விடுதலை வீரர்கள் ஐவர்/வ.உ.சிதம்பரனார்
௫. வ. உ. சிதம்பரனார்
[புலவர் இளஞ்செழியன்]
முன்னுரை:
சூடு பறக்கும் சுவைத்தமிழில், நாட்டுமக்கள்
கேடு பறக்க, கெட்ட குணம்பறக்க
ஆடும் அழகுமயில் ஆட்டத்தைப் போலித்த
நாடு சிறக்க நலம் பிறக்கப் பேசுகின்ற
எங்கள் கலைஞ! எழிலவாய்ந்த பெட்டகமே!
எங்கள் கவியரங்கிற் கேற்ற தலைவரென
இங்கு எழுந்தவரே! இங்கிந்த நாட்டவர்கள்
சிங்கமெனக் கொண்டாடிச் சிரம்தாழ்த்தும் மன்னவரே!
தங்கத் தமிழகத்தைத் தாங்கி நடத்தவந்த
தங்களுக்கு என்றன் தலைவணக்கம் கூறுகின்றேன்;
பாட்டிசைக்க வந்தோர், பலபேர்க்கும் அவ்வாறே
கூட்டியென் நன்றிதனைக் கூறி மகிழ்கின்றேன்;
புவியரங்கில் முதற்காலம் தோன்றுகையில் தோன்றிப்
புகழ்படைத்த தமிழ்மொழியில் இவையெனககுத் தோன்ற,
கவியரங்கில் நான்கலந்து கொள்வதற்கு வந்தேன்.
கப்பலோட்டி யான் புகழைச் சொல்வதற்கு வந்தேன்;
செவியரங்கில் நீங்களெல்லாம், அந்தவீர தீரச்
சிதம்பரனார் சரித்திரத்தைக் கேட்டு உங்கள் நெஞ்சில்
சுவைபொங்க, தென்னாட்டு வீரமது பொங்க,
செந்தமிழில் ஆசைவைக்கக் கேட்டுக்கொள் கின்றேன்;
போரையே எந்தப் பொழுதும் விரும்பியிந்தப்
பாரை வியக்கவைத்த பாண்டியனும் வெள்ளிப்
பனிமலைக்குச் சென்றதனைப் பணியவைத்து வந்தவனும்
தணித்த புகழில் தழைத்தசோ ணாட்டவனும்
காகானத் தகும்பெரிய களிற்றைப்போல் வந்தவர் தான்
பூணத் தகும் வீரப் புதுமையினைத் தந்தவர் தான்
வ.உ.சி. நாட்டு வரலாற்றில் நான் கண்டேன்;
சாவூருக்கு அஞ்சிச் சமரென்றால் அஞ்சுகின்ற
பேடியூர் தன்னில் பிறந்த மனிதரல்ல;
நாடு மணக்கவரும் நல்வீரம் பூக்கவரும்
கட்டபொம்மன் என்பான் அக் காலத்தில் தோன்றிவந்த
ஓட்டப் பிடாரமெனும் ஊரில் அவர் பிறந்தார்!
அந்நியர்கள் இந்நாட்டில் ஆதிக்கக்
கொடியூன்ற அதனை இங்கே
வெந்தணலால் எரிப்பதற்கும் விடுதலைக்கு
உழைப்பதற்கும் பிறந்து வந்தார்!
பன்னீரில் குளிப்பதற்கும் பழச்சாற்றில்
தோய்வதற்கும் பஞ்சில் துஞ்சிக்
கன்னியரை அணைப்பதற்கும் காமத்தில்
புரள்வதற்கும் நினைத்தி டாமல்
கண்ணீரை இழப்பதற்கும் கவலைகளை
ஏற்பதற்கும் பிறந்து வந்தார்!
விண்ணுலகம் மண்ணுலகம் இன்னபிற
உலகமெலாம் எண்ணி எண்ணித்
தென்னாட்டுத் திலகரெனத் திலகமெனக்
கொண்டாடப் பிறந்து வந்தார்!
மண்ணிருக்கும் காலம்வரை மறையாமல்
இங்கிருக்கப் பிறந்து வந்தார்!
செல்வத்தில் அவர் பிறந்தார்; அவரை வீட்டில்
செல்வமென வளர்த்தார்கள்; வளர்ந்தார்; பின்னர்
கல்விகற்றார், படிப்படியாய் உயர லானார்;
கடைசியிலே வழக்கறிஞர் ஆனார்; பொய்யைச்
சொல்வ தென்றால் தித்திப்புக் கனிகள் என்று
சொல்லுகின்ற வழக்கறிஞ ரிடையே, மெய்யைச்
சொல்லிவந்தார் சிதம்பரனார்; அதனால் மக்கள்
செல்வாக்கை அவர் பெற்றார்; சிறப்பைப் பெற்றார்.
நீதிக்கும் நேர்மைக்கும் எடுத்துக் காட்டாய்
நிலமக்கள் நடுவினிலே விளங்கி வந்த
சோதிநிலா வான சிதம்பரனார், கெட்ட
சூழ்ச்சிக்கும் வஞ்சனைக்கும் விரோதி யானார்;
ஏதம்புரி கின்றவரை எதிர்ப்பார்; எந்த
இச்சைக்கும் அர்பணியார்; காசு வைத்த
சூதாட்ட வாழ்வவர்க்குப் பிடிக்க வில்லை;
தொல்லறத்தை, நல்லறத்தை நடத்தி வைத்தார்!
கடலாடும் தூத்துக்குடி நகரில் மாற்றார்
கவலையின்றி வாழ்வதையும் ஆள்வதையும்
உடலாட நம்மக்கள் சோர்வ டைந்தே
உணவின்றி வீழ்வதையும் மாள்வ தையும்
மடமையினால் மக்களெல்லாம் அடிமைப்பட்டு
மதிப்பின்றி, மேன்மையின்றி இருந்ததையும்
கடமையினால் சிதம்பரனார் தினமும் கண்டார்;
கனலானூர், மனங்கொதித்தார்; கொந்தளித்தார்!
ஏற்றத்தை அயல் நாட்டார் பெற்றிருக்க,
இந்நாடார் புழுதிதனில் படிந்திருக்க
மாற்றத்தை உருவாக்கத் திட்டமிட்டார்;
மளமளென வாணிகத்தில் எண்ணம் வைத்தார்;
காற்றோட்டம் இல்லாத பழைய வீடு,
கடுகளவும் வெளிச்சமில்லா இருட்டு வீட்டில்
ஊற்றுணர்ச்சி அற்றிருந்த மக்கள் தம்மை
உணர்ச்சியினால், எழுச்சியினால் எழும்ப வைத்தார்;
“எழுச்சிமிக்க நாட்டோரே! பழைய நாளில்
ஈட்டிவந்த கீர்த்தியெலாம் உங்கள் கீர்த்தி!
முழுச்சினத்தைக் கொண்டவர்கள் நமது முன்கோர்!
முடியிழந்து ஒரு நாளும் வாழ்ந்த தில்லை!
செழிப்புமிக்க நாட்டினிலே நாம்பி றந்து
சிறுமைகொண்ட பேர்களிடம் ஒடுங்க லாமா?
விழிப்புமிகுந் திடுங்களின்றே! இந்த நாட்டின்
வீரத்தைக் காட்டுதற்கு எழுந்து வாரீர்!
தாய் நாட்டுப் பொருளையன்றி வேறு நாட்டார்
தருகின்ற பொருளையினி வாங்கி டாதீர்!
பாய்கின்ற நதிகளிங்கு நீரைப் பாய்ச்சப்
பலபொருளும் இந்நாட்டில் விளைவதுண்டு!
ஆய்கின்ற மதிவேண்டும்; இந்த நாட்டின்
அவமானத் தைத்துடைக்கும் எண்ணம் வேண்டும்?
போய் வாங்கிடுவீர் நமதுபொருளை! நாட்டுப்
பொருள்வளப்பீர்! அருள்வளப்பீர்! என்று சொன்னா.
தொழில்வளர்க்கும் சங்கத்தை வைத்தார்; நாட்டின்
தொழில் வளர்த்தார், எழில்வளர்த்தார், கப்பல்ஓட்டும்
தொழிலின்றி தென்னாடு செழிக்கா தென்னும்
சித்தையினை அவர்பெற்றார், பலரைச் சேர்த்துக்
குழுவமைத்தார்; கூட்டுமுறை தன்னில், ஆளும்
கூட்டத்தார் நடுநடுங்க, கிடுகிடுக்க
முழுத்திறமை கொண்டவராய் கப்பல் தன்னை
முழங்குகின்ற கடலில் விட்டார், வெற்றிபெற்றார்;
நடுக்கடலில் கலம் செலுத்திப் புகழ்படைத்த
நாடிதற்குப் புதியபுகழ் இதனால் சேர்த்தார்!
அடுக்கடுக்காய் நாட்டவர்கள் கூடிவந்து
ஆதரவைப் பெருக்கிட்டார்; ஆனால் தேளின்
கொடுக்கைப்போல் ஆனார்கள் நாட்டை ஆண்டோர்
குமுற லுற்றார், சினமடைந்தார், எதிர்க்க லானார்;
தடுக்கின்ற சூழ்ச்சிபல் செய்தார், எந்தத்
தடைகளுக்கும் சிதம்பரனார் அஞ்சவில்லை!
ஒப்பந்தக் கப்பல்களை, நமக்கிருந்த
உறவுகளை இல்லாமல் முறிக்க வந்தார்
இப்பாரைச் சூழ்ச்சியினால் ஆட்சி செய்தோர்!
ஏராளக் கொடுமைகளைச் செய்திட்டார்கள்!
முப்புறத்துக் கடல்களையும் அழைத்து வைத்து
முழங்கலுற்றார் சிதம்பரனார்; நாட்டு மக்கள்
கப்பல்களைச் சொந்தமாக வாங்குதற்குக்
காணிக்கை - நன்கொடைகள் கொடுத்திட்டார்கள்!
ஊணில்லை, உறக்கமில்லை, உடலில் நல்ல
உடுப்பில்லை எடுப்பில்லை, கடலிலோடும்
தோணியைப்போல் அங்குமிங்கும் துன்பப்பட்டுச்
சுதேசிக்கப்பல் தன்னையிங்கு நிலைக்க வைத்தார்;
ஆண்பிள்ளை தன்வீட்டில் சாக, அங்கே
ஆறாகத் துயர்வெள்ளம் பெருகி யோட
தூணானார் சிதம்பரனார் அசைய வில்லை
கப்பலதை வாங்கும்வரை ஓய வில்லை
சிதம்பரனார் கப்பலுடன் வந்தார் மக்கள்
சிந்தையினில் மகிழ்ச்சியினைத் தந்தார், எங்கும்
இதேபேச்சு, ஊரெல்லாம் கூடிக் கூடிச்
சிதம்பரனார் பெருமையினைப் பேசி னார்கள்!
புதுவீரம் புதுப்பெருமை ! புதுவாழ் வென்று
புவிப்புலவர் கவிப்புலவர் பாரதியார்
பதித்திட்டார் மதித்திட்டார் தமது ஏட்டில்!
பாரிலுள்ள அறிஞரெல்லாம் போற்றி னார்கள்!
ஆட்சித் தரப்பினில் அதிகக் கொதிப்பு!
காட்சி புரிந்தது ! கலவரம் சூழ்ந்தது!
வஞ்சகம், சூது வளர்ந்தன; ஆள்வோர்
நெஞ்சை இழந்தனர், நஞ்சை உமிழ்ந்தனர்
கட்டணக் குறைப்பு கப்பலில் செல்ல!
மட்ட நடைமுறைத் திட்டம் வகுத்தனர்
இலவச மாகவும் கப்பலில் சென்று
உவவலாம் என்று ஊரை அழைத்தனர்;
விழித்த மக்கள் வீழ்ச்சி அடைவரா?
பலித்திட வில்லை பரங்கியர் திட்டம்!
விடுதலை ஏக்கம் வீறுகொண் டெழுந்தது!
கெடுதலை மாய்க்கும் மறச்சிந்தை முளைத்தது!
விலைமதிக்க முடியாத வ. உ. சியை
விலைபேசி முடிப்பதற்குத் திட்ட மிட்டுப்
பலஆயி ரங்கொடுக்க நெருங்கி வந்தார்
பளிச்சென்று சிதம்பரனார் முகத்தில் விட்டார்!
அலைகடலின் ஒளிமுத்தை, மாணிக் கத்தை
அறியாதோர் விலைபேச நினைத்திட்டார்கள்.
தலைகொடுக்கச் சம்மதிக்கும் வீரர்தம்மை
தரமறியார் எவ்வாறு அறியக் கூடும்?
ஊருக்கும் நாட்டுக்கும் உழைக்க வந்த
உண்மையுள்ள சிதம்பரனார், நாட்டை மீட்கும்
போருக்கும் தயாரானார்; நாட்டில் அக்கப்
போர்புரிந்த மாற்றாரைப் போர் புரிந்து
வேரோடு சாய்ப்பதற்குத் திட்டமிட்டார்;
விடுதலைக்குத் தூபமிட்டார் இந்த நாட்டின்
சீர்காக்க, சிறப்புதனைக் காக்க தன்னைச்
சீர்குலைத்துக் கொள்வதற்கே திட்டமிட்டார்
கூலியினை உயர்த்தாது, வேலை வாங்கிக்
கொடுமைசெயும். முதலாளிக் கூட்டம் தன்னை
வேலியிட்டு முழக்கங்கள் முழங்கி நெஞ்சில்
விசனத்தை உண்டாக்கிப் பணிய வைத்துக்
கூலியினை உயர்த்துதற்கும், விடுமுறைகள்
கொடுப்பதற்கும் வழிசெய்தார், தொழிலாளர்கள்
பால்வார்த்துத் தம்வாழ்வில் பலனைச் சேர்த்த
பகலவனை எழில்நிலவை வணங்கினார்கள்!
கோரலெனும் தூத்துக்குடி ஆலை தன்னில்
குறைகொண்ட தொழிலாளர் ஆர்ப்பரிக்கப்
போராட்டம் தொடங்கிற்று; நாட்டை ஆண்டோர்
புத்திகெட்டார்; முதலாளி பக்கம் சேர்ந்தார்;
சேர்ந்துவந்து சண்டையிட்டார், மக்க ளெல்லாம்
சினமடைந்து தொழிலாளர் பக்கம் சேர்ந்தார்!
நேர் நின்று சிதம்பரனார் எதிர்க்க இந்த
நிலைமாறிப் புதுநிலைமை பிறந்த தங்கே!
வெள்ளையர்கள் அந்நாளில் இரவில் தங்கள்
வீடுகளில் உறங்காமல் அஞ்சி யோடி
அல்லலுற்றார், துறைமுகத்தில் உறங்கி வந்தார்!
அச்சத்தால் பொழுதெல்லாம் செத்து வந்தார்!
எல்லையின்றிக் கொதிப்படைந்த மக்கள் தம்மை
எதிர்ப்பதற்கு வழியின்றிப் பணிந்திட் டார்கள்!
சொல்லிவந்த தொழிலாளர் குறையை, அன்றே
சுலபத்தில் தீர்த்து வைத்தார்; பிழைத்துக் கொண்டார்!
பொதுமக்கள் மதித்திருக்க, நாட்டிலுள்ள
புலவரெல்லாம் கவிஞரெல்லாம் போற்றிப் பாடப்
புதுக்கொம்பைச் சிதம்பரனார் பெற்றார் இந்தப்
புரட்சிமிகு வேளை தனில், மதுரை மண்ணில்
உதித்தவராம் சுப்பிரமணிய சிவா என்பாரை,
உதவா தார் தமையுமிங்குத் தனது பேச்சால்
கொதிக்க வைக்கும் சிங்கத்தைக் காணப்பெற்றுக்
கூட்டாக விடுதலைப்போர் புரிந்திட்டார்கள்!
வங்காள வரிவேங்கை, பொங்கி வந்த
வடகங்கை ‘விபினசந்திர பாலர்’ என்பார்
இங்காள வந்தோர்க்கு எதிரி! அன்னார்
இட்டதொரு கட்டளையை உதறலானார்!
அங்கதனால் சிறைப்பட்டார்; நாட்டு மக்கள்
அனைவருமே இதனாலே துக்கப்பட்டார்;
பொங்கியவர் வெளியில்வரும் நாளை, நாட்டில்
பொங்கல்விழா போல்நடத்தத் திட்ட மிட்டார்!
ஆறு திங்கள் பறந்தோட, சிறையின் வாசல்
அப்பாலே நகர்ந்தோட வெளியில் வந்தார்!
ஆறுஎன அருவியெனத் தெற்கு நாட்டு
ஆண்சிங்க மறவரெல்லாம் கூடி வந்தார்
ஊறு செய்தார் நாடாள்வோர், தெருவில் எந்த
ஊர்வலமும் கூட்டமதும் கூடாதென்றார்
ஏறுஎன களிறுஎன இருந்த வீரர்
இருவரையும் தனியழைத்துத் தடைகள் சொன்னார்?
நெல்லை நிலம் முழுவதுமே கூடி இந்த
நிலமதிரும் ஊர்வலத்தை நடத்த எங்கும்
எல்லையிலா உணர்ச்சியொன்றே கண்ட துண்டு!
எல்லோரும் வான்பிளக்க முழங்கிட் டார்கள்!
சொல்லாலே உலகத்தை ஆளவந்த
சொல்வேந்தர் சிவாவும் சிதம்பரனார் தாமும்
பல்லா யிரவர்கூடி இருக்க, இந்தப்
பாரினையே உலுக்கவைத்துப் பேசி னார்கள்!
ஏதங்கே ஆதிக்கம்? யாது மங்கே
எடுபட்டுப் போயிற்று! ஆட்சிக் கப்பல்
பாதித்து, வருவாய்கள் ஏதுமின்றிப்
பதைபதைத்துக் கதறியது; நமது கப்பல்
பாதையிலே வேகமுடன் பொருளை ஏற்றிப்
பலமான வருவாயில் ஓடிற் ஹங்கே!
மேதினியை ஆண்டவர்கள் அதிகாசத்தை
மேல் செலுத்தத் திட்டமிட்டார் முடிவுசெய்தார்?
இதுவரைக்கும் விட்டுவைத்தார், இதற்குப் பின்னும்
இனிமேலும் விட்டுவைக்க அவர்கள் என்ன
சதியறியாப் பிறவிகளா? இருவ ரையும்
சந்திக்க வரச்சொல்லி ஆணை யிட்டார்!
சதிதெரிந்தும் விதியதனைப் புரிந்து கொண்டும்
சிதம்பரனார் சிவாவுடனே நெல்லை சென்று
அதிகார மனைக்குள்ளே நுழைந்திட்டார்கள்!
அலறலுடன் வெளிவந்தான் ‘விஞ்சு’ என்பான்!
இசைடொழிந்து, மலர் பொழிந்து, அன்பு என்னும்
ஈடற்ற மழைபொழிந்தார் மக்கள்; ஆனால்
வசைபொழிந்தான்; நாய்பேய்கள் என்று சொல்லி
வாய்சலித்தான்; எம்மிடத்தில் ஒப்ப மின்றி
விசையுடனே நீவிரிங்குக் கூட்டம் தன்னில்
வெறுப்புரையை, மறுப்புரையை எங்கள் மீது
தசைச்சோர்வு இன்றிநித்தம் சலித்தி டாமல்
தாக்கியிங்குப் பேசியது ஏனே? என்றான்!
மடமைகொண்ட மக்களினை உங்கள் பேச்சால்
மடக்கியதும் மாற்றியதும் முறையா என்றான்;
அடிமைகொண்ட எம்மை நீ அசைக்க எண்ணல்
ஆகின்ற காரியமா? என்று கேட்டான்!
உடைமைக்கோர் கப்பல்வைத்து, அதனை யிங்கு
ஒட்டியதும் குற்றமென்றான்; இனிமேல் நீங்கள்
தொடரலுற்றால் காரியத்தை, தொலைப்பேன் என்றான்;
தொடர்ந்தாரும் எதிர்த்திட்டால் சுடுவேன்” என்றான்!
பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசலானார்
பெருமையுள்ள சிதம்பரனார்; அஞ்ச வில்லை!
“மூச்சடங்கி விடுமெனினும் கவலை இல்லை.
முழு இருட்டில் என் நாட்டைத் தள்ள மாட்டேன்;
ஏச்சுதனை நீசொரிய, அஞ்சு கின்ற
இழிபிறவி அல்லடா நான்! எனக்கு இங்குப்
பேச்சுரிமை தரவந்தோன் நீயா? என்றன்
பிறப்புரிமை தனைப்பறிக்க நீயார்? என்றார்;
என்வுளத்தை என் நாட்டில் நான் பெருக்க
எதற்காக நீகோபம் கொள்ளு கின்றாய்?
உன்நலத்தை நீபெருக்க இங்கு வந்த
உரிமையினைச் சொல்வாயா? எதற்கு வீணாய்
என்னென்ன வோபேசு கின்றாய்? உன்னை
எள்ளளவும் நான்மதிக்க வில்லை!” என்றார்!
கண்சிவந்து, வாய் துடித்து அந்த வெள்ளைக்
காரனங்கே பெருஞ்சத்தம் போட லானான்!
பொறிபறந்த கண்களொடும் நெஞ்சம் தன்னில்
புகைந்தெரியும் நெருப்போடும் அவன்குலைத்தான்!
குறிக்கோளின் நெஞ்சங்கள் கொஞ்சங் கூட
கோழைமையால் மனந்தளர வில்லை! பின்னர்
அரைநொடியும் கடத்தலன்றி, இரு வரையும்
அங்கேயே கைது செய்தான்;சிங்க மானோர்
சிறைக்குள்ளே போய்நுழைந்தார்; நாட்டில் உள்ளோர்
சினநெருப்பில் தீய்ந்திட்டார்; பாய்ந் திட்டார்கள்!
கடையடைப்பு, கல்வியகக் கதவ டைப்பு!
காணுகின்ற பக்கமெலாம் மனக்கொ திப்பு!
படைபடையாய் அணிவகுப்பு உணர்வு லங்கள்!
பாட்டாளித் தோழர்களின் கட்டுக்கோப்பு!
உடைப்பு! எங்கும் பொருளழிப்பு! அங்கிருந்த
உடைமையெலாம் பொடியுப்பு! இந்த நேரம்
மடையனவன் ஆஷ்துரையின் சுடுவி ருப்பு!
மாடலின் கொந்தளிப்பு இருந்த தங்கே!
அதற்குப்பின் சிதம்பரனார் தீர்ப்பு! ஐயோ
அதுதானோ நீதிபதி தீர்ப்பு! பாவி
இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டிட் டானோ?
எவ்வாறு அப்படியோர் தீர்ப்பைச் சொன்னான்?
சதியான சதியதுதான்; நாற்ப தாண்டு
சிறைவாழ்வு என்றிட்டான்; அந்த மானில்
விதித்திருந்தான் அத்தீர்ப்பை சட்ட ஏடும்
விம்மிவிம்மி இதைப்பார்த்து அழுத தங்கே!
தீர்ப்பிதனைக் கண்டித்துப் பேசி டாத
தேசத்தார் யாருமில்லை! பார் தியார்
ஆர்ப்பரித்தார் “இதுதீது சூது" என்று
அழுதிட்டார்; உலகத்தில் இதுவரைக்கும்
தீர்ப்பிதுபோல் கண்டதில்லை என்று சொன்னார்!
தீர்ப்பில்லை இதன்பெயரைத் ‘தீய்ப்பு’ என்றார்;
தென்னாட்டார் கண்ணீரைப் பெருக்கிட் டார்கள்!
மேலிடத்தில் இத்தீர்ப்பு செல்ல, கொஞ்சம்
மேன்மையுள்ள மனிதரங்கு இருந்த தாலே
நாலுபத்தைக் குறைத்திட்டார்; அதனை ஆறு
ஆண்டாக்கிச் சிறுகருணை புரிந்தார், அந்தக்
கோலமதை ஏன்கேட்க நினைக்கின் றீர்கள்?
கோயம்புத்தூர் வெஞ்சிறையில் பட்ட பாட்டைக்
காலமெல்லாம் சொன்னாலும் முடிந்தி டாது!
காலமக ளும்சேர்ந்து அழுதாள் அங்கே!
கூழ்குடித்தார், கூழினையே குடித்தார்; கெட்ட
கொலைகாரர் குடியிருப்பில் அடைக்கப் பட்டார்;
சீழ்வந்த தையோ அவர்மேனி யெங்கும்;
செக்கிழுத்துச் செக்கிழுத்து மாண்டா ரய்யா!
ஏழ்கடலின் துன்பங்கள் அவரை அங்கே
எதிர்த்துவந்து போர்புரிந்து கொன்ற தையோ!
பாழ்ங்கிணற்றில் துடித்திட்டார்; எனினும் நெஞ்சில்
பாரதத்தின் சுதந்திரத்தை மறக்க வில்லை!
சுப்பிரமணிய பாரதிஒப் பாரி வைத்தார்
சுட்டெடுத்த துயர்நெருப்பில் வேக லானார்!
“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?”
இப்படித்தான் பாரதியார் கேட்ட ழுதார்!
இவரைப்போல் அழாதவர்கள் எவரு மில்லை!
அப்படியிந் நாடெங்கும் அழுதிருக்க
ஆவேசங் கொண்டெழுந்த இளைஞர், நாட்டில்
எப்புறமும் சீற்றமுடன் இயங்க லானார்!
எதிர்ப்பட்ட அயலாரைப் பகைக்க லானூர்!
துப்பாக்கி யால்சுட்டுப் பலரை இங்குச்
சுடுகாட்டுப் பொடியாக்கி வாழ்ந்திருந்த
அப்பனவன் ஆஷ்துரையை, வாஞ்சி அய்யர்
அடிப்பதற்குக் காலத்தைப் பார்த்திருந்தார்!
வெப்பத்தைத் தணிப்பதற்கு, கோடைக்கானல்
விரும்பலுற்ற ஆஷ்துரையோ ரயிலில் சென்றான்!
தப்பிக்க ஏதுவழி? வாஞ்சி அய்யர்
தருணத்தைப் பயன்படுத்திச் சுட்டுக் கொன்றார்!
துரைமான, தன்னையேதான் சுட்டுக் கொண்டு
துடிதுடிக்க வாஞ்சியாரும் செத்துப் போனார்!
தரை மாந்தர் எழுச்சியையும் அவர்கள் மாற்றார்
தமைநொறுக்க, தவிடாக்க நினைத்த தையும்
ஒருமுறைதாம் நினைத்திங்குப் பார்க்க, அந்த
உணர்ச்சியுள்ள சிதம்பரனார் தெரிவார்; அன்பு
முறைவழியே அவர்நோக்கம் என்றிட்டாலும்
மூண்டெழுந்த தீயையவர் என்ன செய்வார்?
தமிழ்நாடு தந்திட்ட விடுதலைப் போர்
தங்கங்கள் பலவற்றுள், சிதம்பரம் தான்
கமழ்கின்ற மல்லிகைப்பூ!, அவர்க்கு ஈடாய்
காட்டுதற்கு இனுமொருவர் பிறக்க வில்லை!
உமிழ்கின்ற நஞ்சினிலும் அன்பைக் கண்டார்!
உயர்பண்பு ஒன்றினையே மனத்தில் கொண்டார்
தமிழ்க்கவிஞர் பாரதியும் சிவாவும் வீரத்
தலைமுறையைத் தோற்றுவிக்க நினைத்த நாளில்
சிதம்பரனார் முன்னின்றார், புதிய தான
செயல் செய்தார், எதிர்நீச்சல் கற்றி ருந்தார்!
நிதமந்த சிதம்பரனார் வீரத்தையும்
நிலம் மீட்க அவர்பட்ட பாட்டினையும்
இதமான விடுதலையின் இனிமை யையும்
எழுச்சிக்கு அவர் கொடுத்த விளக்கத் தையும்
மதித்திருப்போம்! நினைத்திருப்போம்’ மக்கள் வாழ்வு
மலர்வதற்கும் மணப்பதற்கும் தொண்டு செய்வோம்.