விளையாட்டு உலகம்/இனி ஒருவர் இல்லை காண்!

விக்கிமூலம் இலிருந்து

இனி ஒருவர்
இல்லை காண்!


பெற்றோர்களே முடிவு செய்து விட்டார்கள் இந்தக் குழந்தை பிழைக்காது என்று! என்றாலும், அந்தக் குழந்தை பிழைத்துக் கொண்டது. அதிர்ஷ்டம் உள்ள குழந்தைதான். பெற்றோர்களுக்கு மனநிறைவு தராத உடல் நிறைவு பெறாமல் பிறந்து விட்ட குழந்தைதான்.

வலுவில்லாத உடல். தொய்ந்துபோன தன்மையில் உறுதியில்லாமல் பிறந்த குழந்தையைக் கண்டு, என்ன செய்வது என்று உள்ளத்தைத் தேற்றில் கொண்ட பெற்றோர்கள், உந்திய பிள்ளை பாசத்தால் ஏற்றுக் கொண்டர்கள். தப்பித்துக்கொண்ட குழந்தையும் உணர்வு பூர்வமாக தள்ளாட்டத்துடன் வளர்ந்தது.

சாண் குழந்தை என்றாலும் ஆண் குழந்தை என்பார்களே அதுபோல, தானாகவே அந்தக் குழந்தையும் வளர்ந்தது. செல்லமாக வளர்த்தார்கள் பெற்றோரும். சிற்றில் மிதித்து, சீண்டி விட்டுச் சிரித்து மகிழும் குழந்தைப் பருவம் என்று நமது இலக்கியங்கள் பாடுமே, அதற்கேற்ப குழந்தையும் விளையாடிக் கொண்டு வளர்ந்தது. ஆனாலும், வளர்ந்த குழந்தையை வாட்டுகின்ற விதி சும்மா விட்டு விடவில்லை.

எப்படியோ கொடிய நோயான ‘இளம் பிள்ளை வாதம்’ அந்தக் குழந்தைக்கு வந்துவிட்டது. ஆடி ஓடிக்களித்த குழந்தையின் கால்கள் அடங்கிக் கொண்டன. உடலோ படுத்த படுக்கையாகி விட்டது. உடன் ஓடிவந்த டாக்டர்களும் உற்ற உதவிகளைச் செய்து பார்த்து, கடைசியாகக் கைகளை விரித்து விட்டனர். ‘முடங்கிப் போன கால்களால் இனி நடக்க முடியாது’ என்று இறுதி மடல் வாசிப்பது போல, ஓதிவிட்டுச் சென்று விட்டனர் டாக்டர்கள். டாக்டரும் கை விட்ட பிறகு என்ன செய்ய முடியும்? ஆண்டவனை வேண்டிக்கொண்டு ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான் !

படுக்கையிலே கிடந்த சிறுவனின் மனதுக்குத் தெம்பினை ஊட்டுவதற்காக சில நல்லவர்கள் வந்தார்கள். “உடற்பயிற்சி செய்தால் உன் உறுதியற்ற கால்களுக்கு சற்று வலிவு கிடைக்கும். எழுந்து நிற்கவாவது முடியும்.” அவர்களின் வாக்கு அச்சிறுவனுக்குத் தேவவாக்காகப் பட்டுவிட்டது. வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு வைக்கோல் துரும்பைக் கண்டதும் தப்பிக்கத் துாண்டும் வலிய துணையாக உதவுவது போல, உடற்பயிற்சியை உண்மையாக, உளமார நம்பி அச்சிறுவன் பயிற்சி செய்யத் தொடங்கினான்.

உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தான்.விடாது செய்தான். நம்பிக்கையுடன் செய்தான். உறுதியான மனதுடன் செய்தான். பயன் கிடைக்குமா என்ற நினைவே இல்லாமல், இதுவே உற்ற துணை என்று. ஏற்றுக்கொண்டு செய்தான். அவன்நம்பிக்கை பொய்க்கவில்லை. உழைப்பு வீண் போகவில்லை. உற்றதுணை என்ற நற்றுணையான உடற்பயிற்சியும் அவனைக்கைவிட்டு விடவில்லை.

பயன்தரத் தொடங்கியது பயிற்சி. வாடி வதங்கிய கால்கள் வாட்டம் நீங்கின. வலிமை பெற்றன. எழுந்து நிற்கத் தொடங்கினான் சிறுவன். ஓடத் தொடங்கினான். அவன் கால்களுக்கு உடற்பயிற்சி அபார சக்தியை அளித்து விட்டது. நிற்க முடியுமா என்ற நினைவிலே நிறுத்திக் கிடந்த அவனது கால்களுக்கு, அசுர சக்தி தான் வந்து விட்டதோ என்னவோ, அவனது சாதனைகள் அப்படித்தான் வெளிவந்து கொண்டிருந்தன.

‘விளையாட்டு என்பது உடல் வலிமையின் வெளிப்பாடு’ தானே! வலிமை பெற்ற அந்த வாலிபனும் விளையாட்டுக்களில் ஈடுபட்டான். 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மட்டுமல்ல, 1904ம் ஆண்டும், 1908ம் ஆண்டும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நின்று கொண்டே உயரத்தாண்டல் (Standing High Jump) நின்று கொண்டே நீளத்தாண்டல், நின்று கொண்டே மும்முறைத் தாண்டல் (Hop Step & Jump) எனும் மூன்று நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கங்களே பெற்றான்.

நின்று கொண்டே உயரத் தாண்டும் போட்டியில் 5 அடி 5 அங்குலம் உயரத்தைத் தாண்டி, உலக சாதனையையே நிகழ்த்தினான். ஒலிம்பிக் வரலாற்றிலேயே இதுவரை 10 தங்கப் பதக்கங்களை யாரும் வெல்லவில்லை. இவனே வென்றான். அவனை எல்லோரும் மனிதத் தவளை(Human Erog) என்றே செல்லப் பெயரிட்டு அழைத்தனர். ஆனால் அவனது உண்மையான பெயர் ராய் எவ்ரி என்பதாகும்.

இளம்பிள்ளை வாதத்தை மட்டும் வெல்லாமல், எதிரே யாரும் போட்டியிட இல்லை என்று மூன்று ஒலிம்பிக் பந்தயங்களில் வென்று, இவனைப் போல் ‘இனி ஒருவர் இல்லை காண்’ என்று வரலாற்றாசிரியர்கள் புகழும் வண்ணம் வரலாறு சமைத்த ராய் எவ்ரியின் முயற்சியைப் பாருங்கள். நமக்கெல்லாம் ஓர் நல்ல முன்னோடி அல்லவா!