உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டு உலகம்/வரலாறு வாழ்த்துகிறது!

விக்கிமூலம் இலிருந்து

வரலாறு

வாழ்த்துகிறது!

இருந்தவர்கள் அத்தனைபேரும் முயன்று பார்த்து விட்டார்கள். முடியவில்லை. ஆறடி உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும் குறுக்குக் குச்சியைத் தாண்ட முடியாத அந்த இளைஞர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதாவது யாரால் முடியும் என்று!

முயற்சி செய்தவர்களின் முகங்களைப் பார்க்க என்னவோ போலிருந்தது அந்த இளைஞனுக்கு. அங்கே வந்தான். ஆறடி உயரத்தை அனாயாசமாகத் தாண்டி விட்டு, அவன் தான் செய்து வந்த வேலையைப்பார்க்கப் போனான்.

அவன் செய்த வேலை என்ன தெரியுமா?

பயன்படுத்தப்படும் அந்த விளையாட்டு மைதானத்தை சுத்தப்படுத்தி வைப்பதுதான்.

பயிற்சி செய்த வீரர்கள் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார்கள். தங்களால் தாண்ட முடியாத உயரத்தைத் தாண்டிக் காண்பித்த அந்த இளைஞனை, மிகவும் ஆர்வத்தோடு பார்த்தார்கள். கைதட்டினார்கள். ஆச்சரியத்துடன் அருகே சென்று பாராட்டினார்கள்.

துப்புரவுப் பணியாற்ற அணிந்திருந்த கனமான காக்கி ஆடைகள். கனமான காலணிகள். களைத்த உடல். முன்பின் தாண்டிய பழக்கம் இல்லாத தன்மை. இத்தனையையும் வைத்துக்கொண்டு தாண்டிய அந்த இளைஞனைப் பார்க்க ஓடிவந்தவர்களில் பயிற்சியாளரும் ஒருவர். அவர் பெயர் வார்னர்.

வார்னர் அந்த இளைஞனை வாஞ்சையுடன் விசாரித்தார். அவனும் தன் வரலாற்றைக் கூறினான்.

அமெரிக்கப் பகுதியில் காடுகளில் வாழும் ‘சாக்ஸ் அண்ட் பாக்ஸ்’ எனும் செவ்விந்திய பரம்பரையைச் சேர்ந்தவன், கார்லைல் எனும் நகருக்குத் தொழிற்கல்விப் பயில வந்தவன். அங்கு தையற் தொழிலைக் கற்றுக்கொள்ளும் போதே, மாற்று வேலையாக விளையாட்டு மைதானத்தைத் துாய்மைப்படுத்தும் வேலையையும் செய்வதாகக் கூறினான். தன் பெயரை ஜேம்ஸ் பிரான்சிஸ் தோர்ப் என்றும் கூறினான்.

வார்னரோ விலைமதிக்க முடியாத மாணிக்கத்தைக் கண்டெடுத்தவர்போல் மகிழ்ந்தார். அவனது இளம் வயது காலத்திய சாதனையை அறிந்தபோது, மேலும் அவர் வியப்பில் ஆழ்ந்து போனார். ஓடுவது, மீன் பிடிப்பது, வேட்டையாடுவதுதான் ஜேம்ஸ் தோர்ப்பின் குடும்பத் தொழில். அவனோ தன் பெற்றோர்களையும் மிஞ்சிய வீரச் சிறுவனாக விளங்கினான்.

மூன்று வயதிலேயே குதிரை சவாரி செய்யும் ஆற்றல், பத்து வயதில் காட்டு மானை விரட்டிப் பிடிக்கும் வேகம். தனியாகப் போய் காட்டுக் குதிரையைக் கயிறு போட்டு மடக்கி இழுத்துவரும் ஆண்மை போன்ற வரலாற்றை அறிந்தபோது,வார்னர் ஆனந்தப் பரவசம் அடைந்தார்.

வேலை செய்ய வந்த ஜேம்ஸ், வார்னரின் செல்லப் பிள்ளையானான். விளையாட்டுத் திடலில் அவன் கால்படாத இடமே இல்லை என்ற அளவிற்கு அவனது பயிற்சி நடந்தது. அவனை வெல்ல யாருமே இல்லை என்ற அளவுக்கு சக்தி வாய்ந்த வீரனாக தோர்ப் விளங்கினான்.

லாபயெட்டாஎன்பது ஒரு கல்லூரி. அதன் விளையாட்டுப் பயிற்சியாளர் புரூஸ் என்பவர். தன் கல்லூரியில் 49 வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்து, ஓட்டப் போட்டி நடத்துவதற்காகக் காத்திருக்கிறார் ரயிலில் வார்னரும் அவரது வீரர்களும் வருவதாக வந்த செய்தியை அறிந்து ரயிலடியில் காத்திருந்த புரூசுக்கு ஒரே ஏமாற்றம். வந்தவர்கள் வார்னரும் ஜேம்சும்தான். இரண்டே இரண்டு பேர் மட்டுமே வந்தனர்.

"நகரெல்லாம் விளம்பரப் படுத்தியிருக்கிறோம் விளையாட்டுப்பந்தயம் என்று நீங்கள் இரண்டுபேர் மட்டுமே வந்து, எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே" என்று புரூஸ் கோபித்துக்கொண்டார். ஒரே வீரன் ஜேம்சுடன் வந்த வார்னர், பதில் பேசவில்லை. "பந்தயத்தைத் தொடங்குங்கள். போட்டிக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டார்.

போட்டியும் நடந்தது. முடிவு என்னவென்று நினைக்கிறீர்கள்! ஜேம்ஸ் தோர்ப் மட்டுமே தனியாளாக போட்டியிலே வெற்றிபெற்று எடுத்த வெற்றி எண்கள் 71. 49 பேர்கள் சேர்ந்து வென்று பெற்ற வெற்றி எண்கள் 41 தான்.

இவ்வாறு வெற்றி பெற்ற வீரனை அமெரிக்காவே வாழ்த்தியது. 1912ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்திற்கும் செல்ல வழி அனுப்பிவைத்து மகிழ்ந்தது. ஒலிம்பிக் சென்ற ஜேம்ஸ் தோர்ப், பத்துப் போட்டிகள் நிகழ்ச்சியில் (Decathlon) ஏறத்தாழ எல்லா நிகழ்ச்சிகளிலும் வென்றான். அத்துடன் , ஐந்து நிகழ்ச்சிகள் போட்டியிலும் (Pentatlon) வெற்றி பெற்று, இரண்டு பெரிய நிகழ்ச்சிகளிலுமே தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனையையும் ஏற்படுத்தினான்.

பரிசுகளைத் தர வந்தவர் ஸ்வீடன் காட்டு மன்னன் ஜந்தாம் கஸ்டாவ் என்பவர். ஜேம்ஸின் செயற்கரிய சாதனையைப் பார்த்து அதிசயித்து. அவர் கூறிய வார்த்தைகளோ, உலக மக்களையே வியப்பில் ஆழ்த்தின.

‘ஐயா! நீங்கள்தான் இந்த உலகத்திலே சிறந்த வீரன்’ என்பது தான் அவர்' கூறிய வார்த்தைகள்.

அமெரிக்கா, ஒரு சிறந்த வீர மகனைப் பெற்று, அகில உலகப் புகழ்பெற்றது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, சிறிதளவு வசதிகள் கூட இல்லாத நிலையில் வாழ்ந்து, வயிற்றுப் பிழைப்புக்காக மைதானம் துடைக்கும் பணிகளையும் செய்த ஒரு இளைஞன், தன்னுடைய ஆற்றலினால் மாமன்னரும் வியந்து போற்றிட வைத்தது எதனால் என்று நினைக்கிறீர்கள்? விளையாட்டினால்தான்.

தனது உண்மையான திறனை உலகறிய வைத்த ஜேம்ஸ் தோர்ப்பை, வரலாறு வாழ்த்துகிறது. உங்களையும் நிச்சயம் வாழ்த்தும். வாருங்கள் உழைப்போம்! உயர்வோம்!!