விடுதலைப்போர், இரண்டாம் பதிப்பு/திராவிடர் கழகம்
திராவிடர் கழகம்
திராவிடர் கழகமும், பட்டம் பதவிகளை விட்டொழித்துவிட்டு, நாடு மீளவும் கேடு தீரவும் பணிபுரியும் அணிவகுப்பினை அமைக்கும் திட்டமும், உணர்ச்சியும் வேகமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான திராவிடத்
தீரர்கள் ஆதரவைப் பெற்றுவிட்டன. ஒரு குழுவின் வெற்றியென்று நாம் கருதவில்லை; ஒரு இயக்க வளர்ச்சியிலே முக்கியமான, குறிப்பிடத்தக்க ஒரு கட்டம் என்றே கருதுகிறோம். தீவிரமான திட்டங்களை நிறைவேற்றி விட்டது, மனத்திருப்திக்காக அல்ல! திட்டங்களைத் தீட்டி விட்டு, எட்டிநிற்போராக இருப்பவர்களைப்பற்றிக் கவலையில்லை. அத்தகையவர்களுக்குத் திட்டங்களைப் பற்றியும் கவலையில்லை. ஆனால், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவுடன் அன்று அங்குக்கூடிய வீரர்கள் கூட்டம் விரும்புவது, விடுதலைப் போரினையேயாகும்! விவேக சிந்தாமணிக்கு விளக்கஉரை ஆற்றும் காரியத்திலோ, அரசியல் தந்திரங்களுக்கு அட்டவணை தயாரிக்கும் வேலையிலோ, அந்த அஞ்சா நெஞ்சுபடைத்த ஆயிரமாயிரம் தோழர்களுக்கு அக்கரை கிடையாது. அவர்கள், பட்டம் பதவி கிட்டுமா என்று பக்குவம் பார்த்துப் பொதுவாழ்வு
நடத்தும் பண்பினரல்ல! ஒரு பெரிய, பண்டைப் பெருமை வாய்ந்த இனம் பாழாகிவிடுவதா? உலக வரலாற்று ஏடுகளிலே இடம்பெற்ற ஒருநாடு உதவாக்கரைகளுக்கு உலவுமிடமாவதா, இந்நிலையை மாற்றப் போரிடாது ஆண்மையாளர் என்ற பெயரைத் தாங்குவதா, என்ற தீ உள்ளே கொழுந்துவிட்டெரியும் கோலத்துடன் கூடிய அந்த வீரர்கள் விரும்புவது, உரிமை ! ஆம் ! திராவிடநாடு திராவிடருக்கே என்ற உரிமையைத்தான் அவர்கள் விரும்புகின்றனர். அந்தக் கண்கள் காட்டிய ஒளி, அவர்கள் அன்று கிளப்பிய ஒலி, தோள் தட்டி மார்பு நிமிர்த்தி அணிவகுத்து நின்றகாட்சி, ஒரு இனத்தின் எழுச்சியின் அறிகுறியாக, விடுதலைப் படையின் எக்காளமாக, மூலத்தை உணர்ந்தோரின் முழக்கமாக, இருந்ததேயன்றி, காருண்யமுள்ள சர்க்காருக்கு வாழ்த்துக்கூறிக், கனதனவான்களுக்கு நமஸ்காரம் செலுத்திச், சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் சேதிகூறிடும் சிங்காரக்கூட்டமாக இல்லை. இதனை நாடு அறிதல் வேண்டும், நாமும் மனத்திலே பதியவைத்துக்கொள்ள வேண்டும்.
வழக்கமாகக் கூடி வசீகரமாகப் பேசி, வளையாது குனியாது வாய்வீரம் காட்டிவிட்டு, வாகை சூடியதாக மனப்பால் குடித்துவிட்டுத் தோகையர் புடைசூழப் போகபூமிக்குச் செல்லும் சுகபோகிகளின் கூட்டம் அல்ல! வறுமையின் இயல்பைத் தெரிந்தவர்களின் கூட்டம்! பசியும் பட்டினியும் எப்படி இருக்கும் என்பதை அறிந்தவர்கள்!! பாட்டாளிகள், ஆனால் பார்ப்பனியத்தின் பாதத்தைத் தாங்கும் ஏமாளிகளல்ல; அந்தப் பார்ப்பனியத்தை மத சமுதாயத் துறைகளிலே முறியடிக்காமலேயே பட்டத்தரசராகிவிட முடியும் என்று கருதும் கோமாளிகளல்ல; ஊருக்கு உழைத்து உருமாறிக்கிடக்கும் உத்தமர்கள் கூடினர் அன்று. உறுதியை வெளிப்படுத்தினர், ஊராள்வோரின் உளமும் உணரும் விதத்திலே. பட்டம் பதவிக்காகவே கொட்டாவி விட்டுக்கிடக்கும் காட்சி என்றிருந்த பழிச்சொல்லை அன்று துடைத்தனர், மணிமீது. கிடந்த மாசு துடைக்கப்பட்டது, ஒளி வெளிவரத்தொடங்கிவிட்டது. பட்டம் ஏன் ? பதவி ஏன்? பரங்கியும் பார்ப்பனனும் பார்த்தா, பாராண்ட தமிழனுக்குப் பட்டம் சூட்டவேண்டும்? கடல் கடந்தவன் தமிழன்! இமயத்தில் புலி பொறித்தவன் தமிழன்! கடாரத்தைக் கொண்டவன் தமிழன்! ரோம்நகருக்குப் பொன்னாடை விற்றவன் தமிழன்! இலக்கியச் சுவையைக் கண்டவன் தமிழன்! எந்நாடும் வியக்கும் வீரன் தமிழன்! ஏறுநடையுடையான் தமிழன்! இன்னல்கண்டும் புன்னகைபுரிவான் தமிழன்! அவனுக்குப் பட்டம், சோப்பும் சீப்பும் கண்ணாடியும் விற்கவந்து, பின்னர் அரசாள ஆரம்பித்த துரைமார்கள் தருவதா ! ஏன்? அந்தநாள் தொட்டு, ஆரியன் தமக்கு இட்ட "சூத்திரன்" என்ற இழிபட்டம் போக்கச், சிறு விரலை அசைக்காதவருக்கு, இராவ்பகதூர் எதற்கு? இந்தப் பட்டமும் பதவியும், தமது காலிலே தட்டுப்பட்டால் மட்டுமே, எடுத்துக்கொள்ளும் பண்பினர் பலர் உண்டு! ஒரு சிலர் உண்டு, பகலிலே அதுபற்றியே பேச்சு, இரவிலே கனவு, எந்தநேரமும் அந்தச் சிந்தனையே !! அவர்களின் தொகை மிகக்குறைவு ! பிரிட்டனின் பாரதிதாசன் எனத்தகும் ஷெல்லி என்ற ஆங்கிலக்கவிஞன் கூறினதுபோல, "அவர்கள் சிறுதொகை ! நாம் மிகப்பலர் !!" மிகப்பலர்கூடி, அவர்களை "ஒன்று உமது இயல்பை மாற்றிக்கொள்ளுங்கள், அது இயலாது எனின், எமக்குத் தனிவாழ்வு நடாத்த வழிசெய்துவிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டனர். பட்டம் பதவிகளை விட்டுவிடுவது என்ற தீர்மானத்தின் கருத்து அதுதான் ! தளபதி பாண்டியன் அவர்கள் இத்தீர்மானத்தை ஆதரித்ததுடன், அது நடைமுறைக்கு ஏற்றதாக அமைவதற்கு முக்கியமாகக் கட்சியிலே ஒழுங்கான அமைப்பு வேலை இருக்கவேண்டும் என்று கூறினார்கள்."ஆம் செய்வோம்!" என்று கூறினர் அன்பர்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையிலே, தளபதிகள் இசைந்துவிட்டனர் இந்த ஆக்க வேலைக்கு. இதற்கான ஊக்கம் அளிக்கவேண்டிய பொறுப்பு உணர்ச்சியுள்ள தோழர்களுடையது. இதைக்காரியத்திலே காட்டும் "சக்தி" வாலிபர்களிடம் இருக்கிறது. சிறுகிராமம் முதற்கொண்டு பெரியநகரம் வரையிலே செல்லுங்கள், செய்தியைச் சொல்லுங்கள், திராவிடர் கழகத்திலே, ஏராளமாகத் தோழர்களைச் சேர்த்துக் காட்டுங்கள். தலைவர்கள் ஆச்சரியப் படவேண்டும், அந்த அணிவகுப்பைக் கண்டு. ஆரியம் அலற, ஆங்கிலம் உணர ஒரு அணிவகுப்புத்தேவை! விரைவாகத் தேவை! வேலை மிகுதியாக இருக்கிறது. விடுதலைமுரசு கொட்டப்பட்டுவிட்டது. இன அரசுக்குப் போர், இறுதிப்போர் நடந்தாக வேண்டும். இன்றே கிளம்புக, திராவிடர் கழகங்களை நிறுவ, பலப்படுத்த!!
ஆந்திரமும் கேரளமும், இந்த வேகத்தைக் காணும்நாள் தூரத்தில் இல்லை. அதற்கான வழி வகையும் நிச்சயம் வகுக்கப்படும்.
இந்நிலையிலே, திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றியது பிடிக்கவில்லை என்றுகூறியும், கட்சியை நடாத்தும் உரிமை எமதே என்று உரைத்துக் கொண்டும், ஒரு சிலர், அறிக்கைகள் விடுவதுபற்றி யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை. கூந்தலுள்ளோர் வாரிமுடித்துக்கொள்ளட்டும்! நமக்கிருக்கும் கவலையெல்லாம், யாராலாவது, எந்த முறையினாலாவது, இன்று நமது இனமிருக்கும் நிலைமைமாறித் திராவிடநாடு திராவிடருக்கே ஆகவேண்டும் என்பதுதான். அதைச்செய்யவே நாம், வடுநிரம்பிய உடலும் வைரம்பாய்ந்த உள்ளமும், சிந்தனை ததும்பும் மனமும், செய்வகை அனுபவமும் தெரிந்த, சிறைக் கோட்டத்துக்கும் வீட்டுக்கும் வித்தியாசமிருப்பதாகவே கருதாத, ஓய்வுதெரியாத, ஒரு பெரியாரின் தலைமையிலேகூடி நிற்கிறோம். அவர் களம். பல கண்டவர், போர்பல நடத்தியவர், போகவாழ்வை வெறுத்து ஏழைவாழ்வை நடாத்தி வருபவர். அவருக்கு அநேக தாலமுத்து நடராஜன்கள் கிடைப்பர். புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல வாலிபர்கள் வருகிறார்களே என்று ஆளும்கூட்டம் ஆயாசத்தோடு கூறும் விதத்திலே, வாலிபர்களை வரச்சொல்லும் வசீகரம் அவருக்கு உண்டு. அவர் நமக்குப் போதும். வேறு சிலருக்கு வேறுசிலர் தேவையாம் !! நமக்கு அதுபற்றிக் கவலைவேண்டாம். போரிடத் தெரிந்த பெரியார், போர்வீரர்களுக்கு அழைப்புவிடுகிறார். போர்வீரர்கள் ! வருக, வருக ! நமக்கு வேறு அறிக்கை வேண்டாம் தேவையுமில்லை.
உழைக்க வாருங்கள் ! பிழைக்கும் வழி என்ன என்று என்னைக் கேட்காதீர்கள் ! உங்கள் இனத்தை மீட்கவாருங்கள், அதற்கு ஏற்றசக்தி உண்டா என்று என்னைக் கேட்காதீர்கள் ! போருக்கு வாருங்கள் அது எப்படி முடியும், எப்போது முடியும்! என்று என்னைக் கேட்காதீர்கள். இதுவே பெரியாரின் அறிக்கை.
ஓய்வை விரும்புவோர் ஒதுங்கி நிற்கலாம், சாய்வு நாற்காலியினர் சாய்ந்து கிடக்கலாம், பதவிப் பிரியர்கள் பாதையைவிட்டு விலகலாம், மானத்தைப் பெற, உயிரையும் இழக்கும் மனப் இழக்கும் மனப் போக்குடையோர் வரலாம்!!