விந்தன் கதைகள் 2/செய்ததும் செய்வதும்

விக்கிமூலம் இலிருந்து
செய்ததும் செய்வதும்

னக்கு உலகம் தெரிந்த நாளிலிருந்தே அவன் அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் - அவன் என்றால் அது அருணாசலத்தைக் குறிக்கும்; அவர் என்றால் அது பாங்கர் வேங்கடாசலபதியைக் குறிக்கும்.

பாங்கர் வேங்கடாசலபதியின் பங்களாவுக்குப் பக்கத்தில்தான் அருணாசலத்தின் பன்றிக் குடிசை இருந்தது - ஆம், பன்றிக் குடிசைதான் - யாரோ பன்றி வளர்ப்பதற்காகப் போட்டு வைத்திருந்த குடிசையை அவர்கள் ஐம்பது ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்கள் - ஐம்பது ரூபாய் என்றால் அவர்களுக்கு லேசா? - அதற்காக நம் மத்திய சர்க்காரைப் பின் பற்றி அவர்கள் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் அல்லவா வகுக்க வேண்டியிருந்தது!

இத்தனைக்கும் அந்த வீட்டில் வருவாய்க்கு வழி தேடுவோர் ஒருவர் அல்லர்; மூவர்! - மூவர் என்றால் அருணாசலத்தின் தாயையும் தந்தையையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் - தந்தை தணிகாசலத்துக்குத் தோட்ட வேலை; தாய் வள்ளியம்மைக்கு வீடு கூட்டும் வேலை; மகன் அருணாசலத்துக்கோ கொல்லன் பட்டறையில் துருத்தி ஊதும் வேலை!- 'அதற்குள் அவனும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டானா? என்ன வயதிருக்கும்?' என்று கேட்கிறீர்களா?-யார் கண்டார்கள்? - அவனுக்கென்ன, பிறந்த நாள் விழாவா கொண்டாடப்போகிறார்கள்-ஜன்ம நட்சத்திரம், ஜாதகம் எல்லாம் கணித்து வைக்க?- அதிலும், அஷ்ட திக்குப் பாலகர்களில் ஒருவனாய் அவன் அந்த வீட்டில் அவதரித்திருக்கும்போது, அவனுடைய பிறந்த நாள் அவன் பெற்றோருக்கு ஒரு நல்ல நாள்தானே?

அஷ்ட திக்குப் பாலகர்கள் என்றால், அவனுடன் பிறந்த மற்ற எழுவரின் கதி?-யாருக்குத் தெரியும், 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்ற நம்பிக்கையில் அவர்களைப் பெற்றவர்களே அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது?

கடைசி கடைசியாகத்தான் அருணாசலம் பிறந்தானாம். அவனுக்கு வயது என்ன என்று கேட்டால், அவன் அம்மா சொல்வாள்-'இந்த மாமாங்கம் வந்தால் பன்னிரண்டு' என்று!- அதாவது, சென்ற மாமாங்கத்தின்போது அவன் பிறந்தானாம் - போதாதா, ஜாதகம்?

ஒரு நாள் அவனை நான் கேட்டேன்- "உன்னைப் போன்றவர்களை எப்படியாவது படிக்க வைத்துவிடவேண்டும் என்பதற்காகப் பள்ளிக்கூடத்துக்கு மேல் பள்ளிக்கூடம், சம்பளச் சலுகை, ஒரு வேளை ஓசிச் சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்து வருகிறார்களே நீ படிக்கக்கூடாதா?" என்று.

"நான் படிக்கத் தயார்தான் ஸார், ஏன்னா, என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சேர்த்துச் சாப்பாடு போட்டால்!" என்றான் அவன்.

"அவர்களுக்கு நீயாசாப்பாடு போடுகிறாய்?"

"நான் ஒரு வேளை அவர்களுக்குப் போட்டால், அவர்கள் ஒரு வேளை எனக்குப் போடுகிறார்கள்!"

அதற்கு மேல் அவனை நான் ஒன்றும் கேட்கவில்லை - என்ன கேட்பது, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குள்ள ஒரே பிரச்னை சோற்றுப் பிரச்னையாயிருக்கும்போது?

வெளிக்குப் போகும் வேலையைக்கூடப் படுக்கையறைக்குப் பக்கத்திலேயே 'நாகரிக'மாகச் செய்து கொண்டிருந்த பாங்கர் வேங்கடாசலபதி, அருணாசலத்துக்கு ஒரு பெரும் புதிராயிருந்து வந்தார். அவருடைய அறைக்கு நேர் எதிரே அவன் வேலை செய்யும் பட்டறையும் இருந்ததால், துருத்தியை மிதித்தபடி அவன் அவரையே பார்க்கப் பார்க்க அவருடைய பிறவியே 'அதிசயப் பிறவி'யாகத் தோன்றும் அவனுக்கு. குளிர்சாதன அறை குளுகுளுக்க, பட்டு மெத்தை பளபளக்க, மின் விசிறி சிலுசிலுக்க, அத்தர் மணம் கமகமக்க அவர் தூங்கும் அழகையும், பொழுது விடிவதற்கு முன்னால் அழகி ஒருத்தி அரிதுயில் களைந்து, எழில் மிகு வீணயை எடுத்து மீட்டி பூபாளம் வாசிப்பதையும், அவளுக்கு அடுத்தாற் போல் கையில் டூத் பேஸ்ட் - பிரஷ்ஷுடன் ஒருவன், துண்டுடன் ஒருவன், காபியுடன் ஒருவன் பறந்து வந்த வந்த அறையைச் சூழ்ந்து கொண்டு நிற்பதையும், அவர் எழுந்து வாயைத் திறப்பதற்கு முன்னால் அத்தனை பேரும் ஓடோடியும் வந்து, 'என்ன, என்ன?' என்று கண்ணால் கேட்பதையும், "ஒன்றுமில்லை, கொட்டாவி விடத்தான் வாயைத் திறந்தேன்!" என்று அவர் திருவாய் மலர்ந்தபின் அவர்கள் ஒதுங்கி நிற்பதையும் பார்க்கும்போது - கிழிந்த ஓலைப் பாய் கிலுகிலுக்க, தலைக்கு அணையாக வைத்துக்கொண்டிருந்த கை வெலவெலக்க, ஆயிரமாயிரம் மூட்டைப் பூச்சிகள் தனக்காக இரவு பூராவும் கண்விழித்திருந்து, தன்னுடன் 'கிச்சு, சிச்சு' மூட்டி விளையாட, சுவர்க்கோழி 'சொய்ங் சொய்ங்' என்று சுருதி கூட்ட, கொசுக்கள் 'நொய்ங், நொய்ங்' என்று நீலாம்பரி வாசிக்க, தான் தூங்கும் அழகும், பொழுது விடிவதற்கு முன்னால் காகமோ, கர்த்தபமோ வந்து தன் வீட்டருகே கத்துவதும், ‘நல்ல சகுனம்' என்று நினைத்துக் கொண்டே தான் எழுந்திருப்பதும், வெளிக்குச் செல்ல ஆற்றங்கரையைத் தேடி 'அநாகரிக'மாக ஓடுவதும், பல்லைத் தேய்க்க வேப்பங் குச்சியை நாடுவதும், பழைய சோற்றுப் பானையைத் திறந்தால், ராத்திரிதான் எங்கிருந்தோ ஒரு விருந்தாளி வந்து தொலைந்தானே, உனக்கு ஏது பழையது. என்று கேட்பது போல அது தன்னைப் பார்த்து வாயைப் பிளப்பதும் ஞாபகத்துக்கு வரும்? அது மட்டுமா? தன்னுடைய உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால் சுக்குக் கஷாயத்தோடு சரி; அந்த அபூர்வ மனிதரின் உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டாலோ உள்ளுர் டாக்டர்கள், உள்ளூர் ஆஸ்பத்திரிகளைக்கூட அவர் சீந்துவதில்லை; அமெரிக்காவுக்கும் ஸ்விட்ஜர்லாந்துக்கும் பறக்கிறார்! - இப்படியெல்லாம் இருக்க, வாழ, அவரால் எப்படி முடிகிறது? அதற்காக அவர் என்ன செய்கிறார்? என்னதான் செய்கிறார்.

இந்தக் கேள்வி அவனுடைய உள்ளத்திலிருந்து இன்று நேற்று எழவில்லை; அவனுக்கு உலகம் தெரிந்த நாளிலிருந்தே எழுந்துவிட்டது.

இத்தனைக்கும் அவர் கால் வலிக்கத் துருத்தி ஊதுகிறாரா? கை வலிக்க எதிர் முட்டி அடிக்கிறாரா? உலைக்களத்தில் வேகும் இரும்போடு இரும்பாக வேகிறாரா? உடம்பெல்லாம் கரியைப் பூசிக்கொண்டு, குளிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல் வியர்வையாலேயே அதைத் துடைத்துக் கொள்கிறரா?- இல்லையே?

அவருடைய தகப்பனார் தோட்ட வேலைக்குப் போகிறரா? தாயார் வீடு கூட்டப் போகிறாளா?-இல்லையே?

இவையொன்றும் இல்லையென்றால் அவர் இப்படி யெல்லாம் இருக்க, வாழ என்ன செய்தார்? என்னதான் செய்தார்?

இந்தப் புதிரை- ரகசியத்தைத் தெரிந்து கொள்ளவில்லையென்றால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது அவனுக்கு. ஒரு நாள் அவருடைய வீட்டு வேலைக்காரர்களில் ஒருவனை நெருங்கினான்; விஷயத்தை வினயத்தோடு தெரிவித்தான்.

அவனோ கடகடவென்று சிரித்து விட்டு, "அவசியம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா?" என்று கேட்டான்.

'ஆமாம்' என்பதற்கு அடையளமாகத் தலையை ஆட்டினான் அருணாசலம்.

"சரி, தெரிந்துகொள் - பாங்கர் பஞ்சாபகேசனுக்கு அவர் பிள்ளையாய்ப் பிறந்தார்!"

"இவ்வளவுதானா அவர் செய்தது? என்றான் அவன் வியப்புடன்.

"ஆம் தம்பி, ஆம்; அந்த அதிசய மனிதர் செய்ததெல்லாம் அவ்வளவேதான்!"

"செய்தது சரி; செய்வது?" என்றான் அவன் மேலும் வியப்புடன்.

"இன்னொரு பாங்கரைப் பெற்றெடுக்கும் வேலை!"

"அதைத் தவிர வேறொரு வேலையும் செய்வதில்லையா, அவர்?"

"இல்லை; இல்லவே இல்லை!"

"அதிசயம்; அதிசயத்திலும் அதிசயம்!" என்று கை கொட்டிச் சிரித்தான் அருணாசலம்.

"சிரிதம்பி, சிரி கண்ணீருடன் சிரிப்பும் கலந்தால்தான் கவலை இன்னும் கொஞ்ச நாட்களாவது நம்மை இந்த உலகத்தில் வாழ விட்டு வைக்கும்!" என்றான் அவன், பெருமூச்சுடன்.