விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/குத்துச் சண்டைக்காரருக்கு குருட்டு யோகம்
ரஷ்யநாட்டு தாஷ்கண்ட் மாநிலத்தில் உள்ள உஸ்பேக் திரைப்பட ஸ்டுடியோவில், ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருந்தார் டைரக்டர் எடுவர்டு காசாடு ராவ் என்பவர், அவர் எடுக்க இருந்த படத்தின் பெயர் தி சேலன்ஞ் (The Challenge). அதாவது சவாலுக்கு அழைத்தல் என்பதாகும் . சோவியத் நாட்டின் சிறந்த குத்துச்சண்டை வீரர் ரிபாட் ரிஷ்கிவ் (Rifat Riskiew) எனும் வீரர், உலக நடு எடைப்பகுதி பிரிவில் வெற்றிபெற்று உலக வெற்றி வீரராகத் திகழ்ந்து, தன் தாயகத்திற்குப் புகழ் சேர்த்த பெருமையாளர். அவரை முன்மாதிரியாக வைத்து குத்துச் சண்டைப் போட்டி பற்றியேதான் அந்தப்படம் எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கதாநாயகனாக நடிக்க ரிபட்ரிஷகிவ் போன்ற முகமும் உடலமைப்பும் உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் டைரக்டர் கடுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. எத்தனையோ ஆட்களைப் பிடித்து, ஒப்பனை போட்டுத் தேர்வு செய்தாலும் இறுதியில் எதுவும். பொருத்தமில்லாமலே போயிற்று
எதிர்பார்த்த பலனும் கிடைக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்படுகிற அந்தக் கதாநாயகனுக்கு பயிற்சி அளிக்கக் காத்திருந்தார் ரிபட். இனிமேல் காத்திருக்க முடியாது என்ற முடிவில் ஒரு முடிவெடுத்தார் டைரக்டர்.
'யாரும் தேர்வுக்கு வேண்டாம். நீங்களும் பயிற்சி தர காத்திருக்க வேண்டாம். அந்தக் கதாநாயகன் வேடத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டு நடித்துவிடுங்கள். எனக்கும் தேர்ந்தெடுக்கும் சிரமம் குறையும். உங்களுக்கும் பயிற்சிதரும் சிரமம் குறையும்' என்று பயிற்சியாளரையே தேர்ந்தெடுத்து விட்டார்.
நம்மவர்கள் என்றால், குத்துச்சண்டைக்காரருக்கு குருட்டு யோகம் அடித்து விட்டது பார்த்தீர்களா! என்று கேலிகலந்த கிண்டல் மொழிகளை அள்ளி வீசி மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், உண்மையான உழைப்புக்கு உண்மையான உரிய மதிப்பு கிடைத்தது பார்த்தீர்களா என்று அங்கே 'மனநிறைவு பெற்றார்கள். நாமும் அப்படியே எண்ணி மகிழ்வோமே!'