உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப்போர், இரண்டாம் பதிப்பு/திருமுகம்

விக்கிமூலம் இலிருந்து

திருமுகம்

நம் நாடு, "திராவிட நாடு " ஒரு காலத்தில் பரந்த சாம்ராஜ்யமாக இருந்தது. இன்று நாம், பழைய அளவு முழுவதும்கூடக் கேட்கவில்லை. சென்னை மாகாணம், என்ற எல்லையுள்ள இடத்தைக் கொடுத்தாலே போதும் என்று கூறுகிறோம். திராவிட நாடு என்ற திருப்பெயருடன், அதிலே நாம் தன்னாட்சி அமைக்க விரும்புகிறோம்.

திராவிட நாட்டின் அளவு, சிறியது என்று கூறிவிட முடியாது. இந்தியாவிலே ஒரு இணைப்பாக இருக்கும் நிலையிலே பார்த்தால், அப்படித் தோன்றும்; ஆனால் உலகிலே, தன்னாட்சியுடன் உள்ள பல்வேறு நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், திராவிட நாடு அளவில் சிறியது ஒன்று கூறி விட முடியாது.

சென்னை மாகாணத்தின் அளவையே நாம் இப்போது திராவிட நாடு என்று கொள்கிறோம். இந்த அளவு 142000, சதுரமைல் ஆகிறது. இதனைக்கொண்டு, மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 'திராவிட நாடு' என்று நாம் எல்லைக் கோடிடும் இடம் இங்கிலாந்தைப் போல ஏறக்குறைய இருமடங்கு பரப்புள்ளது. 14 அல்பேனியாவுக்குச் சமம். 27 அல்ஸ்டர்களுக்குச் சமம். 4 ஆஸ்டிரியாக்களைக்கொண்ட பரப்பு. 10 பெல்ஜியம், 2 ஜெக்கோஸ்லவேகியா, 3 கிரீஸ், 4 அயர்லாந்து, 10 ஹாலந்து, 4 போர்ச்சுகல், 14 பலஸ்தீன் இவைகளுக்குச் சமம்.

திராவிட நாட்டின் குடிவளம் குறைவற்றது. சிலநாடுகள், இடம் விரிந்தும், அதற்கேற்றபடியின்றிக் குடிவளம் குறைந்தும் இருக்கும். இதற்கு நேர்மாறாக உள்ள நாடுகளும் உண்டு. இங்கு இத்தகைய இன்னல் இல்லை. சென்னை மாகாண ஜனத்தொகையின் எண்ணிக்கை சுமார் 4½கோடியாகும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். தன்னாட்சியுடன் வாழவும், தக்க பாதுகாப்புடன் இருக்கவும், எந்த எதிர்ப்பையும் சமாளிக்கவும், கூடுமான அளவு குடிவளம் இருக்கிறது. அதிலும், "திராவிடர்கள்" திறமை, தீரம், உழைப்பு, உள்ளப்பண்பு, முதலியவற்றிலே குறைவில்லாதவர்கள். முன்னாள் முதலே, அவர்கள் முதல்வர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். வீரத்தைப் போற்றுபவர்கள். சாவுக்கு அஞ்சிப் பணிந்தவர்களல்ல. வாழ்வுக்காக மானத்தை இழக்க மறுத்த மரபினர். எனவே, இக்குணம் படைத்தவர்கள், தன்னாட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உறுதியாகக் கூறலாம்.

திராவிட நாட்டின் இயற்கை வளம்போல், உலகிலே பல நாடுகளிலே காணமுடியாது. பனி மூடியோ, பாலைவனம் மிகுந்தோ, மலைமிகுந்தோ மண்மேடாகவோ இருக்கும் நாடுகள் உண்டு. ஒரு பொருள்கிடைத்து மற்றவை ஏதும் கிடைக்காத நாடுகளும் உண்டு. திராவிட நாடு, இயற்கை வளம் குறைவறப் பெற்றுள்ளது. விளைபொருள்களுக்கு ஏற்ற இடம், அதற்காதாரமான ஆறுகள் பாய்ந்தோடும் அழகான நாடு. மலைவளம், காட்டுவளம் உண்டு. கடலோரக் காட்சியும் காணலாம். புதைபொருள் உண்டு. நாகரிக வாழ்க்கைக்குத் தேவையான சகல சாதனங்களையும் நாம் பெறமுடியும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான, உண்டி, உடை, இரண்டுக்கும், வெளிநாட்டவரை எதிர்பார்க்க வேண்டிய அவசியமேயின்றி, திராவிடம் தன்னாட்சியின் மூலம், திட்டமிட்டு வாழலாம். விஞ்ஞானகாலத் தேவைகளான, தாதுப்பொருள், மின்சாரம், ஆகியவைகளை ஏராளமாகப் பெறவும் வழி இருக்கிறது. புரண்டோடும் ஆறுகளெல்லாம், " அருட்பெருஞ்ஜோதி " யாக மாற்றப்பட வழி உண்டு. இயற்கை திராவிட நாட்டைச் சீராட்டுகிறது.

திராவிட இனம், மொழிவழி, தமிழர், தெலுங்கர், கேரளர், கன்னடர் என்று வேறுபட்டவர் எனினும், இனமூலம், கலை, வாழ்க்கைமுறை, என்பவைகளிலே ஒன்றுபட்டவர்கள். இப்பிரிவினர்களுக்குள் உள்ள வேறுபாடுகள், முரண்பாடுகள் அல்ல. இவ் உண்மையை உணர்ந்தால், இனத்திலே ஓர் ஒருமைப்பாடு வந்து சேரும். இந்த வேறுபாடுகள் நீக்கக்கூடியன, நீக்காவிட்டாலும், கேடொன்றுமில்லை. இவை, இனத்தின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கக் கூடியனவல்ல. திராவிட இனவளம் வரலாற்று உண்மை. மாவீரர்கள், மதிவாணர்களை ஈன்றெடுத்த இனம். சிறந்த வாணிகர்கள், சிற்பிகள், கவிகள், இசைவாணர்கள் இருந்தனர். தன்னாட்சியிலே தழைத்த மலர்கள், திராவிட நாட்டிலே நறுமணத்தைப் பரப்பின.


"புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவு
      பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
 கனிமொழி பேசி இல்லறம் நாடும்
      காதல்மாதர் மகிழுறும் நாடு"

என்று நமது கவிஞர் கூறினது கவிதை எழில் மட்டுமல்ல; உண்மை.

முன்னாளில், இங்குத் தன்னாட்சியும் தக்கோர் ஆட்சியும் இருந்ததால், இன்பவாழ்வு இருந்தது. பொன்சிகரமுள்ள மாளிகைகளைப் பற்றி, அகழி சூழ்ந்த கோட்டைகளைப்பற்றி, சோலையில் ஆடிய மயிலைப்பற்றி, அது ஆங்கு நடந்த நாரிமணியைக் கண்டு வெட்கமடைந்ததுபற்றி, வணிகரின் வளத்தைப்பற்றி, வீரரின் திறத்தைப்பற்றிப் படிக்கும்போது, இவை, இன்ப வாழ்வு பெற்ற இடத்துக் காட்சிகள் என்று எவரும் கூறமுடியும். முன்னாளில்,


"வானிடை மிதந்திடும் தென்றலிலே
      மணிமாடங்கள் கூடங்கள் மீதினிலே
தேனிடை யூறிய செம்பவள
      இதழ்ச் சேயிழையா ரொடும்"

ஆடி இன்புற்ற நாடுதான் நம் நாடு. முன்னாள் பொன்னாளாகத் தான் இருந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

முன்னாளுக்கும் இன்னாளுக்கும் இடையே, திராவிடநாடு தேய்ந்தது. தீயர் கூட்டுறவால் திருஇடம் தீய்ந்தது. ஆரியரை அணைத்தது, உள்ளம் மெலிந்தது. கற்பனை உருவங்களைக் கைகூப்பித் தொழவும், நடமாடும் நயவஞ்சகத்தை நாதன் எனப் போற்றவும், உழைப்பவனை உதாசீனம் செய்து உரத்த குரலோனை ஆதரிக்கவும் தொடங்கிற்று. ஒரு இனத்தின் அழிவுக்குக் காரணமாக உள்ள அனைத்தையும், திராவிடம் கண்டது, கொண்டது; எனவே முன்னாள் பெருமையும் மாண்டது.

இந்நாள், 'திராவிடநாடு' என்பதே புதியதோர் பெயர் போலத் தோன்றும் நிலைமை. திராவிடம், இந்தியாவிலே ஒரு பகுதி. வீழ்ந்த ஜெர்மனியில், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு மாவட்டத்திலும் சோவிய ஆட்சி வேறோர் மாவட்டத்திலும், வேறு ஆட்சி வேறு புறத்திலும் என்று இருக்கக் காண்கிறோம். ஒரு ஆர்ப்பாட்டக்காரனை நம்பி அழிவுப்பாதையிலே சென்றதால் அந்நாட்டுக்கு இந்நிலை. நம்நாட்டு நிலையோ, ஆங்கில ஆட்சி வாழ்க்கையின் ஒரு பகுதியில்; ஆரிய ஆட்சி வாழ்க்கையின் எல்லாப்பகுதிகளிலும்; வடநாட்டவர் ஆட்சி பொருளாதாரப் பகுதியிலே; நமக்கு எங்கும் தன்னாட்சி இல்லை ! எங்கும் நல்லாட்சி இல்லை ! தன்னாட்சியைவிட நல்லாட்சி இருக்கமுடியாதல்லவா? இவ்வளவுக்கும், நாம் யாரிடமும் தோற்கவில்லை. அவள் அதரம் நச்சு நீர் ஊற்று என்று அறியாது, இன்பவல்லியின் இதழைச் சுவைத்துக்கொண்டே கீழே சாய்ந்தவன் போலாயிற்று திராவிட நாட்டின் கதி. திராவிட நாடு, ஆரியத்தின் வேட்டைக்காடு ! ஆங்கிலருக்கு அடிமைகள் வாழும் கூடு ! வடநாட்டவருக்கு, வகையில்லார் வாழும் சந்தை ! இந்நாள் நிலையில், திராவிடர், எடுப்பார் கைப்பிள்ளையாகி, நாடு, இனம், மொழி, யாவும் மறந்து, சிறுவாழ்விலே உள்ளனர். களைநிரம்பிய கழனி, சேறு நிரம்பிய குளம், கரைபடிந்த துகில், என்றாகிவிட்டது. அறிவுப்பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது இங்கு. ஆண்மையாளர்கள், அஃதிலாருக்கு அடிமையாயினர். திராவிடம் இன்று கேவலம் ஓர் கேலிச் சித்திரமாகிவிட்டது.

ஒரு இனம், அழிக்கப்படுவது கொடுமை; அதனினும் கொடுமை, அந்த இனத்தவரையே அதனை அறிந்துகொள்ள முடியாதபடி அறியாமையில் ஆழ்த்திவைத்திருப்பது. வாழ்ந்த வணிகனிடம் கையாளாக இருந்தவன், வஞ்சகத்தால் உயர்ந்து, உயர்ந்த நிலையிலே, வீழ்ந்த வணிகனைத், தனக்குக் குற்றேவல் புரிபவனாக்கிக் கொள்ளல் கொடுமை. காணச் சகிக்காத கொடுமை ! அதனினும் கொடுமையை நாம் காண்கிறோம், நமது கண்களிலே இரத்தம் கசியவில்லை! ஆசியச் சமவெளியிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு, பச்சையான இடம் நாடி வந்தவர் ஆரியர் என்று படிக்கிறோம். அந்த நேரத்தில் திராவிடம் உலக வல்லரசுகளில் ஒன்றாகத் திகழந்ததென்றும் படிக்கிறோம். அந்த ஆரியனது வழி வந்தவனின் அடிபணியும் திராவிடனை இன்று காண்கிறோம் ! இதனினும் கொடுமை வேறு என்ன காணவேண்டும் ! குயிலுக்குக் கோட்டான் இசை கற்றுக் கொடுக்கிறது, மயிலுக்கு மந்தி நடனம் கற்றுக்கொடுக்கிறது! என்றால் நம்புவரோ ! ஆரியர், தமிழருக்கு, மதம், கலை, நாகரிகம், சட்டம், யாவும் கற்றுக் கொடுத்தவர்; ஆரியமத கலை நாகரிகம் சட்டம் ஆகியவைகளைத் திராவிடர் ஏற்றுக் கொண்டுள்ளனர். வெற்றிபெற்ற ஆங்கிலேயனால், இந்திய பூபாகத்தைக் கிறிஸ்துநாடு ஆக்கமுடியவில்லை; வெற்றிபெற வாள் எடுக்காத ஆரியத்தால், திராவிடத்தை, ஆரிய சேவாபீடமாக மாற்றிவிட முடிந்தது. உலக வரலாறு முழுவதும் தேடினாலும் இதற்கு ஈடான வேறோர் கொடுமையைக் காண முடியாது.

இன்று, ஏக தெய்வம், உருவமற்ற ஆண்டவனை வழி படுவதே உயர்ந்தோர் மார்க்கம் என்பதை உலகு முழுதும் கொண்டாடுகிறது. இங்கு மட்டுந்தான், கடவுள்கள் கூட்டம் கூட்டமாக உள்ளனர்! எல்லாவித உருவங்களிலும் உள்ளனர் ! ஏக தெய்வ வழிபாட்டுக்காரர் குறைவற்ற வாழ்வு வாழ, கடவுட்கூட்டத்தைக் கட்டிவாழும் இங்கு, வாழ்வே பெருஞ்சுமையாகி, 'பிறவா வரம் தாரும் பெம்மானே' என்று புலம்புகிறோம்.

மற்ற இடங்களிலே ஆண்டவன் வந்துவந்து போனதில்லை! இங்கு அடிக்கடி வந்து போயிருக்கிறார். ஒவ்வொரு தடவையும், பாபத்தைத் போக்கவே வந்திருக்கிறார்; வந்து போன பிறகு மீண்டும் மீண்டும் பாபம் தலையெடுத்து ஆடுகிறது.

மற்ற இடங்களிலே, மக்கள் யாவரும் சமம், ஒரு நாட்டிலுள்ளவர்கள் ஒரு தாயின் சேய்கள் என்ற எண்ணம்; எண்ணத்தோடு நில்லாமல் உறுதிப்படவும் கெடாதபடியும் பார்த்துக்கொள்ள ஏற்பாடுகள் உள்ளன. இங்கு 'வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மாந்தரென்றால் சூழ்கின்ற பேதம் அந்தத் தொகை இருக்கும்' என்ற நிலை இருக்கிறது.

மற்ற இடங்களிலே வீரர்களுக்குக் கோட்டம், இங்குக் கோட்டங்களிலே வீணருக்கே இடம்.

மற்ற இடங்களிலே அறிஞர்கள் போற்றப்படுவர்; இங்கு, ஆரியரன்றி அறிஞர் இலர் என்று எவன் ஒப்புக்கொள்கிறானோ அவனே அறிஞன்!

மற்ற இடங்களில் உழைப்புக்குப் பெருமை, இங்கு உயர்ந்தோன் உழைக்கலாகாது என்பது தான் நியதி.

மற்ற இடங்களிலே, பழைமைக்குக் கல்லறை, இங்கே புதுமைக்குச் சித்திரவதை.

இங்கு இன்றும் வேள்விகள், யாகங்கள், வேதபாராயணங்கள், குருபூஜைகள், அபிஷேகாதிகள், ஆராதனை வகைகள், யாவும் உண்டு. இவை யாவும், மனிதன் காட்டுமிராண்டிப் பருவத்திலே கற்றுக் கொண்டவைகள்; அறிவுக்காலத்துக்கு இவை ஆகா, என்று மற்ற இடங்களிலே விட்டு விட்டனர்.

மற்ற இடங்களிலே, ஜூவஸ், மினர்வா, அபாலோ, நெப்ட்யூன், தார், ஓடின், ஜுபிடர், முதலிய எண்ணற்ற "கடவுள்களை " வேலையினின்றும் நீக்கி விட்டனர். இங்கு இன்றும், காட்டேரி, முனியனைக்கூடக் கைவிடவில்லை.

மற்ற இடங்களிலே, அறிவாளியின் மொழியைக் கேட்டு அரசுகள் நடக்கின்றன; இங்கு ஆரிய மொழிப்படி நடப்பதே அரசதர்மம் என்ற எண்ணம் பலமாக இருக்கிறது.

இந்த நாட்டிலே தான், நீங்கள் வாழுகின்றீர்கள் என்பது கவனமிருக்கட்டும்.

மரத்தாலான ஏர், மண்வெட்டி, கூடை, முறம், பாய்மரமுள்ள படகு, கயிற்றால் ஆன வலை, கட்டைவண்டி, கைராட்டினம், இவைகளைக் கண்டுபிடித்த அளவிலிருந்து, காற்றை அளக்கும் கருவி, காரிருளைப் போக்கும் மின்சாரம், கடலுக்குள் குடைந்து செல்லும் கலம், காதருகே உலகைக் கொண்டு வந்து சேர்க்கும் கருவி, இவைகளையும், இவைகளையும்விட அதி அற்புதமான முறைகளையும் கண்டு பிடித்த வெளி உலகு, எவ்வளவு வளர்ந்திருக்கிறது, அத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால், இங்கு நாம், எந்த அளவோடு நின்று இருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள்.

இந்த நாட்டிலே நீங்கள் "தீண்டாத மனிதனை"ப் பார்க்கிறீர்கள் ! இந்த நாட்டிலே "சேரிகளை"ப் பார்க்கிறீர்கள். இங்கே "தொடாதே ! எட்டி நில்!" என்று கூறும் பார்ப்பனரைப் பார்க்கிறீர்கள் ! அவன் வாழும் அக்ரகாரத்தையும் பார்க்கிறீர்கள் ! மேனி கருத்தவனை, மேனி மினுமினுப்புடையவன், உழைப்பவனை உறுஞ்சி வாழ்பவன் மிரட்டக் காண்கிறீர்கள். நாயும் பன்றியும் நடமாடினாலும் சகித்துக் கொள்பவர்கள், மனிதனை, "தாழ்ந்த குலம்" என்று வைத்திருப்பதைக் காண்கிறீர்கள்.

அதிகாரிகளை அடிமை கொள்ளும் அதிகாரியாய், படித்தவனைப் பணியச் சொல்லும் குருவாய், பணக்காரனைப் பணம் திரட்டப் பாதகாணிக்கையாகத் தரச்சொல்லும் ஆசார்யனாய் வாழும் ஆரியர்களைக் காண்கிறீர்கள்.

இங்கே பஞ்சை பராரியை, பட்டினிப் பட்டாளத்தையும் பார்க்கிறீர்கள். பவனி வரும் பட்டுப் பட்டாடைக்காரனையும், அவன் கொட்டு முழக்கத்துடன் தூக்கிவரும் கோயில் சாமிகளின் கோலாகலத்தையும் காண்கிறீர்கள்.

பாட்டாளியின் உடலிலே சேறு இருக்கக்காண்கிறீர்கள். பாடுபடாதவன் உடலிலே சந்தனம் இருக்கக் காண்கிறீர்கள். தரித்திரம் தாண்டவமாடுவதையும் பார்க்கிறீர்கள். 'தனலட்சுமிகளாக' உள்ளவர்களையும் காண்கிறீர்கள்.

இந்த நிலை போக வழி என்ன என்ற ஆராய்ச்சியிலே ஈடுபடாமல், வந்த நிலைக்குக் காரணமாக வியாசர் கூறுவது என்ன, வேதம் சொல்வது என்ன என்று ஏடு புரட்டும் வேலையிலே ஈடுபடும் பெரியவர்களைப் பார்க்கிறீர்கள்.

ஜாதிக்குள் ஜாதி, குலத்துக்குள் குலம், ஒன்றுக்கொன்று சச்சரவு, என்ற பேதத்தின் பெருங்கூத்தைப் பார்க்கிறீர்கள். பேச வாயில்லையா ? கேட்கத் துணிவில்லையா ? எதிர்க்கத் தைரியமில்லையா ? இதற்கெலாம் நேரம் இல்லையா ? இவை உமது கடமை அல்லவா ?

தேசியம் பேசுவதால், இவற்றுக்கெல்லாம் நேரம் இல்லையாம். இந்நாடு, அன்னியனிடம் அடிமைப்பட்டிருக்கும் 'ஒரு தொல்லை' மட்டுமே இருப்பதானால், அந்தத் தொல்லையை ஒழிக்கப் பாடுபட்டால் போதும் என்று கூறுவது அறிவுடமையாகும். வண்டிக்கு அச்சு முறிந்திருக்கிறது, 'கழுத்துக்கட்டு' காணப்படவில்லை, சக்கரத்தில் கிளைகள் ஒடிந்து கிடக்கின்றன ! மாட்டின் கொம்புக்கு வர்ணம் பூசி விட்டால், வண்டி பூட்டி விட முடியுமா? நாட்டிலே உள்ள 'அடிமைத்தனம்' ஒன்றல்லவே ! குப்பை மேட்டின்மீது குரைத்துக் கொண்டிருக்கும் நாயைக், குறிபார்த்து அடிக்க வேண்டுமானால் நமக்கும் கொஞ்சம் உயரமான இடம் வேண்டுமே, நின்று கொண்டு கல்வீச ! கைவலிக்கப் பல கல்வீச வீச, குப்பை மேட்டிலே, ஒரு இடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு நாயும் நகர்ந்து கொண்டிருக்குமே ! தப்பித்தவறி ஓடினாலும், கல் வீசும் சத்தம் நின்றதும், குக்கல் மறுபடி வந்து சேருமே ! அடிமை மனப்பான்மை என்ற குப்பை மேட்டின்மீது குடி ஏறிஇருக்கும் அரசியல் அடிமைத்தனத்தை ஓட்ட, கிளர்ச்சி என்னும் கல்வீசிக் கண்டது என்ன? குப்பை மேட்டைக் கலைத்துவிட்டால், குக்கல் தானாகப் போய்விடுமே ! சமூகக் கொடுமையை ஒழிக்கத்தொடங்கினால் அல்லவா, குப்பை மேடு குலையும். எத்தனை காலத்துக்குத்தான் 'தேசியத் திரை'யினால், சமூகக் கொடுமைகளை மக்கள் அறிய ஒட்டாதபடி தடுத்துவைக்க முடியும் !

விசித்திர வைதிகர்களை வீதி சிரிக்கச் செய்தார் சாக்ரடீஸ்! உலகுணராதவர்களுக்கு அது உருண்டை என்று உரைத்து உதைபட்டார் கலிலியோ ! வைதிகத்தின் மடமையை வாட்டினார் வால்டேர் ! மக்கள் மன்றத்துக்கு மதிப்புதர வேண்டும் என்றார் ரூசோ. வேத புத்தகத்தை விற்று விபசார விடுதிக்குப் பணம் தரும் போகிகளைக் கண்டித்தனர், விக்ளிப், ஜிவிங்கிலி, மார்ட்டின் லூதர் போன்றார். அடிமைகளை விடுவித்தார் ஆபிரகாம் லின்கன். முதலாளியின் கொடுமையை எடுத்துரைத்தார் காரல் மார்க்ஸ்; அவர்களுக்காகப் போராடினார் லெனின்; சீனரின் சிறுமதியைப் போக்கினார் சன்-யாட்-சென்; துருக்கியரின் மதி தேய்வதைத் தடுத்தார் கமால்; இறைவன் பெயர் கூறி ஏழையை வஞ்சித்தவரைச் சந்தி சிரிக்கவைத்தார் இங்கர் சால்; பேதைமையைப் போக்கும் பணியை மேற்கொண்டார் பெர்னாட்ஷா! வாழ்க்கையிலே வாட்டம் வேதனை, வறுமையின் கொடுமை, வஞ்சகத்தின் ஆட்சி இவைகளிருப்பதைப் படம் பிடித்துக் காட்டினர், கோர்க்கி, டர்கினாவ், டாஸ்ட்டாவஸ்கி, சிங்களேர், போன்ற எண்ணற்றவர்கள். இவர்களும் இன்னமும் எண்ணற்றவர்களும் தோன்றித் தொல்லைப்பட்டு, தூற்றப்பட்டு, கொடுமைக்கு ஆளாகி, மனித சமாஜத்தின் மறு மலர்ச்சிக்காக, கொள்கைகளை, புதுக் கோட்பாடுகளை, எவருக்கும் எதற்கும் அஞ்சாது எடுத்துக் கூறிப் பாமரனுக்காகப் போராடியதால், இன்று பல்வேறு நாடுகளிலே, மக்களின் மனம் விடுதலை பெற்றது. அடிமை மனப்பான்மை அகன்றது. அதனால் அங்கு, ஒரு நாட்டை இன்னோர் நாடு அடக்க முடியவில்லை ! அடக்கினால், எரிமலை கக்குகிறது, மக்கள் மனமென்னும் கடல் பொங்கி வழிகிறது; புரட்சிப்புயல் வீசுகிறது. அதன் முன்பு, எந்தக் கொடியவனாலும் நிற்க முடியவில்லை. இங்கே, நடக்கும் கொடுமைகளைக் கண்டிக்க, எடுத்துக்கூற, எதிர்க்க, பெரியார் ஒருவர்தானே இருக்கிறார் !

பாடுபடுபவன் பசித்திருக்கப், பாடுபடாதவன் பரிமள வாழ்வுடன் இருப்பது, முதலாளித்துவமுறை, சுரண்டல் முறை அல்லவா ? சுரண்டல் முறையை ஒழிக்க வேண்டுவது அவசியமல்லவா? பாடுபடாத பார்ப்பன இனம், பாடுபடும் திராவிட இனத்தின் உழைப்பிலே வாழ்கிறதே, இதை ஏன் திருத்தவில்லை?

கோடிக் கணக்கிலே பொருள் முடங்கிக் கிடப்பது, ஆரிய மத அமைப்பு முறைப்படி அல்லவா? ஆண்டுதோறும், அதே முறையினால் கோடிக்கணக்கிலே பணம் விரயமாகிறதல்லவா? இந்த 'விரயம்' நீக்கப்பட்டு, ஏழைகள் வயிறு நிரம்ப உணவுகிடைக்கச் செய்வதற்கு என்ன முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது?

விளைபொருள்களை வெளியே அனுப்பிவிட்டு, செய்பொருளை வாங்கியே ஒரு நாடு இருக்குமானால், அந்நாட்டுச் செல்வநிலை சீரழியாதா? வடநாட்டு நிலை அப்படி இருக்கிறதா? சகல பொருள்களும் அங்கே செய்யப்பட்டு இங்கே விற்கப்படுகிறதே, இதன் பலனாகத் திராவிடம் பட்டிக்காடாகவும், வடநாடு "குபேர பட்டினமாகவும்" மாறி வருகிறதே ! இது, முறையான பொருளாதார வளர்ச்சியா ? இரும்பு, பருத்தி, முதற்கொண்டு சகல தொழில் வளமும் வடநாட்டிலிருக்கிறதே. தொழிற்சாலைகள் அங்கே வளர்ந்து, ஆலை அரசர்கள் ஆட்சி செய்கின்றனரே! நாம் இங்கே "ஆடு ராட்டே" பாடினால், வாட்டம் ஓடுமா?

நம்நாட்டு 'முதல்' பர்மா போய்விட்டதே; நம் நாட்டு மக்கள் தூரக்கிழக்குத் தேசங்களிலே கூலிகளாகித் துயர் உறுகிறார்களே ! இங்கு 'பனியா படை எடுப்பு' நடந்ததே; இந்த நிலை வளர வளர, நாட்டின் சீரும் சிறப்பும் நசித்துப் போகாதா? நாடு நசிவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுதானா, நாட்டு மக்கள் மடமை ? நாதியற்ற திராவிடமாகத்தானா, திராவிடம் போய்விட வேண்டும்?

பிளவு கேடு பயப்பது ! பிரிவு அக்கேட்டைப் போக்கக் கூடியது. இந்தியாவிலே பிளவுகள் உள்ளன. பிளவுகளின் கேட்டினாலேயே பிரச்னைகள் பலவும் தீர்க்க முடியாததாகிவிட்டன. எங்கெங்கு, தனித்தனி பிரிவுகள், தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய, தன்னாட்சி நடத்தக்கூடிய பிரிவுகள், அமைக்க முடியுமோ, அவ்விடங்களிலே தனி நாடுகள் அமைத்து விட்டுப், பிறகு, அந்தந்த நாடுகள், தத்தமது காரியத்தைத் தானாகக் கவனித்துக் கொள்ளும் ஏற்பாடு இருந்தால், ஏன் பிறகு, இந்த நாடுகளுக்குள் ஓர் தோழமை உண்டாகக்கூடாது! தோழமை, சமபலமுள்ள இருவருக்குள் தானே இருக்கமுடியும் ! சுரண்டும் பாகம் சுரண்டப்படும் பாகம் இரண்டும் ஒன்றாகவே இருக்கவேண்டுமானால்,

தொல்லையும் துயரமும், துவேஷமும் வளருமேயொழிய, தோழமை எங்கிருந்து முளைக்கும்?

ஐரோப்பாவிலே உள்ள தனி நாடுகளெல்லாம் கூடி, ஐரோப்பா ஒரு நாடு, நாம் யாவரும் ஒரே குடையின் கீழ்வரவேண்டும் என்று கூறுகின்றனவா? திராவிடத்தை மட்டும், தனிநாடு ஆகக் கூடாது என்று கூற யாருக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது? என்ன நியாயம் இருக்கிறது? மேலும், திராவிடநாடு, தன்னாட்சியோடு, தனி நாடாக இருந்ததுதானே? இழந்த இன்பத்தைத்தானே மீண்டும் கேட்கிறோம்? இது எந்தத் தர்மத்துக்கு விரோதம்?

"இந்தியா" பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தினிடமிருந்து விடுதலை பெற்றது. ஆனால் அந்த விடுதலை மட்டும் போதாது. இனத்தை இனம் அடக்கிக் கொடுமை செய்வதினின்றும் ஒவ்வோர் இனமும் விடுதலை பெறவேண்டும். முதலாளித்து முறையிலிருந்து மக்கள் சமுதாயம் விடுதலை பெறவேண்டும். வைதிகப் பிடியிலிருந்து விடுதலை பெறவேண்டும். பழைய கால எண்ணம் ஏற்பாடுகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். இவைகளுக்குப் பாதகமாக உள்ள சூழ்ச்சி, சுயநலம், பசப்பு, புரட்டு இவை யாவும் ஒழிந்தாக வேண்டும். ஆங்கிலேயனை அதட்டிக் கேட்கப் பயிற்சிபெற்று விட்டோம்; அவனும் இந்தியா, இனித் தங்கக் கம்பியாக இராது, அது தணலில் போட்டெடுத்த இரும்பு என்பதைக் கண்டுகொண்டான். ஆனால் 'விடுதலைப்போர்' ஒரு சிறையிலிருந்து மற்றோர் சிறை செல்வதல்ல. வெள்ளை ஏகாதிபத்யத்தை விரட்டி வேதியமடாதிபத்யத்திலே மாட்டிக் கொள்வது, விடுதலை அல்ல ! பரங்கியின் பிடியிலிருந்து விலகி பனியாவின் பிடியிலே சிக்கிக் கொள்வது, விடுதலை அல்ல. இந்திய விடுதலை என்ற இனிப்புப் பூச்சின் சுவையைக் கண்டு, மனு, மார்வார் கம்பெனி தயாரிக்கும் மாத்திரையையும் உட்கொண்டு, வீணராய், வறிஞராய், திராவிடர் ஆகிவிடக் கூடாது.

ஆகவேதான், "'திராவிடநாடு திராவிடருக்கே' என்று முழக்கமிடுங்கள்; உரிமைக்காகப் போராடுங்கள்" என்று கூறுகிறோம். திராவிடநாடு, நம் நாடு; நல்ல வளமுள்ள நாடு; தன்னாட்சிக்கு ஏற்ற நாடு; அதனைப் பெற, அதிலே தன்னாட்சி தழைக்கப், பணிபுரிவதே, திராவிட வாலிபனின் இன்றையக் கடமை. இதற்கு முன்பு வேறு என்றும் இல்லாத அளவுக்கு இக்கடமை இன்று நம்மை அழைக்கிறது. இது விடுதலைப் போர்க்கோலம் ! வீணருக்கு உழைத்து வீழும் காலம் அல்ல !

இந்நாளில் வாழும் நீங்கள் திராவிட விடுதலைப் போர்ப் படையின் முன்னணி வீரர்கள். உங்களுடைய முன்னேற்றைத்தைப் பொறுத்தே படையின் வளர்ச்சியும், வெற்றியும் இருக்கிறது. எனவே வீரர்காள், முரசு கொட்டுக ! "வளமார் எமது திராவிடநாடு வாழ்க ! வாழ்கவே !!"