விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/மன்னனும் மக்களும்

விக்கிமூலம் இலிருந்து

1698ஆம் ஆண்டில் ஒரு நாள் ரஷ்ய நாட்டை ஆண்ட மகாபீட்டர் என்னும் மாமன்னன், ராஜதந்திர உறவின் நிமித்தம் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றிருந்தான். மன்னன் போனால் தனியாகவா போவான்! அவன் கூட' ஆள், அம்பு, அணிவகுப்பும்' சென்றது. நாட்டில் ராஜதந்திர பேச்சு வார்த்தைகள் நடத்திவந்த சமயத்தில், ஒரு முறை இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகருக்கும் செல்ல நேர்ந்தது.

அப்பொழுது லண்டனில் மிகவும் புகழ்பெற்ற ஆட்டமாக இருந்த குத்துச்சண்டைப் போட்டியைக் காணும் வாய்ப்பும் மன்னனுக்குக் கிட்டியது. குத்துச் சண்டையின் வேகத்திலும் விவேகத்திலும் மன்னனின் மனம் லயித்துப்போய் விட்டது. போட்டியை மிகவும் ரசித்தான்.

போட்டி முடிந்து தன் இருப்பிடம் வந்து சேர்ந்த பிறகும். அந்தக் குத்துச்சண்டைப் போட்டியைப் பற்றிய நினைவு மனதில் ரீங்காரமிட்டதே ஒழிய, மன்னன் நினைவைவிட்டு மறைந்துபோய்விடவில்லை. மாறாக வளர்ந்துகொண்டே வந்தது.

உடனே தனது மெய்க்காப்பாளர்களையும், மற்றவர்களையும் அழைத்தான் மன்னன், தான் பார்த்த குத்துச்சண்டை போட்டியை விளக்கினான். 'உங்களில் யாராவது ஒருவன் இங்கே உள்ள குத்துச்சண்டைக்காரருடன் போட்டியிட்டு, உங்கள் திறமையை, வலிமையைக் காட்டமுடியுமா' என்று கேட்டான்.

மன்னன் தன் மனம் திறந்து ஆசையைப் பேசிவிட்டான். இங்கிலாந்து நாட்டு வீரனுக்கு ரஷ்ய நாட்டு வீரன் எளிதானவன் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும் என்ற எண்ணம் மன்னனுக்கு இருந்ததுபோலும்.

காவலர்களிலே ஒருவன் அரசனின் ஆவலைக் கண்டு, தான் போட்டியிடுவதாக ஏற்றுக் கொண்டான்.

இந்த போட்டிக்காக 500 கிணி நாணயங்கள் தருவதாகக் கூறினான் மகாபீட்டர். இதைத் தொடர்ந்து சீமார்க்யூஸ் கார்மதன் என்று அழைக்கப்படுகின்ற மாளிகைத் தோட்டத்தில் உள்ள ஓரிடத்தில் போட்டி நடத்தப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

லண்டனில் உள்ள முக்கியமான பிரபுக்களும் பல முக்கியஸ்தர்களும் போட்டியைக் காண வரவேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டது. மகாபீட்டரும், அவனது பரிவாரங்களுடனும் மெய்க்காப்பாளர்களுடனும் மிக ஆவலுடன் போட்டியின் முடிவைக் காண அமர்ந்திருந்தான்.

போட்டித் தொடங்கிவிட்டது. இங்கிலாந்து வீரன், தன்னுடன் மோதவா! என்று சவால் விடும் பாணியிலே ரஷ்ய வீரனை சத்தம் போட்டு அழைத்தான். அனுபவப்பட்ட வீரன் அல்லவா! ஆனால் ரஷ்ய வீரனோ தனது தந்திரப் பாணியிலே முன்னுக்கு வராமல், இருந்த இடத்திலே இருந்து, பயந்தவனாக பாவனை செய்து, சமயம் நோக்கிக் காத்திருந்தான்.

முன்னுக்கு வராமல் இருந்ததை, இங்கிலாந்து வீரன் பயந்துவிட்டான் என்ன எதிரி இவன் என்று திமிராக எண்ணிக்கொண்டான்!' தன்னை மிகவும் பலசாலி, மகாவீரன்' என்றும் கருதிக்கொண்டான். ஆகவே, தானே அவன் இருக்குமிடம் ஓடிவந்து தாக்குதலைத் தொடங்கிவிட்டான்.

இந்தக் குத்துச்சண்டை போட்டியிலே கைகளால் முகத்தில் மட்டும்தான் குத்தலாம் என்பதில்லை. தலையால் மார்பிலே மோதலாம். இடிக்கலாம். தள்ளலாம் என்ற விதியும் அந்த நாளில் இருந்துவந்தது. எனவே இங்கிலாந்து வீரன், இதுதான் சமயம் என்று கருதி ஓடிவந்து, ரஷ்ய வீரன் மார்பிலே மோதித் தள்ள முயன்றான்.

தன் மார்பிலே அவன் மோத வருகிறான் என்று உணர்ந்துகொண்ட ரஷ்ய வீரன், சற்று ஒதுங்கி, திடீரென்று அவன் கழுத்தை தனது வலிய கைகளுக்கிடையில் வைத்துக்கொண்டு ஓங்கிக் குத்தினான். தாக்குதலினால் நிலைகுலைந்து, அடி தாங்கமுடியாமல் கைகால்களைப் பரப்பிக்கொண்டு இங்கிலாந்து வீரன் கீழே விழுந்தான்.

குத்துச்சண்டைக்கு வலிமைமட்டும் போதாது, தந்திரமும் சாமர்த்தியமும் வேண்டும் என்பதை உணர்த்தி, வெற்றிபெற்ற ரஷ்ய வீரனைப் பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி சந்தோஷப்படுத்தினார்கள். அவன் சாதுர்யத்தைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

தனது வீரனின் வெற்றியை பாராட்டிய மகாபீட்டர், மகிழ்ச்சியில் மூழ்கினான். மேலும் 20 கிணி நாணயங்களை பரிசளித்துப் பாராட்டினான். தோற்ற இங்கிலாந்து வீரனுக்கு மருத்துவ உதவி செய்த வைத்தியருக்கு 20 கிணி நாணயங்கள் தந்து, தன் மகிழ்ச்சியையும் பெருந்தன்மையையும் காட்டிக் கொண்டான்.

மன்னன் தன்னைப்போலவே தனது மக்களும் வலிமையுடையவர்களாக விளங்கவேண்டும் என்று விரும்பினான். ஊக்குவித்தான். உற்சாகப்படுத்தினான். தெரிந்தும் பாராட்டினான். மனம்போல பரிசளித்தான்.

இப்படி இருக்கும் நாட்டில்தான் மக்களும் உடலைப் போற்றி வலிமையுடன் வாழக்கூடும். வாழ்கிறார்கள். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. நம் நாட்டில் விளையாட்டுக்கு ஏன் போய் செலவு செய்யவேண்டும் என்று கேட்ட ஆட்சியாளர்களையும் பார்க்கிறோம். பிறகு எங்கே விளையாட்டுத்துறை இங்கே வளரும்? உருப்படும்!