விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/செத்தும் ஜெயித்த சீமான்

விக்கிமூலம் இலிருந்து
28. செத்தும் ஜெயித்த சீமான்!

ஜெயித்தவன் சாகலாம். அது இயற்கைதான். ஆனால், செத்தவன் ஜெயித்தான் என்றால் அது எப்படி? இயற்கைக்கு மாறாக அல்லவா இது இருக்கிறது! உண்மைக்குப் புறம்பாக அல்லவா நமக்குத் தெரிகிறது!

ஜெயிப்பதற்காகத்தான் போராட்டம் நடக்கிறது. செத்துவிட்டால் எப்படி போராட முடியும்? செத்துக் கொண்டே ஜெயித்தானா? இல்லையென்றால் போனால் போகிறது பாவம் என்று எதிரி தன் தோல்வியை தானாக முன்வந்து ஒத்துக்கொண்டானா!

கேள்விகள் பல கிளைவிட்டுக் கிளம்புவது புரிகிறது. அப்படி நமக்கு ஆர்வம் ஊட்டும் அத்தகைய அதிசயமான சம்பவத்தை என்னவென்று இனி பார்ப்போம். பிறகாவது மனதில் அமைதி காணலாம் அல்லவா!

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கீர்த்திமிக்க கிரேக்கர்கள், ஒலிம்பிக் பந்தயங்கள் நடத்தி, தங்களின் ஒப்பற்ற ஆற்றலையும் அறிவாண்மையையும் உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில்தான், இந்த விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓடுவது, தாண்டுவது, வேல் எறிவது, தட்டெறிவது போன்ற நிகழ்ச்சிகளைப் போல, குத்துச்சண்டை மல்யுத்தப் போட்டிகளும் அங்கே நடைபெற்றன. அது மட்டுமன்றி, பயங்கரப் போட்டி ஒன்றையும் நடத்தினார்கள். பங்ராஷியம் என்பது அதன் பெயர்.

இந்தப்போட்டியானது, மல்யுத்தமும் குத்துச்சண்டையும் கலந்து உருவாக்கிய ஒரு கொடுமையான போட்டியாகும். இதற்கென்று வரைமுறையான விதிகள் எதுவும் இல்லை எப்படி வேண்டுமானாலும் பிடிபோடலாம். எதிரியைக்

குத்தலாம், முடிந்தால் கடிக்கலாம், விழுந்து அமுக்கலாம், முறுக்கலாம், எலும்பை முறிக்கலாம். விதிகள் குறுக்கே வராது.

இந்தப் பயங்கரப் போட்டியில்தான் இப்படி ஒரு சுவையான சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்திற்குக் காரணமாக அமைந்த அந்த வீரனின் பெயர் அரேசியன் (Arrachian) ஆகும்.

ஏற்கனவே நடந்திருந்த ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி வீரனாகத் திகழ்ந்திருந்த அரேசியன், இந்த ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியுடன் வந்திருந்தான். வெற்றி பெறாமல் செல்வதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டும் இருந்தான்.

விளையாட்டரங்கத்திலே, நடுவர்கள் முன்னிலையில் இந்தப் பயங்கரப் போட்டியான பங்ராசியம் நடக்கத் தொடங்கியது. புகழைப் பெறும் ஆவலில், வெற்றிக்காண, வீரர்கள் இருவரும் சண்டைபோடத் தொடங்கினார்கள்.

சண்டையின் உச்சக்கட்டம். அரேசியனை எதிர்த்த வீரன், அரேசியன் குரல்வளையை தனது கைகளால் அழுத்தி நெறித்துக் கொண்டிருந்தான். விடுபடமுடியாத பிடியின் இறுக்கத்தால் மயக்கம் அடைந்த அரேசியன், தனது கைகளால் எதிரியின் வலதுகாலைப்பிடித்து முறுக்கிக் கொண்டிருந்தான்.

மூச்சுத்திணறி, மரண அவஸ்தையின் வெறியில் அரேசியன் கைகள் எதிரியின் கணுக்கால் மூட்டினை நழுவச் செய்துவிடவே, எதிரி வேதனை தாங்க முடியாமல், தனது இருகைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி விட்டான்.

போரிடும் ஒருவன் தன் இருகைகளையும் உயர்த்தி விட்டால் அவன் தன் தோல்வியை ஒத்துக்கொண்டதாக அர்த்தம். அப்படித்தான் விதி அமைந்திருந்தது. எதிரி தன்

தோல்வியை, கைகளை உயர்த்திக் காட்டிய நேரத்தில், அரேசியன் மூச்சடங்கிக் கிடந்தான்.

அரேசியன் வெற்றி பெற்றான் என்று அறிவித்த நடுவர்கள், அருகில் வந்து பார்த்தபோது, பிணமாகிக் கிடந்தான். என்றாலும் போட்டி விதியின்படி முடிவு தரப்பட்டது. அரேசியன் தலைவிதி அவனுக்கு அகால மரணத்தை அளித்தது. ஆனால் ஒலிம்பிக் விதியானது அவனுக்கு வெற்றி வீரன் பட்டத்தை அளித்தது.

செத்தவன் ஜெயித்தான் என்ற தீர்ப்புவழங்கி, நடுவர்கள் நியாயம் காத்தார்கள். இந்த சுவையான நிகழ்ச்சி, விளையாட்டு உலகில் அதிசயமான சம்பவமாகவே வரலாற்றாசிரியர்களால் விவரிக்கப் படுகிறது. உண்மையாகவே பங்ராசியம் பயங்கரப்போட்டிதான்.முடிவும் பயங்கரமாகவே முடிந்துவிட்டிருக் கிறதல்லவா!