விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/தீமையிலும் நன்மை
கிரிக்கெட் ஆட்டம் 'சிறந்த பண்புள்ளவர்கள் ஆடும் ஆட்டம்' என்ற பெயர் பெற்றதாகும். ஆனால், அதில் பங்கு பெற்றவர்களில் பலர் வம்பர்களாகவும், விதண்டாவாதக்காரர்களாகவும் விளங்கிய காரணத்தால்தான், விளையாட்டில் பல புதிய விதிகள் தோன்றின என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
'தீமையில் நன்மை' என்பார்களே அதுபோல, ஒரு தீமைதான் ஒரு புதிய விதி, கிரிக்கெட் ஆட்டத்தில் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. அதுவே, ஒரு பூரண திருப்தி தரும் செயலாகவும் மலர்ந்து மிளிர்ந்தது.
கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தடித்தாடும் மட்டையானது (Bat) இந்த அளவில், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு விதி முறை இல்லாதிருந்த காலம்; அந்தந்த ஆட்டக்காரர்கள் அவரவர்க்கு விருப்பமான தன்மையிலேயே பந்தடித்தாடும் மட்டையைக் கொண்டுவந்து ஆடலாம். அப்படித்தான் 1744ஆம் ஆண்டுவரை கிரிக்கெட் ஆட்டம் தொடர்ந்துவந்தது.
ஹேம்பில்டன், செர்ட்சி எனும் இரு குழுக்களுக்கு இடையே ஹேம்பில்டன் எனும் இடத்தில் 1771ஆம் ஆண்டு கிரிக்கெட்போட்டி ஒன்று நடைபெற்றது. அந்தப்போட்டிக்கு ஆயிரம் ரூபாய்க்குமேல் பந்தயப் பணமும் கட்டப்பட்டிருந்தது. பந்தயத்தில் தோற்க யாருக்குத்தான் ஆசை வரும்! கட்டுக்கடங்காத ஆசையுள்ள ஒரு ஆட்டக்காரன்; ஆட்டத்தில் பங்குபெற வந்தான்! எப்படி?
செர்டிசி குழுவினர் பந்தெறியும் வாய்ப்புப் பெற்று மைதானத்தில் நின்றபோது, பந்தடித்தாட தாமஸ் ஒய்ட் என்பவன் தனது பந்தாடும் மட்டையுடன் வந்து, விக்கெட்டின் முன்னே நின்றான். பார்த்தவர்களுக் கெல்லாம் பகீர் என்றது.
தாமஸ் ஒய்ட் வைத்திருந்த பந்தாடும் மட்டையின் அகலமும் விக்கெட்டின் அகலமும் சரியாக இருந்தது. அவர் அந்த மட்டையை வைத்துக்கொண்டு நின்றுவிட்டால், விக்கெட்டையே மறைத்துவிடும். அதனால், அவரை ஆட்டமிழக்கச் செய்யவே முடியாது. அவ்வளவு அகலமானதாக இருந்தது அந்த மட்டை.
செர்டிசி குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கூச்சல் போட்டனர். குழப்பம் அதிகமாகியது. அவர்களிலே ஒருவர் தாமஸ் ஒய்ட் வைத்திருந்த மட்டையை வாங்கினார். அவர் கையில் ஒருவர் சிறு பேனாகத்தியைத் திணித்தார். உடனே மட்டையைச் சீவும் பணி தொடங்கியது.
கோபம் கொப்புளித்துக்கொண்டு வந்தாலும், ஒன்றும் செய்யமுடியாமல் தாமஸ் ஒயிட்டால் வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது. இப்படி குழப்பத்தில் தொடங்கி கூச்சலில் எழும்பி, பிறகு ஆட்டக்காரர்களுக்கிடையே அமைதியான சமாதானப் பேச்சு தொடர ஆரம்பித்தது. பிறகு, ஒரு முடிவும் பிறந்தது.
அதாவது, பந்தாடும் மட்டையின் அகலம் இஷ்டப் பட்டவர்களுக்கு ஏற்ப இஷ்டப்பட்ட அகலத்தில் இனிமேல் இருக்கக்கூடாது என்று ஒரு வரம்பினைக் கொண்டு வந்தனர். மட்டையின் அகலம் நாலேகால் அங்குலத்திற்குமேல் போகவே கூடாது என்றும் விதியமைத்தனர். அதுவே இன்னும் அப்படியே மாறாமல் இருக்கிறது.
அடங்காத ஆட்டக்காரர் தாமஸ் ஒய்ட் கொண்ட விபரீத ஆசை, இன்றும் தொடர்ந்து வருகிற ஒரு விதி அமையக் காரணமாக இருந்ததே! அவரை நாம் பாராட்டலாம். எதிராட்டக்காரருக்குத் தீமையாக இருந்தது. எல்லோருக்கும் நன்மையாக முடிந்ததே. இதைத்தான் தீமையிலும் நன்மை என்று பெரியோர்கள் கூறுகின்றார்களோ என்னவோ!