உள்ளடக்கத்துக்குச் செல்

விந்தன் கதைகள் 2/கொண்டு வா, நாயை

விக்கிமூலம் இலிருந்து
கொண்டு வா, நாயை!


ன்று என்னவோ தெரியவில்லை; கம்பெனிக்கு வந்ததும் வராததுமாயிருக்கும்போதே, "கொண்டு வா, நாயை!" என்று என்னை நோக்கி இரைந்து விட்டு, மடமடவென்று மாடிக்குப் போனார் முதலாளி.

முதலாளி என்றால், முதல் உள்ள முதலாளி இல்லை ; முதல் இல்லாத முதலாளி!

'முதல் இல்லாத முதலாளியும் இந்த உலகத்தில் உண்டா?' என்று நீங்கள் மூக்கின்மேல் விரலை வைக்காதீர்கள் உண்டு; வேறு எந்த உலகத்தில் இல்லா விட்டாலும் எங்கள் சினிமா உலகத்தில் நிச்சயம் உண்டு!

ஆனால், இந்த 'முதலாளி' என்ற 'பட்டம்' இருக்கிறதே, அது மற்ற முதலாளிகளுக்குப் பொருந்துவதை விட, எங்கள் முதலாளிகளுக்குத் தான் ரொம்ப ரொம்பப் பொருந்தும். எப்படி என்று கேட்கிறீர்களா?- சொல்கிறேன் - முதலாளி என்ற பெயர் முதல் போடுபவரைக் குறிக்கவில்லை; முதலை ஆளுபவரைத்தான் குறிக்கிறது. எனவே, முதல் போடுபவர் ஒருவராயும், அந்த முதலை ஆளுபவர் இன்னொருவராயும் உள்ள எங்கள் 'சினிமா உலக'த்தில் முதலாளி என்ற பெயர் எங்களுடைய முதலாளிகளுக்குத்தானே கன கச்சிதமாகப் பொருந்துகிறது?

அத்தகு பெருமை வாய்ந்த முதலாளி தானே அன்றொரு நாள் இங்கிருந்த நாயை கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு வரச் சொன்னார்? இன்று அந்த நாய் இங்கே எதற்காம்?- என்னைக் கேட்டால் அது இங்கேயே இருந்திருக்கலாம் என்பேன்; அங்கே கொண்டு போய் விடுவதற்கு அப்படி என்ன தவறு செய்து விட்டது அது?

ஒன்றுமில்லை; அன்றிரவு பத்து மணிக்கு மேல் யாரோ ஓர் அம்மாள் அவரைத் தேடிக்கொண்டு வந்தார்களாம். 'அம்மாள்' என்றதும் 'வயது நாற்பதுக்கு மேலிருக்கும் போலிருக்கிறது!' என்று நீங்கள் 'குத்து மதிப்புப் போட்டு விடாதீர்கள்; தமக்கு வயது அறுபதானாலும் தம்மைத் தேடிவரும் பெண்களுக்குப் பதினாறு வயதுக்குமேல் போகக்கூடாது என்பது என் முதலாளியின் குறிக்கோள் - மனிதன் என்று ஒருவன் பிறந்து விட்டால் 'குறிக்கோள்' என்று ஏதாவது ஒன்று இருக்கவேண்டுமல்லவா? அந்தக் குறிக்கோள் அதுவாயிருந்தது, அவருக்கு! - அத்தகைய 'லட்சிய வாதியின் ஆணைப்படி, அன்றிரவும் மணி பத்து என்று தெரிந்ததும் ஆபீஸ் பையன் வழக்கம்போல் அந்த நாயை அவிழ்த்து விட்டுவிட்டு, அணைக்க வேண்டிய விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு, அவ்வப்போது தம்மை எதிர்க்கும் மனச்சாட்சியைக் கொல்வதற்காக ஐயா அருந்தும் போதை அவருடைய மண்டைக்கு ஏறிவிட்டதா என்று அப்படியே ஒரு பார்வையும் பார்த்துவிட்டு, வீட்டுக்குப் போய் விட்டிருக்கிறான். படுக்க அவன் போன பிறகு அந்தப் 'பத்தினிப் பெண்' வந்திருக்கிறாள்; நாய் குரைத்திருக்கிறது - குரைக்காமல் என்ன செய்யும்?-அன்னியர் யாராவது அகாலத்தில் வந்தால் குரைப்பது அதன் கடமை; அந்தக் கடமையைத் தயவு தாட்சண்யமின்றி அது நிறைவேற்றியிருக்கிறது. மனிதனா, ஆளுக்குத் தகுந்தாற்போல் வேஷம் போட? அதுதான் நாயாச்சே, வேஷம் போட முடியவில்லை அதனால்! எனவே, குரைத்திருக்கிறது. பழம்பெரும் இலக்கியங்களிலும், புராண இதிகாசங்களிலும் ஒரு பெண்ணுக்கு என்னென்னவோ இருக்க வேண்டுமென்று சொல்கிறார்களே, அதெல்லாம் ஒன்றுமில்லாத அந்தப் பெண்மணி-அவற்றுக்கெல்லாம் அஞ்சாத அந்தக் கண்மணி-கேவலம், அந்த நாயின் குரைப்புக்கு அஞ்சி வந்த வழியே திரும்பி விட்டிருக்கிறாள். போதை தெளிந்தபின் ஐயா எழுந்து, அந்த 'எதிர்கால நட்ச’த்திரத்தைத் தேடியிருக்கிறார். அது அங்கே இல்லை - என்ன ஏமாற்றம், எப்படிப்பட்ட ஏமாற்றம்- “டிரைவர்! டிரைவர்!” என்று மேலே இருந்தபடியே கத்தியிருக்கிறார். அவனோ ‘சகவாச தோஷ'த்தின் காரணமாகத் தன் சக்திக்கு ஏற்றாற்போல் கள்ளச் சாராய'த்தை ஒரு கை பார்த்துவிட்டு, தேடிக்கொண்டு போய்விட்டிருக்கிறான், வெளியே!-என்ன செய்வார், முதலாளி? அளவு கடந்த ஆத்திரத்துடன் கீழே வந்து காரைத் தாமே எடுத்திருக்கிறார்; பெட்ரோல் இல்லை - 'முட்டாள்! வரட்டும் அவன், முதல் வேலையாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு மறு வேலை பார்க்கிறேன்!' என்று கருவிக்கொண்டே போய்ப் படுத்திருக்கிறார்!தூக்கம் வருமா?-வரவில்லை!

அவ்வளவுதான்; அடுத்த நாள் வந்தது ஆபத்து! - டிரைவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டான்; நாயும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டது!

ஆம், யாருக்கு என்ன வேண்டுமானாலும் இடையூறாயிருக்கலாம்; மழை தேடி வரும் பெண்களுக்கு மட்டும் ஒரு சிறு துரும்புகூட இடையூறாயிருக்கக் கூடாது என்பது அவருடைய சித்தாந்தம் - 'அப்படி என்னதான் இருக்கும் அந்தப் பெண்களிடம்?' என்று என்னைக் கேட்கிறீர்களா? -அது எனக்குத் தெரியாது ஐயா, நிச்சயமாகத் தெரியாது!

டிரைவருக்குப் பதிலாக வேறொரு டிரைவரை நியமித்த முதலாளி, நாய்க்குப் பதிலாக வேறொரு நாயை நியமிக்கவில்லை - எப்படி நியமிக்க முடியும்? - மனிதனென்றால் அவனுக்கென்று தனிக் குணம் எதுவும் இல்லை; எப்படி வேண்டுமானாலும் குணம் மாறவும், கூடு விட்டுக் கூடு பாயவும் அவனால் முடியும், நாயால் முடியுமா? -அது தனக்கென்று ஒரு தனிக் குணம் வைத்துக் கொண்டிருக்கிறதே?

ஆகவே நாய்க்குப் பதிலாக ‘அந்தரங்கக் காரிய தரிசி' என்று ஒருவரை அன்றே நியமித்துவிட்டார், அவர்!

'அந்தரங்கக் காரியதரிசி' என்றால் அப்படி இப்படி அந்தரங்கக் காரியதரிசி இல்லை -முதலாளிக்கு 'ஏர்-கண்டிஷன் ரூம்' என்றால் அவருக்கும் ஏர்-கண்டிஷன் ரூம்; முதலாளிக்கு 'ஹெராட்' கார் என்றால் அவருக்கும் ஹெராட் கார்; அவருக்கும் தனி டெலிபோன் - இப்படியாகத்தானே அந்தரங்கக் காரியதரிசியின் அந்தஸ்தை உயர்த்தி, அதன் மூலம் தம்முடைய அந்தஸ்தையும் திடீரென்று உயர்த்திக்கொண்டு விட்டார், முதலாளி.

அவர்தான் என்ன செய்வார், பாவம்!- வேறு எந்த விதத்திலும் தம்முடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முடியாமல் இருக்கும்போது?

அன்றிலிருந்து யார் வந்தாலும் சரி - முதலில் அந்தரங்கக் காரியதரிசியைத்தான் பார்க்க வேண்டும், அவர் வடிகட்டி விட்ட பிறகே வந்தவர்கள் முதலாளியைப் பார்க்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று.

இதனால் தமக்கு வேண்டியவர்கள் மட்டுமே தம்மைச் சந்திக்கவும், வேண்டாதவர்கள் சந்திக்க முடியாமல் திரும்பி, 'அடேயப்பா! அவரைப் பார்ப்பதென்றால் அவ்வளவு லேசா? கடவுளைப் பார்த்தாலும் பார்த்துவிடலாம்; அவரைப் பார்க்கவே முடியாது போலிருக்கிறதே?' என்று தமக்காகக் கடவுளைக்கூட ஒரு படி கீழே இறக்கி விட்டுவிடவும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு!

கிடைக்கட்டும்; வேண்டாமென்று சொல்லவில்லை. அதற்காக, "கொண்டு வா, நாயை!" என்று திடீரென்று சொன்னால், எங்கிருந்து கொண்டு வருவேன்?

வீட்டுக்குப் போய்க் கொண்டு எப்படிக் கொண்டு வருவது? என்றும் அவருடைய வீடு என்ன, பக்கத்திலா இருக்கிறது?

அந்தரங்கக் காரியதரிசி விரும்பினால் வெளிக்குப் போய்விட்டு வரக்கூடக் கார் கிடைக்கும்; எனக்குக் கிடைக்குமா? - நாயைக் கொண்டு வரத்தான்!

அதிலும் பாருங்கள், என்னுடைய வேலையோ கணக்கெழுதும் வேலை-கணக்கு எழுதும் வேலை என்றால் சாதாரணக் கணக்கு எழுதும் வேலையா? - அதுவும் இல்லை ; வராத வரவுக்கும், செய்யாத செலவுக்குமல்லவா நான் கணக்கு எழுத வேண்டியிருக்கிறது?

எனவே, கணக்குக்கும் எனக்கும் வேண்டுமானால் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்; நாய்க்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

‘முன்னாள் காரியதரிசி'யான அந்த நாயை, 'இந்நாள் காரியதரிசி'யான அவர் வேண்டுமானாலும் கொண்டுவரட்டுமே!

இப்படி நினைத்த நான், அந்தரங்கக் காரியதரிசியின் அறையை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தேன்; அவரைக் காணவில்லை!

முதலாளி வருவதற்கு முன்னால் வந்து விடுபவராயிற்றே அவர்? இன்று ஏன் அவர் வந்தபிறகும் வரவில்லை ?

ஒன்றும் புரியவில்லை எனக்கு; முகத்தில் கேள்விக் குறியுடன் திரும்பினேன்.

ஆபீஸ் பையன், "உங்களுக்குத் தெரியாதா?" என் வாயெல்லாம் பல்லாக,

"தெரியாதே!" என்று ஒரு கைக்கு இரண்டு கைகளாக விரித்தேன், நான்.

"இவ்வளவுதானா நீங்கள். நேற்றிரவு, 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற பெருநோக்கோடு, முன்பின் தெரியாத யாரோ ஒரு 'புது முகத்தை' முதலாளியிடம் அனுப்பியிருக்கிறார் ஒருவர். அந்தரங்கக் காரியதரிசியிடம் வந்து, 'முதலாளியைப் பார்க்க வேண்டும்' என்று சொல்லியிருக்கிறாள். அவளைப் பார்த்த அந்தரங்கக் காரியதரிசிக்கு அந்த நேரத்தில் எப்படி இருந்ததோ என்னவோ, 'நான் தான் முதலாளி!' என்று சொல்லி, அவளை அகலிகையாகவும் தன்னை இந்திரனாகவும் பாவித்துக் கொண்டு, அந்த 'இந்திரன் செய்த வேலை’யையும் செய்து விட்டிருக்கிறார்;

முதலாளிக்கு இது எப்படியோ தெரிந்துவிட்டது என்ற செய்தி மறுநாள் காலை அந்தரங்கக் காரியதரிசியின் காதுக்கு எட்டி யிருக்கிறது. அவ்வளவுதான்; ஆபீசுக்குப் போனால் ஆபத்து என்று வீட்டிலிருந்தபடியே தம்முடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டிருக்கிறார்!"

"அப்படியா சங்கதி? -இப்பொழுதுதான் தெரிகிறது, 'கொண்டு வா, நாயை!' என்று அவர் ஏன் வந்ததும் வராததுமாயிருக்கும் போதே அப்படி இரைந்தார் என்று?-சரி; கொண்டு வருகிறேன் ஐயா, அந்த நாயை நானே கொண்டு வருகிறேன்!" என்று நான் நடந்தேன், 'கழுதைக்கு வாழ்க்கைப் பட்டபின் உதைக்கு அஞ்சிப் பயனில்லை!' என்று .

"அந்தரங்கக் காரியதரிசியைவிட அல்சேஷியன் நாயே மேல் என்று இப்பொழுதாவது தெரிந்ததே முதலாளிக்கு, அதைச் சொல்லுங்கள்!" என்றான் ஆபீஸ் பையன்.