விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/கரணம் தப்பினால் மரணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
3. கரணம் தப்பினால் மரணம்!

அவரது தொழில் வழக்கு மன்றத்தில் வழக்காடுவது, வாலிபரான அந்த வழக்கறிஞருக்கு வேறு ஒரு துறையில் ஆசை, ஈடுபாடு. அதில் உலக சாதனை நிகழ்த்திடவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவு. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அவர், உலக சாதனை நிகழ்துகின்ற பணியில் உற்சாகமாக ஈடுபட்டுப் பயிற்சி செய்தார்.

அவர் மேற்கொண்ட காரியம் டிவிஸ்ட்டான்ஸ் ஆடுவது. 1973ம் ஆண்டு கலிபோர்னியா நகரத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்கன், ராகர் கை இங்கிலிஸ் என்பவர் டிவிஸ்ட் நடனம் ஆடி அதாவது 102 மணி நேரம் 28 நிமிடங்கள் ஆடி உலக சாதனை நிகழ்த்தியிருந்தார். அதனை முறியடிக்க முயற்சித்தார் அந்த இளம் வழக்கறிஞர்.

34 வயது நிரம்பிய வழக்கறிஞர் இலங்கையைச் சேர்ந்த கொழும்பு நகரத்து பசுமையான 'மேடை' ஒன்றில் டிவிஸ்ட் நடனத்தைத் தொடங்கினார். அவ்வப்போது தேவையான குளுகோஸ் பழரசம் மற்றும் வேண்டிய பானங்களை அவரது துணைவியார் அவ்வப்போது வழங்கிக் கொண்டேயிருக்க, ஆனந்தமாக அவரது ஆட்டம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

பார்வையாளர்கள் பரவசத்துடன் கைகொட்டி ஆர்ப்பரித்தனர். வெற்றி வெற்றி வீரமுழக்க மிட்டனர். உலக சாதனை என்று உற்சாகமாகக் கூவினர். ஆமாம். அந்த இளைஞர் 128 மணி நேரம் 16 நிமிடங்கள் வரை ஆடியதைத்தான் அவர்கள் ஆனந்தக் கூத்தாடி ஆரவாரத்துடன் பாராட்டினர்.

பாராட்டுக்குரிய வழக்கறிஞர் நடனத்தை நிறுத்தினார். ஆனால் நிற்க முடியாதவாறு நிலைகுலைந்து போனார்.

5

நிமிட இடைவேளை நேரத்தில் அவரால் நடக்கக் கூட முடியவில்லை. மூச்சுத் திணறல் தொடங்கியது. ஆடிய களைப்பு அவரை உயிர்க்காற்றுக்காக அலைமோத வைத்தது.

பிறகு! அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் களைப்பினால் கண்மூடிக் கிடந்தவர் பிறகு, விழிக்கவே இல்லை. வெற்றிமகளின் அரவணைப்பில் அவர் வீர மரணம் அடைந்தார்.

குமார் ஆனந்தன் என்னும் அந்த வழக்கறிஞர் உலகசாதனை நிகழ்த்தினார். என்றாலும் உலக வாழ்க்கையை இழந்து போனாரே! ஆட்டமும் வாழ்க்கையும் விளையாட்டாக இருக்கலாம். விளையாட்டு எப்பொழுதும் வினையாகிவிடக் கூடாது என்பதில் கவனமாகவே இருக்க வேண்டும்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா!