விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/இப்பொழுது எப்படி

விக்கிமூலம் இலிருந்து
7. இப்பொழுது எப்படி!

'என் பாட்டன் கலெக்டர், நான்தான் வேலையில்லாமல் தெருவில் நிற்கிறேன்' என்று எவனாவது ஒருவன் கூறினால், அவனை யார் மதிப்பார்? பழம் பெருமை பேசுவதில் புண்ணியமில்லை. இன்று நீ என்ன செய்கிறாய்? எப்படி இருக்கிறாய்? எவ்வாறு செயல்படுகிறாய்? எந்த நிலையில் உன்திறமை இருக்கிறது என்பதை வைத்துத்தான், உன் பெருமை கணக்கிடப்படுகிறது. 'உன் இடமும் நிர்ணயிக்கப் படுகிறது' என்பதை எல்லோரும் உணரும் காலம் வந்துவிட்டது.

சொல்லுக்கும் செயலுக்கும் பல சமயங்களில் சம்பந்தம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைப்பெற்ற (1980) கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஒரு சுவையான சர்ச்சை எழுந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சிறந்த பிரபல ஆட்டக்காரர், உலகப் புகழ் பெற்றவராக விளங்கியவர் முஷ்டாக் முகமது என்பவர், தனது 13 வயதிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர். சிறந்த சாதனைகளையும் ஏற்படுத்தியவர். 1979-ம் ஆண்டு இந்தியாவில் போட்டியிட வந்த போட்டிக்குரிய பாகிஸ்தான் குழுவில், அவர் இடம் பெறவில்லை, அதுபற்றி முஸ்டாக் முகமதுவே வியப்புத் தெரிவித்திருந்தார். தான் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதுதான் அவருக்குரிய வியப்பும் வினாவும்.

ஆனால், பாகிஸ்தான் அணியைத் தேர்ந்தெடுத்தது பற்றி காணல் ரபிக் என்பவர் அதுபற்றி விளக்கம் தெரிவித்தார். 'முஸ்டாக் முகமதுவின் சேவையில் பாகிஸ்தான் அதிகமாகப் புகழ் பெற்றது உண்மைதான். அவரும் சிறந்த ஆட்டக்காரர்தான்.ஆனால் கடந்த ஒன்னரை ஆண்டு காலமாக அவரது ஆட்டம் முன்போல் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவ்வாறு அவர் நன்றாக ஆடாததால்தான், இந்தத் தேர்வில் அவர் தேறவில்லை. அணியில் இடம் பெறவில்லை."

'நீ ஆளைச் சொல்லு நான் 'ரூலை'ச் சொல்கிறேன்' என்கிற இந்தக் காலத்தில் இப்படி ஒரு பதில். செயல்.

ஒருவர் எப்படி இருந்தார் என்று பழையதையே நினைத்து பெருமைப்பட்டு, வாய்ப்பளிக்கும் நம்மவர்கள் இதை ஒரு பாடமாகக் கொள்ளவேண்டும். ஒருவர் எப்படி இருந்தார் என்பதை மறந்துவிட்டு, இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பதை உணர்ந்து ஆட்டக்காரர்களை நாமும் தேர்ந்தெடுத்தால், இந்தியாவும் பல ஆட்டங்களில் உலக வெற்றி நாடாக வரலாம்! வருங்காலம் வளமாகலாம் என்று நாமும் எதிர்பார்ப்போம்.