விருத்தப் பாடல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விருத்தம்
பல வித்துவான்கள் பாடியவை என்னும் தலைப்பின் கீழ் வருகிறது
பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை
பாடல் 11
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 147 முதல் 150
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

1

கைத்தலத் தழற்கணிச்சி வைத்திடப் புறத்து ஒருத்தி

கட்கடைப் படைக் கிளைத்த திறலோராம்

முத்தலைப் படைக் கரத்தெமத்தர் சிற்சபைக் குணிற்கு

முக்கணக் கருத்து ஒருத்தர் மொழியாரோ

நித்திலத் தினைப் பதித்த கச்சுறுத்தடிக் கனத்து

நிற்கும் அற்புதத் தனத்தின் இடையே வேள்

அத்திரத் தினைத் தொடுத்து விட்டு நெட்டயிற் கணத்த

லக்கணுற்றிடச் செய்விக்கும் அதுதானே.

2

கருப்பாலே பணை யடித்துப் பனிநீர் தேக்கிக்

கதலி பலாக் கனியதனால் வரம்பு கட்டும்

திருப்பாலை வாழீசர் பவனி யாடுந்

தெருவில் பால்விலை பகர் சிற்றிடைச்சி யாரே

அருட் பாலோ பொருட் பாலோ காமப் பாலோ

ஆழிதனைக் கடைந்து எடுத்த அமுதப் பாலோ

இருப்பாலே மனம் படைத்தீர் நில்லீர் செல்லீர்

எந்தப் பால் விற்க வந்தீர் இயம்புவீரே.

3

பூப்பார்த்துப் புகழ் பார்த்துப் பொருள் பார்த்துக்

கவிதை சொல்லும் புலவோர் தங்கள்

நாப்பார்த்துக் கொடை கொடுக்கு நல்ல தம்பி

தந்தை சொக்க சொக்க நாதா வென்னால்

காப்பாற்ற முடியாது கையில் ஒரு காசும் இல்லை

கடன் என்றாலும்

பாப்பாத்தி சோறிடுவாள் இருந்தாலும் உறங்க மதப்

பயல் ஒட்டானே.

4

கெட்ட சாறு தவிடு கஞ்சி கிருமி யுண்ட மாவறைக்

கீரை வேர் தெளிந்த மோர் முறிந்த பாகு கிண்டிமா

இன்ன சோறு கொழியல் உப்பிடாத புற்கை யாயினும்

எங்கும் அன்பதாக நுங்க இன்பமாய் இருக்குமே

பட்ட பாகு பசுவினெய் பருப்பு முக்கனிக் குழாம்

பாளி தங்கடாளி தங்கள் பண்ணியார வகையுடன்

அட்ட பால் குழம்பு கன்னல் அமுதமோடு உதவினும்

அன்பினோடு அளித்திடாத வசனம் என்ன வசனமே.

5

துங்கவட கயிலாய முதலாம் ஐந்து

துளுவொன்று தொண்டை வளநாட் டெண்ணான்கு

தங்குநடு நாட்டி ருபத்தி ரண்டு பொன்னித்

தலநூற்றுத் தொண்ணூறு மலைநாட் டொன்று

கொங்கேழு சிங்களத்தில் இரண்டு வையைக்

குளிர் தமிழ் நாட்டி ரேழுமெலாஞ் சூழச்

செங்கையார் தலம் இருநூற் றெழுபா நான்கில்

தென்பாகம் கயிலாயந் திருக் குற்றாலம்

6

ஓதுமைந்தி லொன் றிலைந்தி லொன்று மன்னவன் பிதா

ஊர்திதொட்ட வேழின் மீதிலுற்ற சாப நிருபனார்

தாதுகொண்ட தாளிமாலை சூடிதம்பி தம்பிசேய்

தன்குடைப் பினைவன் மற்றலைக் கிரிட துவசனார்

காதனண்பன் தந்தை பாகன் பின்னவன் பகைச்சுமை

கலையெடுத்த கையரையர் கதிபெறத் தவஞ் செய்தோன்

தீதிறாதை கொண்டு வந்த சிலை வதிந்த பதியினான்

சிரமரிந்தவன் கொள் பாரி சேரிலால் உறைந்ததே.

7

தொடுத்த முத்தமிழுக்கு அகத்தியன் எனவே தோன்றிய புவனச் சேறையர்கோன்

சொலக்கணப் புலவ னிலக்கணக் கவியைத் துதித்தங்களித் திடுங்களியேம்

மடத்தினில் புகுந்து மதுதிறந் தவனார் வடித்தகட்டி குடித்து நின்றவனார்

வறுத்தசுட் கடித்துக் குதட்டுகின் றவனார் மயக்கியுட் டியக்க முற்றவனார்

கடுக்கனை மிடற்றி லொடுக்கி யிட்டவனோ கையிலே சிலம்பை யிட்டவனோ

கனத்த நூற் கொடியை நாவில் இட்டவனோ கண்ணிலே குழையை யிட்டவனோ

முடுக்கிய வயிற்றில் ஆழி யிட்டவனோ முகத்திரு பதக்கம் இட்டவனோ

முளைத்த தோளொரு பான் சதங்கை யிட்டவனோ முழுப் புரட்டவர்க் கலாதிலையே

8

தேமதுர கவிவீர கன்றெவ்வை வருபெருமான்

செல்வச் சங்கரர் தாளைத் தினம் வணங்கு களியேம்

யாமது வுண்டாலு மஃது மக்கடிமை யிலர்போல்

எமை மயக்குமோ மயக்காதினி இயம்பக் கேளீர்

வீமன் மகன் அகத்தியனேகுபேரன் மகன் புதனே

வீறானை முகன் ஒருவன் விரும்பு மகன் குகனே

காமன் மகன் சயந்தனே வேதன் மகன் சிவனே

காலன் பாற் பிறந்த மகன் கடல் கடந்து உளானே.

9

சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா

தாழிசைப்பா கொச்சகப்பாத் தனிப் பாவுக்கும்

விந்தை யப்பாவாகிய கிரந்தப் பாவும்

வெல்லப் பாவது போல விகடப் பாவும்

எந்தப்பா வுரைத்திடினும் ஒரு பேறில்லா

ஏதப்பா விக்குநின திணைப் பாதத்தைக்

கந்தப்பா முருகப்பா போரூர் வாழ்வே

கையப்பா மெய்யப்பா காட்டப் பாவே.

10

ஆதிசிவன் செத்தானோ உமை செத்தாளோ

ஐங்கரனுஞ் செத்தானோ அரி செத்தானோ

வேதியனுஞ் செத்தானோ நீசெத்தாயோ

வெட்டவெளி ஆனந்தம் வெறும் பாழாச்சோ

நாதியற்றுப் போனாயோ வழி காட்டாயோ

நாயேனுக்கு இரங்கி வந்து நலந் தாராயோ

பாதிவழி தனில் அவதிப் படுத்து வாயோ

பாதகா திருச் செந்தூர்ப் பதியுளானே.

11

நீருஞ் சுமந்தேன் விறகெடுத்தே னித்தஞ் சுமந்தேன் சாணங்கம்

நிகழ அடிபட்டு உதைப்பட்டே நின்றேன் வையைக் காளாக

ஆரும் விரும்பாத் துகிலெடுத்தென் அழகு மேனி கரிக்கோலம்

ஆனேன் அதனால் அல்லோ உன்னடியாள் உனக்குச் சரியானேன்

காரும் விரும்புங் கடுவணிந்த களனே கருணைப் பெருங் கடலே

கமலத் தயன் மால் காணாத கால காலா வென்றுயரம்

தீரும்படி தன்னருள் புரிவாய் சிவனே அமரர்க்கு ஒரு விருந்தே

தேவே தெய்வ மறைப் பொருளே திகழுங் கடவூர்ச் சேவகனே.
"https://ta.wikisource.org/w/index.php?title=விருத்தப்_பாடல்கள்&oldid=25038" இருந்து மீள்விக்கப்பட்டது