விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/மன்னனும் மனிதன்தான்
ஒரு கிரிக்கெட் போட்டி ஆட்டம் நடைபெறுகிறது என்றால், குறைந்தது 20,000 பேர்களாவது உட்கார்ந்திருந்து பார்த்து, மகிழ்கின்றார்கள். கிரிக்கெட் ஆடத் தெரியாவிட்டாலும், அதைப்பற்றி என்னவென்று கூட புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்கூட, கிரிக்கெட் வர்ணனைக் கேட்பது, மற்றவர்களிடம் தனக்குத் தெரிந்தது போல் நடிப்பது எல்லாம் ஒரு 'பேஷன்' ஆக இப்பொழுது நடைபெறுகிறது.
ஆனால், கிரிக்கெட் சரியாக வளர்ச்சியடையாத நாட்களில்கூட, பிரபுக்கள், பெரும் பணக்காரர்கள் இடையே இப்படித்தான் இந்த ஆட்டம் அதிகபிரபலம் அடைந்திருந்தது. பின்னர் அவர்களுக்கிடையே இருந்து கொஞ்சங் கொஞ்சமாக அரச பரம்பரைக்கும் போய் ஆரத் தழுவிக்கொண்டது.
அதன் காரணமாக, அரசர்களின் ஆதரவுமட்டு மில்லாமல், அரசகுடும்பமே ஆடியும் பார்த்தும் மகிழ்கின்ற தன்மையில் கிரிக்கெட் வளர்ந்தது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில், மன்னர்கள் இந்த ஆட்டத்தின் மேல் எல்லையில்லா அன்பும் ஈடுபாடும் காட்டி வளர்த்து வந்தார்கள்.
ஆட்டத்தின் முன்னே மன்னனும் மண்ணில் உழைக்கும் விவசாயியும் ஒன்றுதான் என்பார்கள். மன்னன் என்று பார்த்து பயந்து, பந்து ஒதுங்குமா! அல்லது தாக்காது போய்விடுமா!
பண்பாளர்கள் ஆடுகின்ற ஆட்டம் என்று பேர்பெற்ற ஆட்டத்தில் பற்று வைத்திருந்தவர்களைவிட பைத்தியமாயிருந்தவர்கள், இருப்பவர்கள்தான் அதிகம் என்றால், இது மிகையான கூற்றல்ல. உண்மைதான்.
இவ்வாறு கிரிக்கெட் மேல் எல்லையில்லாக் காதல் கொண்டு, எங்கே போட்டி நடந்தாலும் போய் பார்ப்பது, வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பங்குகொண்டு ஆடிமகிழ்வது என்று இருந்தார் ஒரு மன்னர். அவர் பெயர் பிரடெரிக் லூயுஸ் (Fredrick Louis).
இரண்டாம் ஜார்ஜ் எனும் மன்னனின் இதயம் கவர்ந்த மகனாக விளங்கிய பிரடரிக், வேல்ஸ் இளவரசன் என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1730 - 1740க்கு இடைப்பட்ட காலங்களில், கிரிக்கெட் ஆட்டத்தின் பிரதானக் காப்பாளராகவும் விளங்கியிருக்கிறார் என்று பெருமையுற வரலாறு விரித்துரைக்கின்றது.
ஒருநாள் வேல்ஸ் இளவரசனான பிரடெரிக், பயிற்சிக்காக பந்தை அடித்தாடிவிளையாடிக்கொண்டிருக்கும் பொழுது. அவர் உடம்பில் பந்து பட்டுவிட்டது. பட்டது என்றால் பட்டு போன்ற மேனியில் தாக்கியது என்றுதானே,அர்த்தம்!
இது 1750ம் ஆண்டு நடந்தது. அதன் விளைவாக பெரிதாக ஒன்றும் ஏற்படாது என்று எண்ணிக் கொண்டிருந்தார் போலும். ஆனால், அது உள்காயம் ஆகி, சீழ்பிடித்து விட்டது.
அதே ஆண்டு மார்ச் மாதம், பிரெடரிக் ஒரு விருந்தின் பொழுது, ஆனந்தமாக நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது, உள்ளே கட்டியாக பிடித்திருந்த சீழானது (Abcess) வெடித்து, அதன் காரணமாக அவர், அகாலமரணம் அடைந்தார்.
ஆதரவளித்தவர் என்றுகூட பார்க்கவில்லை என்று கிரிக்கெட் ஆட்டத்தைத் திட்டி தீர்த்தவர்களே அதிகம். மன்னன் மரணமடைந்தான், இனிமேல் மக்கள் கிரிக்கெட் ஆட்டத்தை ஆடவிடாமல் தடை செய்யப் பேர்கிறார்கள் அவரது மகன்கள், என்று மக்கள் நினைத்தது போல் நடக்கவில்லை.
பிரெடரிக் லூயியின்மகன் மூன்றாம் ஜார்ஜ், தந்தையின் மரணத்திற்காக வருந்தினானே தவிர, ஆட்டத்தைக் குறைகூற வில்லை, அவனும் ஆதரவு காட்டினான். தானும் விளையாடி மகிழ்ந்தான்.
கிரிக்கெட் வரலாற்றிலே இது ஒரு சோக நிகழ்ச்சிதான் என்றாலும், எதிர்பாராத இழப்பாகப் போய்விட்டதே தவிர, இதனால் எதிர்பார்த்த இன்னல்கள் கிரிக்கெட்டை சாராமல், பிழைக்க வைத்துவிட்டது.
மன்னன் மனிதனாக வந்து விளையாடினான். என்றாலும், ராஜகம்பீரமாக இறப்பினைத் தழுவினான். அவனது புதல்வர்களும் தந்தையைப் போலவே, ராஜகம்பீரமான பாதையில் பெருமிதத்துடன் நடந்து தந்தையின் பெயரையும் புகழையும் காத்தனர்.
உடலால் மறைந்தாலும், புகழால் கிரிக்கெட் உலகில் உலாவரும் மன்னன் பிரெடிரிக் விளையாட்டுப் பற்றை நாமும் வாழ்த்துவோமாக!