விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/பெர்னாட்ஷா பேசி விட்டார்

விக்கிமூலம் இலிருந்து
24. பெர்னாட்ஷா பேசி விட்டார்!

'பதினொரு முட்டாள்கள் விளையாடுகிறார்கள். அதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கின்றார்கள் என்று கிரிக்கெட் ஆட்டத்தைக் கேலியாக வருணித்தார் என்றுபேரறிஞர் பெர்னாட்ஷாவை குறிப்பிடுவார்கள். அவர் விளையாட்டுக்கு எதிரியோ என்னவோ, ஆனால் அவர் எந்த ஒரு செயல்பற்றியும் அணுகுகின்ற முறை, மற்றவர்களைவிட மாறுபட்டதாகவே இருக்கும்.

ஒருநாள் பெர்னாட்ஷா தனது நண்பருடன் ஒரு ஓட்டல் ஒன்றில் அமர்ந்திருந்தார். அமைதியும் தனிமையுமான சூழ்நிலை அமையவேண்டும் என்பதற்காக அங்கே வந்திருந்தார் போலும். அந்த ஓட்டலின் அடுத்த மண்டபத்தில், ஓர் இசைக்குழு தனது சங்கீதப் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

சங்கீதம் முன்னுக்குப் பின் முரணான இசையுடன் வந்ததல்லாமல், அதிக சத்தமாகவும் இருந்தது. இதைசகித்துக் கொள்ள முடியாமல் பெர்னாட்ஷா திணறிக்கொண்டிருந்தார். இந்தசமயத்தில், இசைக்குழுவை நடத்தும் இயக்குநர், தான் இருந்த இடத்திலிருந்து பெர்னாட்ஷாவைப் பார்த்துவிட்டார்.

அங்கிருந்து அவசரமாக பெர்னாட்ஷாவிடம் வந்தார். பெரிய எழுத்தாளர், புகழ்பெற்ற ஆசிரியருமான பெர்னாட்ஷாவை கெளரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர் வந்தார். வந்ததும், அவர் அருகில் அடக்கமாக பவ்யமாகக் குனிந்து, உங்களைப் பெருமைப் படுத்த விரும்புகிறோம். உங்களுக்காக நாங்கள் என்ன Play பண்ணவேண்டும் என்று கேட்டார். உடனே பெர்னாட்ஷா, நீங்கள் செஸ் Play பண்ணுங்கள் என்றார். சத்தம் போட்டுக் கழுத்தறுக்க வேண்டாம். சத்தமில்லாமல் சதுரங்கம் ஆடுங்கள் என்ற பொருளில் சொன்னவுடன் இசை நடத்துனர் அங்கே எப்படிநிற்பார்?

நாராசமாக துளைத்த இசையை நிறுத்த புதுமுறையில் பேசினார் பெர்னாட்சா. கிரிக்கெட்டை கேலியாகப் பேசியது போல, சதுரங்கத்தையும் சாடவில்லை அவர். நல்லவேளை! சதுரங்கம் பெர்னாட்ஷாவிடம் தப்பித்துக் கொண்டது.