விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/எப்படித்தான் ஜெயிக்கிறார்களோ!

விக்கிமூலம் இலிருந்து
33. எப்படித்தான் ஜெயிக்கிறார்களோ!

உலக அரங்கிலும் சரி, ஒலிம்பிக் போட்டிகளிலும் சரி, நீச்சல் போட்டிகள் என்றால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண் பெண் போட்டியாளர்களே அற்புத சாதனைகளை நிகழ்த்தி, அரிய தங்கப்பதக்கங்களை வென்று தங்கள் தாயகத்திற்குத் திரட்டிக்கொண்டுசென்ற காலம் ஒன்று இருந்தது . ஆனால், அந்த நிலை இப்பொழுது இல்லை. கிழக்கு ஜெர்மானிய வீரர்களும் வீராங்கனைகளுமே இப்பொழுது சிறந்த சாதனை புரிபவர்களாக விளங்குகிறார்கள்.

பெண்களுக்கான நீச்சல் போட்டிகளில் 13 தங்கப் பதக்கங்கள் தான் ஒலிம்பிக் பந்தயத்தில் உண்டு என்றால், அவற்றில் 11 தங்கப்பதக்கங்களை வென்று விடுகின்ற வீராங்கனைகளாக அவர்கள் விளங்குகிறர்கள். இப்படியாக மொத்தம் 36 பதக்கங்களில் 6 போட்டிகளில் வென்று 26 பதக்கங்களைப் பெற்று பெருமையை சேர்த்துத் தந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு நீச்சல் பயிற்சியாளராக இருந்து நிறைய வெற்றிகளை ஈட்டித் தந்த பில்ஸ்வீட்மேன் (Bill Sweetmen) என்பவர் வெற்றி பெற்ற வீராங்கனைகளைக் கண்டார். அவர்களின் அளப்பரிய ஆற்றலை நேரில் பார்த்த பிறகு, அவரால் அவரையே நம்ப முடியவில்லை. அவரும் ஒரு பயிற்சியாளர்தானே! அவர்களால் எப்படித்தான் ஜெயிக்க முடிகிறது என்று யோசனை செய்ய ஆரம்பித்தார்.

நம்மவர்கள் என்றால் அவர்களைப் பார்த்து பல சந்தேகங்களைக் கிளப்பி விடுவார்கள். நமக்கு அப்படி பல சந்தர்ப்பங்கள் இல்லை என்பார்கள். வசதிகள் போதாது. வாழ்க்கை அமைப்பே சரி இல்லை என்று சமுதாயத்தின் மீது பழிசுமத்துவர். தங்களை மட்டும் சாமர்த்தியசாலி என்று கதை கட்டிவிட்டு, பெருமை தேடிக்கொள்வார்கள். ஆனால், பில்ஸ்வீட்மென் எதுவும் பேசவில்லை. கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் வீராங்கனைகள் எவ்வாறு இந்தத் திறமைகள் பெறுகின்றார்கள் என்பதை அறியும் ஆவலுடையவரானார். பயிற்சி முறையும், விஞ்ஞான ரீதியில் பழகித் தரும் முறையும் எல்லா நாட்டினருக்கும் ஒன்றுபோல்தான் அமையும் என்றாலும், இவர்கள் பயிற்சி முறை எப்படி அமைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தார்.

அதனால் பில்ஸ் வீட்மென், மாஸ்கோவிலே தான் தங்கியிருந்த நேரங்களில், அதிகநேரத்தை கிழக்குஜெர்மானிய வீராங்கனைகள் பங்குபெறும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும், வீராங்கனைகளுடன் பேசுவதிலுமே நிறைய செலவழித்தார். அவருடைய நோக்கம் எல்லாம் அவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்பதை அறிவதுதான்.

அவரது முயற்சி தோற்கவில்லை, எதை அறிய வேண்டும் என்று விரும்பினாரோ, அதை, மிகவும் நுணுக்கமான ரகசிய பயிற்சிமுறையை, அறிந்து கொண்டார். அவர்களைப் பயிற்றுவிக்கும் அந்நாட்டினரின் அருந்திறமையையும் பாராட்டி மகிழ்ந்தார்

அதாவது கிழக்கு ஜெர்மானிய விஞ்ஞானிகள், நீச்சல் போட்டிக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளில்தான், மற்ற நாட்டினரிலிருந்தும், மாறுபடுகின்றனர். சிறுமிகளில், பெண்களுக்குரிய ஹார்மோன் (Harmone) சமநிலையை விஞ்ஞான அடிப்படையில் ஆராய்ச்சி மூலமாகக் கண்டுணர்ந்து, அவர்களில் சிறப்பானவர்களையே தேர்ந்தெடுத்துப் பயிற்சியளிக்கின்றனர்.

அவர்கள் தருகின்ற விஞ்ஞானபூர்வமான சிறப்புப்பயிற்சிக்கு சிறுமிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் அவர்கள் திறமை காட்டுவதால்தான். ஒலிம்பிக் பந்தயங்களில் பெரும் வெற்றியடைகின்றனர் என்பதை ஸ்வீட்மென் கண்டுகொண்டார்.

வெற்றியின் ரகசியம் புரிந்தது! நடைமுறைப்படுத்தவேண்டுமே!