வினா வெண்பா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உமாபதி சிவாச்சாரியார் 14ஆம் நூற்றாண்டில் இயற்றிய பதின்மூன்று பாக்கள் மட்டுமே கொண்ட நூல். இது வினா வடிவில் அமைந்துள்ள வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஆசிரியர் தக் குருவாகிய மறைஞான சம்பந்தரை வினவுவது போலவும், அவரைப் பாராட்டுவது போலவும் பாடலிலுள்ள வினாக்கள் அமைந்துள்ளன. மேலும் ஆசிரியர் உமாபதியார் தன் குருவாகிய மறைஞான சம்பந்தரைத் தம்மோடு ஒப்பிட்டுப் பாராட்டும் பாயிரப் பாடல்கள் இரண்டு.

பாயிரம்

1

உன்னை ஒழிந்து செயலில்லை உன்றனுக்கும்
என்னை ஒழிந்து செயலில்லை – மன்னவனே
மின்துன்று வேணியாய் மெய்கண்டா நான்அடிமை
என்கின்ற(து) எவ்வா(று) இயம்பு.

2

அனாதியில் நீ என்னை அகலா(து) இருக்க
அனாதியில் எற்(கு) ஆணவம்உண் டான(து) – அனாதியனே
சுத்தா தொல் வெண்ணெய்ச் சுவேதவன மெய்கண்டா
எத்தால் அடியேற்(கு) இயம்பு.
நூல்

1.

நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக்
கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு
னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா
நின்றவா றெவ்வாறு நீ.

2.

இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி
மருளி நிலையருளு மானும் - கருவியிவை
நீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா
வீங்குனரு ளாலென் பெற.

3.

புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான
மல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள்
ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா
ஞானமலை யாவாய் நவில்.

4.

கனவு கனவென்று காண்பரிதாங் காணி
னனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள்
தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.

5.

அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின்
குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள்
தாமா வறியா தடமருதைச் சம்பந்தா
யாமா ரறிவா ரினி.

6.

சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது
மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின்
மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா
வென்கொண்டு காண்பேனி யான்.

7.

உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்காலொண்
தன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு கருவி
தானறிய வாரா தடமருதைச் சம்பந்தா
யானறிவ தெவ்வா றினி.

8.

அருவே லுருவன் றுருவே லருவன்
றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற்
காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல்
பூணுமிறைக் கென்னாம் புகல்.

9.

இருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு
மொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார்
ஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா
வன்றாகி லாமா றருள்.

10.

ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக
நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார்
தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி
யோங்கியவா றெவ்வா றுரை.

11.

காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை
காண்பார் கணன்முத்தி காணார்கள் - காண்பானுங்
காட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்.

12.

ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும்
என்று மிடையி லிடமில்லை - யொன்றித்
தெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு.

13.

அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப்
பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா
வினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன்
கனாவின்பா லெய்துவிக்குங் காண்.
"https://ta.wikisource.org/w/index.php?title=வினா_வெண்பா&oldid=1284319" இருந்து மீள்விக்கப்பட்டது