விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/மனம் கலங்காத மாவீரன்
'விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டால் வெற்றிதான் பெறவேண்டும். தோல்வி அடையக் கூடாது' என்பதுதான் பங்குபெறுபவர்கள் அனைவருடைய ஆத்மார்த்த நோக்கமாக அமைந்திருக்கிறது. ஆனால், நடக்கும் போட்டியின் முடிவை முன்கூட்டியே யாரால் நிர்ணயிக்கமுடியும்? எப்படி எதிர்பார்க்க முடியும்?
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்பார்கள். இருவர்வெல்வது இயற்கையுமல்ல. ஆகவே, போட்டியானது ஒருவரது திறத்தையும், விவேகத்தையும், போட்டியிடும் முறைகளில் பின்பற்றும் பண்பாற்றலையும் பொறுத்துத்தான் வெளிப்படுகின்றதே தவிர, வெற்றியும் பரிசும்தான் முக்கியம் என்று விரும்பும் முரட்டுத்தனமான கொள்கைக்காக அல்ல!
வெற்றி பெறும்பொழுது மமதையும் வெறியும் அடைவதும், தோல்வி காணும்பொழுது தொய்ந்தும் துவண்டும் சோர்ந்துபோய்விடுவதும் உண்மையான விளையாட்டு வீரருக்கு அழகல்ல. அப்படி அவன் கலங்கினால், கவலைப்பட்டால், அவன் ஒரு பண்பட்ட விளையாட்டு வீரனுமல்ல. பகட்டித் திரியும் வித்தைக்காரன் போல்தான் அவன் இருக்கிறான். அதுதான் உண்மை.
இங்கே ஒரு விளையாட்டு வீரரைப் பாருங்கள். சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர். 14 முறை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு (14Innings) கஷ்டப்பட்டு ஆடியபிறகு அந்த ஆட்டக்காரர் எடுத்த` ஓட்டங்கள்' எவ்வளவு தெரியுமா! மொத்தம் மூன்றே மூன்று ஓட்டங்கள்தான்.
அப்படியா! அவர் எப்படி ஆடியிருப்பார் என்று நீங்கள் கணக்குப் பார்க்கவேண்டாமா! தன் ஆட்டம் எடுபடவில்லை, 'ஓட்டம்' வந்து கூடவில்லை என்பது அறிந்தும், அவர் கவலைகொள்ளவில்லை. தனக்குரிய வாய்ப்பைப் பயன்படுத்தி விளையாடினார். முடிந்தவரை ஆடினார். அப்படியும் அவர் எடுத்த ஓட்டம் 0, 0, 0 ஆட்டம் இழக்கவில்லை, 1, 1 ஆட்டம் இழக்கவில்லை, 0, 0, 0, 0, 1 ஆட்டம் இழக்கவில்லை, (Not out) 0, 0, 0, 0 என்றே ஆடியிருக்கிறார்.
11 முறை விளையாடும்போது 0 ஓட்டம், மூன்று ஆட்டத்தில் 3 ஓட்டம். அதற்காக அவர் கலங்கினாரா! இல்லை. விளையாட்டை விளையாட்டுக்காக விளையாடினார். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.
தோல்வியில் அவர் அனுபவத்தைக் கண்டார். தைரியத்தைக் கொண்டார். பின்னால் அவர்பெரும் புகழ்பெற அந்த மனோதைரியமே காரணமாக அமைந்தது
நமக்கெல்லாம் தைரிய நெஞ்சமும் மனச்சாந்தியும் தந்திட முன்மாதிரியாக அமைந்த அந்த மாவீரனின் பெயர் ஜி.டெய்ஸ் என்பதாகும். இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயர் எனும் மாநிலத்தவர். அவர் ஆடிய காலம் 1907 ஆம் ஆண்டு ஆகும்.