்று இருந்தனர். இவர்களது தந்தையார் இராமனாதபுரம் மன்னரது பணியில் இருந்ததனால், இவ்விருவரும் அந்த மன்னரது உறவினரான சிவகங்கை மன்னரது சேவகத்தில் அமர்த்தப்பட்டனர்.

மிகச் சாதாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அவர்கள் விரைவில் சிவகங்கை மன்னரது அந்தரங்கப் பணியாளர்களாக மாற்றம் பெற்றனர். இயல்பாகவே, அவர்களிடம் பொருந்தி இருந்த பேராற்றல்கள் மன்னரைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஆனால் சிவகங்கை மன்னர் முத்துவடுகனாத பெரிய உடையாத் தேவர் கி.பி. 1772 ல் காளையார்கோவில் கோட்டைப் போரில் ஆற்காட்டு நவாப்பின் படைகளுடன் மோதி வீரமரணம்எய்தினார். பிரதானி தாண்டவராய பிள்ளையுடன் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் அரசியல் தஞ்சம் பெற்ற ராணி வேலு நாச்சியாரது அந்தரங்கப் பணியாளர்களாக இருந்து வந்தனர். கி.பி.1780-ல் ஹைதர் அலி மன்னர் அளித்த உதவிப் படைக்குத் தலைமை தாங்கிய சிவகங்கை ராணியுடன் இந்தச் சகோதரர்கள் சிவகங்கைச் சீமையை ஆக்கிரமித்து இருந்த ஆற்காட்டு நவாப்பின் படைகளையும், அவர்களுக்குத் துணைபுரிந்த கும்பெனியாரது கூலிப்பட்டாளங்களையும் சிவகங்கை மண்ணில் இருந்து விரட்டி அடித்தனர்.

சிவகங்கைச் சீமை மீண்டும் சுதந்திர நாடாகியது. ராணி வேலு நாச்சியார் அரசியாராக முடிசூட்டப்பட்டார். மண்ணின் மானம் காத்த மருது சகோதரர் இருவரும் சிவகங்கைப் பிரதானிகளாகப் பணி ஏற்றனர். நாளடைவில் பெரிய மருதுவிற்கும், அரசியாருக்கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. அதனால் பிரதானி சின்னமருது அரசியாரது அதிகாரங்களைப் புறக்கணித்தவராக, தாமே அரசியலை நேரடியாக நடத்தி வந்தார். முந்தைய மன்னர்களது வழியில் நின்று, தாமே பல அற நிலையங்களை நிறுவினார். அன்ன சத்திரங்களைத் தோற்றுவித்து ஆலயத் திருப்பணிகளையும் மேற்கொண்டார். ஆற்காட்டு நவாப்பிற்கும், கும்பெனியாருக்கும் விசுவாசமுள்ள பாளையக்காரராக இருந்து வந்தார். அதனால் அவர்கள் தங்கள் சிவகங்கை சீமைக்கான கடிதப் போக்குவரத்தினை சின்னமருதுவுடன் மட்டும் கொண்டிருந்தனர். அரசியார் ஒருவர் அங்கு இருப்பதை அவர்கள் மறந்து விட்டனர். இவரைத் தங்கள் ஆவணங்களில் சிவகங்கை சேர்வைக்காரர்' என்று குறிப்பிட்டு வந்தன்ர். அந்த அளவிற்கு அவர்களுக்கிடையில் நெருக்கம் இருந்தது. -

ஆனால் இவரும், இராமனாதபுரம் மன்னரும் நெருங்க முடியாத அளவில் தீராத பகையும் வெறுப்பும் கொண்டிருந்தனர். சுதந்திர வேட்கை கொண்ட சேதுபதி மன்னரது சீமை அரசியலில் கும்பெனியார் நேரடியாக தலையிடுவதற்கும், பொது மக்கள் பல தொல்லைகளுக்கு ஆளாவதற்கும் இவர்களுக்கு இடையிலான பூசல்கள் பயன்பட்டன. பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகள் முழுவதும் தன்னரசாக விளங்கிய மறவர் சீமை கும்பெனியாரது ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. சேதுபதி மன்னரும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த அநீதியை எதிர்த்துக் கிளர்ந்து எழுந்த மறவர் இயக்கங்களை கும்பெனியார் அடக்கி ஒடுக்குவதற்கு மருது சகோதரர்களும் காரணமாக இருந்தனர்.

என்றாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசியல் முழுவதையும் தமதாக்கிக் கொண்ட கும்பெனியார் தமக்குப் பல வழிகளிலும் பயனுள்ள பாளையக்காரராக இருந்த மருது சகோதரர்களையும் சும்மா விடவில்லை. இதனைப் புரிந்துகொண்ட மருது சகோதரர்கள் கும்பெனியாரது ஆதிக்க வெறியை எதிர்ததுப் போராடுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர். அப்பொழுது ஆங்காங்கு துளிர்விட்ட தென்னகத்துப் புரட்சி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டனர். மகாராஷ்டிரம். மைசூர், வயநாடு மாநிலங்களில் உள்ளவர்களும், மதுரை. நெல்லை, திருச்சி, சீமைப் பாளையக்காரர்களுடனும் ஒருங்கிணைந்து பரங்கியரைப் பலவழிகளிலும் அழிப்பதற்கு முனைந்தனர். காலங்கடந்த அந்த நிலையிலும் அவர்கள் பல பாளையக்காரர்களையும், பொதுமக்களையும் அணி திரட்டி பல இடங்களில் பரங்கியருடன் மோதினர். முதுகுளத்துார், கமுதி, அபிராமம். குளத்துர், பாஞ்சை, கொடுமலூர், பரமக்குடி, சாலைக்கிராமம். திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பிரான்மலை. திருப்பத்துார், ராஜசிங்கமங்கலம், அரண்மனை, சிறுவயல். கொல்லங்குடி , காளையார்கோவில் ஆகிய ஊர்கள், இந்திய நாட்டு விடுதலைப் போராட்டக் களங்களாக மாறின. நாட்டுப்பற்று மிக்க நூற்றுக்கணக்கான நல்லவர்கள் தங்கள் நல்லுயிரைக் காணிக்கையாகத் தந்தனர். இந்தப் போராட்டத்தின் பொழுது, துரோகிகளும் தங்கள் பங்கினை நிறைவேற்றத் தவறவில்லை.

முடிவு, பரங்கியரை ஏதிர்ப்பதற்குத் திரட்டப்பட்ட மக்கள் அணி பிரிவு கண்டது. இந்தப் பலவீனத்தையும் பொருட்படுத்தாமல் பரங்கியரை இறுதிவரை எதிர்த்துப் போரிட்ட மருது சகோதரர்கள் தோல்வி கண்டனர். அவர்களையும், அவர்களது மக்கள், உறவினர், கூட்டாளிகள் அனைவரையும் கும்பெனியார் தூக்கில் தொங்கவிட்டு மகிழ்ந்தனர். கும்பெனியார் எஞ்சி யிருந்த எழுபத்து இரண்டு முதன்மை வீரர்களும் நாடு கடத்தப்பட்டு மலேஷிய நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். தன்னாசான சிவகங்கைச் சீமை ஜமீனாக' மாற்றப்பட்டது. அரிமாக்கள் ஆட்சி செய்த இடத்தில் அணில்கள்!

இந்திய நாட்டு விடுதலைப் போர் வரலாற்றின் இணையற்ற முன்னோடி வீரர்களான இந்த இருபெரும் சகோதரர்களும், மறவர் சீமையின் ஒளிவீசும் மாணிக்கங்களாக மக்கள் மனதில் நிலைபெற்றுள்ளனர். அவர்களது வீர உணர்வும், தியாகமும் எதிர்கால சந்ததிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.