உள்ளடக்கத்துக்குச் செல்

விந்தன் கதைகள் 2/கவிஞர் ஒன்பாற் சுவையார்

விக்கிமூலம் இலிருந்து
கவிஞர் ஒன்பாற் சுவையார்

விஞர் ஒன்பாற் சுவையாரை உங்களுக்குத் தெரியுமோ? அபசாரம், அபசாரம்/- "ஞாயிற்றை ஞாலத்துக்கு அறிமுகப் படுத்துவார் உண்டோ, உண்டோ?" என் அன்னார், என்னை ஆயிரமாயிரம் முறை இடித்துரைத்திருந்தும், அத்தகு பெரியாரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தத் துணிந்தேனே, என்னே என் அறியாமை! என்னே என் அறியாமை!

இந்த அறியாமை காரணமாக அன்னாரிடம் ஓர் ஐயப்பாட்டைக் கடாவி, நான் பட்ட பாடு -அப்பப்பா! கொடிது, கொடிது! கவிஞர் பெருமானின் சீற்றம் கொடிது, கொடிது!

இத்தனைக்கும் தான் அப்படியொன்றும் கேட்டு விடவில்லை. "ஆனானப்பட்ட கம்பனேதன்னைத்தானே 'கவிஞன்' என்று அழைத்துக் கொள்ளாத போது, நீங்கள் ஏன் உங்களை நீங்களே 'கவிஞர்' என்று அழைத்துக் கொள்கிறீர்கள்?" என்றுதான் கேட்டேன் அவ்வளவுதான்; "பாலர் பாடம் படித்திருக்கிறீரா? இல்லை, நீர் பாலர் பாடமாவது படித்திருக்கிறீரா என்று கேட்கிறேன்!" என்று அவன் என்மேல் சீறிப் பாய ஆரம்பித்துவிட்டார். "அதில் என்ன தெரிய வேண்டும். உங்களுக்கு? தெரியாவிட்டால் கேளுங்கள், சொல்கிறேன்!" என்றேன் நான், அடக்க ஒடுக்கமாக.

"நன்று; நவிலும்? 'அ' என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?"

"அணிலின் படம் போட்டிருக்கிறது."

"அதற்குக் கீழே?"

"அணில் என்று எழுத்தில் போட்டிருக்கிறது!"

"நன்று; 'ஆ' என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?"

"ஆட்டின் படம் போட்டிருக்கிறது!"

"அதற்குக் கீழே?"

"'ஆடு' என்று எழுத்தால் போட்டிருக்கிறது"

"அணிலையும் ஆட்டையும் அறியாதார் அவனியில் உண்டோ ?"

"இல்லை."

"அங்ஙனமிருந்தும் சித்திர விளக்கத்தோடு நிற்காமல் எழுத்து விளக்கமும் சேர்ந்து நிற்பது எற்றுக்கு?"

"எடுத்துக் காட்டும் பொருள் பள்ளிச் சிறுவர் கண்ணில் பதிவதோடு, கருத்திலும் பதிய வேண்டும் என்பதற்காக இருக்கலாம் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது!"

"அம்முறையைத்தான் யாமும் கையாண்டு வருகிறோம் சிற்றறிவாளரே, யாமும் கையாண்டு வருகிறோம். நீர்தான் பார்த்திருப்பீரே, சிங்கத்தின் பிடரிபோன்று எமது சிகையை வெட்டிச் சீவி விட்டுப் பார்த்தோம்; கவிஞன் என்று கழலுவார் கண்டிலோம். கவின்மிகு அங்கி கால் வரை நீண்டு தொங்குமாறு அணிந்து பார்த்தோம்; பாவலர் என்று பகருவார் பார்த்திலோம். தாடியும் மீசையும் தழைத்து வளர, தடி கொண்டு ஊன்றித் தளர்நடை நடந்தும் பார்த்தோம்; 'ஏ, பிச்சைக்காரா! ஒன்றும் இல்லை, போ!' என்று விரட்டு வாரைத்தவிர, 'பிறவிக் கவிஞரே!' என்று முகம் மலர, அகம் குளிர எம்மை விளிப்பாரைக் கண்டிலோம், கண்டிலோம்!"

"அதாவது, கவிதை புனைவதைத் தவிர!" என்றேன் நான், இடை மறித்து.

"அன்று, அன்று; இன்று காலைப் போது கூட, 'காலை எழுந்தவுடன் காநீர்!' என்று யாம் கவிதை புனைந்து கொண்டேதான் எழுந்தோம்!"

"காநீரா! அது என்ன, காநீர்?"

"கவிதை புனைவதோடு நிற்காமல் தமிழையும் வளர்க்கிறோம் ஐயா, தமிழையும் வளர்க்கிறோம். தேயிலைச் சாறு கலந்த பானம் தேநீர்; காபிச் சாறு கலந்த பானம் காநீர்!"

"என்னே உங்கள் பேரறிவாற்றல், என்னே உங்கள் பேரறிவாற்றல்!"

"இம்மட்டோ, இம்மட்டோ ? அற்றை நாளில் 'மக்கள்' இருந்தனர், கம்பனை இனம் கண்டு கொண்டு 'கவிச் சக்கரவர்த்தி' எனக் கழல, பகர, விளிக்க! இற்றை நாளில் மக்களா உள்ளனர்? 'மாக்க'ளன்றோ உள்ளனர்? அது குறித்தன்றோ அஞ்சல்காரர் 'அஞ்சல் உடை' அணிவது போன்று, காவலர் 'காவல் உடை' அணிவது போன்று, யாமும் கவிஞன் என்பதற்காகக் 'கவிஞர் உடை'யை எமது கற்பனையால் கண்டு அணியவேண்டி உள்ளது? 'ஒன்பாற் சுவையார்' என வெறுமனே சொல்லிக் கொள்ளாமல், 'கவிஞர் ஒன்பாற் சுவையார்' என எமக்கு யாமே 'கவிஞர்' என்னும் கௌரவப் பட்டத்தையும் அணிந்து கொள்ள வேண்டி உள்ளது?"

"ஐயகோ, ஐயகோ! இஃது அனுதாபத்துக் குரியதே, இஃது மிக மிக அனுதாபத்துக்குரியதே!"

"இதுபோதாவது புரிந்ததா, பாலர் பாடத்தில் அணிலின் படத்துக்குக் கீழே 'அணில்' என எழுத்தால் விளக்குவது போன்று, ஆட்டின் படத்துக்குக் கீழே 'ஆடு' என எழுத்தால் விளக்குவது போன்று, யாமும் கவிஞருக்குரிய ஆடையணிகள் தரிப்பதோடு, 'கவிஞர்' என்ற பட்டத்தையும் எமக்கு யாமே எமது பெயருக்கு முன்னால் ஏன் சூட்டிக் கொண்டிருக்கிறோம் என்று?"

"புரிந்தது சுவாமி, புரிந்தது!"

அவ்வளவுதான்; அதற்குமேல் நான் அங்கே நிற்கவில்லை -ஆளை விட்டால் போதாதா? - எடுத்தேன் ஓட்டம்!

த்தகு கவிஞர்பிரானின் இயற்பெயர் ஒப்பிலாமணி என்பதாகும்; அன்னாரின் இல்லத்தரசி இன்பவல்லி அம்மையாராவர்.

கவிஞர் ஒன்பாற்சுவையாருக்குக் கவிதை பிறந்ததோ இல்லையோ, 'கவிதா தேவி' என்ற பெண் மகவு பிறந்தது மட்டும் உண்மை; உண்மையிலும் உண்மை!

அந்தப் பிள்ளைக்கனி அமுதுக்கு ஆறு ஆண்டுகள் நிறைந்து, ஏழாவது ஆண்டு பிறந்து தவழ்ந்து கொண்டிருந்தது.

கவிஞர் பெருமான் ‘நமக்குத் தொழில் கவிதை' என்று தமக்குத் தாமே வரித்துக்கொண்டு விட்டதால், காசுக்கும் அவருக்கும் காணாத தூரமாயிருந்து வந்தது. எனவே, இட்டிலி-மசால் வடைக் கடையை நம்பி, அன்னாரின் இல்லாள் இல்லறத்தை இனிதே நடாத்தி வரலாயினள்.

இதுவே 'எல்லாரும் இந்நாட்டு மன்னராகி விட்ட இந்தக் காலத்தில், 'எல்லாரும் இந்நாட்டுக் கவிஞர்' என்று நினைக்காமல் நினைத்துக்கொண்டு விட்ட நம் கவிஞர் பிரானின் குடும்ப வரலாற்றுச் சுருக்கமாகும்.

ரு நாள், "ஆற்றங்கரைக்குச் சென்று, அங்குள்ள இயற்கை அழகில் ஈடுபட்டு நின்றால் நல்ல கவிதை - நாட்டு மக்களைப் போற்றிப் புகழ வைத்துப் பொன்னாடை போர்த்தி, எடைக்கு எடை பொற்காசும் அளிக்க வைக்கும் கவிதை தானாகவே பிறக்கும்!" என்று சகக் கவிஞர் ஒருவர் பரிந்துரை நல்க, அங்ஙனமே கலிஞர் ஒன்பாற்சுவையார் ஆற்றங்கரைக்குச் செல்ல, அங்கே 'கா, கா' என்று பல காகங்கள் ஏக்காலத்தில் கரைந்தவாறு தரையோடு தரையாகப் பறந்து கொண்டிருக்க, கவிஞர்பிரான் அவை சுற்றிச் சுற்றி வந்த இடத்தை நெருங்கி உற்று உற்று நோக்க, குயிற் குஞ்சு ஒன்று கீழே விழுந்து கிடக்க, "இயற்கைக் கவிஞனன்றோ இக் கதிக்கு உள்ளாகியுள்ளான்!" என்று கவிஞர் பெருமான் கனிவே உருவாய் அதை எடுக்க, அக்கணமே ஆயிராயிரம் காகங்கள் எங்கிருந்தோ படையெடுத்து வந்து அன்னார் தலையைப் 'பதம்' பார்க்க, ‘தலை தப்பினால் போதும்!' என்று 'இயற்கைக் கவிஞ'னை அங்கேயே விட்டுவிட்டு, 'இட்டிலியின் இன்முகம் காண' வீட்டுக்கு விரைந்து வரலானார் செயற்கைக் கவிஞர்!'

அதுபோது, "காலையிலேருந்து ஒரு பைசாவுக்குக்கூடப் 'போனி'யாகாமல் சுட்டுப் போட்ட இட்டிலி - மசால் வடை அத்தனையையும் அப்படியே வெச்சிகிட்டு நான் அவதிப்பட்டுகிட்டிருக்கேன், உனக்கு இட்டிலியா வேண்டும், இட்டிலி?" என்று இரைந்தபடி, இன்பவல்லி அம்மையார் கவிதா தேவியின் முதுகில் கடைசி 'முத்தாய்ப்'பை வைத்துக் கொண்டிருக்க, 'கவிதாதேவிக்கே இந்தக் கதியென்றால் தமக்கு என்னகதியோ!' என்ற கலக்கத்துடன் கவிஞர் பெருந்தகை உள்ளே நுழைய, அதுகாலை யாரோ ஒரு பெருமாட்டி வந்து ஆறு காசுக்கு இட்டிலியும் மூன்று காசுக்கு மசால் வடையும் வாங்கிக் கொண்டு ஏக, 'வாழ்க நீ அம்மா, வாழ்க நீ அம்மா!' என்று அந்த 'அபயாம்பா'ளைத் தமக்குள் வாழ்த்திக் கொண்டே ஒன்பாற்சுவையார் அமர, இரண்டு இட்டிலி கொண்ட தட்டு ஒன்று அன்னாரை நோக்கி 'விர்'ரென்று சுழன்று வர, கவிஞர்பிரான் அதைத் தடுத்து நிறுத்தி உற்று நோக்குவாராயினர்.

என்னே கொடுமை, என்னே கொடுமை! ‘வடைத் துணை' இல்லையென்றாலும் 'சட்டினித் துணை' யாவது வேண்டாவோ, இட்டிலிக்கு?

ஒன்பாற்சுவையார் சிந்தனை வயப்பட்டார்.

இரண்டு இட்டிலிகளுக்கு அருள் பாலித்த அம்மையார், கொஞ்சம் சட்டினிக்கும் அருள் பாலித்திருக்கக் கூடாதோ?

இப்படி எண்ணியதுதான் தாமதம், உடனே பிறந்தது உள்ளத்தை நெருப்பில்லாமலே உருக வைக்கும் ஒரு சோகக் கவிதை:

"வேதனை, வேதனை, வேதனை
வேதனை போயிற்
சோதனை, சோதனை, சோதனை"

ஆனால்? - வேதனையையும் சோதனையையும் வெளியிட்டு என்ன பயன்? - பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் அம்மையாரின் கவனத்துக்குச் சட்டினியன்றோ வரவேண்டும்?

மீண்டும் சிந்தனை வயப்பட்டார் ஒன்பாற்சுவையார்- உதித்தது, உதித்தே விட்டது. பாடினார்; தொடையையும் -கையையுமே பக்க வாத்தியங்களாகக் கொண்டு பாடினார்;

"இட்லி, இட்லி, இட்லி!
இட்லிக்கு வேண்டும்
சட்னி, சட்னி, சட்னி!"

அவ்வளவுதான்; அந்தத் தெரு வழியே 'விர்' ரென்று போய்க்கொண்டிருந்த ஒரு கார்தம் வீட்டு வாசலில் 'டக்'கென்று நின்ற சத்தமும், கதவைத் திறந்து மூடும் சத்தமும், அவற்றைத் தொடர்ந்து, "வொண்டர்புல், மாஸ்டர் பீஸ்! இப்படிப் பாடினால் எந்த ஸாங்தான் ஹிட் ஸாங்காகாது? ஆஹா, ஆஹாஹா!" என்ற பாராட்டுரையும் கவிஞர் பெருமானின் காதில் விழுந்தன. 'சட்டினி இந்த உருவத்திலும் வருமோ?' என்ற ஐயப்பாட்டுடன் அன்னார் தலை நிமிர, "என்னைத் தெரியாவிட்டாலும் என் பெயரையாவது நீங்கள் கேள்விப்பட் டிருப்பீர்கள். நான்தான் வானா மூனா; ஜாலி பிக்சர்ஸ் ஓனர்!" என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தார் வலம்புரி முத்தையா.

ஒன்றும் புரியவில்லை, ஒன்பாற்சுவையாருக்கு: 'உட்காருங்கள்!' என்று சொல்லக்கூட முடியாமல் விழித்த கண் விழித்தபடி நின்றார்.

அதற்குள் 'செக்' புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, "தங்கள் பெயர்?" என்றார் படாதிபதி.

"ஒன்பாற்சுவையார்" என்றார் கவிஞர், தட்டுத் தடுமாறி.

"ஓஹோ, நவரஸமும் பாட வரும்போலிருக்கிறது, தங்களுக்கு!" என்று சொல்லிக்கொண்டே 'செக்'கில் ஏதோ எழுதி, "இந்தாருங்கள், ரூபா ஐந்நூற்றொன்றுக்குச் செக் இது; இதை முன் பணமாக வைத்துக்கொள்ளுங்கள். நாளைக் காலை பத்து மணிக்கு வண்டி அனுப்பி வைக்கிறேன்; கம்பெனிக்கு வாருங்கள்!" என்றார் வானா மூனா.

கை நடுங்க அந்தச் செக்கைக் கவிஞர்பிரான் வாங்கிக் கொண்டதுதான் தாமதம்; 'விர்'ரென்று அந்த வீட்டை விட்டு வெளியே வந்தார் வலம்புரி முத்தையா, ஆனால்.......

இம்முறை கதவைத் திறந்து மூடும் சத்தமும், கார் கிளம்பும் சத்தமும் கவிஞர் பெருமானின் காதில் விழவில்லை. காரணம், தமது வாழ்நாளிலேயே முதன் முறையாக ரூபாய் ஐந்நூற்றொன்றுக்குச் செக்கைக் கண்ட அதிர்ச்சியில் அன்னார் மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டதுதான்!

"துபோது போது யாம் எங்குள்ளோம்?" மூர்ச்சை தெளிந்த பின் கவிஞர்பிரான் கேட்ட முதல் கேள்வி இது.

"என் மடியில்!"

முகம் சிவக்க இன்பவல்லி அம்மையார் இறுத்த முதல் பதில்

அவ்வளவுதான்; திடுக்கிட்டெழுந்தார் ஒன்பாற் சுவையார். வியப்பு! பெரு வியப்பு!-இரண்டு இட்டிலியோடு இன்னும் இரண்டு இட்டிலி; இரண்டு மசால் வடை; சட்டினி; சாம்பார்; மிளகாய்ப் பொடி; நெய்!!!

அடி சக்கை! இவ்வளவும் தமக்கா, இந்தச் செக்குக்கா?

'எதற்காயிருந்தால் என்ன?' என்று சட்டையின் கையைத் தள்ளிவிட்டுக் கொண்டு, கிடைத்தற் கரிய அந்தப் பேற்றை 'ஒரு கை' பார்த்தார் கவிஞர்.

"இன்னும் இரண்டு வைக்கட்டுமா?"

"வை வை! போதுமென்ற மனம் மனிதனுக்கு எப்போதாவது இருக்குமென்றால், அது எதையாவது தின்னும்போதுதான் இருக்கும் என்பார்கள்; அதுவுமன்றோ இந்நாள் வரை இல்லாமலிருந்தது எமக்கு? வை, வை! இன்னும் நான்கே வேண்டுமானாலும் வை!"

அடுத்தாற்போல் என்றும் இல்லாத திருநாளாக அன்னாருக்கு வெற்றிலையை மடித்துக் கொடுத்துக் கொண்டே, "எனக்கு இரண்டு பவுன்களில் இரண்டு வளையல்கள்!" என்று ஆரம்பித்தாள் சதி, செக்கை ஒரு, கண்ணாலும், செக்குக்கு உரியவரை இன்னொரு கண்ணாலும் பார்த்துக்கொண்டே.

"ம்........" என்றார் பதி.

"குழந்தைக்கு ஒரு பவுனில் ஒரு சங்கிலி"

"ம்........"

"எங்கேயாவது போகும்போதாவது கட்டிக் கொள்ள எனக்கு ஒரு பட்டுப் புடவை!"

"ம்......."

"அப்புறம், அப்புறம்........"

"யாம் சொல்கிறோம்-எம்முடைய கழுத்துக்கு ஒரு ‘மைனர் செயின்'; கைக்கு இரண்டு கல் இழைத்த மோதிரம்; வெள்ளி வெற்றிலைப் பெட்டி ஒன்று; அதை எடுத்துக்கொண்டு எனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்க ஓர் உருப்படாத சீடன்; ஸில்க் ஜிப்பா; ஸெண்ட்-இத்யாதி, இத்யாதி!"

"இந்த முன் பணத்துக்குப் பிறகு பின் பணம் வரும்போது........" என்று மீண்டும் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள் பத்தினி.

"அந்தப் பின் பணத்தை என்ன செய்வது என்பதைப்பற்றிப் பின்னால் பேசிக்கொள்வோம்!" என்று செக்கை எடுத்து மடித்துச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு கிளம்பினார் அவர்.

"எங்கே, பாங்குக்கா?" என்று அவசர அவசரமாகக் கேட்டாள் அவள்.

"இந்த நேரத்தில் பாங்க் எங்கே இருக்கப் போகிறது? வேறு யாரிடமாவது கொடுத்துத்தான் இதைப் பணமாக்கிக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக நடையைக் கட்டினார் அவர்.

'செக்' கை எடுத்துக்கொண்டு கவிஞர் ஒன்பாற் சுவையார் வேறெங்கும் போய்விடவில்லை; அடியேனைத்தான் தேடிக்கொண்டு வந்தார். நான் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு செக்கை வாங்கிப் பார்த்தேன்; 'கிராஸ்' செய்த செக்காயிருந்தது. "இது பணமாக இரண்டு நாட்களாவது ஆகுமே?" என்றேன்.

"நாளைக் காலை பத்து மணிக்கன்றோ அன்னார் எனக்கு வண்டி அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்? அதற்குள் யாம் வாங்கவேண்டியவற்றையெல்லாம் வாங்கிக்கொண்டு தீர வேண்டிய நிலையிலன்றோ உள்ளோம்?" என்றார் கவிஞர்.

"அதனாலென்ன, உங்களுக்கு வேண்டியவற்றை யெல்லாம் யாரிடமாவது இரவல் வாங்கிக்கொண்டு விட்டால் போகிறது!"

"நகை நட்டுக்கள் இரவலாகக் கிடைக்கலாம்; ஸில்க் ஜிப்பா ......"

"அதுகூடச் சலவை நிலையங்களில் வாடகைக்குக் கிடைப்பதாகக் கேள்வி!"

"அதற்குரிய தொகையையாவது உம்மால் கொடுத்து உதவ முடியுமா?"

"தருகிறேன்!"

"அங்ஙனமே 'ஸெண்ட் பாட்டில்' ஒன்றும்....."

"வாங்கித் தருகிறேன்!"

"அடுத்து, உருப்படாத சீடன்......"

"ஏன் உருப்படும் சீடனாயிருந்தால் என்னவாம்?"

"அவன் என்னையே - கவிழ்த்து விட்டாலும் கவிழ்த்துவிடலாமன்றோ?"

"அஞ்சற்க! உருப்படாத சீடன் ஒருவன் கிடைக்கும் வரையாமே உமக்கு இரவல் சீடனாக இருந்து வருவோம்!"

"மகிழ்ச்சி! நாளைக் காலை ஒன்பது மணிக்கெல்லாம் எமது இல்லத்துக்கு வந்துவிடும்; இந்தச் செக்கையும் உமது கணக்கிலேயே கட்டிவிடும்!"

"சரி!" என்று நான் அவரிடம் பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்டி, "ஸெண்ட்டையும் நீங்களே வாங்கிக்கொண்டு விடுங்கள், உங்களுக்குப் பிடித்த மணத்தில்!" என்றேன்.

"நன்று, நன்று!" என்று கவிஞர் பெருமான் உற்சாகத்துடன் தலையை ஆட்டிவிட்டுச் சென்றார்.

றுநாள் காலை கவிஞரும் நானும் 'சர்வாலங் காரதாரி'களாக வாசலில் நின்றுகொண்டிருந்தோம், வானா மூனாவின் வண்டியை எதிர்நோக்கி-வண்டி வந்தது; சென்றோம்.

'மியூஸிக் ஹால்' என்ற அறிவிப்புப் பலகையுடன் காட்சியளித்த ஓர் ஹாலில் பக்க வாத்தியக்காரர்கள் பலர் பலவிதமான வாத்தியங்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் எங்களைக் கொண்டு போய் விட்டார்கள். அங்கே இருந்த வானா மூனா ஆர்மோனியத்தைக் கட்டி அழுது கொண்டிருந்த ஒருவரை ஒன்பாற்சுவையாருக்குச் சுட்டிக் காட்டி, "இவர்தான் மியூஸிக் டைரக்டர்!" என்றார்.

"ஓகோ!" என்றார் கவிஞர்.

அடுத்தாற்போல் ஏதோ எழுதப்பட்ட காகிதம் ஒன்றை நீட்டினார்கள். "இதுதான் பாட்டுக்குரிய சம்பவமோ?" என்று அலட்சியத்துன் அதை வாங்கிப் பார்த்தார் கவிஞர்.

ஐயகோ! அதில் பாட்டுக்குரிய சம்பவமா இருந்தது? -இல்லை , பாட்டே இருந்தது - 'என்ன பாட்டு?' என்கிறீர்களா? இதோ:

எடுப்பு
டப்பா, டப்பா, தகர டப்பா!
டப்பா, டப்பா, தகர டப்பா!
தொடுப்பு
பொழுது போன வேளையிலே
கழுதை வாலில் கட்டிவிட்டால்
இழுத்துக்கொண்டு ஓடையிலே
எழும் இன்ப நாதமடா!

(டப்)

முடிப்பு
டண்டணால், டண்டணால்,
டண்டணால், டண்டணால்!
தானாப் போடும் தாளம், டப்பா!
மானாமதுரை போகும் குப்பா!

(டப்)


'மியூஸிக் டைரக்டர்' இந்தப் பாட்டை ஒரு முறை பாடிக் காட்டியதும் வானா மூனா 'ஓஹோஹோ!' என்று அந்த ஹாலே அதிரும்படிச் சிரித்துவிட்டு, எப்படி, பாட்டு? என்றார் கவிஞர் பெருமானிடம்.

"வழு, ஒரே வழு! என்றார் கவிஞர்.

"எது? பேப்பர் ஒரே வழுவழுப்பா யிருப்பதைச் சொல்கிறீர்களா?"

"இல்லை, பாடலில் பிழை மலிந்து கிடப்பதைச் சொல்கிறேன்!"

"நாசமாய்ப் போச்சு, போ! பின் பாட்டுக்காரன் கூடப் பாடலில் பிழை காண ஆரம்பித்தால் நான் வாழ்ந்த மாதிரிதான்!" என்றார் வானா மூனா எரிச்சலுடன்.

"என்ன சொன்னீர்!" என்று ஆத்திரத்துடன் எழுந்தார் கவிஞர்.

"அவனவன் வேலையை அவனவன் செய்தால் போதும் என்றேன்!"

"எது, எவன் வேலை?"

"பின்னணி பாடுவது உமது வேலை! அதற்குத் தான் உம்மை இங்கே அழைத்திருக்கிறேன்; அதை ஒழுங்காகச் செய்யும்!"

"என்ன! பின்னணிப் பாடகனோ, யாம்?"

அவ்வளவுதான்; மறுபடியும் மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்ட கவிஞர்பிரானை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பிப்பதற்குள் என் பாடு 'போதும், போதும்' என்று ஆகிவிட்டது!

ன்னே கொடுமை, என்னே கொடுமை! கம்பனை இனம் கண்டு கொண்ட தமிழ் கூறும் நல்லுலகம், கவிஞர் ஒன்பாற்சுவையாரையும் இனம் கண்டு கொல்லும் நாள்- வழு, வழு!-இனம் கண்டு கொள்ளும் நாள் எந்நாளோ, எந்நாளோ?