விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/சீட்டாட்டப் பைத்தியம்
ஜெர்மானிய நாட்டில் ஒருவர் இருந்தார். அவர் பெயர் லீபன் (Lueban) என்பதாகும். அவர், ஒரு உலக சாதனை செய்யவேண்டும் என்று விரும்பினார், சீட்டாட்டப் பிரியர் அவர். வேறு என்ன சிந்தனை அவருக்கு வரும்? சீட்டாட்டத்தில் சிறப்பான காரியம் பண்ணத் தொடங்கினார்.
ஒரு சீட்டுக்கட்டை எடுத்துக் கொண்டார். அந்த சீட்டுக்கட்டை கலைத்துப் (Shuffle) போட்டு, பிறகு ஒரு குறிப்பிட்ட வரிசைப்படி ஒழுங்குபடுத்தலானார். அவ்வாறு சீட்டுகளை சேர்த்துக் கட்டாக்கிய பிறகு கலைத்து ஒவ்வொன்றாகப் போட்டு, பிறகு வரிசைப் படுத்துவது. இப்படிச் செய்தால் ஒருமுறை செய்ததற்கு அர்த்தம்.
இப்படி அவர் நாற்பத்திரெண்டு லட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து இருபத்தி எட்டு முறைகள் 42, 46, 028) செய்து உலக சாதனையை ஏற்படுத்தினார். இதற்காக அவர் ஒருநாளைக்கு 10 மணிநேரம் சீட்டுக்களை வைத்துப் புரட்டினார். இப்படியாக 20 ஆண்டுகள் தொடர்ந்து புரட்டினார் சீட்டுக்களை.
பிறகு என்ன ஆயிற்று! அவர் ஒரு உலக சாதனையை நிகழ்த்திய மகாவீரர் என்ற புகழையும் பெயரையும் பெற்றார். ஆனால் அந்தப் பெயரையும் புகழையும் கேட்கத்தான் அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை.
ஏன் தெரியுமா! அதற்குள் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. பைத்தியக்காரருக்கு என்ன புரியும்? பாவம்! வேண்டாத வேலை சீட்டாட்டப் பைத்தியம் என்பார்கள். சீட்டாடியே பைத்தியம் பிடித்து விட்டது! இது எப்படி இருக்கிறது!
சாதனை நிகழ்த்த வேண்டும் என்று சோதனைகளில் தன்னை ஆழ்த்திக் கொள்வது வீரர்களுக்கு அழகுதான்.
ஆனால், சாதனைக்காக தன்னை வேதனைக்கு உள்ளாக்கிக் கொண்டு, வாழ்க்கையையே வீணடித்துக் கொள்ளும் வேண்டாத வேலையை விளையாட்டு விரும்புவதில்லை.
மனித இனத்தை வாழவைக்கவே, விளையாட்டு உதவுகிறது. இதை உணர்ந்து, விளையாட்டு வீரர்கள் விளையாட வேண்டும். நலம்பெற வேண்டும்.