விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/கேட்டால் கொடுக்கப்படும்

விக்கிமூலம் இலிருந்து
27. கேட்டால் கொடுக்கப்படும்!

'மதுரையில் அடிவாங்கியவனுக்கு மானாமதுரையில் மீசை துடித்ததாம் ஆவேசத்தில்' என்று பழமொழி ஒன்று கூறுவார்கள். அடிபட்டவனுக்கு ஆவேசம் அவ்வளவு வேகமாக வந்திருக்கிறது!

எதையும் சுடச் சுட செய்யவேண்டும் என்கிறவர்கள், இந்தப் பழமொழியை அடிக்கடி கூறுவார்கள். ஆமாம்; அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலையைச் செய்யத் தவறிவிட்டால், எதுவும் நடக்காமல் போய்விடும். எளிதாகப் பெறக்கூடியதையும் இழக்க நேரிடும்!

‘எப்பொழுதோ ஒருமுறை நம்மையறியாமல் நாம் போய்கேட்டால் நடக்காததும் நடந்துவிடும் என்கிற நிலைமையாலும் வாழ்க்கை மாறி அமைவதுண்டு.

விளையாட்டு மட்டும் விதிவிலக்கா என்ன!

இங்கிலாந்து ஆட்டக்காரர்களில், அதுவும் குறிப்பாக, கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் தலையாய இடத்தைப் பெற்றிருப்பவர் காலம் சென்ற W.G. கிரேஸ் என்பவர். தொழிலில் டாக்டராக இருந்தாலும், கிரிக்கெட் ஆட்டத்தில் புலியாக விளங்கியவர்.

தனது 60ம் வயது வரை முதல்தர கிரிக்கெட் ஆட்டம் ஆடி ஓய்வு பெற்றவர். அவர் கிரிக்கெட் ஆடிய நாட்களில் ஒருநாள் நடுவரிடம்அவர்கேட்டார். அது கிடைத்தது. அதுவே ஆட்டத்தில் விதியாக மாறிவிட்டது. வழியாகவும் அமைந்து விட்டது.

கிரிக்கெட் ஆட்டம் நாள் முழுதும் ஆடப்பெற்று, முடிவு அடையக்கூடிய நேரம். W.G. கிரேஸ் பந்தை தடுத்தாடும் குழுவில் (Fielding Side) இருந்து ஆடிக்கொண்டிருக்கிறார். இதுதான் கடைசி பந்தெறி (Last Ball) என்ற எறியும் நிலையில், அந்தப் பந்தானது, பந்தாடுபவரின் கால்மெத்தை (Pads) மீது பட்டுவிட்டுப் போகிறது, ஆட்டமும் முடிகிறது. அது விக்கெட்டின் முன்னே கால் இருந்ததாகத் தான் (L.B.W.) அர்த்தம். அதைப்பற்றி நடுவரிடம் யாராவது முறையிட்டுக் கேட்டிருக்கலாம். யாரும் முறையிடவில்லை என்றதால், நடுவரும் முடிவு தரவில்லை. அன்றைய ஆட்டம் அப்படியே முடிந்தது.

அன்றைய மாலைப்பொழுதில், பந்தடித்து ஆடிய ஆட்டக்காரர் கிரேஸிடம் வந்து, நல்லவேளை! என்கால் மெத்தையில் பட்ட பந்துபற்றி யாரும் முறையிடவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் நான் ஆட்டம் இழந்து போயிருப்பேன்! என்று உரைத்துவிட்டு, அல்ல அல்ல, உளறிவிட்டுப் போய்விட்டார்.

மறுநாள் காலையில் ஆட்டம் தொடங்கியது. முதல்பந்து எறிவதற்கு முன்னே, கிரேஸ் ஒரே கத்தாகக் கத்தினார். அது என்ன? (How is That) என்றுதான்.

முதல்நாள் மாலையில் கடைசி பந்து எறிந்ததற்கு மறுநாள் காலையில் முறையிடுகின்றார். அது என்ன என்று! நடுவரும் 'ஆமாம்! அது விக்கெட் முன்னே கால்தான்' (L.B.W.) என்பதாகக் கூறி, அந்த ஆட்டக்காரரை அவுட்டாகி விடுகின்றார்.

தவளை தன்வாயால் கெடும் என்பார்கள். அந்த ஆட்டக்காரரும் தன்வாயால்கெட்டார். ஆட்டம் இழந்துபோனார்.

காலம் கடந்து போனாலும், கிரேஸ் கேட்டார். நல்ல முடிவே கிடைத்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியும் ஒரே ஒரு முறைதான் நடந்தது. அதற்குப் பிறகு விதி ஒன்று புதிதாகப் புகுத்தப்பட்டது. எதையும் அப்பொழுதே கேட்கவேண்டும் என்பதுதான். அதாவது அடுத்த பந்து எறியப்படுவதற்கு முன்பு.

எப்படி இருக்கிறது பார்த்தீர்களா! வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பார்களே! கிரேஸ் இப்படி கேட்டதால், சரித்திரத்தில் சாகாமல் பிழைத்துக் கொண்டிருக்கிறாரே!