விந்தன் கதைகள் 2/இரு திருடர்கள்
அன்று ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்து மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் மாந்தோப்புக்குப் போய்விட வேண்டும் என்று நேற்றே சொல்லி வைத்த பீட்டரை இன்னும் காணோமே? என்ற ஏமாற்றம் இன்னொரு பக்கம் - இவையிரண்டுக்கும் இடையே தவித்தபடி, அவன் வரும் வழி மேல் விழி வைத்துக்கொண்டிருந்தான் டேவிட்.
அவனைக் காணவில்லை; காணவேயில்லை.
தன் வீட்டுக்கு நேர் எதிரேயிருந்த மாதா கோவிலின் மணிக் கூண்டைப் பார்த்தான் டேவிட், மணி இரண்டு!
காவற்காரன் சாப்பாட்டுக்குப் போயிருக்கும் சமயத்திலல்லவா அவன் கை வரிசையைக் காட்ட வேண்டுமென்று சொன்னான்? அவன்கூட இந்நேரம் திரும்பி வந்திருப்பான் போலிருக்கிறதே?
எங்கே போயிருப்பான்? - வேறு எங்கே போயிருக்கப் போகிறான்? - கடற்கரைக்குத்தான் போயிருக்க வேண்டும், காற்றாடி விட! இனி தாமதிப்பதில் பிரயோசனமில்லை -ஆம், இனி தாமதிப்பதில் பிரயோசனமே இல்லை! - இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் அவன் கடற்கரையை நோக்கி எடுத்தான் ஓட்டம்; அங்கே.....
டேவிட் நினைத்தது நினைத்தபடியே காற்றாடிதான் விட்டுக் கொண்டிருந்தான் பீட்டர்!
அதிலும் சும்மாவா? -இல்லை ; ‘டீல்' விட்டுக் கொண்டிருந்தான்!
'மாஞ்சா போடுவதில் மகா சூரனான மஸ்தான் காற்றாடியுடனல்லவா இவனுடைய காற்றாடி மோதிக்கொண்டிருக்கிறது? அவனுடைய காற்றாடியையாவது, இவனுடைய காற்றாடி அறுப்பதாவது?
நடக்காத காரியம்; அப்படியே நடப்பதாயிருந்தாலும் அதுவரை தான் இங்கே காத்திருப்பது முடியாத காரியம்!
ஓ! 'வஜ்ஜிர மாஞ்சா போட்டிருக்கிறாரா, இவர்? அதனால்தான் எதிரி எந்த மாஞ்சா போட்டிருந்தாலும் ஓரிரு முறை அறுத்தெறிந்துவிடலாம் என்ற தைரியத்தில் இவர்பாட்டுக்கு நூலை 'மடமட' வென்று விட்டுக்கொண்டே இருக்கிறார்!விடப்பா விடு; இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமலே நூலை விடு! - மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் மாந்தோப்புக்குப் போய்விடவேண்டும் என்று சொல்லி என்னை அங்கே காக்க வைத்துவிட்டு, இங்கே நீ டீலா விட்டுக் கொண்டிருக்கிறாய், டீல்?. உனக்குப் பின்னால் உருண்டோடி வரும் நூலுருண்டையை நான் அறுத்து எடுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்னை நீ என்ன செய்வாயாம்?
அதுதான் சரி; அதுதான் தன்னைக் காக்க வைத்ததற்குச் சரியான தண்டனை!
டேவிட் இப்படி நினைத்தானோ இல்லையோ, எடுத்தான் பிளேடை; அறுத்தான் உருண்டையை; பிடித்தான் ஓட்டம்!
அதே சமயத்தில் கையை விட்டுக் காற்றாடி போன ஆத்திரத்தோடு திரும்பினான் பீட்டர்; நூலுருண்டையுடன் டேவிட் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது - என்னதுணிச்சல் இந்தப் பயலுக்கு, என்னை இப்படி அவமானப் படுத்த? -அவ்வளவுதான்; ஊர்க்குருவியைப் பருந்து துரத்துவதுபோல் துரத்தினான் அவன்.
கடற்கரையில் பிடித்த ஓட்டத்தை மாந்தோப்பின் வாசலை அடைந்த பிறகு தான் நிறுத்தினான் டேவிட்.
"இப்படிக் கூடச் செய்யலாமா, நீ?" என்று பீட்டர் கையை ஓங்கினான்.
"இல்லாவிட்டால் ஒரு மணிக்கே இங்கு வந்திருக்கவேண்டிய நாம் மூன்று மணிக்காவது வந்திருப்போமா?" என்று சமாளித்தான் டேவிட்.
அவ்வளவுதான்; "நல்ல வேலை செய்தாய், நான் மறந்தே போய்விட்டேன்!" என்று தன் கோபத்தை மறந்து, பீட்டர் அவனைப் பாராட்ட ஆரம்பித்துவிட்டான்!
அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? இருவரும் ஒரே தாவில் மதிற்சுவரின்மேல் ஏறி உட்கார்ந்தனர்.
"முதலில் காவற்காரன் எங்கே இருக்கிறான் என்று பார்?" என்றான் பீட்டர், தன்னுடைய கண்ணோட்டத்தையும் தோப்புக்குள் செலுத்தியபடி.
"அதோ, அந்த மரத்தடியைப் பார்; அவன் தூங்குகிறான் போலிருக்கிறது!" என்றான் டேவிட்."ஓஹோ, சாப்பிட்ட களைப்பிலே இளைப்பாறுகிறார் போலிருக்கிறது! இளைப்பாறாட்டும், இளைப்பாறட்டும்; நன்றாக இளைப்பாறட்டும்!" என்று சொல்லிக்கொண்டே, கைக்கு எட்டிய தூரத்திலிருந்த இரண்டு மாங்காய்களைப் பறித்துக் கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு தோப்புக்குள் குதித்தான் பீட்டர்; அவனைத் தொடர்ந்து டேவிட்டும் குதித்தான்.
'என்ன சத்தம்?' என்று படுத்தபடி கேட்டுக் கொண்டே, தலையைத் தூக்கிப் பார்த்தான் காவற்காரன்.
'வந்தது ஆபத்து!' என்று நினைத்த டேவிட் ஒரே தாவாகத் தாவி மதில்மேல் ஏறப்போனான்; 'உஸ்!' என்று அவனை இழுத்து ஒருமரத்துக்குப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு, கால் சட்டைப் பைக்குள் இருந்த மாங்காய்கள் இரண்டையும் எடுத்து ஒன்றன்பின் ஒன்றாகக் காவற்காரனுக்கு முன்னால் போய் விழுமாறு உயரத் தூக்கி எறிந்தான் பீட்டர். "ஓ, மாங்காயா? விழட்டும். விழட்டும்!" என்று மீண்டும் தலையைக் கீழே போட்டுக் கண்ணையும் மூடிக்கொண்டுவிட்டான் அவன்!
"தாலேலோ, தாலேலோ!" என்று மெல்ல அவனுக்குத் தாலாட்டிக்கொண்டே டேவிட்டின் கையைப் பற்றிய வண்ணம் அடிமேல் அடி எடுத்து வைத்தான் பீட்டர். "ஒரு மணிக்கெல்லாம் வந்திருந்தால் இந்தத் தொல்லையெல்லாம் இருந்திருக்காது!" என்று டேவிட் முணுமுணுத்தான்.
பீட்டர் அதைப் பொருட்படுத்தாமல் காவற்காரனைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் வாய்க்குள் விரலை மடக்கி வைத்து ஒரு நீண்ட கீழ்க்கை அடித்தான். "என்னடா இது! உடம்பு கிடம்பு ஊறுகிறதா என்ன, உனக்கு?" என்று பதறினான் டேவிட்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை; அபாயம் நீங்கி விட்டதற்கு அறிகுறி! நீ ஏறு அந்த மரத்தின் மேல்; நான் இந்த மரத்தின்மேல் ஏறுகிறேன்!" என்றான் பீட்டர்.
ஆளுக்கு ஒரு மரத்தின்மேல் ஏறிய இருவரும் அப்படியே பல மரங்களுக்குத் தாவி, வேண்டிய மட்டும் மாங்காய்களைப் பறித்துச் சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள்.
"நாம் திருடினால் தோட்டக்காரர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று இப்பொழுதுதான் தெரிகிறது!" என்றான் பீட்டர்.
"ஏனாம்?" என்று கேட்டான் டேவிட்."திருடுவது நமக்கு லாபமாயும் அவர்களுக்கு நஷ்டமாயும் இருப்பதால்!”
"மகா புத்திசாலிடா, நீ! வாவா, சீக்கிரம் வா!"
“கொஞ்சம் பொறு, 'மாங்காய் தின்றால் பல் கூசும்' என்று நாம் படித்திருக்கிறோம், இல்லையா? அது மெய்யா, பொய்யா என்று பரீட்சித்துப் பார்த்துவிடுகிறேன்!" என்று சொல்லிக்கொண்டே பீட்டர் ஒரு மாங்காயை எடுத்துக் கடித்துப் பார்த்து விட்டு, "பொய், சுத்தப் பொய்! யாரோ ஒரு மாந்தோப்புக்குச் சொந்தக்காரன் நம்மை ஏமாற்றுவதற்காக அப்படிச் சொல்லி யிருக்கிறான்!” என்றான் 'குதி, குதி' என்று குதித்துக்கொண்டே.
"இந்தப் பரீட்சைகளையெல்லாம் வெளியே போய் வைத்துக்கொள்ளக் கூடாதாக்கும்?" என்று டேவிட் வழக்கம்போல் முணுமுணுத்தான்.
"அட பயந்தாங்கொள்ளி பெரிய மனிதர்களின் சுய சரிதைகள் எதையாவது படித்திருக்கிறாயா, நீ? அவற்றில் திருடுவதுகூட அவர்களுடைய பெருமைகளில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது!” என்றான் பீட்டர்.
"இருக்கலாம்; திருடுவதுகூடப் பெரிய மனிதர்களுக்குப் பெருமையளிப்பதாயிருக்கலாம். நாமெல்லாம் சிறிய மனிதர்கள்தானே? நீ வா, சீக்கிரம்!" என்று டேவிட் அவனை அவசரப்படுத்தினான்.
இந்தச்சமயத்தில், 'ஆங், ஆங்!' என்ற ஹாரன் ஒலி எங்கிருந்தோ கேட்கவே, இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். மூடியிருந்த அந்தத் தோப்பின் கேட்டருகே ஒரு கார் வந்து நின்று காவற்காரனை அழைத்துக் கொண்டிருந்தது. ‘கேட்'டைத் திறப்பதற்காக!
அதைப் பார்த்தானோ இல்லையோ, "நான் செத்தேன்!” என்று அலறினான் டேவிட்.
சட்டென்று அவனைத் தொட்டுப்பார்த்துவிட்டு, "இல்லை; நீ இன்னும் சாகவில்லை!" என்று பீட்டர் அவனைத் தேற்றினான்
அதற்குள் தூக்கம் கலைந்து எழுந்துவிட்ட காவற்காரன் அவசர அவசரமாகக் 'கேட்'டைத் திறந்துவிட்டு, "திருட்டுப் பயல்களா, அகப்பட்டுக் கொண்டீர்களா?" என்று கத்திக்கொண்டே அவர்களை நோக்கித் திரும்பினான்."பார்த்து ஒடிவா, தாத்தா! ஏதாவது தடுக்கிக்கிடுக்கி விழுந்துடப் போறே!" என்று அவனை எச்சரித்துக்கொண்டே பீட்டரும் திரும்பினான்-ஆனால் என்ன ஆச்சரியம், டேவிட்டைக் காணோம்!
அட பாவி! நீ எங்கே போய்விட்டாய்?-சுற்று முற்றும் பார்த்தான் பீட்டர்-காணோம்; காணவே காணோம்!
'இனிமேல் இங்கிருந்தால் ஆபத்து!’ என்பதை உணர்ந்த பீட்டர் ஓடினான். ஆனால்........
அவன் எச்சரித்ததுபோல் காவற்காரன் தடுக்கி விழவில்லை.அவனே தடுக்கி விழுந்துவிட்டான்!
அதுதான் சமயமென்று காவற்காரன் அவனைத் தூக்கி நிறுத்தி மரத்தோடு மரமாகச் சேர்த்துக் கட்டப் போனபோது, “டேடேடேய்! இருடா, இருடா!" என்று கத்திக்கொண்டே காரை விட்டு இறங்கி, அவசர அவசரமாக ஓடி வந்தார் மாந்தோப்பின் முதலாளி மாணிக்கவாசகம்.
"ஏன், பேசாமல் இவனைப் போலீஸில் ஒப்படைத்துவிடலாம் என்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே திரும்பினான் காவற்காரன்.
"போடா, முட்டாள்! தம்பியைத் தெரியவில்லையா, உனக்கு? நமது கலெக்டர் ஐயாவின் மகன்டா, நமது கலெக்டர் ஐயாவின் மகன்!”
"சரிதான், நான் அப்பொழுதே நினைத்தேன்....... "
“என்ன நினைத்தாய்?"
"தம்பி திருடியிருக்காது-தம்பியோடு ஒரு பிச்சைக்காரப் பயல் வந்திருந்தானே, அவன்தான் திருடியிருப்பான் என்று!"
"யார் அந்தப் பிச்சைக்காரப் பயல்?”
“பியூன் பெர்னாண்டோ இல்லை, அவன் மகன்"
"யார் அந்தப் பியூன் பெர்னாண்டோ?-கலெக்டர் ஆபீசுக்குப் போகும்போதெல்லாம் கழுத்தைச் சொறிந்து கொண்டு வந்து நிற்பானே, அவனா?"
"ஆமாம், அவனேதான்!" என்றான் காவற்காரன்.
"அந்த மாதிரிப் பயல்களோடெல்லாம் நீ சேரக் கூடாது, தம்பி! நிசமாச் சொல்லு, அவன்தானே இந்த மாங்காயைத் திருடி உன்னிடம் கொடுத்தான்?" என்று அவனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்டார் மாணிக்கவாசகம்.
"இல்லை; நானேதான் திருடினேன்!" என்றான் பீட்டர், பொய் சொல்லத் தெரியாமல்!
"எனக்குத் தெரியும் தம்பி, எனக்குத் தெரியும்; 'நண்பனைக் காட்டிக் கொடுக்கக் கூடாது' என்பதற்காக நீ பொய் சொல்கிறாய்!-அப்படித்தானே?" என்றார் அவர், மேலும் சிரித்துக்கொண்டே.
"இல்லை; நான் பொய் சொல்லவில்லை!" என்றான் அவன் மீண்டும்.
"தம்பியின் வாய் 'பொய் சொல்லவில்லை' என்றும் சொன்னாலும் முகம் 'பொய்தான் சொல்கிறேன்' என்று சொல்லாமல் சொல்கிறதே!" என்றான் காவற்காரன், எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவன்போல.
"இந்தமாதிரிப் பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கெடுக்கும் அந்தத் திருட்டுப் பயல் மட்டும் கிடைத்திருந்தால் அவனை நான் என்ன செய்திருப்பேன் தெரியுமா? இங்கே கட்டி வைத்து அடிப்பதோடு, போலீஸாரிடமும் ஒப்படைத்திருப்பேன்!"
"கிடைக்காமலா போய்விடப் போகிறான்? இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கிடைக்காமலா போய்விடப் போகிறான்?"
"அந்தத் தறுதலையை விட்டுவிட்டு நீ இந்தத் தம்பியை அவமானப் படுத்தலாமா?-கேள்; தம்பியிடம் மன்னிப்புக் கேள்!" என்றார் மாணிக்கவாசகம்.
"ஏதோ தெரியாமல் செய்துவிட்டேன்; என்னை மன்னித்துவிடு, தம்பி!" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான் காவற்காரன்.
பீட்டர் தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பி வைத்துக்கொண்டு, "காதில் விழவில்லை!" என்றான் குறுநகையுடன்.
"ஏது, தம்பி பொல்லாத தம்பியாயிருக்கும் போலிருக்கிறதே?" என்று காவற்காரன் மீண்டும் ஒரு முறை அவன் 'காதில் விழும்படி’ தன் கன்னத்தில் 'பட், பட்' என்று போட்டுக்கொண்டான்!"சரி, மன்னித்தேன்!" என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி, கையை நீட்டி அவனை ஆசீர்வதித்தான் பீட்டர்!
"பாவம், பிழைத்துப் போகட்டும்; அவனைப் பற்றி அப்பாவிடம் ஒன்றும் சொல்லிவிடாதே!-உனக்கு மாங்காய் என்றால் ரொம்பப் பிடிக்குமா? இப்படி வந்து உட்கார்; இப்பொழுதே இரண்டு கூடைநிறைய மாங்காய் பறித்துத்தரச்சொல்கிறேன்!” என்று அவனை உட்கார வைத்துவிட்டு, காவற்காரனை ஏவினார் மாணிக்கவாசகம்.
அடுத்த அரை மணி நேரத்துக்கெல்லாம் நிறைந்துவிட்ட இரண்டு கூடை மாங்காய்களை எடுத்துக்கொண்டு போய்க் காரில் வைத்துவிட்டு வந்தான் காவற்காரன்.
"ஏ, டிரைவர்! தம்பியையும் காரில் ஏற்றிக் கொண்டு போய்க் கலெக்டர் ஐயாவின் வீட்டிலே விட்டுவிட்டு வா; என்னுடைய வணக்கத்தையும் நான் அவருக்குத் தெரிவித்துக் கொண்டதாகச் சொல்லு!" என்றார் மாணிக்கவாசகம்.
அவ்வளவுதான்; கார் பீட்டருடன் பறந்தது!
வழியிலிருந்து ஒரு தேநீர்க் கடைக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு, "தம்பி, ஒரு நிமிஷம் காரிலேயே உட்கார்ந்திருக்கிறாயா? நான் போய் ஒரு 'டீ'அடித்து விட்டு வந்துவிடுகிறேன்!” என்றான் டிரைவர்.
அவன் எப்போதுமே டீ குடிப்பதில்லை; அடிப்பதுதான் வழக்கம்!
"சரி, போய் வா!" என்றான் பீட்டர்.
இந்தச் சமயத்தில் எங்கிருந்தோ வந்த டேவிட், "ஏண்டா, பீட்டர் இதெல்லாம் என்ன?" என்று கேட்டான் வியப்புடன்.
"வெகுமதி; திருடனுக்கு வெகுமதி!" என்று தன் தோள்கள் இரண்டையும் ஒரு குலுக்குக் குலுக்கிக் காட்டினான் பீட்டர்.
"அடாடா தானும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால் இந்த வெகுமதி தனக்கும் கிடைத்திருக்குமே?" என்று நினைத்தான் டேவிட்!
அந்தஸ்தைப் பற்றி அறியாத அந்த அசட்டுப் பயலுக்கு என்ன கிடைத்திருக்கும் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதானே?