விளையாட்டு உலகம்/அளவிலா ஆனந்தம்!

விக்கிமூலம் இலிருந்து

அளவிலா
ஆனந்தம்!


‘இந்தக் கடிதத்தை உடனே சேர்த்துவிடு-அவசரம்’ என்று தன் எசமானன் கூறியதைக் கேட்ட அந்த இளைஞன், வாங்கிக்கொண்டு ஒட ஆரம்பித்தான். எங்கே? அஞ்சல் நிலையத்துக்கா? அதுதான் இல்லை. கடிதத்திலுள்ள முகவரியைப் பார்த்துவிட்டு, கடிதத்துக்கு சொந்தக்காரரை நோக்கித்தான். நேராகக் கொடுக்கவேண்டும் என்று தவறாக நினைத்துக்கொண்டு தான் 17 வயது இளைஞனான அவன் வேகமாக ஓடினான்.

ஓடிய தூரமோ முப்பதுமைல் இருக்கும். ஓடி முடித்த நேரமோ 4 மணி நேரம். தவறாக ஓடியவனை தட்டிக் கொடுத்து சரியான ஓட்டக்காரனாக மாற்றிவிட்டார்கள் அங்கு இருந்தவர்கள். இனிப்புப் பண்டங்கள் செய்து கொண்டிருந்த அவனும், நம்மாலும் ஓடமுடியும் என்று அறிந்துகொண்டு, இனி ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வது என்ற முடிவுக்கும் வந்து, மிக உறுதியாகப் பழகவும் தொடங்கிவிட்டான்.

1908ஆம் ஆண்டு நடக்கின்ற ஒலிம்பிக் பந்தயத்திற்கு, இத்தாலி நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் அந்த வீரன் பெற்றுவிட்டான். சிறந்த ஓட்டக்காரன் என்ற புகழையும் பெற்றிருந்த அந்த வீரன், அந்த ஆண்டு மாரதான் ஓட்டத்தினை அவன் தான் வெல்வான் என்ற நம்பிக்கையையும் பெருவாரியாகப் பெற்றிருந்தான்.

லண்டன் மாநகரத்தில் நடந்த பந்தயத்தில் மாரதான் ஓட்டப்பந்தயம் தொடங்கியது. லண்டன் மாநகரத்து மக்களுக்கெல்லாம் அந்த 22 வயது இளைஞன்மீது அளவிலா அன்பு இருந்ததற்குக் காரணமும் இருந்தது. இங்கிலாந்து நாட்டின் நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் என்பவரைப் போன்ற முகச் சாயல், மீசை அமைப்பு, உடல் தோற்றம் கொண்டிருந்ததும், ஒரு காரணமாகும். அந்த இளைஞன் பெயர் டோரண்டோ பியட்ரி.

ஓட்டம் தொடங்கி, முடியக்கூடிய நேரம். அந்தப் போட்டி மாரதான் ஓட்டமாகும். மக்கள் குழுமியுள்ள அரங்கத்தில் ஒரு சுற்றுடன் ஓட்டம் முடிய வேண்டும் என்பதும் ஒரு விதி. டோரண்டோவும் முதல் மனிதனாக 26 மைல் துாரத்தை ஓடி முடித்துவிட்டு, அரங்கத்துள் நுழைந்துவிட்டான்.அங்கிருந்த அத்தனை பேரும் ஆனந்த ஆரவாரம் செய்தார்கள். ஆனால், விதி அங்கு வேறுவிதமாக விளையாடிக் கொண்டிருந்தது.

வலது புறமாக ஓடவேண்டியவன், தவறாக இடது புறமாக ஓடத் தொடங்கிவிட்டான். கொஞ்ச துாரம் சென்ற பிறகுதான், மக்கள் கூட்டம் கூச்சல் போடத் தொடங்கியபோதுதான், அவனுக்குப் புரிந்தது. தவறைத் திருத்திக்கொண்டு, திரும்பி சரியான பாதைக்கு வந்து ஓட ஆரம்பித்தான்.

கால்கள் தடுமாறின. கண்கள் செருகிக் கொண்டன. உடல் தள்ளாடியது. இன்னும் கொஞ்ச துாரம்தான் எல்லையை அடைய. அடைந்தால் இனிய வெற்றி! உலகப் புகழ் பாராட்டு. தங்கப் பதக்கம்! ‘ஓடு ஓடு’ என்று கூடியிருந்தவர்கள் விண்ணை முட்டக் குரல் கொடுக்கின்றார்கள்.

அடியெடுத்து வைக்கும் பொழுதெல்லாம் தடுமாறி விழுகிறான் டோரண்டோ! நான்கு முறை கீழே விழுந்து தானே எழுந்து, சமாளித்து ஓட முயல்கிறான். ‘உதவுங்கள். அவனுக்கு உதவுங்கள்’ என்று கூட்டத்தின் ஒரு பகுதி பரிதாபமாக முறையிடுகிறது. அருகில் நிற்கும் அதிகாரிகளுக்கும் அவனைப் பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது. உதவினால், அவன் வெற்றி வாய்ப்பை இழந்து விடுவானே! என்றாலும் உதவத் துாண்டுகிறது டோரண்டோவின் பரிதாப நிலை.

பக்கத்திலிருந்த ஆங்கிலேய நாட்டு அதிகாரிகள் சிலர், அவனுக்குக் கைலாகு கொடுத்துத் துாக்கிவிட்டு, எல்லைக்கு கொண்டுவந்து சேர்க்கின்றனர். அரங்கத்துள் இருந்த அத்தனை பேரின் நெஞ்சமும் குளிர்ந்தது போலவே ஆனந்த ஆரவாரம்.

‘டோரண்டோ வெற்றி பெற்றுவிட்டான்’ என்பது தான் உச்சக் கட்டத்தில் பேசப்படுகிறது.

வெற்றியின் சின்னமாக இத்தாலியக் கொடியும் கம்பத்தின் உச்சியில் உயர்த்தப்படுகிறது.

இந்தக் கட்டத்தில், சிறிய உருவம்கொண்ட ஒரு அமெரிக்க நாட்டு இளைஞன் ஜான் ஹேய்ஸ் என்பவன், அடுத்த ஆளாக ஓடிவந்து ஒட்டத்தை முடித்து விடுகிறான். அமெரிக்க அதிகாரிகள் முறையிடுகின்றனர். முடிவு! ஓட்டத்தில் உதவிபெற்றதற்காக, டோரண்டோ போட்டியிலிருந்து நீக்கப்படுகிறான். வெற்றி வீரனாக அமெரிக்கன் ஜான்ஹேய்ஸ் அறிவிக்கப்படுகிறான். டோரண்டோ தோல்வியைக் கண்டு தொய்ந்து போனான். அதுமட்டுமல்ல. பார்வையாளர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி.

தங்கப்பதக்கம் அவனுக்கு இல்லையே என்பதைத் தாங்க முடியாத நெஞ்சினர்களாகத் தவித்து கொண்டிருந்தார்கள் மக்கள். பரிசு வழங்கும் கட்டம் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து இராணி அலெக்சாண்டரியா பரிசு வழங்குகிறபொழுது, அறிவிப்பு ஒன்று வருகிறது. மிகச்சிறப்பாக ஓடிய டோரண்டோவுக்கு இராணியார் தங்கக் கோப்பை ஒன்றை சிறப்புப் பரிசாக அளிக்கின்றார்கள் என்பதுதான்.

தங்கப்பதக்கம் இல்லைதான். வெற்றிவீரன் எனும் பட்டம் இல்லைதான். ஆனால் தங்கக் கோப்பையையும், மக்கள் இதயங்களிலே தங்கும் வாய்ப்பையும், பெரும் புகழையும் பெற்றுவிட்ட இத்தாலிய நாட்டு இனிப்புத் தயாரிப்பாளன் டோரண்டோ பியட்ரி,பெற்றதோ அளவிலா ஆனந்தம்,பேரானந்தம்.

நாம் பெற்றதோ இதயத்தை மயக்கிய இனிப்புச் செய்தி.

அதற்கு ஈடு இணையும் இவ்வுலகில்தான் உண்டோ!