விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/சைக்கிள் தந்த சந்தர்ப்பம்
முகமது அலி என்ற பெயரைச் சொன்னவுடனே 'இவர் பெரிய குத்துச்சண்டை வீரராயிற்றே 'என்று சிறு குழந்தைகூட கூறும் அளவுக்கு உலகப் புகழ்பெற்ற வீரர் முகமது அலி. ஆரம்ப காலத்தில், அவருக்கு அவர் பெற்றோர் வைத்திருந்த பெயர் கேசியாஸ் கிளே என்பதாகும். பின்புதான் முகமதுஅலி என்று தன் பெயரை மாற்றி வைத்துக்கொண்டார்.
நீக்ரோ சிறுவனான கேசியஸ் கிளே, இந்த குத்துச் சண்டை உலகில் எப்படி புகுந்தார்? அவராக வரவில்லை, அவரை இந்த உலகிற்கு வரவழைத்தது அவருடைய சைக்கிள்தான். இவர் சிறுவனாக இருந்தபொழுது மிகவும் பிரியமாக போற்றி வைத்திருந்த அவருடைய சைக்கிளை, எந்தத் திருடனோ தெரியாமல் எடுத்துக் கொண்டு போய்விட்டான். கிளே அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.
'அவனை ஒரு காலத்தில் எப்படியாவது கண்டுபிடித்து விடுவேன். அப்பொழுது அவனைப் பிடித்து, மனமார அடித்துத் தீர்த்துவிட வேண்டும் 'என்று அந்த சிறுவன் மனம் விரும்பியது.
அதற்கு ஒரே ஒரு வழி, தன் உடம்பை தயார் செய்து கொள்ளவேண்டும். வலிமையுடன் தாக்கும் வல்லமையைப் பெறவேண்டும், தன்னையும் காத்துக் கொள்வதுடன், முடிந்தால் பிறர்க்கும் உதவவேண்டும். என்று முடிவு செய்துகொண்டு, கேசியஸ் கிளே குத்துச் சண்டை கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.
வேறு பல காரணங்களும் இருந்தாலும் குத்துச் சண்டையை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டான். சைக்கிள் தந்த சந்தர்ப்பத்தைப் பாருங்கள்.உலகிலேயே சிறந்த வீரன் என்ற பட்டத்தை வாங்கித்தந்ததுடன், கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்வும் உதவி செய்தது. இன்று முகமது அலி என்ற வீரனுக்கு இணையாகக் கூறிட யாருமே இல்லை என்று பெரும் சாதனையையும் சாதித்து விட்டான்.
ஆகவே, இந்த சூழ்நிலையை உண்டு பண்ணிய பெயர் தெரியாத திருடனை நாம் வாழ்த்தலாமா? வீரனின் பிரியமான சைக்கிளையும் நாம்நினைவு கூர்வோமே!
சந்தர்ப்பங்களே மனிதனை உருவாக்குகின்றன. அதற்கு சான்றாகத் திகழ்கின்ற வீரர்களுள் முகமது அலியும் ஒருவர் என்றால் ஆச்சரியமே இல்லை.